உபாகமம் 10:12-17

உபாகமம் 10:12-17 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இப்பொழுதும் இஸ்ரவேலே, நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளிலெல்லாம் நடந்து, அவரிடத்தில் அன்புகூர்ந்து, உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் தேவனாகிய கர்த்தரைச் சேவித்து, நான் இன்று உனக்குக் கற்பிக்கிற கர்த்தருடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் உனக்கு நன்மையுண்டாகும்படி கைக்கொள்ளவேண்டும் என்பதையே அல்லாமல், வேறே எதை உன் தேவனாகிய கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார். இதோ, வானங்களும் வானாதிவானங்களும், பூமியும் அதிலுள்ள யாவும், உன் தேவனாகிய கர்த்தருடையவைகள். ஆனாலும் கர்த்தர் உன் பிதாக்கள்மேல் அன்புகூரும்பொருட்டு அவர்களிடத்தில் பிரியம் வைத்து, அவர்களுக்குப் பின் அவர்களுடைய சந்ததியாகிய உங்களை, இந்நாளில் இருக்கிறபடியே, சகல ஜாதிகளுக்குள்ளும் தமக்கென்று தெரிந்துகொண்டார். ஆகையால் நீங்கள் இனி உங்கள் பிடரியைக் கடினப்படுத்தாமல், உங்கள் இருதயத்தின் நுனித்தோலை விருத்தசேதனம்பண்ணுங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாயிருக்கிறார்; அவர் பட்சபாதம்பண்ணுகிறவரும் அல்ல, பரிதானம் வாங்குகிறவரும் அல்ல.

உபாகமம் 10:12-17 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இப்பொழுதும் இஸ்ரயேலே, உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களிடமிருந்து எதைக் கேட்கிறார்? நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குப் பயந்து, அவருடைய வழிகளில் எல்லாம் நடக்கவேண்டும். அவரிடம் அன்பு செலுத்தி, உங்கள் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குப் பணிசெய்ய வேண்டும். உங்களுடைய நன்மைக்காக இன்று நான் உங்களுக்குக் கொடுக்கும் யெகோவாவினுடைய கட்டளைகளையும் விதிமுறைகளையும் கைக்கொள்ளவேண்டும் என்பதையே கேட்கிறார். வானங்களும், வானாதி வானங்களும், பூமியும், அதிலுள்ள யாவும் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கே உரியவை. இருந்தும் யெகோவா உங்கள் முற்பிதாக்களின்மேல் பாசம்கொண்டு, அவர்களில் அன்பு வைத்தார். அதனால் அவர்களுடைய சந்ததிகளாகிய உங்களை இன்று இருப்பதுபோல் எல்லா நாடுகளுக்கும் மேலாகத் தெரிந்துகொண்டார். ஆகவே உங்களுடைய இருதயத்தின் நுனித்தோலை விருத்தசேதனம் பண்ணுங்கள். இனிமேலும் வனங்காக் கழுத்துள்ளவர்களாய் இருக்காதீர்கள். உங்கள் இறைவனாகிய யெகோவா தெய்வங்களுக்கெல்லாம் ஆண்டவராயும், மகத்துவமும், வல்லமையும், பயங்கரமுமான இறைவன், இலஞ்சம் வாங்குவதும் இல்லை.

உபாகமம் 10:12-17 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

“இப்பொழுதும் இஸ்ரவேலே, நீ உன் தேவனாகிய யெகோவாவுக்குப் பயந்து, அவருடைய வழிகளிலெல்லாம் நடந்து, அவரிடத்தில் அன்புசெலுத்தி, உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் தேவனாகிய யெகோவாவைப் பணிந்துகொண்டு, நான் இன்று உனக்குக் கற்பிக்கிற யெகோவாவுடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் உனக்கு நன்மையுண்டாவதற்கு கைக்கொள்ளவேண்டும் என்பதையே அல்லாமல், வேறே எதை உன் தேவனாகிய யெகோவா உன்னிடத்தில் கேட்கிறார். இதோ, வானங்களும் வானாதிவானங்களும், பூமியும் அதிலுள்ள யாவும், உன் தேவனாகிய யெகோவாவுடையவைகள். ஆனாலும் யெகோவா உன் முற்பிதாக்கள்மேல் அன்புசெலுத்துவதற்காக அவர்களிடத்தில் பிரியம் வைத்து, அவர்களுக்குப் பின் அவர்களுடைய சந்ததியாகிய உங்களை, இந்நாளில் இருக்கிறபடியே, சகல மக்களுக்குள்ளும் தமக்கென்று தெரிந்துகொண்டார். ஆகையால் நீங்கள் இனி நீங்கள் பிடிவாதம் செய்யாமல், உங்கள் இருதயத்தை சுத்தம் செய்யுங்கள். உங்கள் தேவனாகிய யெகோவா தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாக இருக்கிறார்; அவர் பட்சபாதம்செய்கிறவரும் அல்ல, லஞ்சம் வாங்குகிறவரும் அல்ல.

உபாகமம் 10:12-17 பரிசுத்த பைபிள் (TAERV)

“இப்போதும், இஸ்ரவேல் ஜனங்களே கவனியுங்கள்! உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களிடமிருந்து உண்மையிலேயே விரும்புவது என்ன? கர்த்தர் உங்களிடம் விரும்புவது, நீங்கள் அவருக்கும் அவர் சொன்னவற்றுக்கும் மதிப்பளித்து அதன்படி செய்ய வேண்டும். தேவன் விரும்புவது, நீங்கள் அவர் மீது அன்பு செலுத்துவதையும், உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு உங்கள் முழுமனதோடும், உங்களின் முழு ஆத்மதிருப்தியுடனும் சேவைச் செய்வதே. ஆகையால், நான் இன்று உங்களுக்கு வழங்குகின்ற கர்த்தருடைய கட்டளைகளுக்கும், சட்டங்களுக்கும் நீங்கள் கீழ்ப்படிய வேண்டும். உங்களின் நன்மைக்கென்றே இந்தக் கட்டளைகளும், சட்டங்களும் உள்ளன. “எல்லாப் பொருட்களும் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு உரியவை! வானங்களும், வானாதிவானங்களும் கர்த்தருக்குச் சொந்தமானவை. இந்தப் பூமியும் பூமியின் மேல் உள்ள எல்லாப் பொருட்களும் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குச் சொந்தமானவை. கர்த்தர் உங்கள் முற்பிதாக்களின் மீது அன்பு வைத்திருந்தார். அவர்கள்மீது அதிகமாக அன்பு வைத்ததினாலேயே உங்களையும், உங்கள் சந்ததியினரையும் கர்த்தர் தன்னுடைய ஜனங்களாக இன்றும் கருதி அன்பு காட்டுகிறார். மற்ற எல்லா ஜனங்களும் இருந்தாலும் உங்களை தேவன் பிரித்தெடுத்தார். இன்றளவும் நீங்கள் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனங்களாய் இருக்கிறீர்கள். “உங்களின் பிடிவாத குணத்தை விட்டுவிடுங்கள். உங்களின் உள்ளங்களை கர்த்தருக்குக் கொடுங்கள். ஏனென்றால், உங்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர் கர்த்தாதி கர்த்தரும், தேவாதி தேவனும் ஆவார். நமது கர்த்தரே மகத்துவமும், வல்லமையும், பயங்கரமும் உடைய தேவனாவார். கர்த்தர் பாரபட்சம் காட்டுபவர் அல்ல. கர்த்தர் தன் மனதை மாற்றிக்கொள்ள பணத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார்.