தானியேல் 9:3-19

தானியேல் 9:3-19 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

எனவே நான் உபவாசித்து, துக்கவுடை உடுத்தி, சாம்பலில் உட்கார்ந்து இறைவனாகிய யெகோவாவிடம் விண்ணப்பத்துடனும், வேண்டுதலுடனும் மன்றாடினேன். நான் என் இறைவனாகிய யெகோவாவிடத்தில் மன்றாடி, அறிக்கையிட்டதாவது: “யெகோவாவே மகத்துவமும், பயபக்திக்குரியவருமான இறைவனே, உம்மில் அன்பு செலுத்தி, உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிற எல்லோருடனும் உமது உடன்படிக்கையைக் காத்துக்கொள்கிறவரே! நாங்களோ பாவம் செய்து அநியாயம் செய்தோம். நாங்கள் கொடியவர்களாயிருந்து, உமக்கெதிராகக் கலகம் செய்தோம். நாங்கள் உமது கட்டளைகளையும், நீதிச்சட்டங்களையும் விட்டு விலகிப்போனோம். உமது அடியவர்களாகிய இறைவாக்கினர்கள் எங்களுடைய அரசர்களுடனும், தலைவர்களுடனும், எங்கள் தந்தையருடனும், இந்த நாட்டின் மக்கள் எல்லோருடனும் உமது பெயரில் பேசியபோது, அவர்களுக்கு நாங்கள் செவிகொடுக்காதுபோனோம். “யெகோவாவே, நீர் நீதியுள்ளவர். இன்று நாங்கள் வெட்கத்திற்குள்ளாகியிருக்கிறோம். இன்று யூதாவின் மனிதரும், எருசலேமின் மக்களும், சமீபமும், தூரமுமான நாடெங்கிலுமுள்ள இஸ்ரயேலராகிய நாங்கள் எல்லோரும் வெட்கத்திற்குள்ளாகியிருக்கிறோம். நாங்கள் உமக்கு உண்மைத்துவமற்றவர்களாய் இருந்ததால், நீர் எங்களை நாடெங்கிலும் சிதறடித்தீர். யெகோவாவே நாங்கள் உமக்கு எதிராய் பாவம் செய்ததினால் நாங்களும், எங்கள் அரசர்களும், இளவரசர்களும், தந்தையர்களும் வெட்கத்துக்குள்ளானோம். நாங்கள் அவருக்கு எதிராய் கலகம் பண்ணியிருந்துங்கூட, எங்கள் இறைவனாகிய யெகோவா இரக்கமுடையவராகவும், மன்னிக்கிறவராகவும் இருக்கிறார். நாங்களோ எங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குக் கீழ்ப்படியவும் இல்லை; அவர் தனது அடியவராகிய இறைவாக்கினர்மூலம் சொன்ன நீதிச்சட்டங்களைக் கைக்கொள்ளவும் இல்லை. இஸ்ரயேலர் யாவரும் உமது சட்டத்தை மீறினார்கள். உமக்குக் கீழ்ப்படிய மறுத்து வழிவிலகிப்போனார்கள். “ஆகவே நாங்கள் உமக்கு விரோதமாகச் செய்த பாவத்தினால், இறைவனின் அடியவனாகிய மோசே தனது சட்ட புத்தகத்தில் எழுதியுள்ளபடி சாபமும், ஆணையிட்டுக்கூறிய நியாயத்தீர்ப்பும் எங்கள்மேல் வந்தன. எங்கள்மேல் பேரழிவைக் கொண்டுவந்து, எங்களுக்கும் எங்கள் ஆளுநர்களுக்கும் விரோதமாக பேசப்பட்ட வார்த்தைகளை நீர் நிறைவேற்றிவிட்டீர். எருசலேமுக்குச் செய்யப்பட்டதுபோல, முழு வானத்தின் கீழும் எந்த இடத்திலும் ஒருபோதும் செய்யப்படவில்லை. மோசேயின் சட்டத்தில் எழுதியிருக்கிறதுபோலவே, இந்தப் பேரழிவு எங்கள்மேல் வந்தது. ஆயினும் நாங்கள் எங்கள் பாவங்களை விட்டுத் திரும்பி உமது உண்மையைக் கவனித்து, எங்கள் இறைவனாகிய யெகோவாவின் தயவைத் தேடவில்லை. யெகோவா எங்கள்மேல் துன்பத்தை வரப்பண்ணத் தயங்கவில்லை. ஏனெனில் இறைவனாகிய எங்கள் யெகோவா தாம் செய்யும் எல்லாவற்றிலும் நியாயமுள்ளவர். நாங்களோ அவருக்குக் கீழ்ப்படியாமலேயே இருக்கிறோம். “இறைவனாகிய எங்கள் யெகோவாவே, நீர் உம்முடைய மக்களை எகிப்திலிருந்து வல்லமைமிக்க கரத்தினால் வெளியே கொண்டுவந்தீரே. அதனால் இந்நாள்வரைக்கும் உம்முடைய பெயரை நிலைபெறச் செய்தீரே. இருந்தும் நாங்களோ பாவம் செய்துவிட்டோம். அநியாயம் செய்துவிட்டோம். யெகோவாவே, உமது நேர்மையான எல்லா செயல்களுக்கேற்ப உமது பட்டணமும், உமது பரிசுத்த மலையுமான எருசலேமைவிட்டு உமது கோபத்தையும், கடுங்கோபத்தையும் விலக்கிவிடும். எங்கள் பாவங்களும், எங்கள் தந்தையர் செய்த அநியாயங்களும் எருசலேமையும், உமது மக்களையும் எங்களைச் சுற்றியுள்ளவர்கள் யாவருக்கும் முன்பாக ஒரு கேலிப்பொருளாக்கியது. “இப்பொழுதும் எங்கள் இறைவனே, உமது அடியவனின் மன்றாட்டுகளையும், விண்ணப்பங்களையும் கேளும். யெகோவாவே! பாழாய்க் கிடக்கிற உமது ஆலயத்தை உமது பெயரின் நிமித்தம் தயவுடன் பாரும். இறைவனே! உமது செவியைச் சாய்த்துக்கேளும். உமது கண்களைத் திறந்து பாழாய்க்கிடக்கும் உமது பெயர் தரிப்பிக்கப்பட்ட பட்டணத்தின் அழிவைப் பாரும். இந்த மன்றாட்டை எங்கள் நீதியின் பொருட்டு நாங்கள் கேட்காமல், உமது பெரிய இரக்கத்தை முன்வைத்தே கேட்கிறோம். யெகோவாவே, கேளும்; யெகோவாவே, மன்னியும். யெகோவாவே கேட்டுச் செயலாற்றும். என் இறைவனே, உமது நிமித்தம் தாமதிக்காதேயும். ஏனெனில் உமது பட்டணத்திற்கும், உமது மக்களுக்கும் உமது பெயர் இடப்பட்டுள்ளது என்றேன்.”

தானியேல் 9:3-19 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

நான் உபவாசித்து, சணல்உடையை அணிந்தும், சாம்பலிலும் உட்கார்ந்து, தேவனாகிய ஆண்டவரை ஜெபத்தினாலும் விண்ணப்பங்களினாலும் தேட என்முகத்தை அவருக்கு நேராக்கி, என் தேவனாகிய யெகோவாவை நோக்கி ஜெபம்செய்து, பாவ அறிக்கைசெய்து: ஆ ஆண்டவரே, உம்மில் அன்புசெலுத்தி, உம்முடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு உடன்படிக்கையையும் கிருபையையும் காக்கிற மகத்துவமும் பயங்கரமுமான தேவனே. நாங்கள் பாவம்செய்து, அக்கிரமக்காரர்களாக இருந்து, துன்மார்க்கமாக நடந்து, கலகம்செய்து, உம்முடைய கற்பனைகளையும் உம்முடைய நியாயங்களையும் விட்டு அகன்றுபோனோம். உமது நாமத்தினாலே எங்கள் ராஜாக்களோடும் எங்கள் பிரபுக்களோடும் எங்கள் முற்பிதாக்களோடும் தேசத்தினுடைய சகலமக்களோடும் பேசின தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரர்களுக்குச் செவிகொடுக்காமற்போனோம். ஆண்டவரே, நீதி உமக்கே உரியது; உமக்கு விரோதமாகச் செய்த துரோகத்திற்காக உம்மாலே சமீபமும் தூரமுமான எல்லா தேசங்களிலும் துரத்தப்பட்டிருக்கிற யூதா மனிதர்களும் எருசலேமின் குடிமக்களும் சகல இஸ்ரவேலருமாகிய நாங்கள் இந்நாளில் இருக்கிறபடியே வெட்கம் எங்களுக்கே உரியது. ஆண்டவரே, உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்ததினால், நாங்களும் எங்கள் ராஜாக்களும் எங்கள் பிரபுக்களும் எங்கள் முற்பிதாக்களும் வெட்கத்திற்குரியவர்களானோம். அவருக்கு விரோதமாக நாங்கள் கலகம்செய்து, அவருடைய தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரர்களைக்கொண்டு எங்களுக்கு முன்பாகவைத்த அவருடைய நியாயப்பிரமாணங்களின்படி நடக்கத்தக்கதாக நாங்கள் அவருடைய சத்தத்திற்குச் செவிகொடுக்காமற்போனோம். ஆனாலும் எங்கள் தேவனாகிய ஆண்டவரிடத்தில் இரக்கங்களும் மன்னிப்புகளும் உண்டு. இஸ்ரவேலர்கள் எல்லோரும் உமது நியாயப்பிரமாணத்தை மீறி, உமது சத்தத்திற்குச் செவிகொடுக்காமல் விலகிப்போனார்கள். அவருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; ஆகையால் தேவனுடைய தாசனாகிய மோசேயின் நியாயப்பிரமாணப் புத்தகத்தில் எழுதியிருக்கிற சாபமும் கட்டளையிடப்பட்ட தண்டனையும் எங்கள்மேல் ஊற்றப்பட்டன. எருசலேமில் சம்பவித்ததுபோல வானத்தின்கீழ் எங்கும் சம்பவிக்காத பெரிய தீங்கை எங்கள்மேல் வரச்செய்ததினால், அவர் எங்களுக்கும் எங்களை நியாயந்தீர்த்த நியாயாதிபதிகளுக்கும் விரோதமாகச் சொல்லியிருந்த தம்முடைய வார்த்தைகளை நிறைவேற்றினார். மோசேயின் நியாயப்பிரமாணப் புத்தகத்தில் எழுதியிருக்கிறபடியே இந்தத் தண்டனைகள் எல்லாம் எங்கள்மேல் வந்தது; ஆனாலும் நாங்கள் எங்கள் அக்கிரமங்களைவிட்டுத் திரும்புவதற்கும், உம்முடைய சத்தியத்தைக் கவனிக்கிறதற்கும், எங்கள் தேவனாகிய யெகோவாவின் முகத்தை நோக்கிக் கெஞ்சினதில்லை. ஆதலால் யெகோவா கவனமாயிருந்து, அந்தத் தண்டனைகள் எங்கள்மேல் வரச்செய்தார்; எங்கள் தேவனாகிய யெகோவா தாம் செய்துவருகிற தம்முடைய செயல்களில் எல்லாம் நீதியுள்ளவர்; நாங்களோ அவருடைய சத்தத்திற்குச் செவிகொடுக்காமற்போனோம். இப்போதும் உமது மக்களைப் பலத்த கையினால் எகிப்துதேசத்திலிருந்து புறப்படச்செய்து, இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி, உமக்குப் புகழை உண்டாக்கின எங்கள் தேவனாகிய ஆண்டவரே, நாங்கள் பாவஞ்செய்து, துன்மார்க்கர்களாக நடந்தோம். ஆண்டவரே, உம்முடைய எல்லா நீதியின்படியே, உமது கோபமும் உமது உக்கிரமும் உம்முடைய பரிசுத்தமலையாகிய எருசலேம் என்னும் உம்முடைய நகரத்தை விட்டுத் திரும்பும்படி செய்யும்; எங்கள் பாவங்களினாலும் எங்கள் முற்பிதாக்களின் அக்கிரமங்களினாலும் எருசலேமும் உம்முடைய மக்களாகிய நாங்களும் எங்கள் சுற்றுப்புறத்தார் அனைவருக்கும் அவமானமானோம். இப்போதும் எங்கள் தேவனே, நீர் உமது அடியானுடைய விண்ணப்பத்தையும் அவனுடைய கெஞ்சுதலையும் கேட்டு, பாழாய்க் கிடக்கிற உம்முடைய பரிசுத்த ஸ்தலத்தின்மேல் ஆண்டவரினிமித்தம் உமது முகத்தைப் பிரகாசிக்கச்செய்யும். என் தேவனே, உம்முடைய செவியைச்சாய்த்துக் கேட்டருளும்; உம்முடைய கண்களைத் திறந்து, எங்கள் பாழான இடங்களையும், உமது பெயர் இடப்பட்டிருக்கிற நகரத்தையும் பார்த்தருளும்; நாங்கள் எங்கள் நீதிகளை அல்ல, உம்முடைய மிகுந்த இரக்கங்களையே நம்பி, எங்கள் விண்ணப்பங்களை உமக்கு முன்பாகச் செலுத்துகிறோம். ஆண்டவரே கேளும், ஆண்டவரே மன்னியும், ஆண்டவரே கவனியும், என் தேவனே, உம்மாலே அதைத் தாமதிக்காமல் செய்யும்; உம்முடைய நகரத்திற்கும் உம்முடைய மக்களுக்கும் உம்முடைய பெயர் இடப்பட்டிருக்கிறதே என்றேன்.

தானியேல் 9:3-19 பரிசுத்த பைபிள் (TAERV)

பிறகு நான் என் தேவனாகிய ஆண்டவரிடம் திரும்பி, ஜெபம் செய்து உதவி செய்யுமாறு அவரிடம் வேண்டினேன். நான் எந்த உணவையும் உண்ணவில்லை. நான் துக்கத்தைக் காட்டும் ஆடையை அணிந்தேன். நான் என் தலையில் புழுதியைப் போட்டுக்கொண்டேன். நான் என் தேவனாகிய கர்த்தரிடம் ஜெபித்தேன். நான் எனது எல்லாப் பாவங்களையும் அவரிடம் சொன்னேன். நான், “கர்த்தாவே, நீர் மகத்துவமும் பயங்கரமும் வாய்ந்த தேவன். நீர் உம்மிடம் அன்பு செய்கிற ஜனங்களிடம் உமது அன்பும் கருணையும் உள்ள உடன்படிக்கையைக் கடைப்பிடிக்கிறீர். உமது கற்பனைகளுக்கு அடிபணிகிறவர்களுக்கு உமது உடன்படிக்கையைக் காப்பாற்றுகிறீர். “ஆனால் கர்த்தாவே, நாங்கள் பாவம் செய்திருக்கிறோம். நாங்கள் தவறு செய்திருக்கிறோம். நாங்கள் உமக்கு எதிராகத் திரும்பினோம். நாங்கள் உமது கற்பனைகளையும் சரியான நியாயங்களையும் விட்டு விலகிப்போனோம். நாங்கள் தீர்க்கதரிசிகளுக்குக் காது கொடுத்து கவனிக்கவில்லை. அவர்கள் உமது ஊழியர்கள். தீர்க்கதரிசிகள் உமக்காகப் பேசினார்கள். அவர்கள் எங்கள் ராஜாக்களிடமும், எங்கள் தலைவர்களிடமும், எங்கள் தந்தைகளிடமும் பேசினார்கள். அவர்கள் இஸ்ரவேலிலுள்ள எல்லா ஜனங்களிடமும் பேசினார்கள். ஆனால் நாங்கள் அத்தீர்க்கதரிசிகள் சொன்னவற்றைக் கவனிக்கவில்லை. “கர்த்தாவே, நீர் நல்லவர். நீதி உமக்கே உரியது. ஆனால் இன்று வெட்கக்கேடு எங்களுக்கு உரியதாயிற்று. யூதா மற்றும் எருசலேமிலுள்ள ஜனங்களுக்கு அவமானம் உரியதாயிற்று. அவமானம் இஸ்ரவேலில் உள்ள அனைத்து ஜனங்களுக்கும் உமக்கு அருகிலே உள்ள ஜனங்களுக்கும் உமக்குத் தொலைவிலே உள்ள ஜனங்களுக்கும் உரியதாயிற்று. கர்த்தாவே, அந்த ஜனங்களை நீர் பலதேசங்களில் சிதறடித்தீர். அத்தேசங்களிலுள்ள இஸ்ரவேல் ஜனங்கள் அவமானப்படுவார்களாக. கர்த்தாவே, அவர்கள் உமக்கு எதிராகச் செய்த அனைத்து கேடுகளுக்கும் அவமானப்படுவார்களாக. “கர்த்தாவே, நாங்கள் எல்லோரும் அவமானப்படவேண்டும். எங்களது எல்லா ராஜாக்களும் தலைவர்களும் அவமானப்படவேண்டும். எங்கள் முற்பிதாக்களும் அவமானப்படவேண்டும். ஏனென்றால், நாங்கள் உமக்கு எதிராகப் பாவங்கள் செய்தோம். “ஆனாலும் கர்த்தாவே, நீர் தயவுடையவர் நீர் ஜனங்கள் செய்த தீமைகளை மன்னித்துவிடுகிறீர். நாங்கள் உண்மையில் உமக்கு எதிராகத் திரும்பினோம். நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு அடிபணியவில்லை. கர்த்தர் தமது ஊழியர்களாகிய தீர்க்கதரிசிகளை அனுப்பி எங்களுக்குச் சட்டங்களைக் கொடுத்தார். ஆனால் நாங்கள் அவற்றுக்குக் கீழ்ப்படியவில்லை. இஸ்ரவேலில் உள்ள எந்த ஜனங்களும் உமது போதனைகளுக்குக் கீழ்ப்படியவில்லை. அவர்கள் அனைவரும் திரும்பிவிட்டனர். அவர்கள் உமக்குக் கீழ்ப்படியவில்லை. மோசேயின் சட்டத்தில் சாபங்களும் வாக்குத்தத்தங்களும் எழுதப்பட்டிருக்கின்றன. (மோசே தேவனுடைய ஊழியன்). அச்சாபங்களும் வாக்குத்தத்தங்களும் சட்டத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்குரிய தண்டனையைப் பற்றிக் கூறுகிறது. அவையெல்லாம் எங்களுக்கு ஏற்பட்டிருக்கின்றன. ஏனென்றால் நாங்கள் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்தோம். “தேவன், எங்களுக்கும் எங்கள் தலைவர்களுக்கும் இவை ஏற்படும் என்று சொன்னார். அவர் அவை எங்களுக்கு ஏற்படும்படிச் செய்தார். அவர், எங்களுக்குப் பயங்கரமானவை ஏற்படும்படிச் செய்தார். எருசலேம் துன்பப்பட்டது போன்று வேறெந்த நகரமும் துன்பப்பட்டதில்லை. அந்தப் பயங்கரமானவை எல்லாம் எங்களுக்கு ஏற்பட்டன. மோசேயின் சட்டத்தில் எழுதப்பட்டிருந்தபடியே இவை நிகழ்ந்தன. ஆனால் நாங்கள் இன்னும் கர்த்தரிடம் உதவி கேட்கவில்லை. நாங்கள் இன்னும் பாவம் செய்வதை நிறுத்தவில்லை. கர்த்தாவே நாங்கள் உமது சத்தியத்தில் கவனம் செலுத்தவில்லை. கர்த்தர் எங்களுக்காகப் பயங்கரமானவற்றைத் தயார் செய்து வைத்திருந்தார். அவை எங்களுக்கு ஏற்படும்படி அவர் செய்தார். கர்த்தர் இதனைச் செய்தார். ஏனென்றால் அவர் செய்கிற எல்லாவற்றிலும் நியாயமாக இருந்தார். ஆனால் நாங்கள் இன்னும் அவருக்குக் கீழ்ப்படியாமல் இருந்திருக்கிறோம். “கர்த்தாவே, எங்கள் தேவனே, உமது வல்லமையைப் பயன்படுத்தி எங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தீர். நாங்கள் உமது ஜனங்கள். இதன் மூலம் இன்றும் நீர் புகழ்பெற்று விளங்குகிறீர். கர்த்தாவே நாங்கள் பாவம் செய்திருக்கிறோம். நாங்கள் பயங்கரமானவற்றைச் செய்திருக்கிறோம். கர்த்தாவே, எருசலேம் மீது கொண்ட கோபத்தை நிறுத்தும். எருசலேம் உமது பரிசுத்தமான மலையின் மீது இருக்கிறது. நீர் சரியானவற்றையே செய்கிறீர். எனவே எருசலேம் மீதுள்ள கோபத்தை நிறுத்தும். எங்களைச் சுற்றியுள்ள ஜனங்கள் எங்களை அவமதிக்கிறார்கள். அவர்கள் உமது ஜனங்களைக் கேலி செய்கிறார்கள். ஏனென்றால் நாங்களும் எங்கள் முற்பிதாக்களும் உமக்கு எதிராகப் பாவம் செய்தோம். “இப்பொழுதும், கர்த்தாவே, எனது ஜெபத்தைக் கேளும். நான் உமது ஊழியன். உதவிக்கான என்னுடைய ஜெபத்தைக் கேளும். உமது பரிசுத்தமான இடத்திற்கு நன்மையைச் செய்யும். அந்தக் கட்டிடம் அழிக்கப்பட்டது. ஆனாலும் ஆண்டவரே, உமது பரிசுத்தமான இடத்தினிமித்தம் இந்நன்மையைச் செய்யும். என் தேவனே, என்னைக் கவனித்துக் கேளும்! உமது கண்களைத் திறந்து, எங்களுக்கு ஏற்பட்ட கொடூரங்களைப் பாரும். உமது நாமத்தால் அழைக்கப்பட்ட நகரத்திற்கு என்ன நேரிட்டது என்று பாரும்! நாங்கள் நல்ல ஜனங்கள் என்று நான் சொல்லவில்லை. அதற்காகத்தான் நான் இவற்றையெல்லாம் கேட்கவில்லை. நான் இவற்றைக் கேட்கிறேன். ஏனென்றால் நான் உமது இரக்கத்தை அறிவேன். கர்த்தாவே, என்னைக் கவனித்துக் கேளும். கர்த்தாவே எங்களை மன்னியும். கர்த்தாவே கவனித்து, ஏதாவது செய்யும். காத்திருக்கவேண்டாம். இப்பொழுது ஏதாவது செய்யும். இதனை உமது மகிமைக்காகச் செய்யும். என் தேவனே, இப்பொழுது உமது நாமத்தால் அழைக்கப்படுகிற உமது நகரத்துக்காகவும், உமது ஜனங்களுக்காகவும் ஏதாவது செய்யும்” என்றேன்.

தானியேல் 9:3-19 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

நான் உபவாசம்பண்ணி, இரட்டிலும் சாம்பலிலும் உட்கார்ந்து, தேவனாகிய ஆண்டவரை ஜெபத்தினாலும் விண்ணப்பங்களினாலும் தேட என்முகத்தை அவருக்கு நேராக்கி, என் தேவனாகிய கர்த்தரை நோக்கி ஜெபம்பண்ணி, பாவ அறிக்கைசெய்து: ஆ ஆண்டவரே, உம்மில் அன்புகூர்ந்து, உம்முடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு உடன்படிக்கையையும் கிருபையையும் காக்கிற மகத்துவமும் பயங்கரமுமான தேவனே, நாங்கள் பாவஞ்செய்து, அக்கிரமக்காரராயிருந்து, துன்மார்க்கமாய் நடந்து, கலகம்பண்ணி, உம்முடைய கற்பனைகளையும் உம்முடைய நியாயங்களையும் விட்டு அகன்றுபோனோம். உமது நாமத்தினாலே எங்கள் ராஜாக்களோடும் எங்கள் பிரபுக்களோடும் எங்கள் பிதாக்களோடும் தேசத்தினுடைய சகலஜனங்களோடும் பேசின தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரருக்குச் செவிகொடாமற்போனோம். ஆண்டவரே, நீதி உமக்கே உரியது; உமக்கு விரோதமாகச் செய்த துரோகத்தினிமித்தம் உம்மாலே சமீபமும் தூரமுமான எல்லா தேசங்களிலும் துரத்தப்பட்டிருக்கிற யூதமனுஷரும் எருசலேமின் குடிகளும் சகல இஸ்ரவேலருமாகிய நாங்கள் இந்நாளில் இருக்கிறபடியே, வெட்கம் எங்களுக்கே உரியது. ஆண்டவரே, உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்தபடியால், நாங்களும் எங்கள் ராஜாக்களும் எங்கள் பிரபுக்களும் எங்கள் பிதாக்களும் வெட்கத்துக்குரியவர்களானோம். அவருக்கு விரோதமாக நாங்கள் கலகம்பண்ணி, அவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரரைக்கொண்டு எங்களுக்கு முன்பாகவைத்த அவருடைய நியாயப்பிரமாணங்களின்படி நடக்கத்தக்கதாக நாங்கள் அவருடைய சத்தத்துக்குச் செவிகொடாமற்போனோம். ஆனாலும் எங்கள் தேவனாகிய ஆண்டவரிடத்தில் இரக்கங்களும் மன்னிப்புகளும் உண்டு. இஸ்ரவேலர் எல்லாரும் உமது நியாயப்பிரமாணத்தை மீறி, உமது சத்தத்துக்குச் செவிகொடாமல் விலகிப்போனார்கள். அவருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; ஆகையால் தேவனுடைய தாசனாகிய மோசேயின் நியாயப்பிரமாணப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சாபமும் ஆணையாக்கினையும் எங்கள்மேல் சொரியப்பட்டன. எருசலேமில் சம்பவித்ததுபோல வானத்தின்கீழ் எங்கும் சம்பவியாதிருக்கிற பெரிய தீங்கை எங்கள்மேல் வரப்பண்ணினதினால், அவர் எங்களுக்கும் எங்களை நியாயந்தீர்த்த நியாயாதிபதிகளுக்கும் விரோதமாகச் சொல்லியிருந்த தம்முடைய வார்த்தைகளை நிறைவேற்றினார். மோசேயின் நியாயப்பிரமாணப்புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடியே இந்தத் தீங்கெல்லாம் எங்கள்மேல் வந்தது; ஆனாலும் நாங்கள் எங்கள் அக்கிரமங்களைவிட்டுத் திரும்புகிறதற்கும், உம்முடைய சத்தியத்தைக் கவனிக்கிறதற்கும், எங்கள் தேவனாகிய கர்த்தரின் முகத்தை நோக்கிக் கெஞ்சினதில்லை. ஆதலால் கர்த்தர் கவனமாயிருந்து, அந்தத் தீங்கை எங்கள்மேல் வரப்பண்ணினார்; எங்கள் தேவனாகிய கர்த்தர் தாம் செய்துவருகிற தம்முடைய கிரியைகளில் எல்லாம் நீதியுள்ளவர்; நாங்களோ அவருடைய சத்தத்துக்குச் செவிகொடாமற்போனோம். இப்போதும் உமது ஜனத்தைப்பலத்த கையினால் எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணி, இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி, உமக்குக் கீர்த்தியை உண்டாக்கின எங்கள் தேவனாகிய ஆண்டவரே, நாங்கள் பாவஞ்செய்து, துன்மார்க்கராய் நடந்தோம். ஆண்டவரே, உம்முடைய சர்வநீதியின்படியே, உமது கோபமும் உமது உக்கிரமும் உம்முடைய பரிசுத்தபர்வதமாகிய எருசலேம் என்னும் உம்முடைய நகரத்தை விட்டுத் திரும்பும்படி செய்யும்; எங்கள் பாவங்களினாலும் எங்கள் பிதாக்களின் அக்கிரமங்களினாலும் எருசலேமும் உம்முடைய ஜனமாகிய நாங்களும் எங்கள் சுற்றுப்புறத்தார் யாவருக்கும் நிந்தையானோம். இப்போதும் எங்கள் தேவனே, நீர் உமது அடியானுடைய விண்ணப்பத்தையும் அவனுடைய கெஞ்சுதலையும் கேட்டு, பாழாய்க் கிடக்கிற உம்முடைய பரிசுத்த ஸ்தலத்தின்மேல் ஆண்டவரினிமித்தம் உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும். என் தேவனே, உம்முடைய செவியைச் சாய்த்துக் கேட்டருளும்; உம்முடைய கண்களைத் திறந்து, எங்கள் பாழிடங்களையும், உமது நாமம் தரிக்கப்பட்டிருக்கிற நகரத்தையும் பார்த்தருளும்; நாங்கள் எங்கள் நீதிகளை அல்ல, உம்முடைய மிகுந்த இரக்கங்களையே நம்பி, எங்கள் விண்ணப்பங்களை உமக்கு முன்பாகச் செலுத்துகிறோம். ஆண்டவரே கேளும், ஆண்டவரே மன்னியும், ஆண்டவரே கவனியும், என் தேவனே, உம்முடைய நிமித்தமாக அதைத் தாமதியாமல் செய்யும்; உம்முடைய நகரத்துக்கும் உம்முடைய ஜனத்துக்கும் உம்முடைய நாமம் தரிக்கப்பட்டிருக்கிறதே என்றேன்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்