தானியேல் 9:3-19

தானியேல் 9:3-19 TCV

எனவே நான் உபவாசித்து, துக்கவுடை உடுத்தி, சாம்பலில் உட்கார்ந்து இறைவனாகிய யெகோவாவிடம் விண்ணப்பத்துடனும், வேண்டுதலுடனும் மன்றாடினேன். நான் என் இறைவனாகிய யெகோவாவிடத்தில் மன்றாடி, அறிக்கையிட்டதாவது: “யெகோவாவே மகத்துவமும், பயபக்திக்குரியவருமான இறைவனே, உம்மில் அன்பு செலுத்தி, உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிற எல்லோருடனும் உமது உடன்படிக்கையைக் காத்துக்கொள்கிறவரே! நாங்களோ பாவம் செய்து அநியாயம் செய்தோம். நாங்கள் கொடியவர்களாயிருந்து, உமக்கெதிராகக் கலகம் செய்தோம். நாங்கள் உமது கட்டளைகளையும், நீதிச்சட்டங்களையும் விட்டு விலகிப்போனோம். உமது அடியவர்களாகிய இறைவாக்கினர்கள் எங்களுடைய அரசர்களுடனும், தலைவர்களுடனும், எங்கள் தந்தையருடனும், இந்த நாட்டின் மக்கள் எல்லோருடனும் உமது பெயரில் பேசியபோது, அவர்களுக்கு நாங்கள் செவிகொடுக்காதுபோனோம். “யெகோவாவே, நீர் நீதியுள்ளவர். இன்று நாங்கள் வெட்கத்திற்குள்ளாகியிருக்கிறோம். இன்று யூதாவின் மனிதரும், எருசலேமின் மக்களும், சமீபமும், தூரமுமான நாடெங்கிலுமுள்ள இஸ்ரயேலராகிய நாங்கள் எல்லோரும் வெட்கத்திற்குள்ளாகியிருக்கிறோம். நாங்கள் உமக்கு உண்மைத்துவமற்றவர்களாய் இருந்ததால், நீர் எங்களை நாடெங்கிலும் சிதறடித்தீர். யெகோவாவே நாங்கள் உமக்கு எதிராய் பாவம் செய்ததினால் நாங்களும், எங்கள் அரசர்களும், இளவரசர்களும், தந்தையர்களும் வெட்கத்துக்குள்ளானோம். நாங்கள் அவருக்கு எதிராய் கலகம் பண்ணியிருந்துங்கூட, எங்கள் இறைவனாகிய யெகோவா இரக்கமுடையவராகவும், மன்னிக்கிறவராகவும் இருக்கிறார். நாங்களோ எங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குக் கீழ்ப்படியவும் இல்லை; அவர் தனது அடியவராகிய இறைவாக்கினர்மூலம் சொன்ன நீதிச்சட்டங்களைக் கைக்கொள்ளவும் இல்லை. இஸ்ரயேலர் யாவரும் உமது சட்டத்தை மீறினார்கள். உமக்குக் கீழ்ப்படிய மறுத்து வழிவிலகிப்போனார்கள். “ஆகவே நாங்கள் உமக்கு விரோதமாகச் செய்த பாவத்தினால், இறைவனின் அடியவனாகிய மோசே தனது சட்ட புத்தகத்தில் எழுதியுள்ளபடி சாபமும், ஆணையிட்டுக்கூறிய நியாயத்தீர்ப்பும் எங்கள்மேல் வந்தன. எங்கள்மேல் பேரழிவைக் கொண்டுவந்து, எங்களுக்கும் எங்கள் ஆளுநர்களுக்கும் விரோதமாக பேசப்பட்ட வார்த்தைகளை நீர் நிறைவேற்றிவிட்டீர். எருசலேமுக்குச் செய்யப்பட்டதுபோல, முழு வானத்தின் கீழும் எந்த இடத்திலும் ஒருபோதும் செய்யப்படவில்லை. மோசேயின் சட்டத்தில் எழுதியிருக்கிறதுபோலவே, இந்தப் பேரழிவு எங்கள்மேல் வந்தது. ஆயினும் நாங்கள் எங்கள் பாவங்களை விட்டுத் திரும்பி உமது உண்மையைக் கவனித்து, எங்கள் இறைவனாகிய யெகோவாவின் தயவைத் தேடவில்லை. யெகோவா எங்கள்மேல் துன்பத்தை வரப்பண்ணத் தயங்கவில்லை. ஏனெனில் இறைவனாகிய எங்கள் யெகோவா தாம் செய்யும் எல்லாவற்றிலும் நியாயமுள்ளவர். நாங்களோ அவருக்குக் கீழ்ப்படியாமலேயே இருக்கிறோம். “இறைவனாகிய எங்கள் யெகோவாவே, நீர் உம்முடைய மக்களை எகிப்திலிருந்து வல்லமைமிக்க கரத்தினால் வெளியே கொண்டுவந்தீரே. அதனால் இந்நாள்வரைக்கும் உம்முடைய பெயரை நிலைபெறச் செய்தீரே. இருந்தும் நாங்களோ பாவம் செய்துவிட்டோம். அநியாயம் செய்துவிட்டோம். யெகோவாவே, உமது நேர்மையான எல்லா செயல்களுக்கேற்ப உமது பட்டணமும், உமது பரிசுத்த மலையுமான எருசலேமைவிட்டு உமது கோபத்தையும், கடுங்கோபத்தையும் விலக்கிவிடும். எங்கள் பாவங்களும், எங்கள் தந்தையர் செய்த அநியாயங்களும் எருசலேமையும், உமது மக்களையும் எங்களைச் சுற்றியுள்ளவர்கள் யாவருக்கும் முன்பாக ஒரு கேலிப்பொருளாக்கியது. “இப்பொழுதும் எங்கள் இறைவனே, உமது அடியவனின் மன்றாட்டுகளையும், விண்ணப்பங்களையும் கேளும். யெகோவாவே! பாழாய்க் கிடக்கிற உமது ஆலயத்தை உமது பெயரின் நிமித்தம் தயவுடன் பாரும். இறைவனே! உமது செவியைச் சாய்த்துக்கேளும். உமது கண்களைத் திறந்து பாழாய்க்கிடக்கும் உமது பெயர் தரிப்பிக்கப்பட்ட பட்டணத்தின் அழிவைப் பாரும். இந்த மன்றாட்டை எங்கள் நீதியின் பொருட்டு நாங்கள் கேட்காமல், உமது பெரிய இரக்கத்தை முன்வைத்தே கேட்கிறோம். யெகோவாவே, கேளும்; யெகோவாவே, மன்னியும். யெகோவாவே கேட்டுச் செயலாற்றும். என் இறைவனே, உமது நிமித்தம் தாமதிக்காதேயும். ஏனெனில் உமது பட்டணத்திற்கும், உமது மக்களுக்கும் உமது பெயர் இடப்பட்டுள்ளது என்றேன்.”

தானியேல் 9:3-19 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்