தானியேல் 9:1-7
தானியேல் 9:1-7 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இது மேதியரின் சந்ததியான அகாஸ்வேருவின் மகன் தரியு, பாபிலோனியரின் அரசின்மேல் ஆளுநர் ஆக்கப்பட்ட வருடமாயிருந்தது. அந்த வருடத்திலே, தானியேலாகிய நான் வேதவசனங்களிலிருந்து, எருசலேமின் அழிவு எழுபது வருடங்கள் நீடிக்கும் என்பதை விளங்கிக்கொண்டேன். இதை யெகோவா இறைவாக்கினன் எரேமியாவுக்குக் கொடுத்த வார்த்தையிலிருந்து அறிந்துகொண்டேன். எனவே நான் உபவாசித்து, துக்கவுடை உடுத்தி, சாம்பலில் உட்கார்ந்து இறைவனாகிய யெகோவாவிடம் விண்ணப்பத்துடனும், வேண்டுதலுடனும் மன்றாடினேன். நான் என் இறைவனாகிய யெகோவாவிடத்தில் மன்றாடி, அறிக்கையிட்டதாவது: “யெகோவாவே மகத்துவமும், பயபக்திக்குரியவருமான இறைவனே, உம்மில் அன்பு செலுத்தி, உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிற எல்லோருடனும் உமது உடன்படிக்கையைக் காத்துக்கொள்கிறவரே! நாங்களோ பாவம் செய்து அநியாயம் செய்தோம். நாங்கள் கொடியவர்களாயிருந்து, உமக்கெதிராகக் கலகம் செய்தோம். நாங்கள் உமது கட்டளைகளையும், நீதிச்சட்டங்களையும் விட்டு விலகிப்போனோம். உமது அடியவர்களாகிய இறைவாக்கினர்கள் எங்களுடைய அரசர்களுடனும், தலைவர்களுடனும், எங்கள் தந்தையருடனும், இந்த நாட்டின் மக்கள் எல்லோருடனும் உமது பெயரில் பேசியபோது, அவர்களுக்கு நாங்கள் செவிகொடுக்காதுபோனோம். “யெகோவாவே, நீர் நீதியுள்ளவர். இன்று நாங்கள் வெட்கத்திற்குள்ளாகியிருக்கிறோம். இன்று யூதாவின் மனிதரும், எருசலேமின் மக்களும், சமீபமும், தூரமுமான நாடெங்கிலுமுள்ள இஸ்ரயேலராகிய நாங்கள் எல்லோரும் வெட்கத்திற்குள்ளாகியிருக்கிறோம். நாங்கள் உமக்கு உண்மைத்துவமற்றவர்களாய் இருந்ததால், நீர் எங்களை நாடெங்கிலும் சிதறடித்தீர்.
தானியேல் 9:1-7 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
கல்தேயர்களுடைய ராஜ்ஜியத்தின்மேல் ராஜாவாக்கப்பட்ட மேதிய சந்ததியைச்சேர்ந்த அகாஸ்வேருவின் மகனான தரியு ஆட்சிசெய்கிற முதலாம் வருடத்திலே, தானியேலாகிய நான் எருசலேமின் அழிவுகள் நிறைவேறிமுடிய எழுபதுவருடங்கள் ஆகுமென்று யெகோவா எரேமியா தீர்க்கதரிசியுடன் சொன்ன வருடங்களின் எண்ணிக்கையைப் புத்தகங்களில் படித்து அறிந்துகொண்டேன். நான் உபவாசித்து, சணல்உடையை அணிந்தும், சாம்பலிலும் உட்கார்ந்து, தேவனாகிய ஆண்டவரை ஜெபத்தினாலும் விண்ணப்பங்களினாலும் தேட என்முகத்தை அவருக்கு நேராக்கி, என் தேவனாகிய யெகோவாவை நோக்கி ஜெபம்செய்து, பாவ அறிக்கைசெய்து: ஆ ஆண்டவரே, உம்மில் அன்புசெலுத்தி, உம்முடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு உடன்படிக்கையையும் கிருபையையும் காக்கிற மகத்துவமும் பயங்கரமுமான தேவனே. நாங்கள் பாவம்செய்து, அக்கிரமக்காரர்களாக இருந்து, துன்மார்க்கமாக நடந்து, கலகம்செய்து, உம்முடைய கற்பனைகளையும் உம்முடைய நியாயங்களையும் விட்டு அகன்றுபோனோம். உமது நாமத்தினாலே எங்கள் ராஜாக்களோடும் எங்கள் பிரபுக்களோடும் எங்கள் முற்பிதாக்களோடும் தேசத்தினுடைய சகலமக்களோடும் பேசின தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரர்களுக்குச் செவிகொடுக்காமற்போனோம். ஆண்டவரே, நீதி உமக்கே உரியது; உமக்கு விரோதமாகச் செய்த துரோகத்திற்காக உம்மாலே சமீபமும் தூரமுமான எல்லா தேசங்களிலும் துரத்தப்பட்டிருக்கிற யூதா மனிதர்களும் எருசலேமின் குடிமக்களும் சகல இஸ்ரவேலருமாகிய நாங்கள் இந்நாளில் இருக்கிறபடியே வெட்கம் எங்களுக்கே உரியது.
தானியேல் 9:1-7 பரிசுத்த பைபிள் (TAERV)
தரியு ராஜாவாகிய முதலாம் ஆண்டில் இவை நிகழ்ந்தன. தரியு அகாஸ்வேரு என்னும் பெயருடையவனின் குமாரன். தரியு மேதிய குலத்தை சேர்ந்தவன். அவன் பாபிலோனின் ராஜாவானான். தரியு ராஜாவாக இருந்த முதலாம் ஆண்டில் தானியேலான நான், சில புத்தகங்களை வாசித்துக்கொண்டிருந்தேன். அப்புத்தகங்களில், கர்த்தர் எரேமியா தீரிக்கதரிசியிடம் எருசலேம் மீண்டும் கட்டப்படுவதற்கு முன் எத்தனை வருடங்கள் கடந்து செல்லும் என்று சொல்லியிருந்ததை நான் பார்த்தேன். கர்த்தர் 70 ஆண்டுகள் கடந்து செல்லும் என்று கூறினார். பிறகு நான் என் தேவனாகிய ஆண்டவரிடம் திரும்பி, ஜெபம் செய்து உதவி செய்யுமாறு அவரிடம் வேண்டினேன். நான் எந்த உணவையும் உண்ணவில்லை. நான் துக்கத்தைக் காட்டும் ஆடையை அணிந்தேன். நான் என் தலையில் புழுதியைப் போட்டுக்கொண்டேன். நான் என் தேவனாகிய கர்த்தரிடம் ஜெபித்தேன். நான் எனது எல்லாப் பாவங்களையும் அவரிடம் சொன்னேன். நான், “கர்த்தாவே, நீர் மகத்துவமும் பயங்கரமும் வாய்ந்த தேவன். நீர் உம்மிடம் அன்பு செய்கிற ஜனங்களிடம் உமது அன்பும் கருணையும் உள்ள உடன்படிக்கையைக் கடைப்பிடிக்கிறீர். உமது கற்பனைகளுக்கு அடிபணிகிறவர்களுக்கு உமது உடன்படிக்கையைக் காப்பாற்றுகிறீர். “ஆனால் கர்த்தாவே, நாங்கள் பாவம் செய்திருக்கிறோம். நாங்கள் தவறு செய்திருக்கிறோம். நாங்கள் உமக்கு எதிராகத் திரும்பினோம். நாங்கள் உமது கற்பனைகளையும் சரியான நியாயங்களையும் விட்டு விலகிப்போனோம். நாங்கள் தீர்க்கதரிசிகளுக்குக் காது கொடுத்து கவனிக்கவில்லை. அவர்கள் உமது ஊழியர்கள். தீர்க்கதரிசிகள் உமக்காகப் பேசினார்கள். அவர்கள் எங்கள் ராஜாக்களிடமும், எங்கள் தலைவர்களிடமும், எங்கள் தந்தைகளிடமும் பேசினார்கள். அவர்கள் இஸ்ரவேலிலுள்ள எல்லா ஜனங்களிடமும் பேசினார்கள். ஆனால் நாங்கள் அத்தீர்க்கதரிசிகள் சொன்னவற்றைக் கவனிக்கவில்லை. “கர்த்தாவே, நீர் நல்லவர். நீதி உமக்கே உரியது. ஆனால் இன்று வெட்கக்கேடு எங்களுக்கு உரியதாயிற்று. யூதா மற்றும் எருசலேமிலுள்ள ஜனங்களுக்கு அவமானம் உரியதாயிற்று. அவமானம் இஸ்ரவேலில் உள்ள அனைத்து ஜனங்களுக்கும் உமக்கு அருகிலே உள்ள ஜனங்களுக்கும் உமக்குத் தொலைவிலே உள்ள ஜனங்களுக்கும் உரியதாயிற்று. கர்த்தாவே, அந்த ஜனங்களை நீர் பலதேசங்களில் சிதறடித்தீர். அத்தேசங்களிலுள்ள இஸ்ரவேல் ஜனங்கள் அவமானப்படுவார்களாக. கர்த்தாவே, அவர்கள் உமக்கு எதிராகச் செய்த அனைத்து கேடுகளுக்கும் அவமானப்படுவார்களாக.
தானியேல் 9:1-7 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
கல்தேயருடைய ராஜ்யத்தின்மேல் ராஜாவாக்கப்பட்ட மேதிய குலத்தானாகிய அகாஸ்வேருவின் புத்திரனான தரியு ராஜ்யபாரம்பண்ணுகிற முதலாம் வருஷத்திலே, தானியேலாகிய நான் எருசலேமின் பாழ்க்கடிப்புகள் நிறைவேறித்தீர எழுபதுவருஷம் செல்லுமென்று கர்த்தர் எரேமியா தீர்க்கதரிசியோடே சொல்லிய வருஷங்களின் தொகையைப் புஸ்தகங்களால் அறிந்துகொண்டேன். நான் உபவாசம்பண்ணி, இரட்டிலும் சாம்பலிலும் உட்கார்ந்து, தேவனாகிய ஆண்டவரை ஜெபத்தினாலும் விண்ணப்பங்களினாலும் தேட என்முகத்தை அவருக்கு நேராக்கி, என் தேவனாகிய கர்த்தரை நோக்கி ஜெபம்பண்ணி, பாவ அறிக்கைசெய்து: ஆ ஆண்டவரே, உம்மில் அன்புகூர்ந்து, உம்முடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு உடன்படிக்கையையும் கிருபையையும் காக்கிற மகத்துவமும் பயங்கரமுமான தேவனே, நாங்கள் பாவஞ்செய்து, அக்கிரமக்காரராயிருந்து, துன்மார்க்கமாய் நடந்து, கலகம்பண்ணி, உம்முடைய கற்பனைகளையும் உம்முடைய நியாயங்களையும் விட்டு அகன்றுபோனோம். உமது நாமத்தினாலே எங்கள் ராஜாக்களோடும் எங்கள் பிரபுக்களோடும் எங்கள் பிதாக்களோடும் தேசத்தினுடைய சகலஜனங்களோடும் பேசின தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரருக்குச் செவிகொடாமற்போனோம். ஆண்டவரே, நீதி உமக்கே உரியது; உமக்கு விரோதமாகச் செய்த துரோகத்தினிமித்தம் உம்மாலே சமீபமும் தூரமுமான எல்லா தேசங்களிலும் துரத்தப்பட்டிருக்கிற யூதமனுஷரும் எருசலேமின் குடிகளும் சகல இஸ்ரவேலருமாகிய நாங்கள் இந்நாளில் இருக்கிறபடியே, வெட்கம் எங்களுக்கே உரியது.