தானியேல் 9:1-7

தானியேல் 9:1-7 TCV

இது மேதியரின் சந்ததியான அகாஸ்வேருவின் மகன் தரியு, பாபிலோனியரின் அரசின்மேல் ஆளுநர் ஆக்கப்பட்ட வருடமாயிருந்தது. அந்த வருடத்திலே, தானியேலாகிய நான் வேதவசனங்களிலிருந்து, எருசலேமின் அழிவு எழுபது வருடங்கள் நீடிக்கும் என்பதை விளங்கிக்கொண்டேன். இதை யெகோவா இறைவாக்கினன் எரேமியாவுக்குக் கொடுத்த வார்த்தையிலிருந்து அறிந்துகொண்டேன். எனவே நான் உபவாசித்து, துக்கவுடை உடுத்தி, சாம்பலில் உட்கார்ந்து இறைவனாகிய யெகோவாவிடம் விண்ணப்பத்துடனும், வேண்டுதலுடனும் மன்றாடினேன். நான் என் இறைவனாகிய யெகோவாவிடத்தில் மன்றாடி, அறிக்கையிட்டதாவது: “யெகோவாவே மகத்துவமும், பயபக்திக்குரியவருமான இறைவனே, உம்மில் அன்பு செலுத்தி, உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிற எல்லோருடனும் உமது உடன்படிக்கையைக் காத்துக்கொள்கிறவரே! நாங்களோ பாவம் செய்து அநியாயம் செய்தோம். நாங்கள் கொடியவர்களாயிருந்து, உமக்கெதிராகக் கலகம் செய்தோம். நாங்கள் உமது கட்டளைகளையும், நீதிச்சட்டங்களையும் விட்டு விலகிப்போனோம். உமது அடியவர்களாகிய இறைவாக்கினர்கள் எங்களுடைய அரசர்களுடனும், தலைவர்களுடனும், எங்கள் தந்தையருடனும், இந்த நாட்டின் மக்கள் எல்லோருடனும் உமது பெயரில் பேசியபோது, அவர்களுக்கு நாங்கள் செவிகொடுக்காதுபோனோம். “யெகோவாவே, நீர் நீதியுள்ளவர். இன்று நாங்கள் வெட்கத்திற்குள்ளாகியிருக்கிறோம். இன்று யூதாவின் மனிதரும், எருசலேமின் மக்களும், சமீபமும், தூரமுமான நாடெங்கிலுமுள்ள இஸ்ரயேலராகிய நாங்கள் எல்லோரும் வெட்கத்திற்குள்ளாகியிருக்கிறோம். நாங்கள் உமக்கு உண்மைத்துவமற்றவர்களாய் இருந்ததால், நீர் எங்களை நாடெங்கிலும் சிதறடித்தீர்.