தானியேல் 8:1-12
தானியேல் 8:1-12 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
பெல்ஷாத்சார் அரசனின் மூன்றாவது வருடத்தில் தானியேலாகிய நான், முன்பு கண்ட தரிசனத்தைப்போல் வேறொரு தரிசனத்தைக் கண்டேன். என்னுடைய தரிசனத்தில் நான் ஏலாம் மாகாணத்திலுள்ள, அரண்செய்யப்பட்ட சூசா பட்டணத்தில் இருந்தேன். அந்தத் தரிசனத்தில் நான் ஊலாய் என்னும் கால்வாய் அருகில் இருக்கக் கண்டேன். நான் நோக்கிப் பார்க்கையில், எனக்கு முன்பாக கால்வாயின் அருகே, இரண்டு நீண்ட கொம்புகளுடன் செம்மறியாட்டுக் கடா ஒன்று நின்றது. அந்த இரண்டு கொம்புகளும் நீளமாக இருந்தன. அவற்றில் ஒன்று மற்றதைவிட நீளமாய் இருந்தது. நீளமாக இருந்த கொம்போ பிந்தியே வளர்ந்து வந்தது. அந்தச் செம்மறியாட்டுக் கடா நான் பார்த்துக்கொண்டிருக்கையில் மேற்கு, வடக்கு, தெற்குத் திசைகளை நோக்கித் தாக்கியது. அதனை எதிர்த்துநிற்க எந்த மிருகத்தாலும் முடியவில்லை; அதன் வல்லமையிலிருந்து ஒருவராலும் தப்பமுடியவில்லை. அது தன் விருப்பம்போல செய்து, பெரிதாகியது. அதைப்பற்றி நான் சிந்தித்துக்கொண்டிருக்கையில், திடீரென மேற்கிலிருந்து ஒரு வெள்ளாட்டுக்கடா வந்தது. அதன் கண்களுக்கிடையில் கம்பீரமான ஒரு கொம்பு இருந்தது. அது நிலத்தில் கால்படாமல் முழு பூமியையும் கடந்து வந்தது. அது நான் முன்பு கால்வாயருகே பார்த்த இரண்டு கொம்புகளுள்ள செம்மறியாட்டுக் கடாவை நோக்கிவந்து, மிகுந்த சீற்றத்துடன் அதைத் தாக்கியது. செம்மறியாட்டுக் கடாவை வெள்ளாட்டுக்கடா சீற்றத்துடன் தாக்கி, முட்டி, அதன் இரண்டு கொம்புகளையும் நொறுக்கிப்போட்டதை நான் கண்டேன். அச்செம்மறியாட்டுக் கடா எதிர்த்துநிற்க முடியாமல், வல்லமையிழந்து நின்றது. வெள்ளாட்டுக்கடா அதனை நிலத்தில் விழத்தள்ளி மிதித்தது. அதன் வல்லமையிலிருந்து செம்மறியாட்டுக் கடாவைக் காப்பாற்ற ஒருவராலும் முடியவில்லை. அந்த வெள்ளாட்டுக்கடா முன்பைவிட பெரிதாயிற்று. ஆனால் அது வல்லமையில் உயர்ந்திருந்த வேளையில் அதன் கொம்பு உடைந்துவிட்டது. அந்த இடத்தில் வேறு நான்கு கம்பீரமான கொம்புகள் முளைத்து வானத்தின் நான்கு திசைகளை நோக்கி வளர்ந்தன. அவற்றின் ஒன்றிலிருந்து இன்னொரு கொம்பு வந்தது. அது ஆரம்பத்தில் சிறிதாய் முளைத்து, பின் தெற்குக்கும், கிழக்குக்கும் எதிராகவும் அழகான நாட்டை நோக்கியும் வல்லமையுடன் வளர்ந்தது. இவ்வாறு அது வானசேனையை எட்டும்வரை வளர்ந்து, நட்சத்திரங்கள் சிலவற்றை பூமிக்கு விழத்தள்ளி, அவற்றை மிதித்துப்போட்டது. அது சேனையின் தலைவராகிய இறைவனைப்போல தானும் பெரியவனாயிருக்கும்படி, தன்னை உயர்த்தியது. அது அவரிடமிருந்து அன்றாட பலியையும் எடுத்துக்கொண்டது. அவரின் பரிசுத்த ஆலயம் தாழ்த்தப்பட்டது. கீழ்ப்படியாத கலகத்தின் நிமித்தம் பரிசுத்தவான்களின் சேனையும், அன்றாட பலியும் அந்தக் கொம்பிடம் ஒப்படைக்கப்பட்டன. அதுவோ தான் செய்த எல்லாவற்றிலும் செழிப்படைந்தது. உண்மையோ நிலத்தில் தள்ளப்பட்டது.
தானியேல் 8:1-12 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
தானியேலாகிய எனக்கு முதலில் காண்பிக்கப்பட்ட தரிசனத்திற்குப்பின்பு, ராஜாவாகிய பெல்ஷாத்சார் ஆட்சிசெய்த மூன்றாம் வருடத்திலே வேறொரு தரிசனம் எனக்குக் காண்பிக்கப்பட்டது. தரிசனத்திலே நான் கண்டது என்னவென்றால்: நான் பார்க்கும்போது ஏலாம் தேசத்திலுள்ள சூசான் அரண்மனையில் இருந்தேன்; அங்கே நான் ஊலாய் என்னும் ஆற்றங்கரையில் இருந்ததாகத் தரிசனத்திலே கண்டேன். நான் என் கண்களை ஏறெடுத்துப்பார்த்தேன்; இதோ, இரண்டு கொம்புகளுள்ள ஒரு ஆட்டுக்கடா ஆற்றின் முன்பாக நின்றது; அதின் இரண்டு கொம்புகளும் உயர்ந்தவைகளாக இருந்தது; ஆனாலும் அவைகளில் ஒன்று மற்றதைவிட உயர்ந்திருந்தது; உயர்ந்தகொம்பு பிந்தி முளைத்தெழும்பியது. அந்த ஆட்டுக்கடா மேற்கும் வடக்கும் தெற்கும் பாய்கிறதைக் கண்டேன்; ஒரு மிருகமும் அதின் முன்னே நிற்கமுடியாமலிருந்தது; அதின் கைக்குத் தப்புவிப்பவருமில்லை; அது தன் விருப்பப்படியே செய்து வல்லமைகொண்டது. நான் அதைக் கவனித்துக்கொண்டிருக்கும்போது, இதோ, மேற்கேயிருந்து ஒரு வெள்ளாட்டுக்கடா நிலத்திலே கால்பதிக்காமல் தேசத்தின்மீதெங்கும் சென்றது; அந்த வெள்ளாட்டுக்கடாவின் கண்களுக்கு நடுவே விசேஷித்த ஒரு கொம்பு இருந்தது. நான் ஆற்றின் முன்பாக நிற்கக்கண்ட இரண்டு கொம்புகளுள்ள ஆட்டுக்கடா இருக்கும் இடம்வரை அது வந்து, தன் பலத்தின் உக்கிரத்தோடே அதற்கு எதிராகப் பாய்ந்தது. அது ஆட்டுக்கடாவின் அருகில் வரக்கண்டேன்; அது ஆட்டுக்கடாவின்மேல் கடுங்கோபங்கொண்டு, அதை முட்டி, அதின் இரண்டு கொம்புகளையும் முறித்துப்போட்டது; அதின் முன் நிற்க ஆட்டுக்கடாவிற்குப் பலமில்லாததால், வெள்ளாட்டுக்கடா அதைத் தரையிலே தள்ளி மிதித்துப்போட்டது; அதின் கைக்கு ஆட்டுக்கடாவைத் தப்புவிப்பவர் இல்லை. அப்பொழுது வெள்ளாட்டுக்கடா மிகவும் வல்லமைகொண்டது; அது பலங்கொண்டிருக்கும்போது, அந்தப் பெரிய கொம்பு முறிந்துபோனது; அதற்குப் பதிலாக ஆகாயத்தின் நான்கு திசைகளுக்கும் எதிராக விசேஷித்த நான்குகொம்புகள் முளைத்தெழும்பின. அவைகளில் ஒன்றிலிருந்து சிறிய கொம்பு ஒன்று புறப்பட்டு, தெற்குக்கும், கிழக்குக்கும் எதிராகவும், அழகான தேசத்திற்கு நேராகவும் மிகவும் பெரிதானது. அது வானத்தின் சேனைவரை வளர்ந்து, அதின் சேனையாகிய நட்சத்திரங்களில் சிலவற்றை பூமியிலே விழச்செய்து, அவைகளை மிதித்தது. அது சேனையினுடைய அதிபதிவரைக்கும் தன்னை உயர்த்தி, அவரிடத்திலிருந்து அனுதின பலியை அகற்றிவிட்டது; அவருடைய பரிசுத்த இடம் தள்ளப்பட்டது. பாதகத்தினிமித்தம் அனுதின பலியுடன்கூட சேனையும் அதற்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது; அது சத்தியத்தைத் தரையிலே தள்ளியது; அது செய்ததெல்லாம் அதற்குச் சாதகமானது.
தானியேல் 8:1-12 பரிசுத்த பைபிள் (TAERV)
பெல்ஷாத்சாரின் மூன்றாம் ஆட்சியாண்டில் நான் இந்தத் தரிசனத்தைப் பார்த்தேன். இது முதலில் காண்பிக்கப்பட்ட தரிசனத்திற்குப் பிறகு உள்ளது. இந்த தரிசனத்தில் நான் சூசான் என்ற நகரத்தில் இருந்தேன். சூசான் என்பது ஏலாம் என்னும் மாநிலத்தின் தலைநகரம். நான் ஊலாய் ஆற்றின் கரையில் நின்றுகொண்டிருந்தேன். நான் கண்களை ஏறெடுத்துப் பார்த்தேன். ஒரு செம்மறியாட்டுக்கடா ஊலாய் ஆற்றின் கரையில் நிற்பதை நான் பார்த்தேன். அந்த ஆட்டுக்கடாவிற்கு இரண்டு நீண்ட கொம்புகள் இருந்தன. ஒன்று இன்னொன்றைவிட நீளமானது. ஒரு கொம்பு இன்னொன்றைவிட பின்னாலிருந்தது. அந்த செம்மறியாட்டுக்கடா தனது கொம்புகளோடு பாய்ந்ததைப் பார்த்தேன். அந்த ஆட்டுக் கடா மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமாக ஓடியதை நான் கவனித்தேன். எந்த மிருகத்தினாலும் இதனைத் தடுக்க முடியவில்லை. மற்ற மிருகங்களை எவராலும் காப்பாற்ற முடியவில்லை. அந்த ஆட்டுக்கடாவால் தன் விருப்பம்போல் செய்ய முடிந்தது. எனவே ஆட்டுக்கடா வல்லமை பெற்றது. நான் செம்மறியாட்டுக்கடாவைப்பற்றி நினைத்தேன். நான் நினைத்துகொண்டிருக்கும்போது மேற்கிலிருந்து ஒரு வெள்ளாட்டுக்கடா வருவதைப் பார்த்தேன். வெள்ளாட்டுக்கடாவிற்கு எளிதில் பார்க்கும் வகையில் ஒரு பெரிய கொம்பு இருந்தது. அந்த வெள்ளாடு பூமி முழுவதும் ஓடியது. இந்த வெள்ளாட்டுக்கடாவின் கால்கள் தரையில்படவேயில்லை. அந்த வெள்ளாட்டுக்கடா 2 கொம்புகளையுடைய செம்மறியாட்டுக்கடாவிடம் வந்தது. இந்த ஆட்டுகடாதான் நான் ஊலாய் ஆற்றின் கரையில் பார்த்தது. வெள்ளாட்டுக் கடா கோபமாக இருந்தது. இது செம்மறி ஆட்டுக்கடாவை நோக்கி ஓடியது. வெள்ளாட்டுக்கடா கோபமாக இருந்தது. இது செம்மறியாட்டுக்கடாவின் இரண்டு கொம்புகளையும் ஒடித்தது. செம்மறியாட்டுக்கடாவால் வெள்ளாட்டுக் கடாவைத் தடுக்கமுடியவில்லை. வெள்ளாட்டுக்கடா, செம்மறியாட்டுக்கடாவைத் தரையில் வீழ்த்தியது. பிறகு வெள்ளாட்டுக்கடா செம்மறியாட்டுக்கடாவின்மேல் மிதித்தது. வெள்ளாட்டுக் கடாவிடமிருந்து செம்மறியாட்டுக்கடாவைக் காப்பாற்ற அங்கே யாருமில்லை. எனவே வெள்ளாட்டுக்கடா மிகவும் வல்லமை பெற்றது. ஆனால் அது வல்லமை உடையதாக இருக்கும்போதே அதன் ஒரு பெரிய கொம்பு உடைந்தது. அந்த ஒரு கொம்பிருந்த இடத்தில் நான்கு கொம்புகள் வளர்ந்தன. அந்த நான்கு கொம்புகளும் எளிதில் பார்க்கும்படியாக இருந்தன. அந்த நான்கு கொம்புகளும் நான்கு வெவ்வேறு திசைகளையும் பார்ப்பதாக இருந்தன. பிறகு நான்கு கொம்புகளில் ஒன்றிலிருந்து ஒரு சிறியக் கொம்பு முளைத்தது. அந்தச் சிறியக் கொம்பு வளர்ந்து பெரிய கொம்பாக மாறியது. இது தென் கிழக்கை நோக்கி வளர்ந்தது. இது அழகான தேசத்தை நோக்கி வளர்ந்தது. அந்தச் சிறியக் கொம்பு மிகப் பெரியதாயிற்று. அது வானத்தை தொடும்வரை வளர்ந்தது. இந்த சிறியக் கொம்பு வானத்தின் நட்சத்திரங்கள் சிலவற்றையும் தரையிலே வீழ்த்தியது. இது அந்த நட்சத்திரங்கள் மீது மிதித்து நடந்தது. அந்தச் சிறியக் கொம்பு மிகவும் வல்லமை உடையதாகியது. பிறகு இது நட்சத்திரங்களை ஆள்பவருக்கு (தேவன்) எதிராகத் திரும்பியது. இந்த சிறியக் கொம்பு ஆளுபவருக்கு (தேவன்) அளிக்கப்படும் தினப்பலியைத் தடுத்தது. ஆளுபவரை தொழுவதற்கு ஜனங்கள் கூடும் இடம் இடித்துத் தள்ளப்பட்டது. சிறியக் கொம்பு பாவம் செய்து தினப்பலியை நிறுத்தியது. இது சத்தியத்தை தரையிலே வீசியது. சிறியக் கொம்பு இவற்றைச் செய்து வெற்றிகரமாக விளங்கியது.
தானியேல் 8:1-12 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
தானியேலாகிய எனக்கு முதலில் காண்பிக்கப்பட்ட தரிசனத்துக்குப்பின்பு, ராஜாவாகிய பெல்ஷாத்சார் ராஜ்யபாரம்பண்ணின மூன்றாம் வருஷத்திலே வேறொரு தரிசனம் எனக்குக் காண்பிக்கப்பட்டது. தரிசனத்திலே நான் கண்டது என்னவென்றால்: நான் பார்க்கையில் ஏலாம் தேசத்திலுள்ள சூசான் அரமனையில் இருந்தேன்; அங்கே நான் ஊலாய் என்னும் ஆற்றங்கரையில் இருந்ததாகத் தரிசனத்திலே கண்டேன். நான் என் கண்களை ஏறெடுத்துப்பார்த்தேன்; இதோ, இரண்டு கொம்புகளுள்ள ஒரு ஆட்டுக்கடா ஆற்றிற்கு முன்பாக நின்றது; அதின் இரண்டு கொம்புகளும் உயர்ந்தவைகளாயிருந்தது; ஆகிலும் அவைகளில் ஒன்று மற்றதைப்பார்க்கிலும் உயர்ந்திருந்தது; உயர்ந்தகொம்பு பிந்தி முளைத்தெழும்பிற்று. அந்த ஆட்டுக்கடா மேற்கும் வடக்கும் தெற்கும் பாய்கிறதைக் கண்டேன்; ஒரு மிருகமும் அதின் முன்னே நிற்கக்கூடாதிருந்தது; அதின் கைக்குத் தப்புவிப்பாருமில்லை; அது தன் இஷ்டப்படியே செய்து வல்லமைகொண்டது. நான் அதைக் கவனித்துக்கொண்டிருக்கையில், இதோ, மேற்கேயிருந்து ஒரு வெள்ளாட்டுக்கடா நிலத்திலே கால்பாவாமல் தேசத்தின்மீதெங்கும் சென்றது; அந்த வெள்ளாட்டுக்கடாவின் கண்களுக்கு நடுவே விசேஷித்த ஒரு கொம்பு இருந்தது. நான் ஆற்றின் முன்பாக நிற்கக்கண்ட இரண்டு கொம்புகளுள்ள ஆட்டுக்கடாவினிடமட்டும் அது வந்து, தன் பலத்தின் உக்கிரத்தோடே அதற்கு எதிராகப் பாய்ந்தது. அது ஆட்டுக்கடாவின் கிட்டச்சேரக்கண்டேன்; அது ஆட்டுக்கடாவின்மேல் கடுங்கோபங்கொண்டு, அதை முட்டி, அதின் இரண்டு கொம்புகளையும் முறித்துப்போட்டது; அதின் முன் நிற்க ஆட்டுக்கடாவுக்குப் பலமில்லாமையால், வெள்ளாட்டுக்கடா அதைத் தரையிலே தள்ளி மிதித்துப்போட்டது; அதின் கைக்கு ஆட்டுக்கடாவைத் தப்புவிப்பார் இல்லை. அப்பொழுது வெள்ளாட்டுக்கடா மிகுதியும் வல்லமைகொண்டது; அது பலங்கொண்டிருக்கையில், அந்தப் பெரிய கொம்பு முறிந்துபோயிற்று; அதற்குப் பதிலாக ஆகாயத்தின் நாலு திசைகளுக்கும் எதிராய் விசேஷித்த நாலுகொம்புகள் முளைத்தெழும்பினது. அவைகளில் ஒன்றிலிருந்து சின்னதான ஒரு கொம்பு புறப்பட்டு, தெற்குக்கும், கிழக்குக்கும் எதிராகவும், சிங்காரமான தேசத்துக்கு நேராகவும் மிகவும் பெரியதாயிற்று. அது வானத்தின் சேனைபரியந்தம் வளர்ந்து, அதின் சேனையாகிய நட்சத்திரங்களில் சிலவற்றை பூமியிலே விழப்பண்ணி, அவைகளை மிதித்தது. அது சேனையினுடைய அதிபதிபரியந்தமும் தன்னை உயர்த்தி, அவரிடத்திலிருந்து அன்றாட பலியை நீக்கிற்று; அவருடைய பரிசுத்தஸ்தானம் தள்ளுண்டது. பாதகத்தினிமித்தம் அன்றாட பலியோடுங்கூடச் சேனையும் அதற்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது; அது சத்தியத்தைத் தரையிலே தள்ளிற்று; அது கிரியைசெய்து அநுகூலமடைந்தது.