பெல்ஷாத்சார் அரசனின் மூன்றாவது வருடத்தில் தானியேலாகிய நான், முன்பு கண்ட தரிசனத்தைப்போல் வேறொரு தரிசனத்தைக் கண்டேன். என்னுடைய தரிசனத்தில் நான் ஏலாம் மாகாணத்திலுள்ள, அரண்செய்யப்பட்ட சூசா பட்டணத்தில் இருந்தேன். அந்தத் தரிசனத்தில் நான் ஊலாய் என்னும் கால்வாய் அருகில் இருக்கக் கண்டேன். நான் நோக்கிப் பார்க்கையில், எனக்கு முன்பாக கால்வாயின் அருகே, இரண்டு நீண்ட கொம்புகளுடன் செம்மறியாட்டுக் கடா ஒன்று நின்றது. அந்த இரண்டு கொம்புகளும் நீளமாக இருந்தன. அவற்றில் ஒன்று மற்றதைவிட நீளமாய் இருந்தது. நீளமாக இருந்த கொம்போ பிந்தியே வளர்ந்து வந்தது. அந்தச் செம்மறியாட்டுக் கடா நான் பார்த்துக்கொண்டிருக்கையில் மேற்கு, வடக்கு, தெற்குத் திசைகளை நோக்கித் தாக்கியது. அதனை எதிர்த்துநிற்க எந்த மிருகத்தாலும் முடியவில்லை; அதன் வல்லமையிலிருந்து ஒருவராலும் தப்பமுடியவில்லை. அது தன் விருப்பம்போல செய்து, பெரிதாகியது. அதைப்பற்றி நான் சிந்தித்துக்கொண்டிருக்கையில், திடீரென மேற்கிலிருந்து ஒரு வெள்ளாட்டுக்கடா வந்தது. அதன் கண்களுக்கிடையில் கம்பீரமான ஒரு கொம்பு இருந்தது. அது நிலத்தில் கால்படாமல் முழு பூமியையும் கடந்து வந்தது. அது நான் முன்பு கால்வாயருகே பார்த்த இரண்டு கொம்புகளுள்ள செம்மறியாட்டுக் கடாவை நோக்கிவந்து, மிகுந்த சீற்றத்துடன் அதைத் தாக்கியது. செம்மறியாட்டுக் கடாவை வெள்ளாட்டுக்கடா சீற்றத்துடன் தாக்கி, முட்டி, அதன் இரண்டு கொம்புகளையும் நொறுக்கிப்போட்டதை நான் கண்டேன். அச்செம்மறியாட்டுக் கடா எதிர்த்துநிற்க முடியாமல், வல்லமையிழந்து நின்றது. வெள்ளாட்டுக்கடா அதனை நிலத்தில் விழத்தள்ளி மிதித்தது. அதன் வல்லமையிலிருந்து செம்மறியாட்டுக் கடாவைக் காப்பாற்ற ஒருவராலும் முடியவில்லை. அந்த வெள்ளாட்டுக்கடா முன்பைவிட பெரிதாயிற்று. ஆனால் அது வல்லமையில் உயர்ந்திருந்த வேளையில் அதன் கொம்பு உடைந்துவிட்டது. அந்த இடத்தில் வேறு நான்கு கம்பீரமான கொம்புகள் முளைத்து வானத்தின் நான்கு திசைகளை நோக்கி வளர்ந்தன. அவற்றின் ஒன்றிலிருந்து இன்னொரு கொம்பு வந்தது. அது ஆரம்பத்தில் சிறிதாய் முளைத்து, பின் தெற்குக்கும், கிழக்குக்கும் எதிராகவும் அழகான நாட்டை நோக்கியும் வல்லமையுடன் வளர்ந்தது. இவ்வாறு அது வானசேனையை எட்டும்வரை வளர்ந்து, நட்சத்திரங்கள் சிலவற்றை பூமிக்கு விழத்தள்ளி, அவற்றை மிதித்துப்போட்டது. அது சேனையின் தலைவராகிய இறைவனைப்போல தானும் பெரியவனாயிருக்கும்படி, தன்னை உயர்த்தியது. அது அவரிடமிருந்து அன்றாட பலியையும் எடுத்துக்கொண்டது. அவரின் பரிசுத்த ஆலயம் தாழ்த்தப்பட்டது. கீழ்ப்படியாத கலகத்தின் நிமித்தம் பரிசுத்தவான்களின் சேனையும், அன்றாட பலியும் அந்தக் கொம்பிடம் ஒப்படைக்கப்பட்டன. அதுவோ தான் செய்த எல்லாவற்றிலும் செழிப்படைந்தது. உண்மையோ நிலத்தில் தள்ளப்பட்டது.
வாசிக்கவும் தானியேல் 8
கேளுங்கள் தானியேல் 8
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: தானியேல் 8:1-12
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்