தானியேல் 7:1-6
தானியேல் 7:1-6 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இவற்றிற்கு முன், பாபிலோன் அரசன் பெல்ஷாத்சாரின் ஆட்சியின் முதலாவது வருடத்தில், தானியேல் ஒரு கனவு கண்டிருந்தான். அவன் படுத்திருக்கும்போது, அவனுடைய மனதில் தரிசனங்கள் கடந்துசென்றன. அவன் தான் கண்ட கனவின் சுருக்கத்தை எழுதிவைத்தான். தானியேல் சொன்னதாவது: அந்த இரவில், என் தரிசனத்தில், வானத்தின் நான்கு காற்றுகள் வீசி மாபெருங்கடலை கொந்தளிக்கச் செய்துகொண்டிருந்ததைக் கண்டேன். அப்பொழுது நான்கு பெரிய விலங்குகள் கடலில் இருந்து மேலே வெளியேறின. அவை ஒன்றிலிருந்து மற்றது வித்தியாசமான உருவமுள்ளனவாய் இருந்தன. முதலாவது விலங்கு சிங்கத்தைப்போன்றது; அதற்குக் கழுகின் சிறகுகள் இருந்தன. நான் கவனித்துப்பார்க்கையில், அந்தக் கழுகின் சிறகுகள் பிடுங்கப்பட்டு, அது நிலத்திலிருந்து மேலே தூக்கப்பட்டது. அப்பொழுது அது ஒரு மனிதனைப்போல் இரண்டு கால்களையும் ஊன்றி நின்றது. அதற்கு ஒரு மனிதனுடைய இருதயமும் கொடுக்கப்பட்டது. அங்கே எனக்கு முன்பாக இரண்டாவது மிருகம் நின்றது. அது கரடியைப்போல் காணப்பட்டது. அதன் ஒரு பக்கம் உயர்ந்திருக்கக் காணப்பட்டது. அதன் வாயில் பற்களுக்கிடையில் மூன்று விலா எலும்புகள் இருந்தன. அப்பொழுது, “எழுந்திரு, போதுமான அளவு மாம்சம் சாப்பிடு என்று அதற்குச் சொல்லப்பட்டது.” அதன்பின்பு நான் பார்க்கையில் எனக்கு முன்பாக வேறொரு மிருகம் இருந்தது. அது சிறுத்தையைப்போல் இருந்தது. பறவையின் இறகுகளைப்போன்ற நான்கு சிறகுகள் அதன் முதுகின் பின்புறத்தில் இருந்தன. அந்த மிருகத்திற்கு நான்கு தலைகள் இருந்தன. ஆளுவதற்கான அதிகாரம் அதற்குக் கொடுக்கப்பட்டது.
தானியேல் 7:1-6 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பாபிலோனின் ராஜாவாகிய பெல்ஷாத்சாரின் முதலாம் வருடத்திலே தானியேல் ஒரு கனவையும் தன் படுக்கையின்மேல் தன் எண்ணத்தில் தோன்றின தரிசனங்களையும் கண்டான். பின்பு அவன் அந்தக் கனவை எழுதி, காரியங்களின் சாராம்சத்தை விவரித்தான். தானியேல் சொன்னது: இரவு நேரத்தில் எனக்கு உண்டான தரிசனத்திலே நான் கண்டது என்னவென்றால்: இதோ, வானத்தின் நான்கு காற்றுகளும் பெரிய சமுத்திரத்தின்மேல் அடித்தது. அப்பொழுது வெவ்வேறு தோற்றமுள்ள நான்கு பெரிய மிருகங்கள் சமுத்திரத்திலிருந்து எழும்பின. முதலாவது சிங்கத்தைப்போல இருந்தது; அதற்குக் கழுகின் இறக்கைகள் இருந்தது; நான் பார்த்துக்கொண்டிருக்கும்போது, அதின் சிறகுகள் பிடுங்கப்பட்டது; அது தரையிலிருந்து எடுக்கப்பட்டு, மனிதனைப்போல இரண்டு காலின்மேல் நிமிர்ந்துநிற்கும்படி செய்யப்பட்டது; மனித இருதயம் அதற்குக் கொடுக்கப்பட்டது. பின்பு, கரடியைப் போல வேறே இரண்டாம் மிருகத்தைக் கண்டேன்; அது ஒரு பக்கமாகச் சாய்ந்து நின்று, தன் வாயின் பற்களுக்குள்ளே மூன்று விலா எலும்புகளைக் கவ்விக்கொண்டிருந்தது; எழும்பி அதிக மாம்சம் சாப்பிடு என்று அதற்குச் சொல்லப்பட்டது. அதின்பின்பு, சிவிங்கியைப்போலிருக்கிற வேறொரு மிருகத்தைக் கண்டேன்; அதின் முதுகின்மேல் பறவையின் இறக்கைகளைப்போல நான்கு இறக்கைகள் இருந்தன; அந்த மிருகத்திற்கு நான்கு தலைகளும் இருந்தன; அதற்கு ஆளுகை கொடுக்கப்பட்டது.
தானியேல் 7:1-6 பரிசுத்த பைபிள் (TAERV)
பாபிலோனின் ராஜாவாகிய பெல்ஷாத்சாரின் ஆட்சியின் முதல் ஆண்டில் தானியேல் ஒரு கனவு கண்டான். தானியேல் தனது படுக்கையில் படுத்திருந்தபோது இந்தச் தரிசனங்களைக் கண்டான். தானியேல் தான் கண்ட கனவைப்பற்றி எழுதினான். தானியேல் சொன்னான், “நான் தரிசனத்தை இரவில் கண்டேன். அந்தத் தரிசனத்தில் நான்கு திசைகளிலிருந்தும் காற்றடித்துக் கொண்டிருந்தது. அக்காற்றுகள் கடலைக் கொந்தளிக்கச் செய்தது. நான் நான்கு பெரிய மிருகங்களைப் பார்த்தேன். அவை ஒவ்வொன்றும் இன்னொன்றிலிருந்து வேறுபட்டதாக இருந்தது. அந்த நான்கு மிருகங்களும் கடலிலிருந்து வெளியே வந்தன. “முதல் மிருகம் ஒரு சிங்கத்தைப் போன்றிருந்தது. அதற்குக் கழுகைப்போன்று சிறகுகளும் இருந்தன. நான் இந்த மிருகத்தை கவனித்தேன். பிறகு அதன் சிறகுகள் பிடுங்கப்பட்டன. அது தரையிலிருந்து எடுக்கப்பட்டு மனிதனைப்போன்று இரண்டு காலில் நின்றது. மனித இருதயம் அதற்குக் கொடுக்கப்பட்டது. “பிறகு நான் எனக்கு முன்னால் இரண்டவாது மிருகத்தைப் பார்த்தேன். இந்த மிருகம் கரடியைப் போன்றிருந்தது. அது ஒரு பக்கமாக சாய்ந்து நின்றது. அது தனது வாயின் பற்களுக்குள்ளே மூன்று விலா எலும்புகளைக் கவ்விக்கொண்டிருந்தது. ‘எழுந்திரு, நீ விரும்புகிற எல்லா இறைச்சியையும் சாப்பிடு’ என்று அதற்குச் சொல்லப்பட்டது. “அதன் பிறகு நான் இன்னொரு மிருகத்தைக் கண்டேன். இந்த மிருகம் ஒரு சிவிங்கியைப் போன்றிருந்தது. அதன் முதுகின்மேல் நான்கு சிறகுகள் இருந்தன. அச்சிறகுகள் பறவைகளின் சிறகுகளைப் போன்றிருந்தன. இந்த மிருகத்திற்கு நான்கு தலைகள் இருந்தன. இதற்கு ஆட்சி செய்யும் உரிமை கொடுக்கப்பட்டது.
தானியேல் 7:1-6 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
பாபிலோன் ராஜாவாகிய பெல்ஷாத்சாரின் முதலாம் வருஷத்திலே தானியேல் ஒரு சொப்பனத்தையும் தன் படுக்கையின்மேல் தன் தலையில் தோன்றின தரிசனங்களையும் கண்டான். பின்பு அவன் அந்தச் சொப்பனத்தை எழுதி, காரியங்களின் தொகையை விவரித்தான். தானியேல் சொன்னது: இராத்திரி காலத்தில் எனக்கு உண்டான தரிசனத்திலே நான் கண்டது என்னவென்றால்: இதோ, வானத்தின் நாலு காற்றுகளும் பெரிய சமுத்திரத்தின்மேல் அடித்தது. அப்பொழுது வெவ்வேறு ரூபமுள்ள நாலு பெரிய மிருகங்கள் சமுத்திரத்திலிருந்து எழும்பின. முந்தினது சிங்கத்தைப்போல இருந்தது; அதற்குக் கழுகின் செட்டைகள் உண்டாயிருந்தது; நான் பார்த்துக்கொண்டிருக்கையில், அதின் இறகுகள் பிடுங்கப்பட்டது; அது தரையிலிருந்து எடுக்கப்பட்டு, மனுஷனைப்போல இரண்டு காலின்மேல் நிமிர்ந்துநிற்கும்படி செய்யப்பட்டது; மனுஷ இருதயம் அதற்குக் கொடுக்கப்பட்டது. பின்பு, கரடிக்கு ஒப்பாகிய வேறே இரண்டாம் மிருகத்தைக் கண்டேன்; அது ஒரு பக்கமாய்ச் சாய்ந்துநின்று, தன் வாயின் பற்களுக்குள்ளே மூன்று விலாவெலும்புகளைக் கவ்விக்கொண்டிருந்தது; எழும்பி வெகு மாம்சம் தின்னென்று அதற்குச் சொல்லப்பட்டது. அதின்பின்பு, சிவிங்கியைப்போலிருக்கிற வேறொரு மிருகத்தைக் கண்டேன்; அதின் முதுகின்மேல் பட்சியின் செட்டைகள் நாலு இருந்தது; அந்த மிருகத்துக்கு நாலு தலைகளும் உண்டாயிருந்தது; அதற்கு ஆளுகை அளிக்கப்பட்டது.