தானியேல் 7:1-6

தானியேல் 7:1-6 TCV

இவற்றிற்கு முன், பாபிலோன் அரசன் பெல்ஷாத்சாரின் ஆட்சியின் முதலாவது வருடத்தில், தானியேல் ஒரு கனவு கண்டிருந்தான். அவன் படுத்திருக்கும்போது, அவனுடைய மனதில் தரிசனங்கள் கடந்துசென்றன. அவன் தான் கண்ட கனவின் சுருக்கத்தை எழுதிவைத்தான். தானியேல் சொன்னதாவது: அந்த இரவில், என் தரிசனத்தில், வானத்தின் நான்கு காற்றுகள் வீசி மாபெருங்கடலை கொந்தளிக்கச் செய்துகொண்டிருந்ததைக் கண்டேன். அப்பொழுது நான்கு பெரிய விலங்குகள் கடலில் இருந்து மேலே வெளியேறின. அவை ஒன்றிலிருந்து மற்றது வித்தியாசமான உருவமுள்ளனவாய் இருந்தன. முதலாவது விலங்கு சிங்கத்தைப்போன்றது; அதற்குக் கழுகின் சிறகுகள் இருந்தன. நான் கவனித்துப்பார்க்கையில், அந்தக் கழுகின் சிறகுகள் பிடுங்கப்பட்டு, அது நிலத்திலிருந்து மேலே தூக்கப்பட்டது. அப்பொழுது அது ஒரு மனிதனைப்போல் இரண்டு கால்களையும் ஊன்றி நின்றது. அதற்கு ஒரு மனிதனுடைய இருதயமும் கொடுக்கப்பட்டது. அங்கே எனக்கு முன்பாக இரண்டாவது மிருகம் நின்றது. அது கரடியைப்போல் காணப்பட்டது. அதன் ஒரு பக்கம் உயர்ந்திருக்கக் காணப்பட்டது. அதன் வாயில் பற்களுக்கிடையில் மூன்று விலா எலும்புகள் இருந்தன. அப்பொழுது, “எழுந்திரு, போதுமான அளவு மாம்சம் சாப்பிடு என்று அதற்குச் சொல்லப்பட்டது.” அதன்பின்பு நான் பார்க்கையில் எனக்கு முன்பாக வேறொரு மிருகம் இருந்தது. அது சிறுத்தையைப்போல் இருந்தது. பறவையின் இறகுகளைப்போன்ற நான்கு சிறகுகள் அதன் முதுகின் பின்புறத்தில் இருந்தன. அந்த மிருகத்திற்கு நான்கு தலைகள் இருந்தன. ஆளுவதற்கான அதிகாரம் அதற்குக் கொடுக்கப்பட்டது.