தானியேல் 3:1-6

தானியேல் 3:1-6 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

நேபுகாத்நேச்சார் தொண்ணூறு அடி உயரமும், ஒன்பது அடி அகலமும் கொண்டதாக ஒரு தங்க உருவச்சிலையைச் செய்வித்து, அதைப் பாபிலோன் மாகாணத்திலுள்ள, “தூரா” என்னும் சமவெளியில் நிறுத்தினான். அதன்பின் அவன் தான் நிறுத்திய உருவச் சிலையின் அர்ப்பணிப்பிற்கு வரும்படி சிற்றரசர்கள், நிர்வாக அதிகாரிகள், ஆளுநர்கள், ஆலோசகர்கள், பொருளாளர்கள், நீதிபதிகள், உப நீதிபதிகள், மற்றும் எல்லா மாகாண அலுவலர்களையும் அழைத்துவரக் கட்டளையிட்டான். அதன்படி சிற்றரசர்கள், நிர்வாக அதிகாரிகள், ஆளுநர்கள், ஆலோசகர்கள், பொருளாளர்கள், நீதிபதிகள், உப நீதிபதிகள் மற்றும் எல்லா மாகாண அலுவலர்களும் நேபுகாத்நேச்சார் அரசன் நிறுத்தியிருந்த உருவச் சிலையின் அர்ப்பணிப்பிற்காக வந்துசேர்ந்து, அதற்குமுன் நின்றார்கள். அப்பொழுது அரச அறிவிப்பாளன் உரத்த சத்தமாய், “நாட்டு மக்களே, பிற நாடுகளே, பல்வேறு மொழிகளைப் பேசும் மனிதரே, நீங்கள் செய்யவேண்டும் என்று அரசன் கட்டளையிட்டிருப்பது இதுவே: கொம்பு வாத்தியம், புல்லாங்குழல், சித்தார், வீணை, யாழ், நாதஸ்வரம் முதலான எல்லா இசைக்கருவிகளின் சத்தத்தை நீங்கள் கேட்டவுடனே, நீங்கள் எல்லோரும் இங்கு கீழே விழுந்து, நேபுகாத்நேச்சார் அரசன் நிறுத்தி வைத்திருக்கும் தங்கச் சிலையை வணங்கவேண்டும். அப்படிக் கீழே விழுந்து வணங்காதவன் எவனோ, அவன் உடனே பற்றியெரியும் நெருப்புச்சூளையில் போடப்படுவான் என்றான்.”

தானியேல் 3:1-6 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் அறுபதுமுழ உயரமும், ஆறுமுழ அகலமுமான ஒருபொற்சிலையை உண்டாக்கி, பாபிலோன் மாகாணத்திலிருக்கிற தூரா என்னும் சமபூமியிலே நிறுத்தினான். பின்பு ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் தேசாதிபதிகளையும், அதிகாரிகளையும், தலைவர்களையும், நியாயாதிபதிகளையும், பொக்கிஷக்காரர்களையும், நீதிசாஸ்திரிகளையும், விசாரிப்புக்காரர்களையும், நாடுகளிலுள்ள அதிகாரிகள் யாவரையும் நேபுகாத்நேச்சார் ராஜா நிறுத்தின சிலையின் பிரதிஷ்டைக்கு வந்து சேரும்படி அழைப்பிதழ் அனுப்பினான். அப்பொழுது தேசாதிபதிகளும், அதிகாரிகளும், தலைவர்களும், நியாயாதிபதிகளும், பொக்கிஷக்காரர்களும், நீதிபதிகளும், நாடுகளிலுள்ள அதிகாரிகள் யாவரும், ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின சிலையின் பிரதிஷ்டைக்கு வந்து சேர்ந்து, நேபுகாத்நேச்சார் நிறுத்தின சிலைக்கு முன்பாக நின்றார்கள். அறிவிப்பாளன் உரத்த சத்தமாக: சகல மக்களே, தேசத்தார்களே, பல மொழி பேசுகிறவர்களே, உங்களுக்கு அறிவிக்கப்படுகிறது என்னவென்றால்: எக்காளம், நாதசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான கீதவாத்தியங்களின் சத்தத்தை நீங்கள் கேட்கும்போது, நீங்கள் கீழேவிழுந்து, ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளவேண்டும். எவனாகிலும் கீழேவிழுந்து, அதைப் பணிந்துகொள்ளாவிட்டால், அவன் அந்நேரமே எரிகிற நெருப்புச்சூளையின் நடுவிலே போடப்படுவான் என்றான்.

தானியேல் 3:1-6 பரிசுத்த பைபிள் (TAERV)

நேபுகாத்நேச்சார் ராஜாவிடம் தங்கத்தினால் செய்த ஒரு விக்கிரகம் இருந்தது. அந்த விக்கிரகம் 60 முழம் உயரமும் 6 முழம் அகலமுமானது. பிறகு அவன் அந்த விக்கிரகத்தைப் பாபிலோன் மாகாணத்திலிருக்கிற தூரா என்னும் சமவெளியில் நிறுத்தி வைத்தான். பின்னர் ராஜா தேசாதிபதிகளையும், அதிகாரிகளையும், தலைவரையும், நியாயாதிபதிகளையும், கருவூலக்காரரையும், ஆலோசகரையும், ஆளுநரையும், நாடுகளிலுள்ள அதிகாரிகள் அனைவரையும் கூடி வருமாறு அழைத்தான். ராஜா, அவர்கள் அனைவரும் விக்கிரகத்தின் பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கு வரவேண்டும் என்று விரும்பினான். எனவே அவர்களெல்லாம் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் அமைத்திருந்த விக்கிரகத்தின் முன் வந்து நின்றார்கள். பிறகு ராஜாவுக்காக அறிவிப்பு செய்யும் கட்டியக்காரன் உரத்தக்குரலில், “பல தேசங்களிலிருந்தும், பலமொழி இனங்களிலிருந்தும் வந்துள்ள ஜனங்களே, நான் சொல்வதைக் கேளுங்கள். நீங்கள் எல்லா இசைக்கருவிகளின் சப்தங்களைக் கேட்டதும் பணிந்து வணங்கவேண்டும். எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு மற்றும் மற்ற இசைக்கருவிகளின் ஒலியை கேட்கும்போது, நீங்கள் தங்க விக்கிரகத்தை தொழுதுகொள்ளவேண்டும். ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் இந்த விக்கிரகத்தை அமைத்திருக்கிறார். எவனாவது கீழே விழுந்து தங்க விக்கிரகத்தை தொழாமலிருந்தால் அவன் சீக்கிரமாக அதிக வெப்பமுள்ள எரிகிற அக்கினிச் சூளையிலே போடப்படுவான். இது அனைவருக்குமுரிய அரச கட்டளையாகும்” என்றான்.

தானியேல் 3:1-6 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் அறுபதுமுழ உயரமும் ஆறுமுழ அகலமுமான ஒருபொற்சிலையைப் பண்ணுவித்து, பாபிலோன் மாகாணத்திலிருக்கிற தூரா என்னும் சமபூமியிலே நிறுத்தினான். பின்பு ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் தேசாதிபதிகளையும், அதிகாரிகளையும், தலைவரையும், நியாயாதிபதிகளையும், பொக்கிஷக்காரரையும், நீதிசாஸ்திரிகளையும், விசாரிப்புக்காரரையும், நாடுகளிலுள்ள உத்தியோகஸ்தர் யாவரையும் நேபுகாத்நேச்சார் ராஜா நிறுத்தின சிலையின் பிரதிஷ்டைக்கு வந்து சேரும்படி அழைத்தனுப்பினான். அப்பொழுது தேசாதிபதிகளும், அதிகாரிகளும், தலைவரும், நியாயாதிபதிகளும், பொக்கிஷக்காரரும், நீதிசாஸ்திரிகளும், விசாரிப்புக்காரரும், நாடுகளிலுள்ள உத்தியோகஸ்தர் யாவரும், ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின சிலையின் பிரதிஷ்டைக்கு வந்து சேர்ந்து, நேபுகாத்நேச்சார் நிறுத்தின சிலைக்கு எதிராக நின்றார்கள். கட்டியக்காரன் உரத்த சத்தமாய்: சகல ஜனங்களும், ஜாதிகளும், பாஷைக்காரருமானவர்களே, உங்களுக்கு அறிவிக்கப்படுகிறது என்னவென்றால்: எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தை நீங்கள் கேட்கும்போது, நீங்கள் தாழவிழுந்து, ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளக்கடவீர்கள். எவனாகிலும் தாழ விழுந்து, அதைப் பணிந்துகொள்ளாமற்போனால், அவன் அந்நேரமே எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்படுவான் என்றான்.