தானியேல் 3:1-6

தானியேல் 3:1-6 TCV

நேபுகாத்நேச்சார் தொண்ணூறு அடி உயரமும், ஒன்பது அடி அகலமும் கொண்டதாக ஒரு தங்க உருவச்சிலையைச் செய்வித்து, அதைப் பாபிலோன் மாகாணத்திலுள்ள, “தூரா” என்னும் சமவெளியில் நிறுத்தினான். அதன்பின் அவன் தான் நிறுத்திய உருவச் சிலையின் அர்ப்பணிப்பிற்கு வரும்படி சிற்றரசர்கள், நிர்வாக அதிகாரிகள், ஆளுநர்கள், ஆலோசகர்கள், பொருளாளர்கள், நீதிபதிகள், உப நீதிபதிகள், மற்றும் எல்லா மாகாண அலுவலர்களையும் அழைத்துவரக் கட்டளையிட்டான். அதன்படி சிற்றரசர்கள், நிர்வாக அதிகாரிகள், ஆளுநர்கள், ஆலோசகர்கள், பொருளாளர்கள், நீதிபதிகள், உப நீதிபதிகள் மற்றும் எல்லா மாகாண அலுவலர்களும் நேபுகாத்நேச்சார் அரசன் நிறுத்தியிருந்த உருவச் சிலையின் அர்ப்பணிப்பிற்காக வந்துசேர்ந்து, அதற்குமுன் நின்றார்கள். அப்பொழுது அரச அறிவிப்பாளன் உரத்த சத்தமாய், “நாட்டு மக்களே, பிற நாடுகளே, பல்வேறு மொழிகளைப் பேசும் மனிதரே, நீங்கள் செய்யவேண்டும் என்று அரசன் கட்டளையிட்டிருப்பது இதுவே: கொம்பு வாத்தியம், புல்லாங்குழல், சித்தார், வீணை, யாழ், நாதஸ்வரம் முதலான எல்லா இசைக்கருவிகளின் சத்தத்தை நீங்கள் கேட்டவுடனே, நீங்கள் எல்லோரும் இங்கு கீழே விழுந்து, நேபுகாத்நேச்சார் அரசன் நிறுத்தி வைத்திருக்கும் தங்கச் சிலையை வணங்கவேண்டும். அப்படிக் கீழே விழுந்து வணங்காதவன் எவனோ, அவன் உடனே பற்றியெரியும் நெருப்புச்சூளையில் போடப்படுவான் என்றான்.”