தானியேல் 2:44-49

தானியேல் 2:44-49 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“அந்த அரசர்களின் நாட்களில் பரலோகத்தின் இறைவன் அரசு ஒன்றை எழும்பப்பண்ணுவார். அது அழிக்கப்படவோ, அந்த அரசு வேறு மக்களுக்கு விடப்படவோ மாட்டாது. அது அந்த அரசுகளையெல்லாம் நொறுக்கி அழித்துவிடும். ஆயினும் அதுவோ என்றென்றைக்கும் நிலைத்து நிற்கும். மனித கையால் வெட்டியெடுக்கப்படாமல் மலையிலிருந்து பெயர்த்தெடுக்கப்பட்ட, பாறாங்கல்லைப் பற்றிய தரிசனத்தின் அர்த்தம் இதுவே. அந்தக் கல்லே இரும்பையும், வெண்கலத்தையும், களிமண்ணையும், வெள்ளியையும், தங்கத்தையும் துண்டுதுண்டுகளாக நொறுக்கிப்போட்டது. “மகத்துவமான இறைவன், எதிர்காலத்தில் நிகழப்போவதை அரசருக்குக் காட்டியிருக்கிறார். கனவு உண்மையானது. விளக்கமும் நம்பத்தக்கது என்றான்.” அப்பொழுது நேபுகாத்நேச்சார் அரசன், தானியேலுக்கு முன் முகங்குப்புற விழுந்து அவனுக்கு மரியாதை செலுத்தி, அவனுக்குக் காணிக்கை செலுத்தவும், தூபங்காட்டவும் கட்டளையிட்டான். அவன் தானியேலிடம், “உன்னால் இந்த மறைபொருளை வெளிப்படுத்தக் கூடியதாய் இருந்தபடியால், நிச்சயமாகவே உன் இறைவனே தெய்வங்களுக்கெல்லாம் இறைவனும், அரசர்களுக்கெல்லாம் ஆண்டவரும், மறைபொருளை வெளிப்படுத்துகிறவருமாய் இருக்கிறார் என்றான்.” பின்பு அரசன் தானியேலை ஒரு உயர்ந்த பதவியில் அமர்த்தி, அநேக சிறந்த அன்பளிப்புகளையும் கொடுத்தான். அவனைப் பாபிலோன் மாகாணம் முழுவதற்கும் ஆளுநனாக்கி, அதன் எல்லா ஞானிகளுக்கும் அவனைப் பொறுப்பாகவும் நியமித்தான். மேலும் தானியேலின் வேண்டுகோளின்படி, சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைப் பாபிலோன் மாகாண நிர்வாகிகளாக நியமித்தான். தானியேலோ அரச சபையிலேயே இருந்தான்.

தானியேல் 2:44-49 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்ஜியத்தை எழும்பச்செய்வார்; அந்த ராஜ்ஜியம் வேறு மக்களுக்கு விடப்படுவதில்லை; ஒரு கல் கையால் பெயர்க்கப்படாமல் மலையிலிருந்து பெயர்ந்து, உருண்டுவந்து, இரும்பையும், வெண்கலத்தையும், களிமண்ணையும், வெள்ளியையும், பொன்னையும் நொறுக்கினதை நீர் கண்டீரே, அப்படியே அது அந்த ராஜ்ஜியங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, அதுவோ என்றென்றைக்கும் நிற்கும். இனிமேல் சம்பவிக்கப்போகிறதை மகா தேவன் ராஜாவிற்குத் தெரிவித்திருக்கிறார்; சொப்பனமானது உண்மை, அதின் அர்த்தம் சத்தியம் என்றான். அப்பொழுது ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் முகங்குப்புற விழுந்து, தானியேலை வணங்கி, அவனுக்குக் காணிக்கைசெலுத்தவும், தூபங்காட்டவும் கட்டளையிட்டான். ராஜா தானியேலை நோக்கி: நீ இந்த மறைபொருளை வெளிப்படுத்தினதினால், உண்மையாகவே உங்கள் தேவனே தேவர்களுக்கு தேவனும், ராஜாக்களுக்கு ஆண்டவரும், மறைபொருட்களை வெளிப்படுத்துகிறவருமாயிருக்கிறார் என்றான். பின்பு ராஜா தானியேலைப் பெரியவனாக்கி, அவனுக்கு அநேகம் சிறந்த வெகுமதிகளைக் கொடுத்து, அவனைப் பாபிலோன் மாகாணம் முழுவதற்கும் அதிபதியாகவும், பாபிலோனிலுள்ள சகல ஞானிகளின்மேலும் பிரதான அதிகாரியாகவும் நியமித்தான். தானியேல் ராஜாவை வேண்டிகொண்டதினால் அவன் சாத்ராக்கையும், மேஷாக்கையும், ஆபேத்நேகோவையும் பாபிலோன் மாகாணத்துக் காரியங்களை விசாரிக்கும்படிவைத்தான்; தானியேலோவென்றால் ராஜாவின் அரண்மனையில் இருந்தான்.

தானியேல் 2:44-49 பரிசுத்த பைபிள் (TAERV)

“நான்காவது இராஜ்யத்தில் ராஜாக்கள் இருக்கும்போது, பரலோகத்தின் தேவன் வேறொரு இராஜ்யத்தை உருவாக்குவார். இந்த இராஜ்யம் என்றென்றும் இருக்கும். இது அழிக்கப்படாது. இந்த இராஜ்யம் இன்னொரு ஜனங்கள் கூட்டத்திற்குக் கொடுக்கப்படுவதில்லை. இந்த இராஜ்யம் மற்ற இராஜ்யங்களை நொறுக்கும். இது அந்த இராஜ்யங்களை ஒரு முடிவிற்குக் கொண்டுவரும். ஆனால் இந்த இராஜ்யம் என்றென்றும் தொடர்ந்திருக்கும். “ராஜாவான நேபுகாத்நேச்சாரே, ஒரு மலையிலிருந்து ஒரு கல் எவராலும் பெயர்க்கப்படாமல் பெயர்ந்து வந்ததை நீர் பார்த்தீர். அக்கல் இரும்பு, வெண்கலம், களிமண், வெள்ளி, தங்கம் ஆகியவற்றைத் தூள்தூளாக்கியது. இதேபோல் தேவன் வருங்காலத்தில் என்ன நிகழும் என்று உமக்குக் காட்டினார். அந்தக் கனவு உண்மையானது. நீர் இந்த விளக்கத்தை நம்பலாம்” என்றான். அப்போது ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் தானியேலின் முன் தரையில் விழுந்து வணங்கினான். ராஜா தானியேலைப் போற்றினான். ராஜா தானியேலைப் பெருமைப்படுத்துவதற்குக் காணிக்கை கொடுக்கவும், தூபம் காட்டவும் கட்டளையிட்டான். பிறகு ராஜா தானியேலிடம், “உனது தேவன் உண்மையிலேயே அதிமுக்கியமானவரும், வல்லமை உடையவருமானவர் என்பதை அறிவேன். அவர் அனைத்து ராஜாக்களுக்கும் கர்த்தராக இருக்கிறார். ஜனங்கள் அறியாதவற்றை அவர்களுக்கு அவர் கூறுகிறார். இது உண்மை என்பது எனக்குத் தெரியும். ஏனென்றால் நீ இந்த இரகசியத்தை என்னிடம் சொல்லும் தகுதி பெற்றிருக்கிறாய்” என்றான். பிறகு ராஜா தானியேலுக்கு தனது இராஜ்யத்தில் மிக முக்கியமான ஒரு பதவியைக் கொடுத்தான். அதோடு ராஜா தானியேலுக்கு விலையுயர்ந்த பரிசுகளைக் கொடுத்தான். நேபுகாத்நேச்சார் தானியேலைப் பாபிலோன் மாகாணத்தின் ஆளுநராகவும் உயர்த்தினான். அதோடு ராஜா தானியேலைப் பாபிலோன் தேசத்தின் ஞானிகளுக்கெல்லாம் அதிகாரியாகவும் ஆக்கினான். தானியேல் ராஜாவிடம் சாத்ராக்கையும், மேஷாக்கையும், ஆபேத்நேகோவையும் பாபிலோன் மாகாணத்தின் காரியங்களை விசாரிக்கும் அதிகாரிகளாக்கும்படி வேண்டினான். தானியேல் வேண்டியபடியே ராஜா செய்தான். தானியேலும் ராஜா அருகிலே இருக்கும் முக்கியமானவர்களில் ஒருவனானான்.

தானியேல் 2:44-49 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; ஒரு கல் கையால் பெயர்க்கப்படாமல் மலையிலிருந்து பெயர்ந்து, உருண்டுவந்து, இரும்பையும் வெண்கலத்தையும் களிமண்ணையும் வெள்ளியையும் பொன்னையும் நொறுக்கினதை நீர் கண்டீரே, அப்படியே அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும். இனிமேல் சம்பவிக்கப்போகிறதை மகா தேவன் ராஜாவுக்குத் தெரிவித்திருக்கிறார்; சொப்பனமானது நிச்சயம், அதின் அர்த்தம் சத்தியம் என்றான். அப்பொழுது ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் முகங்குப்புற விழுந்து, தானியேலை வணங்கி, அவனுக்குக் காணிக்கைசெலுத்தவும் தூபங்காட்டவும் கட்டளையிட்டான். ராஜா தானியேலை நோக்கி: நீ இந்த மறைபொருளை வெளிப்படுத்தினபடியினால், மெய்யாய் உங்கள் தேவனே தேவர்களுக்கு தேவனும், ராஜாக்களுக்கு ஆண்டவரும், மறைபொருள்களை வெளிப்படுத்துகிறவருமாயிருக்கிறார் என்றான். பின்பு ராஜா தானியேலைப் பெரியவனாக்கி, அவனுக்கு அநேகம் சிறந்த வெகுமதிகளைக் கொடுத்து, அவனைப் பாபிலோன் மாகாணம் முழுதுக்கும் அதிபதியாகவும், பாபிலோனிலுள்ள சகல ஞானிகளின்மேலும் பிரதான அதிகாரியாகவும் நியமித்தான். தானியேல் ராஜாவை வேண்டிக்கொண்டதின்பேரில் அவன் சாத்ராக்கையும், மேஷாக்கையும், ஆபேத்நேகோவையும் பாபிலோன் மாகாணத்துக் காரியங்களை விசாரிக்கும்படிவைத்தான்; தானியேலோவென்றால் ராஜாவின் கொலுமண்டபத்தில் இருந்தான்.