தானியேல் 2:44-49
தானியேல் 2:44-49 TCV
“அந்த அரசர்களின் நாட்களில் பரலோகத்தின் இறைவன் அரசு ஒன்றை எழும்பப்பண்ணுவார். அது அழிக்கப்படவோ, அந்த அரசு வேறு மக்களுக்கு விடப்படவோ மாட்டாது. அது அந்த அரசுகளையெல்லாம் நொறுக்கி அழித்துவிடும். ஆயினும் அதுவோ என்றென்றைக்கும் நிலைத்து நிற்கும். மனித கையால் வெட்டியெடுக்கப்படாமல் மலையிலிருந்து பெயர்த்தெடுக்கப்பட்ட, பாறாங்கல்லைப் பற்றிய தரிசனத்தின் அர்த்தம் இதுவே. அந்தக் கல்லே இரும்பையும், வெண்கலத்தையும், களிமண்ணையும், வெள்ளியையும், தங்கத்தையும் துண்டுதுண்டுகளாக நொறுக்கிப்போட்டது. “மகத்துவமான இறைவன், எதிர்காலத்தில் நிகழப்போவதை அரசருக்குக் காட்டியிருக்கிறார். கனவு உண்மையானது. விளக்கமும் நம்பத்தக்கது என்றான்.” அப்பொழுது நேபுகாத்நேச்சார் அரசன், தானியேலுக்கு முன் முகங்குப்புற விழுந்து அவனுக்கு மரியாதை செலுத்தி, அவனுக்குக் காணிக்கை செலுத்தவும், தூபங்காட்டவும் கட்டளையிட்டான். அவன் தானியேலிடம், “உன்னால் இந்த மறைபொருளை வெளிப்படுத்தக் கூடியதாய் இருந்தபடியால், நிச்சயமாகவே உன் இறைவனே தெய்வங்களுக்கெல்லாம் இறைவனும், அரசர்களுக்கெல்லாம் ஆண்டவரும், மறைபொருளை வெளிப்படுத்துகிறவருமாய் இருக்கிறார் என்றான்.” பின்பு அரசன் தானியேலை ஒரு உயர்ந்த பதவியில் அமர்த்தி, அநேக சிறந்த அன்பளிப்புகளையும் கொடுத்தான். அவனைப் பாபிலோன் மாகாணம் முழுவதற்கும் ஆளுநனாக்கி, அதன் எல்லா ஞானிகளுக்கும் அவனைப் பொறுப்பாகவும் நியமித்தான். மேலும் தானியேலின் வேண்டுகோளின்படி, சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைப் பாபிலோன் மாகாண நிர்வாகிகளாக நியமித்தான். தானியேலோ அரச சபையிலேயே இருந்தான்.


