தானியேல் 2:4-13

தானியேல் 2:4-13 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது கல்தேயர் ராஜாவை நோக்கி: ராஜாவே, நீர் என்றும் வாழ்க; சொப்பனத்தை உமது அடியாருக்குச் சொல்லும், அப்பொழுது அதின் அர்த்தத்தை விடுவிப்போம் என்று சீரிய பாஷையிலே சொன்னார்கள். ராஜா கல்தேயருக்குப் பிரதியுத்தரமாக: என்னிடத்திலிருந்து பிறக்கிற தீர்மானம் என்னவென்றால், நீங்கள் சொப்பனத்தையும் அதின் அர்த்தத்தையும் எனக்கு அறிவியாமற்போனால் துண்டித்துப்போடப்படுவீர்கள்; உங்கள் வீடுகள் எருக்களங்களாக்கப்படும். சொப்பனத்தையும் அதின் அர்த்தத்தையும் தெரிவித்தீர்களேயாகில், என்னிடத்தில் வெகுமதிகளையும் பரிசுகளையும் மிகுந்த கனத்தையும் பெறுவீர்கள்; ஆகையால் சொப்பனத்தையும் அதின் அர்த்தத்தையும் எனக்குத் தெரிவியுங்கள் என்றான். அவர்கள் மறுபடியும் பிரதியுத்தரமாக: ராஜா அடியாருக்குச் சொப்பனத்தைச் சொல்வாராக; அப்பொழுது அதின் அர்த்தத்தை விடுவிப்போம் என்றார்கள். அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: என்னிடத்திலிருந்து தீர்மானம் பிறந்தபடியினாலே நீங்கள் காலதாமதம் பண்ணப்பார்க்கிறீர்களென்று நிச்சயமாக எனக்குத் தெரியவருகிறது. காலம் மாறுமென்று நீங்கள் எனக்கு முன்பாக பொய்யும் புரட்டுமான விசேஷத்தைச் சொல்லும்படி எத்தனம்பண்ணி இருக்கிறீர்கள்; நீங்கள் சொப்பனத்தை எனக்குத் தெரிவிக்காமற்போனால், உங்களெல்லாருக்கும் இந்த ஒரே தீர்ப்பு பிறந்திருக்கிறது; ஆகையால் சொப்பனத்தை எனக்குச் சொல்லுங்கள்; அப்பொழுது அதின் அர்த்தத்தையும் உங்களால் காண்பிக்கக்கூடுமென்று அறிந்துகொள்ளுவேன் என்றான். கல்தேயர் ராஜசமுகத்தில் பிரதியுத்தரமாக: ராஜா கேட்கும் காரியத்தை அறிவிக்கத்தக்க மனுஷன் பூமியில் ஒருவனும் இல்லை; ஆகையால் மகத்துவமும் வல்லமையுமான எந்த ராஜாவும் இப்படிப்பட்ட காரியத்தை ஒரு சாஸ்திரியினிடத்திலாவது ஜோசியனிடத்திலாவது கல்தேயனிடத்திலாவது கேட்டதில்லை. ராஜா கேட்கிற காரியம் மிகவும் அருமையானது; மாம்சமாயிருக்கிறவர்களோடே வாசம்பண்ணாத தேவர்களேயொழிய ராஜசமுகத்தில் அதை அறிவிக்கத்தக்கவர் ஒருவரும் இல்லை என்றார்கள். இதினிமித்தம் ராஜா மகா கோபமும் உக்கிரமுங்கொண்டு, பாபிலோனில் இருக்கிற எல்லா ஞானிகளையும் கொலைசெய்யும்படி கட்டளையிட்டான். ஞானிகளைக் கொலைசெய்யவேண்டுமென்கிற கட்டளை வெளிப்பட்டபோது, தானியேலையும் அவன் தோழரையும் கொலைசெய்யத் தேடினார்கள்.

தானியேல் 2:4-13 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அப்பொழுது சோதிடர்கள், “அரசே, நீர் நீடூழி வாழ்க; கனவை எங்களுக்குச் சொல்லும். நாங்கள் அதன் விளக்கத்தைச் சொல்வோம்” என்று அரமேய மொழியில் சொன்னார்கள். அதற்கு அரசன் சோதிடர்களிடம், “நான் உறுதியாகத் தீர்மானித்தது இதுவே: எனது கனவையும், அதற்குரிய விளக்கத்தையும் நீங்கள் சொல்லாவிட்டால், நான் உங்களைத் துண்டுதுண்டாக வெட்டுவிப்பேன், உங்கள் வீடுகளையும் தரைமட்டமாக்குவேன். ஆனால் கனவைச் சொல்லி அதற்கு விளக்கத்தையும் தெரிவிப்பீர்களாயின், நீங்கள் என்னிடமிருந்து அன்பளிப்புகளையும், வெகுமதிகளையும், பெருமதிப்பையும் பெறுவீர்கள். எனவே கனவைச் சொல்லி, அதன் விளக்கத்தையும் எனக்குச் சொல்லுங்கள் என்றான்.” திரும்பவும் அவர்கள், “அரசர் தமது அடியவராகிய எங்களுக்குக் கனவைச் சொல்வாராக. அப்பொழுது நாங்கள் அதன் விளக்கத்தைக் கூறுவோம், என்று பதிலளித்தார்கள்.” அதற்கு அரசன், “நான் உறுதியாய்த் தீர்மானித்திருப்பது என்ன என்பதை நீங்கள் அறிந்திருக்கிறபடியால், நீங்கள் காலத்தைத் கடத்தப் பார்க்கிறீர்கள் என்பது எனக்கு நிச்சயமாய்த் தெரியும். இப்பொழுது கனவைச் சொல்லாமற்போனால், உங்களுக்கு ஒரு தண்டனைதான் இருக்கிறது. சூழ்நிலை மாறும் என்ற நம்பிக்கையுடன் நீங்கள் பொய்யும், புரட்டுமானவற்றை எனக்குச் சொல்லி, காலத்தைக் கடத்தப் பார்க்கிறீர்கள். எனவே இப்பொழுது கனவை எனக்குச் சொல்லுங்கள். அப்பொழுது அதன் விளக்கத்தையும் உங்களால் சொல்லமுடியும் என்பதை நான் அறிவேன் என்றான்.” அதற்குச் சோதிடர் அரசனிடம், “அரசர் கேட்கும் இதைச் செய்யக்கூடியவன் பூமியில் ஒருவனும் இல்லை. மேன்மையும், வல்லமையும் உள்ள எந்த அரசனும், இப்படியான செயலைச் செய்யும்படி மந்திரவாதிகளிடமோ, மாந்திரீகரிடமோ, சோதிடரிடமோ ஒருபோதும் கேட்டதில்லை. ஏனெனில் அரசர் கேட்பது மிகக் கடினமானது. மனிதனால் அல்ல, தெய்வங்களால்தான் இதை அரருக்கு வெளிப்படுத்த முடியும். தெய்வங்கள் மனிதர் மத்தியில் வாழ்வதில்லை என்றார்கள்.” இது அரசனுக்குக் கோபத்தையும், ஆத்திரத்தையும் மூட்டியது. அதனால் பாபிலோனில் இருக்கும் எல்லா ஞானிகளுக்கும், மரண தண்டனை கொடுக்கும்படி அரசன் கட்டளையிட்டான். அப்படியே ஞானிகள் கொலைசெய்யப்பட வேண்டும் என்ற கட்டளை பிறப்பிக்கப்பட்டது. அப்போது தானியேலையும் அவனுடைய நண்பர்களையும் தேடி, கொலை செய்யும்படி மனிதர் அனுப்பப்பட்டார்கள்.

தானியேல் 2:4-13 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது கல்தேயர்கள் ராஜாவை நோக்கி: ராஜாவே, நீர் என்றும் வாழ்க; கனவை உமது அடியார்களுக்குச் சொல்லும், அப்பொழுது அதின் அர்த்தத்தை விடுவிப்போம் என்று சீரிய மொழியிலே சொன்னார்கள். ராஜா கல்தேயர்களுக்கு மறுமொழியாக: என்னிடத்திலிருந்து பிறக்கிற தீர்மானம் என்னவென்றால், நீங்கள் கனவையும் அதின் அர்த்தத்தையும் எனக்குச் சொல்லாவிட்டால் துண்டித்துப்போடப்படுவீர்கள்; உங்கள் வீடுகள் எருக்களங்களாக்கப்படும். கனவையும் அதின் அர்த்தத்தையும் சொல்வீர்களென்றால், என்னிடத்தில் வெகுமதிகளையும் பரிசுகளையும் மிகுந்த கனத்தையும் பெறுவீர்கள்; ஆகையால் கனவையும் அதின் அர்த்தத்தையும் எனக்குத் தெரிவியுங்கள் என்றான். அவர்கள் மறுபடியும் மறுமொழியாக: ராஜா அடியார்களுக்குக் கனவைச் சொல்வாராக; அப்பொழுது அதின் அர்த்தத்தைச் சொல்வோம் என்றார்கள். அதற்கு ராஜா மறுமொழியாக: என்னிடத்திலிருந்து தீர்மானம் பிறந்தபடியினாலே நீங்கள் காலதாமதம் செய்யப்பார்க்கிறீர்களென்று நிச்சயமாக எனக்குத் தெரியவருகிறது. காலம் மாறுமென்று நீங்கள் எனக்கு முன்பாக பொய்யும் புரட்டுமான செய்தியைச் சொல்லும்படி திட்டமிட்டிருக்கிறீர்கள்; நீங்கள் கனவை எனக்குச் சொல்லாவிட்டால், உங்கள் அனைவருக்கும் இந்த ஒரே தீர்ப்பு பிறந்திருக்கிறது; ஆகையால் கனவை எனக்குச் சொல்லுங்கள்; அப்பொழுது அதின் அர்த்தத்தையும் உங்களால் சொல்லமுடியுமென்று அறிந்துகொள்வேன் என்றான். கல்தேயர்கள் ராஜசமுகத்தில் மறுமொழியாக: ராஜா கேட்கும் காரியத்தை சொல்லத்தக்க மனிதன் பூமியில் ஒருவனும் இல்லை; ஆகையால் மகத்துவமும் வல்லமையுமான எந்த ராஜாவும் இப்படிப்பட்ட காரியத்தை ஒரு ஞானியினிடத்திலாவது சோதிடனிடத்திலாவது கல்தேயனிடத்திலாவது கேட்டதில்லை. ராஜா கேட்கிற காரியம் மிகவும் அருமையானது; மாம்சமாயிருக்கிறவர்களுடன் வாசம்செய்யாத தேவர்களேயல்லாமல் ராஜசமுகத்தில் அதை அறிவிக்க முடிந்தவர் ஒருவரும் இல்லை என்றார்கள். இதனால் ராஜா மகா கோபமும் எரிச்சலுங்கொண்டு, பாபிலோனில் இருக்கிற எல்லா ஞானிகளையும் கொலைசெய்யும்படி கட்டளையிட்டான். ஞானிகளைக் கொலைசெய்யவேண்டுமென்கிற கட்டளை வெளிப்பட்டபோது, தானியேலையும் அவன் தோழரையும் கொலைசெய்யத் தேடினார்கள்.

தானியேல் 2:4-13 பரிசுத்த பைபிள் (TAERV)

பிறகு கல்தேயர்கள் ராஜாவுக்குப் பதில் சொன்னார்கள். அவர்கள் அராமிக் மொழியில் பேசினார்கள். அவர்கள் ராஜாவே, “நீர் என்றென்றும் வாழ்க. நாங்கள் உமது வேலைக்காரர்கள். தயவுசெய்து உமது கனவைக் கூறும். பிறகு அதன் அர்த்தம் என்னவென்று நாங்கள் கூறுவோம்” என்று சொன்னார்கள். பிறகு ராஜா நேபுகாத்நேச்சார் அவர்களிடம், “இல்லை, நீங்கள் எனது கனவைச் சொல்ல வேண்டும். பிறகு அதன் பொருள் என்னவென்றும் செல்லவேண்டும். நீங்கள் இவற்றைச் சொல்லாவிடால் உங்களைத் துண்டுதுண்டாக வெட்டிப் போடும்படிக் கட்டளையிடுவேன். அதோடு உங்கள் வீடுகள் குப்பைமேடுகளாக அழிக்கும்படிக் கட்டளையிடுவேன். ஆனால் நீங்கள் எனது கனவையும், அதன் பொருளையும் சொல்லிவிட்டால் நான் உங்களுக்கு பரிசுகளையும், அன்பளிப்புகளையும், மரியாதையும் தருவேன். எனவே என் கனவையும், அதன் பொருளையும் கூறுங்கள்” என்றான். மீண்டும் அந்த ஞானிகள் ராஜாவிடம், “தயவு செய்து கனவை எங்களுக்குச் சொல்லும். பிறகு நாங்கள் அதன் பொருளைக் கூறுகிறோம்” என்றனர். பிறகு ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், “நீங்கள் காலதாமதம் செய்யப்பார்க்கின்றீர்கள் என்று எனக்குத் தெரிகிறது. நான் என்ன சொன்னேன் என்பதின் கருத்தை நீங்கள் அறிவீர்கள். எனது கனவைப்பற்றிச் சொல்லாவிட்டால் நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள் என்பதை நீங்களும் அறிவீர்கள்! எனவே நீங்கள் அனைவரும் என்னிடம் பொய் சொல்ல உடன்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் காலதாமதம் செய்கின்றீர்கள். நீங்கள் நான் செய்ய விரும்புவதை மறந்துவிடுவேன் என்று நம்புகிறீர்கள். இப்பொழுது எனது கனவைக் கூறுங்கள். உங்களால் எனது கனவைக் கூறமுடியுமானால் அதன் பொருளையும் கூறமுடியும் என்று நான் அறிவேன்” என்றான். கல்தேயர்கள் ராஜாவுக்குப் பதிலாக, “ராஜா கேட்பவற்றைச் சொல்லக்கூடிய மனிதன் பூமியில் எவனுமில்லை. இதுவரை எந்த அரசரும் இப்படிப்பட்ட ஒன்றை ஒரு மந்திரவாதியிடமோ, ஒரு ஜோசியனிடமோ, ஒரு கல்தேயனிடமோ, கேட்டதில்லை. மிகச் சிறந்தவனும், வலிமைபொருந்தியவனுமான எந்த ராஜாவும் இதுவரை இவ்வாறு அறிவாளிகளிடம் கேட்டதில்லை. ராஜா மிகக் கடினமான ஒன்றைச் செய்யும்படிக் கேட்கிறீர். தெய்வங்களால் மட்டுமே அரசரது கனவையும், அக்கனவின் பொருளையும் கூறமுடியும். ஆனால் தெய்வங்கள் மனிதர்களோடு வாழ்வதில்லை” என்றனர். ராஜா இதனைக் கேட்டபோது மிகவும் கோபமடைந்தான். எனவே அவன் பாபிலோனில் உள்ள எல்லா ஞானிகளையும் கொலை செய்யும்படிக் கட்டளையிட்டான். ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் கட்டளை அறிவிக்கப்பட்டது. எல்லா ஞானிகளும் கொல்லப்படவிருந்தனர். ராஜாவின் ஆட்கள் தானியேலையும் அவனது நண்பர்களையும் கொலை செய்வதற்காகத் தேடினார்கள்.