தானியேல் 2:4-13

தானியேல் 2:4-13 TCV

அப்பொழுது சோதிடர்கள், “அரசே, நீர் நீடூழி வாழ்க; கனவை எங்களுக்குச் சொல்லும். நாங்கள் அதன் விளக்கத்தைச் சொல்வோம்” என்று அரமேய மொழியில் சொன்னார்கள். அதற்கு அரசன் சோதிடர்களிடம், “நான் உறுதியாகத் தீர்மானித்தது இதுவே: எனது கனவையும், அதற்குரிய விளக்கத்தையும் நீங்கள் சொல்லாவிட்டால், நான் உங்களைத் துண்டுதுண்டாக வெட்டுவிப்பேன், உங்கள் வீடுகளையும் தரைமட்டமாக்குவேன். ஆனால் கனவைச் சொல்லி அதற்கு விளக்கத்தையும் தெரிவிப்பீர்களாயின், நீங்கள் என்னிடமிருந்து அன்பளிப்புகளையும், வெகுமதிகளையும், பெருமதிப்பையும் பெறுவீர்கள். எனவே கனவைச் சொல்லி, அதன் விளக்கத்தையும் எனக்குச் சொல்லுங்கள் என்றான்.” திரும்பவும் அவர்கள், “அரசர் தமது அடியவராகிய எங்களுக்குக் கனவைச் சொல்வாராக. அப்பொழுது நாங்கள் அதன் விளக்கத்தைக் கூறுவோம், என்று பதிலளித்தார்கள்.” அதற்கு அரசன், “நான் உறுதியாய்த் தீர்மானித்திருப்பது என்ன என்பதை நீங்கள் அறிந்திருக்கிறபடியால், நீங்கள் காலத்தைத் கடத்தப் பார்க்கிறீர்கள் என்பது எனக்கு நிச்சயமாய்த் தெரியும். இப்பொழுது கனவைச் சொல்லாமற்போனால், உங்களுக்கு ஒரு தண்டனைதான் இருக்கிறது. சூழ்நிலை மாறும் என்ற நம்பிக்கையுடன் நீங்கள் பொய்யும், புரட்டுமானவற்றை எனக்குச் சொல்லி, காலத்தைக் கடத்தப் பார்க்கிறீர்கள். எனவே இப்பொழுது கனவை எனக்குச் சொல்லுங்கள். அப்பொழுது அதன் விளக்கத்தையும் உங்களால் சொல்லமுடியும் என்பதை நான் அறிவேன் என்றான்.” அதற்குச் சோதிடர் அரசனிடம், “அரசர் கேட்கும் இதைச் செய்யக்கூடியவன் பூமியில் ஒருவனும் இல்லை. மேன்மையும், வல்லமையும் உள்ள எந்த அரசனும், இப்படியான செயலைச் செய்யும்படி மந்திரவாதிகளிடமோ, மாந்திரீகரிடமோ, சோதிடரிடமோ ஒருபோதும் கேட்டதில்லை. ஏனெனில் அரசர் கேட்பது மிகக் கடினமானது. மனிதனால் அல்ல, தெய்வங்களால்தான் இதை அரருக்கு வெளிப்படுத்த முடியும். தெய்வங்கள் மனிதர் மத்தியில் வாழ்வதில்லை என்றார்கள்.” இது அரசனுக்குக் கோபத்தையும், ஆத்திரத்தையும் மூட்டியது. அதனால் பாபிலோனில் இருக்கும் எல்லா ஞானிகளுக்கும், மரண தண்டனை கொடுக்கும்படி அரசன் கட்டளையிட்டான். அப்படியே ஞானிகள் கொலைசெய்யப்பட வேண்டும் என்ற கட்டளை பிறப்பிக்கப்பட்டது. அப்போது தானியேலையும் அவனுடைய நண்பர்களையும் தேடி, கொலை செய்யும்படி மனிதர் அனுப்பப்பட்டார்கள்.

தானியேல் 2:4-13 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்