தானியேல் 11:37-45
தானியேல் 11:37-45 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அவன் தன் தந்தையர்களின் தெய்வங்களுக்கோ, பெண்களால் விரும்பப்பட்ட தெய்வங்களுக்கோ எதுவித மதிப்பும் காண்பிக்கமாட்டான். அவன் வேறு எந்த தெய்வத்திற்கோ மதிப்புக் கொடுக்கமாட்டான். அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னையே உயர்த்துவான். அவன் அத்தெய்வங்களுக்குப் பதிலாக கோட்டைகளின் தெய்வத்தைக் கனம்பண்ணுவான். அவன் தன் தந்தையர் அறிந்திராத அந்தத் தெய்வத்திற்கு தங்கத்தினாலும், வெள்ளியினாலும், மாணிக்கக் கற்களினாலும், விலைமதிப்புள்ள அன்பளிப்புகளினாலும் கனம்பண்ணுவான். அவன் அந்நிய தெய்வங்களின் உதவியுடன் வலிமைமிக்க கோட்டைகளைத் தாக்குவான். தன்னை ஏற்றுக்கொள்கிறவர்களை மிகவும் கனம்பண்ணுவான். அவர்களை அநேக மக்களுக்கு மேலாக ஆளுநர்களாக நியமித்து, அவர்களுக்கு வெகுமதியாக நிலங்களைக் கொடுப்பான். “முடிவு காலத்தின்போது தென்திசை அரசன் அவனுடன் போர் செய்ய வருவான். வடதிசை அரசனோ அநேகம் தேர்களோடும், குதிரைப்படை, கப்பல் படையுடனும் புயல்போல அவனுக்கெதிராகப் போவான். அவன் அநேக நாடுகளின்மேல் படையெடுத்துச் சென்று, அவர்களை வெள்ளம்போல் அள்ளிக்கொண்டு போவான். அவன் அழகிய இஸ்ரயேல் நாட்டின்மேலும் படையெடுத்துச் செல்வான். அநேக நாடுகள் அவன்முன் விழ்ந்துபோகும். ஆனாலும் ஏதோமும், மோவாபும், அம்மோனின் தலைவர்களும் அவன் கையிலிருந்து விடுவிக்கப்படுவார்கள். அவன் அநேக நாடுகளுக்குமேல் தன் வலிமையை விரிவுபடுத்துவான். எகிப்தும் தப்பிப்போகாது. தங்கமும், வெள்ளியும், எல்லா எகிப்தின் செல்வங்களும் அடங்கிய எகிப்தின் திரவியக் களஞ்சியங்களையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவான். அதோடு லிபியர்களையும், எத்தியோப்பியர்களையும் தன் ஆட்சிக்குட்படுத்துவான். ஆனால் கிழக்கிலும், வடக்கிலுமிருந்து வரும் செய்திகள் அவனைக் கலங்கப்பண்ணும். அவன் அநேகரை அழித்து ஒழிக்கும்படி கடுங்கோபத்துடன் அங்கு போகப் புறப்படுவான். பின்பு அவன் கடல்களுக்கும் அழகான பரிசுத்த மலைகளுக்கும் இடையில் தங்கி, தனது அரச கூடாரங்களை அமைப்பான். ஆனாலும் அவனுக்கு முடிவுவரும், அவனுக்கு ஒருவரும் உதவி செய்யமாட்டார்கள்.
தானியேல் 11:37-45 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அவன் தன் முன்னோர்களின் தெய்வங்களை மதிக்காமலும், பெண்களின் சிநேகத்தையும், எந்த தேவனையும் மதிக்காமலும், எல்லாவற்றிற்கும் தன்னைப் பெரியவனாக்கி, பாதுகாப்புகளின் தேவனைத் தன் இடத்திலே கனப்படுத்தி, தன் முற்பிதாக்கள் அறியாத ஒரு தேவனைப் பொன்னினாலும், வெள்ளியினாலும், இரத்தினங்களினாலும், விலையுயர்ந்த பொருட்களினாலும் கனப்படுத்துவான். அவன் பாதுகாப்பான கோட்டைகளுக்காகவும், அந்நிய தெய்வங்களுக்காகவும் செய்வது என்னவென்றால், அவைகளை மதிக்கிறவர்களை மிகவும் கனப்படுத்தி, அவர்கள் அநேகரை ஆளும்படிச் செய்து, அவர்களுக்கு தேசத்தைக் பணத்திற்காகப் பங்கிடுவான். முடிவு காலத்திலோ வென்றால், தெற்குதிசை ராஜா அவனுக்கு எதிர்த்து நிற்பான்; வடக்குதிசை ராஜாவும் இரதங்களோடும் குதிரைவீரர்களோடும் திரளான கப்பல்களோடும் சூறைக்காற்றுபோல் அவனுக்கு விரோதமாக வருவான்; அவன் தேசங்களுக்குள் நுழைந்து, அவைகளை நெடுகக் கடந்து போவான். அவன் அழகான தேசத்திலும் வருவான்; அப்பொழுது அநேக தேசங்கள் கவிழ்க்கப்படும்; ஆனாலும் ஏதோமும், மோவாபும், அம்மோன் மக்களில் முக்கியமானவர்களும் அவன் கைக்குத் தப்பிப்போவார்கள். அவன் தேசங்களின்மேல் தன் கையை நீட்டுவான்; எகிப்துதேசம் தப்புவதில்லை. எகிப்தினுடைய பொன்னும் வெள்ளியுமான செல்வங்களையும் விலையுயர்ந்த எல்லா பொருட்களையும் ஆண்டுகொள்ளுவான்; லிபியர்களும் எத்தியோப்பியர்களும் அவனுக்குப் பின்செல்லுவார்கள். ஆனாலும் கிழக்கிலும் வடக்கிலும் இருந்துவரும் செய்திகள் அவனைக் கலங்கச்செய்யும்; அப்பொழுது அவன் அநேகரை கொடூரமாக அழிக்க மகா உக்கிரத்தோடே புறப்பட்டுப்போய், மத்திய தரைக் கடல் சமுத்திரங்களுக்கு, இடையிலுள்ள அழகான பரிசுத்த மலையின் அருகில் தன் அரண்மனையாகிய கூடாரங்களைப் போடுவான்; ஆனாலும் அவனுக்கு ஒத்தாசைசெய்பவர் இல்லாமல், அவன் முடிவடைவான்.
தானியேல் 11:37-45 பரிசுத்த பைபிள் (TAERV)
“அந்த வடபகுதி ராஜா தனது பிதாக்கள் தொழுத தெய்வங்களைப்பற்றி கவலைப்படமாட்டான். அவன் பெண்களால் தொழுகை செய்யப்படும் விக்கிரகங்களைப் பற்றியும் கவலைப்படமாட்டான். அவன் எந்த தேவனைப்பற்றியும் கவலைப்படமாட்டான். அதற்குப் பதில் அவன் தன்னைத் தானே புகழுவான். அவன் மற்ற தெய்வங்களைவிடத் தன்னையே முக்கியமானவனாக ஆக்கிக்கொள்வான். வடபகுதி ராஜா எந்தத் தேவனையும் தொழுதுகொள்ளமாட்டான். ஆனால் அவன் அதிகாரத்தைத் தொழுதுகொள்வான். அதிகாரமும் வல்லமையுமே அவனது தெய்வங்கள். அவன் பிதாக்கள் தன்னைப் போல் வல்லமையை நேசிக்கவில்லை. அவன் அதிகாரமாகிய தேவனை பொன்னாலும், வெள்ளியாலும் விலைமதிப்புள்ள நகைகளாலும், அன்பளிப்புகளாலும், பெருமைப்படுத்துவான். “அந்த வடபகுதி ராஜா பலம் வாய்ந்த கோட்டைகளை அந்நிய தெய்வங்களின் உதவியுடன் தாக்குவான். அவன் தன்னோடு சேர்ந்த அயல்நாட்டு ராஜாக்களுக்கு மிகுந்த மரியாதையைக் கொடுப்பான். அந்த ராஜாக்களுக்குக் கீழே அவன் பல ஜனங்களை வைப்பான். அவர்கள் ஆளும் நாடுகளுக்காக வரி வசூலிப்பான். “முடிவின் காலத்தில் தென்பகுதி ராஜா வடபகுதி ராஜாவோடு போர் செய்வான். வட பகுதி ராஜா அவனைத் தாக்குவான். இரதங்களோடும், குதிரைப்படை வீரர்களோடும், பல பெரிய கப்பல்களோடும் வந்து தாக்குவான். வடபகுதி ராஜா நாட்டை விட்டு வெள்ளத்தைப் போன்று வேகமாக ஓடுவான். வடபகுதி ராஜா அழகான தேசத்தைத் தாக்குவான். வடபகுதி ராஜாவால் பல நாடுகள் தோற்கடிக்கப்படும். ஆனால் ஏதோம், மோவாப், அம்மோன் தலைவர்கள் அவனிடமிருந்து காப்பாற்றப்படுவர். வடபகுதி ராஜா பல நாடுகளில் தன் வல்லமையைக் காட்டுவான். எகிப்தும் தான் எவ்வளவு வல்லமையானவன் என்பதை தெரிந்துகொள்ளும். அவன் எகிப்திலுள்ள பொன்னும் வெள்ளியுமான எல்லாச் செல்வங்களையும் பெறுவான். லீபியரும், எத்தியோப்பியரும் அவனுக்கு அடிபணிவார்கள். ஆனால் வடக்கத்தி ராஜா கிழக்கிலிருந்தும் வடக்கிலிருந்தும் அவனை அச்சமும் கோபமும் கொள்ளத்தக்கச் செய்திகளைக் கேட்பான். அவன் பல தேசங்களை முழுமையாக அழிக்கப் போவான். கடல்களுக்கு இடையிலுள்ள அழகான பரிசுத்த மலையில் தனது இராஜ கூடாரத்தை அமைத்துக்கொள்வான். ஆனால் இறுதியில், அத்தீய ராஜா சாவான். அவனது முடிவுகாலம் வரும்போது அவனுக்கு உதவிச் செய்ய யாரும் இருக்கமாட்டார்கள்.”
தானியேல் 11:37-45 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அவன் தன் பிதாக்களின் தேவர்களை மதியாமலும், ஸ்திரீகளின் சிநேகத்தையும், எந்த தேவனையும் மதியாமலும், எல்லாவற்றிற்கும் தன்னைப்பெரியவனாக்கி, அரண்களின் தேவனைத் தன் ஸ்தானத்திலே கனம்பண்ணி, தன் பிதாக்கள் அறியாத ஒரு தேவனைப் பொன்னினாலும், வெள்ளியினாலும், இரத்தினங்களினாலும், உச்சிதமான வஸ்துக்களினாலும் கனம்பண்ணுவான். அவன் அரணிப்பான கோட்டைகளுக்காகவும், அந்நிய தேவனுக்காகவும் செய்வது என்னவென்றால், அவைகளை மதிக்கிறவர்களுக்கு மகா கனமுண்டாக்கி, அவர்கள் அநேகரை ஆளும்படிச் செய்து, அவர்களுக்கு தேசத்தைக் கிரயத்துக்காகப் பங்கிடுவான். முடிவுகாலத்திலோவென்றால், தென்றிசை ராஜா அவனோடே முட்டுக்கு நிற்பான்; வடதிசை ராஜாவும் இரதங்களோடும் குதிரைவீரர்களோடும் அநேகம் கப்பல்களோடும் சூறைக்காற்றுபோல் அவனுக்கு விரோதமாய் வருவான்; அவன் தேசங்களுக்குள் பிரவேசித்து, அவைகளைப் பிரவாகித்துக் கடந்து போவான். அவன் சிங்காரமான தேசத்திலும் வருவான்; அப்பொழுது அநேக தேசங்கள் கவிழ்க்கப்படும்; ஆனாலும் ஏதோமும், மோவாபும், அம்மோன் புத்திரரில் பிரதானமானவர்களும் அவன் கைக்குத் தப்பிப்போவார்கள். அவன் தேசங்களின்மேல் தன் கையை நீட்டுவான்; எகிப்துதேசம் தப்புவதில்லை. எகிப்தினுடைய பொன்னும் வெள்ளியுமான ஐசுவரியங்களையும் உச்சிதமான எல்லா வஸ்துக்களையும் ஆண்டுகொள்ளுவான்; லீபியரும் எத்தியோப்பியரும் அவனுக்குப் பின்செல்லுவார்கள். ஆனாலும் கிழக்கிலும் வடக்கிலும் இருந்துவரும் செய்திகள் அவனைக் கலங்கப்பண்ணும்; அப்பொழுது அவன் அநேகரை அழிக்கவும் சங்காரம்பண்ணவும் மகா உக்கிரத்தோடே புறப்பட்டுப்போய், சமுத்திரங்களுக்கு இடையிலுள்ள சிங்காரமான பரிசுத்த பர்வதத்தண்டையிலே தன் அரமனையாகிய கூடாரங்களைப் போடுவான்; ஆனாலும் அவனுக்கு ஒத்தாசை பண்ணுவாரில்லாமல், அவன் முடிவடைவான்.