தானியேல் 11:37-45

தானியேல் 11:37-45 TCV

அவன் தன் தந்தையர்களின் தெய்வங்களுக்கோ, பெண்களால் விரும்பப்பட்ட தெய்வங்களுக்கோ எதுவித மதிப்பும் காண்பிக்கமாட்டான். அவன் வேறு எந்த தெய்வத்திற்கோ மதிப்புக் கொடுக்கமாட்டான். அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னையே உயர்த்துவான். அவன் அத்தெய்வங்களுக்குப் பதிலாக கோட்டைகளின் தெய்வத்தைக் கனம்பண்ணுவான். அவன் தன் தந்தையர் அறிந்திராத அந்தத் தெய்வத்திற்கு தங்கத்தினாலும், வெள்ளியினாலும், மாணிக்கக் கற்களினாலும், விலைமதிப்புள்ள அன்பளிப்புகளினாலும் கனம்பண்ணுவான். அவன் அந்நிய தெய்வங்களின் உதவியுடன் வலிமைமிக்க கோட்டைகளைத் தாக்குவான். தன்னை ஏற்றுக்கொள்கிறவர்களை மிகவும் கனம்பண்ணுவான். அவர்களை அநேக மக்களுக்கு மேலாக ஆளுநர்களாக நியமித்து, அவர்களுக்கு வெகுமதியாக நிலங்களைக் கொடுப்பான். “முடிவு காலத்தின்போது தென்திசை அரசன் அவனுடன் போர் செய்ய வருவான். வடதிசை அரசனோ அநேகம் தேர்களோடும், குதிரைப்படை, கப்பல் படையுடனும் புயல்போல அவனுக்கெதிராகப் போவான். அவன் அநேக நாடுகளின்மேல் படையெடுத்துச் சென்று, அவர்களை வெள்ளம்போல் அள்ளிக்கொண்டு போவான். அவன் அழகிய இஸ்ரயேல் நாட்டின்மேலும் படையெடுத்துச் செல்வான். அநேக நாடுகள் அவன்முன் விழ்ந்துபோகும். ஆனாலும் ஏதோமும், மோவாபும், அம்மோனின் தலைவர்களும் அவன் கையிலிருந்து விடுவிக்கப்படுவார்கள். அவன் அநேக நாடுகளுக்குமேல் தன் வலிமையை விரிவுபடுத்துவான். எகிப்தும் தப்பிப்போகாது. தங்கமும், வெள்ளியும், எல்லா எகிப்தின் செல்வங்களும் அடங்கிய எகிப்தின் திரவியக் களஞ்சியங்களையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவான். அதோடு லிபியர்களையும், எத்தியோப்பியர்களையும் தன் ஆட்சிக்குட்படுத்துவான். ஆனால் கிழக்கிலும், வடக்கிலுமிருந்து வரும் செய்திகள் அவனைக் கலங்கப்பண்ணும். அவன் அநேகரை அழித்து ஒழிக்கும்படி கடுங்கோபத்துடன் அங்கு போகப் புறப்படுவான். பின்பு அவன் கடல்களுக்கும் அழகான பரிசுத்த மலைகளுக்கும் இடையில் தங்கி, தனது அரச கூடாரங்களை அமைப்பான். ஆனாலும் அவனுக்கு முடிவுவரும், அவனுக்கு ஒருவரும் உதவி செய்யமாட்டார்கள்.