கொலோசெயர் 1:9-16
கொலோசெயர் 1:9-16 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
எனவே உங்களைக்குறித்து கேள்விப்பட்ட நாளிலிருந்து, நாங்கள் உங்களுக்காக மன்றாடுவதை நிறுத்தவில்லை. நீங்கள் ஆவியானவர் கொடுக்கும் ஞானத்தையும் விளக்கத்தையும் பெற்று, இறைவனின் திட்டத்தைப் பற்றிய அறிவினாலே நிரப்பப்பட வேண்டுமென்று நாங்கள் இறைவனிடம் கேட்கிறோம். நீங்கள் கர்த்தருக்கு உகந்த வாழ்க்கையை வாழவேண்டும் என்றும், எல்லாவிதத்திலும் அவரைப் பிரியப்படுத்த வேண்டுமென்றும், எல்லா நல்ல வேலைகளிலும் கனிகொடுக்க வேண்டுமென்றும் நாங்கள் இப்படி மன்றாடுகிறோம். இறைவனைப்பற்றிய அறிவில் நீங்கள் வளரவேண்டும் என்றும், இறைவனுடைய மகிமையான ஆற்றலிலிருந்து வரும், எல்லா வல்லமையினாலும் நீங்கள் பெலப்பட வேண்டும் என்றும் மன்றாடுகிறோம். அப்பொழுது நீங்கள் மிகுந்த சகிப்புத்தன்மை உடையவர்களும், பொறுமையுடையவர்களுமாய் இருந்து, பிதாவுக்கு மகிழ்ச்சியுடன் நன்றி செலுத்துவீர்கள். அவரே ஒளியின் அரசில் இறைவனுடைய மக்களுக்குரிய உரிமையில் நீங்களும் பங்கு பெறும்படி உங்களைத் தகுதியுடையவர்களாக்கினார். ஏனெனில், பிதாவானவர் இருளின் அதிகாரத்திலிருந்து நம்மை விடுவித்து, அவருடைய அன்பான மகன் கிறிஸ்துவின் அரசுக்குள் நம்மைக் கொண்டுவந்திருக்கிறார். கிறிஸ்துவிலேயே நமக்கு மீட்பு உண்டு, அது பாவங்களுக்கான மன்னிப்பு. கண்ணுக்குத் தெரியாத இறைவனின் சாயலாய் இருப்பவர் கிறிஸ்துவே. எல்லாப் படைப்புகளுக்கும் மேலான முதற்பேறானவர் இவரே. இவர் மூலமே எல்லாம் படைக்கப்பட்டன, காணப்படுகிறவைகளோ, காணப்படாதவைகளோ, வானத்திலும் பூமியிலுமுள்ள எல்லாம் இவர் மூலமே படைக்கப்பட்டன. அரியணைகளோ, வல்லமைகளோ, ஆளுகிறவர்களோ, அதிகாரங்களோ எல்லாமே இவராலேயே, இவருக்கென்றே படைக்கப்பட்டன.
கொலோசெயர் 1:9-16 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
இதினிமித்தம், நாங்கள் அதைக் கேட்ட நாள்முதல் உங்களுக்காக இடைவிடாமல் ஜெபம் செய்கிறோம்; நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவியானவருக்குரிய விவேகத்தோடும் அவருடைய விருப்பத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும், எல்லாவித நல்ல செயல்களாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் வளர்ச்சியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக வாழவும் அவருக்குத் தகுதியாக நடந்துகொள்ளவும், சந்தோஷத்தோடுகூடிய எல்லாப் பொறுமையும் நீடிய சாந்தமும் உண்டாவதற்கு மகிமையான அவருடைய வல்லமையின்படி, எல்லா வல்லமையாலும் பலப்படுத்தப்படவும், உங்களுக்காக ஜெபம் செய்கிறோம். ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்திரத்தில் பங்கடைவதற்கு, நம்மைத் தகுதியுள்ளவர்களாக்கினவரும், இருளின் அதிகாரத்திலிருந்து நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாக இருக்கிற பிதாவிற்கு நன்றி செலுத்துகிறோம். குமாரனாகிய இயேசுகிறிஸ்துவிற்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது. அவர் கண்ணுக்குத் தெரியாத தேவனுடைய ரூபமும், எல்லாப் படைப்புக்கும் முதற்பேறுமானவர். ஏனென்றால், அவருக்குள் எல்லாம் படைக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான எல்லாப் பொருட்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், அரசாங்க ஆட்சி புரிவோர்களானாலும், அதிகாரங்களானாலும், எல்லாமும் அவரைக் கொண்டும் அவருக்கென்றும் படைக்கப்பட்டது.
கொலோசெயர் 1:9-16 பரிசுத்த பைபிள் (TAERV)
உங்களைப் பற்றிய இந்தச் செய்திகளைக் கேட்ட நாள் முதலாக உங்களுக்காக நாங்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறோம். உங்களுக்காக நாங்கள் செய்யும் பிரார்த்தனையாவது: தேவன் விரும்பும் அனைத்தையும் நீங்கள் அறிந்துகொள்ளவும், நீங்கள் பெரும் ஞானத்தையும், ஆவிக்குரியவற்றைப் பற்றிய தெளிவையும் பெறவும், இத்தகைய உங்களது வாழ்க்கை முறையானது கர்த்தருக்கு மகிமையைத் தரவும், எல்லாவகையிலும் அவரைத் திருப்திப்படுத்தவும் நீங்கள் எல்லா வகையான நற்செயல்களையும் செய்யவும், தேவனைப் பற்றிய அறிவில் வளரவும், தேவன் தனது சொந்த வல்லமையால் உங்களைப் பலப்படுத்தவும், அதனால் துன்பங்கள் வரும்போது அவரை விட்டு நீங்கள் விலகாமல் இருக்கவும் அதற்கான பொறுமையோடும், மகிழ்ச்சியோடும் இருக்கவும் வேண்டுமென்பதே. பிறகு நீங்கள் நம் பிதாவுக்கு நன்றி சொல்லலாம். அவர் தான் ஏற்பாடு செய்த காரியங்களில் பங்குகொள்ளும் பொருட்டு உங்களைத் தகுதியுள்ளவர்கள் ஆக்கினார். அவர் வெளிச்சத்தில் வாழ்கிற அவரது மக்கள் அனைவருக்காகவும் இதை ஆயத்தம் செய்கிறார். இருளின் அதிகாரங்களிலிருந்து நம்மை அவர் விடுதலை செய்திருக்கிறார். நம்மை அவரது அன்பு குமாரனான இயேசு கிறிஸ்துவின் இராஜ்யத்துக்குள் கொண்டு வந்தார். நமது பாவங்களுக்குரிய விலையை அவர் கொடுத்தார். அவருக்குள் நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஒருவராலும் தேவனைக் காண இயலாது. ஆனால் இயேசு தேவனைப் போன்றவர். படைக்கப்பட்ட அனைத்து பொருட்களின் மேலும் இயேசுவே ஆட்சியாளர். பரலோகத்திலும் பூலோகத்திலும் உள்ள அனைத்துப் பொருட்களும் இயேசுவின் வல்லமையால் படைக்கப்பட்டவை. அவை கண்ணால் காணப்படுகிறவை, காணப்படாதவை, ஆன்மீக சக்திகள், அதிகாரங்கள், பிரபுக்கள், ஆள்வோர்கள் என அனைத்துமே அவருக்காகவும், அவர் மூலமாகவும் படைக்கப்பட்டவை.
கொலோசெயர் 1:9-16 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
இதினிமித்தம், நாங்கள் அதைக்கேட்ட நாள்முதல் உங்களுக்காக இடைவிடாமல் ஜெபம்பண்ணுகிறோம்; நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும், சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளவும், சந்தோஷத்தோடே கூடிய எல்லாப்பொறுமையும் நீடியசாந்தமும் உண்டாவதற்கு மகிமையான அவருடைய வல்லமையின்படி, எல்லா வல்லமையாலும் பலப்படுத்தப்படவும், உங்களுக்காக வேண்டுதல் செய்கிறோம். ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் பங்கடைவதற்கு, நம்மைத் தகுதியுள்ளவர்களாக்கினவரும், இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம். (குமாரனாகிய) அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது. அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வசிருஷ்டிக்கும் முந்தினபேறுமானவர். ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது.