கொலோசெயருக்கு எழுதிய கடிதம் 1:9-16

கொலோசெயருக்கு எழுதிய கடிதம் 1:9-16 TAERV

உங்களைப் பற்றிய இந்தச் செய்திகளைக் கேட்ட நாள் முதலாக உங்களுக்காக நாங்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறோம். உங்களுக்காக நாங்கள் செய்யும் பிரார்த்தனையாவது: தேவன் விரும்பும் அனைத்தையும் நீங்கள் அறிந்துகொள்ளவும், நீங்கள் பெரும் ஞானத்தையும், ஆவிக்குரியவற்றைப் பற்றிய தெளிவையும் பெறவும், இத்தகைய உங்களது வாழ்க்கை முறையானது கர்த்தருக்கு மகிமையைத் தரவும், எல்லாவகையிலும் அவரைத் திருப்திப்படுத்தவும் நீங்கள் எல்லா வகையான நற்செயல்களையும் செய்யவும், தேவனைப் பற்றிய அறிவில் வளரவும், தேவன் தனது சொந்த வல்லமையால் உங்களைப் பலப்படுத்தவும், அதனால் துன்பங்கள் வரும்போது அவரை விட்டு நீங்கள் விலகாமல் இருக்கவும் அதற்கான பொறுமையோடும், மகிழ்ச்சியோடும் இருக்கவும் வேண்டுமென்பதே. பிறகு நீங்கள் நம் பிதாவுக்கு நன்றி சொல்லலாம். அவர் தான் ஏற்பாடு செய்த காரியங்களில் பங்குகொள்ளும் பொருட்டு உங்களைத் தகுதியுள்ளவர்கள் ஆக்கினார். அவர் வெளிச்சத்தில் வாழ்கிற அவரது மக்கள் அனைவருக்காகவும் இதை ஆயத்தம் செய்கிறார். இருளின் அதிகாரங்களிலிருந்து நம்மை அவர் விடுதலை செய்திருக்கிறார். நம்மை அவரது அன்பு குமாரனான இயேசு கிறிஸ்துவின் இராஜ்யத்துக்குள் கொண்டு வந்தார். நமது பாவங்களுக்குரிய விலையை அவர் கொடுத்தார். அவருக்குள் நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஒருவராலும் தேவனைக் காண இயலாது. ஆனால் இயேசு தேவனைப் போன்றவர். படைக்கப்பட்ட அனைத்து பொருட்களின் மேலும் இயேசுவே ஆட்சியாளர். பரலோகத்திலும் பூலோகத்திலும் உள்ள அனைத்துப் பொருட்களும் இயேசுவின் வல்லமையால் படைக்கப்பட்டவை. அவை கண்ணால் காணப்படுகிறவை, காணப்படாதவை, ஆன்மீக சக்திகள், அதிகாரங்கள், பிரபுக்கள், ஆள்வோர்கள் என அனைத்துமே அவருக்காகவும், அவர் மூலமாகவும் படைக்கப்பட்டவை.