கொலோசெயர் 1:1-14

கொலோசெயர் 1:1-14 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இறைவனுடைய சித்தத்தின்படி, கிறிஸ்து இயேசுவின் அப்போஸ்தலனாகிய பவுலும், நமது சகோதரன் தீமோத்தேயுவும், கொலோசே பட்டணத்திலே கிறிஸ்துவில் பரிசுத்தமுள்ளவர்களாகவும், உண்மையுள்ளவர்களாகவும் இருக்கிற சகோதர சகோதரிகளுக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய இறைவனால் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. உங்களுக்காக நாங்கள் மன்றாடும்போது, நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய இறைவனுக்கு எப்பொழுதும் நன்றி செலுத்துகிறோம். ஏனெனில், கிறிஸ்து இயேசுவில் நீங்கள் வைத்திருக்கும் விசுவாசத்தைக்குறித்தும், பரிசுத்தவான்கள் எல்லோரிலும் உங்களுக்கிருக்கிற அன்பைக்குறித்தும், நாங்கள் கேள்விப்பட்டோம். பரலோகத்தில் உங்களுக்கென வைக்கப்பட்டிருக்கிற நன்மைகளின் எதிர்பார்ப்பிலிருந்தே, இந்த விசுவாசமும் அன்பும் ஊற்றாகப் பொங்கி வருகின்றன. இந்த எதிர்பார்ப்பைக்குறித்து, உண்மையின் வார்த்தையாகிய நற்செய்தியின் மூலமாய் நீங்கள் முன்னரே கேள்விப்பட்டிருக்கிறீர்கள். அந்த நற்செய்தி உங்களிடத்திலும் வந்திருக்கிறது. நீங்கள் நற்செய்தியைக் கேட்டு, இறைவனுடைய கிருபையை உண்மையாக விளங்கிக்கொண்ட அந்த நாளிலிருந்து, உங்களிடையே அது கனிகொடுத்து வளர்ச்சியடைந்தது. அதுபோலவே, இந்த நற்செய்தி உலகம் முழுவதும் கனிகொடுத்து வளர்ச்சியடைகிறது. இந்த நற்செய்தியை எங்களுக்கு அன்பான உடன் ஊழியனும், கிறிஸ்துவின் உண்மையுள்ள ஊழிக்காரனுமாயிருக்கிற எப்பாப்பிராத்துவிடமிருந்து நீங்கள் கற்றுக்கொண்டீர்கள். பரிசுத்த ஆவியானவரால் நீங்கள் பெற்றிருக்கும் அன்பைக்குறித்தும் அவன் எங்களுக்குத் தெரியப்படுத்தினான். எனவே உங்களைக்குறித்து கேள்விப்பட்ட நாளிலிருந்து, நாங்கள் உங்களுக்காக மன்றாடுவதை நிறுத்தவில்லை. நீங்கள் ஆவியானவர் கொடுக்கும் ஞானத்தையும் விளக்கத்தையும் பெற்று, இறைவனின் திட்டத்தைப் பற்றிய அறிவினாலே நிரப்பப்பட வேண்டுமென்று நாங்கள் இறைவனிடம் கேட்கிறோம். நீங்கள் கர்த்தருக்கு உகந்த வாழ்க்கையை வாழவேண்டும் என்றும், எல்லாவிதத்திலும் அவரைப் பிரியப்படுத்த வேண்டுமென்றும், எல்லா நல்ல வேலைகளிலும் கனிகொடுக்க வேண்டுமென்றும் நாங்கள் இப்படி மன்றாடுகிறோம். இறைவனைப்பற்றிய அறிவில் நீங்கள் வளரவேண்டும் என்றும், இறைவனுடைய மகிமையான ஆற்றலிலிருந்து வரும், எல்லா வல்லமையினாலும் நீங்கள் பெலப்பட வேண்டும் என்றும் மன்றாடுகிறோம். அப்பொழுது நீங்கள் மிகுந்த சகிப்புத்தன்மை உடையவர்களும், பொறுமையுடையவர்களுமாய் இருந்து, பிதாவுக்கு மகிழ்ச்சியுடன் நன்றி செலுத்துவீர்கள். அவரே ஒளியின் அரசில் இறைவனுடைய மக்களுக்குரிய உரிமையில் நீங்களும் பங்கு பெறும்படி உங்களைத் தகுதியுடையவர்களாக்கினார். ஏனெனில், பிதாவானவர் இருளின் அதிகாரத்திலிருந்து நம்மை விடுவித்து, அவருடைய அன்பான மகன் கிறிஸ்துவின் அரசுக்குள் நம்மைக் கொண்டுவந்திருக்கிறார். கிறிஸ்துவிலேயே நமக்கு மீட்பு உண்டு, அது பாவங்களுக்கான மன்னிப்பு.

கொலோசெயர் 1:1-14 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

தேவனுடைய விருப்பத்தினாலே இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுலும், சகோதரனாகிய தீமோத்தேயும், கொலோசே பட்டணத்தில் கிறிஸ்துவிற்குள் பரிசுத்தவான்களும் விசுவாசிகளுமாக இருக்கிற சகோதரர்களுக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. கிறிஸ்து இயேசுவின்மேலுள்ள உங்களுடைய விசுவாசத்தையும், பரிசுத்தவான்கள் எல்லார்மேலுமுள்ள உங்களுடைய அன்பையும்குறித்து நாங்கள் கேள்விப்பட்டு, பரலோகத்தில் உங்களுக்காக வைத்திருக்கிற நம்பிக்கையினிமித்தம், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு நன்றிசெலுத்தி, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டுதல் செய்கிறோம். அந்த நம்பிக்கையைக்குறித்து, நீங்கள் முன்னமே சத்தியவசனமாகிய நற்செய்தியினாலே கேள்விப்பட்டீர்கள்; அந்த நற்செய்தி உலகமெங்கும்பரவிப் பலன்தருகிறதுபோல, உங்களிடத்திலும் வந்து, நீங்கள் அதைக்கேட்டு, தேவகிருபையைச் சத்தியத்தின்படி அறிந்துகொண்ட நாள்முதல், அது உங்களுக்குள்ளும் பலன் தருகிறதாக இருக்கிறது; அதை எங்களுக்குப் பிரியமான உடன் வேலையாளும், உங்களுக்காகக் கிறிஸ்துவின் உண்மையான ஊழியக்காரனுமாக இருக்கிற எப்பாப்பிராவினிடம் நீங்கள் கற்றறிந்திருக்கிறீர்கள்; ஆவியானவருக்குள்ளான உங்களுடைய அன்பையும் அவனே எங்களுக்குத் தெரியப்படுத்தினான். இதினிமித்தம், நாங்கள் அதைக் கேட்ட நாள்முதல் உங்களுக்காக இடைவிடாமல் ஜெபம் செய்கிறோம்; நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவியானவருக்குரிய விவேகத்தோடும் அவருடைய விருப்பத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும், எல்லாவித நல்ல செயல்களாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் வளர்ச்சியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக வாழவும் அவருக்குத் தகுதியாக நடந்துகொள்ளவும், சந்தோஷத்தோடுகூடிய எல்லாப் பொறுமையும் நீடிய சாந்தமும் உண்டாவதற்கு மகிமையான அவருடைய வல்லமையின்படி, எல்லா வல்லமையாலும் பலப்படுத்தப்படவும், உங்களுக்காக ஜெபம் செய்கிறோம். ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்திரத்தில் பங்கடைவதற்கு, நம்மைத் தகுதியுள்ளவர்களாக்கினவரும், இருளின் அதிகாரத்திலிருந்து நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாக இருக்கிற பிதாவிற்கு நன்றி செலுத்துகிறோம். குமாரனாகிய இயேசுகிறிஸ்துவிற்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.

கொலோசெயர் 1:1-14 பரிசுத்த பைபிள் (TAERV)

தேவனுடைய விருப்பப்படியே இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனாயிருக்கும் பவுலும், கிறிஸ்துவுக்குள் நமது சகோதரரான தீமோத்தேயுவும் எழுதுவதாவது, கொலோசெ நகரில் கிறிஸ்துவுக்குள் பரிசுத்தமும், விசுவாசமும் கொண்ட சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் நமது பிதாவாகிய தேவனிடமிருந்து கிருபையும், சமாதானமும் உண்டாவதாக. எங்களது பிரார்த்தனைகளில் உங்களுக்காக நாங்கள் தேவனுக்கு எப்பொழுதும் நன்றி செலுத்துகிறோம். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவே தேவன். இயேசு கிறிஸ்துவுக்குள் நீங்கள் கொண்டுள்ள விசுவாசத்தையும் தேவனுடைய மக்கள் மீது நீங்கள் கொண்டுள்ள அன்பை பற்றியும் கேள்விப்பட்டோம். அதற்காக தேவனுக்கு நன்றி சொல்கிறோம். இயேசு கிறிஸ்துவின் மீதும், தேவனுடைய மக்கள் மீதும் நீங்கள் அன்பு கொண்டுள்ளீர்கள். ஏனெனில் நீங்கள் விசுவாசத்தை உடையவர்களாக இருக்கிறீர்கள். நீங்கள் விசுவாசிக்கும் காரியங்கள் உங்களுக்காகப் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள். உங்களுக்குச் சொல்லப்பட்ட நற்செய்தியைக் குறித்து நீங்கள் கேள்விப்பட்ட உண்மையான போதனைகளால் இந்த விசுவாசத்தைக் கற்றுக்கொண்டீர்கள். இந்த உலகத்தில் எல்லா இடங்களிலும் நற்செய்தியானது ஆசீர்வாதத்தையும், வளர்ச்சியையும் கொடுக்கிறது. நீங்கள் அவற்றைக் கேட்ட நாள் முதலாகவும், தேவனுடைய கிருபை பற்றிய உண்மையை அறிந்துகொண்ட நாள் முதலாகவும் உங்களுக்கும் ஆசீர்வாதமும், வளர்ச்சியும் ஏற்படுகிறது. எப்பாப்பிராவிடமிருந்து நீங்கள் தேவனுடைய கிருபையைப் பற்றி உணர்ந்திருக்கிறீர்கள். அவன் எங்களோடு சேர்ந்து சேவை செய்கிறான். நாங்கள் அவனை நேசிக்கிறோம். அவன் கிறிஸ்துவில் விசுவாசமுள்ள ஒரு ஊழியன். எப்பாப்பிராவும் நீங்கள் பரிசுத்த ஆவிக்குள் கொண்டிருக்கும் அன்பைக் குறித்துக் கூறினான். உங்களைப் பற்றிய இந்தச் செய்திகளைக் கேட்ட நாள் முதலாக உங்களுக்காக நாங்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறோம். உங்களுக்காக நாங்கள் செய்யும் பிரார்த்தனையாவது: தேவன் விரும்பும் அனைத்தையும் நீங்கள் அறிந்துகொள்ளவும், நீங்கள் பெரும் ஞானத்தையும், ஆவிக்குரியவற்றைப் பற்றிய தெளிவையும் பெறவும், இத்தகைய உங்களது வாழ்க்கை முறையானது கர்த்தருக்கு மகிமையைத் தரவும், எல்லாவகையிலும் அவரைத் திருப்திப்படுத்தவும் நீங்கள் எல்லா வகையான நற்செயல்களையும் செய்யவும், தேவனைப் பற்றிய அறிவில் வளரவும், தேவன் தனது சொந்த வல்லமையால் உங்களைப் பலப்படுத்தவும், அதனால் துன்பங்கள் வரும்போது அவரை விட்டு நீங்கள் விலகாமல் இருக்கவும் அதற்கான பொறுமையோடும், மகிழ்ச்சியோடும் இருக்கவும் வேண்டுமென்பதே. பிறகு நீங்கள் நம் பிதாவுக்கு நன்றி சொல்லலாம். அவர் தான் ஏற்பாடு செய்த காரியங்களில் பங்குகொள்ளும் பொருட்டு உங்களைத் தகுதியுள்ளவர்கள் ஆக்கினார். அவர் வெளிச்சத்தில் வாழ்கிற அவரது மக்கள் அனைவருக்காகவும் இதை ஆயத்தம் செய்கிறார். இருளின் அதிகாரங்களிலிருந்து நம்மை அவர் விடுதலை செய்திருக்கிறார். நம்மை அவரது அன்பு குமாரனான இயேசு கிறிஸ்துவின் இராஜ்யத்துக்குள் கொண்டு வந்தார். நமது பாவங்களுக்குரிய விலையை அவர் கொடுத்தார். அவருக்குள் நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டன.

கொலோசெயர் 1:1-14 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

தேவனுடைய சித்தத்தினாலே இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுலும், சகோதரனாகிய தீமோத்தேயும், கொலோசே பட்டணத்தில் கிறிஸ்துவுக்குள் பரிசுத்தவான்களும் விசுவாசிகளுமாயிருக்கிற சகோதரர்களுக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. கிறிஸ்து இயேசுவின்மேலுள்ள உங்கள் விசுவாசத்தையும், பரிசுத்தவான்களெல்லார்மேலுமுள்ள உங்கள் அன்பையுங்குறித்து நாங்கள் கேள்விப்பட்டு, பரலோகத்தில் உங்களுக்காக வைத்திருக்கிற நம்பிக்கையினிமித்தம், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தி, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டுதல்செய்கிறோம். அந்த நம்பிக்கையைக்குறித்து, நீங்கள் முன்னமே சத்தியவசனமாகிய சுவிசேஷத்தினாலே கேள்விப்பட்டீர்கள்; அந்தச் சுவிசேஷம் உலகமெங்கும்பரம்பிப் பலன்தருகிறதுபோல, உங்களிடத்திலும் வந்து, நீங்கள் அதைக் கேட்டு, தேவகிருபையைச் சத்தியத்தின்படி அறிந்துகொண்ட நாள்முதல், அது உங்களுக்குள்ளும் பலன்தருகிறதாயிருக்கிறது; அதை எங்களுக்குப் பிரியமான உடன்வேலையாளும், உங்களுக்காகக் கிறிஸ்துவின் உண்மையான ஊழியக்காரனுமாயிருக்கிற எப்பாப்பிராவினிடத்தில் நீங்கள் கற்றறிந்திருக்கிறீர்கள். ஆவிக்குள்ளான உங்கள் அன்பையும் அவனே எங்களுக்குத் தெரியப்படுத்தினான். இதினிமித்தம், நாங்கள் அதைக்கேட்ட நாள்முதல் உங்களுக்காக இடைவிடாமல் ஜெபம்பண்ணுகிறோம்; நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும், சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளவும், சந்தோஷத்தோடே கூடிய எல்லாப்பொறுமையும் நீடியசாந்தமும் உண்டாவதற்கு மகிமையான அவருடைய வல்லமையின்படி, எல்லா வல்லமையாலும் பலப்படுத்தப்படவும், உங்களுக்காக வேண்டுதல் செய்கிறோம். ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் பங்கடைவதற்கு, நம்மைத் தகுதியுள்ளவர்களாக்கினவரும், இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம். (குமாரனாகிய) அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.