தேவனுடைய விருப்பத்தினாலே இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுலும், சகோதரனாகிய தீமோத்தேயும், கொலோசே பட்டணத்தில் கிறிஸ்துவிற்குள் பரிசுத்தவான்களும் விசுவாசிகளுமாக இருக்கிற சகோதரர்களுக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
கிறிஸ்து இயேசுவின்மேலுள்ள உங்களுடைய விசுவாசத்தையும், பரிசுத்தவான்கள் எல்லார்மேலுமுள்ள உங்களுடைய அன்பையும்குறித்து நாங்கள் கேள்விப்பட்டு, பரலோகத்தில் உங்களுக்காக வைத்திருக்கிற நம்பிக்கையினிமித்தம், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு நன்றிசெலுத்தி, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டுதல் செய்கிறோம். அந்த நம்பிக்கையைக்குறித்து, நீங்கள் முன்னமே சத்தியவசனமாகிய நற்செய்தியினாலே கேள்விப்பட்டீர்கள்; அந்த நற்செய்தி உலகமெங்கும்பரவிப் பலன்தருகிறதுபோல, உங்களிடத்திலும் வந்து, நீங்கள் அதைக்கேட்டு, தேவகிருபையைச் சத்தியத்தின்படி அறிந்துகொண்ட நாள்முதல், அது உங்களுக்குள்ளும் பலன் தருகிறதாக இருக்கிறது; அதை எங்களுக்குப் பிரியமான உடன் வேலையாளும், உங்களுக்காகக் கிறிஸ்துவின் உண்மையான ஊழியக்காரனுமாக இருக்கிற எப்பாப்பிராவினிடம் நீங்கள் கற்றறிந்திருக்கிறீர்கள்; ஆவியானவருக்குள்ளான உங்களுடைய அன்பையும் அவனே எங்களுக்குத் தெரியப்படுத்தினான். இதினிமித்தம், நாங்கள் அதைக் கேட்ட நாள்முதல் உங்களுக்காக இடைவிடாமல் ஜெபம் செய்கிறோம்; நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவியானவருக்குரிய விவேகத்தோடும் அவருடைய விருப்பத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும், எல்லாவித நல்ல செயல்களாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் வளர்ச்சியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக வாழவும் அவருக்குத் தகுதியாக நடந்துகொள்ளவும், சந்தோஷத்தோடுகூடிய எல்லாப் பொறுமையும் நீடிய சாந்தமும் உண்டாவதற்கு மகிமையான அவருடைய வல்லமையின்படி, எல்லா வல்லமையாலும் பலப்படுத்தப்படவும், உங்களுக்காக ஜெபம் செய்கிறோம். ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்திரத்தில் பங்கடைவதற்கு, நம்மைத் தகுதியுள்ளவர்களாக்கினவரும், இருளின் அதிகாரத்திலிருந்து நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாக இருக்கிற பிதாவிற்கு நன்றி செலுத்துகிறோம். குமாரனாகிய இயேசுகிறிஸ்துவிற்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.