அப்போஸ்தலர் 9:26-31

அப்போஸ்தலர் 9:26-31 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

சவுல் எருசலேமுக்கு வந்து, சீஷருடனே சேர்ந்துகொள்ளப்பார்த்தான்; அவர்கள் அவனைச் சீஷனென்று நம்பாமல் எல்லாரும் அவனுக்குப் பயந்திருந்தார்கள். அப்பொழுது பர்னபா என்பவன் அவனைச் சேர்த்துக்கொண்டு, அப்போஸ்தலரிடத்தில் அழைத்துக்கொண்டுபோய், வழியிலே அவன் கர்த்தரைக் கண்டவிதத்தையும், அவர் அவனுடனே பேசினதையும், தமஸ்குவில் அவன் இயேசுவின் நாமத்தினாலே தைரியமாய்ப் பிரசங்கித்ததையும் அவர்களுக்கு விவரித்துச் சொன்னான். அதன்பின்பு அவன் எருசலேமிலே அவர்களிடத்தில் போக்கும் வரத்துமாயிருந்து; கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே தைரியமாய்ப் பிரசங்கித்து, கிரேக்கருடனே பேசித் தர்க்கித்தான்; அவர்களோ அவனைக் கொலைசெய்ய எத்தனம்பண்ணினார்கள். சகோதரர் அதை அறிந்து, அவனைச் செசரியாவுக்கு அழைத்துக்கொண்டுபோய், தர்சுவுக்கு அனுப்பிவிட்டார்கள். அப்பொழுது யூதேயா கலிலேயா சமாரியா நாடுகளிலெங்கும் சபைகள் சமாதானம் பெற்று, பக்திவிருத்தியடைந்து, கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடும், பரிசுத்த ஆவியின் ஆறுதலோடும் நடந்து பெருகின.

அப்போஸ்தலர் 9:26-31 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

சவுல் எருசலேமுக்கு வந்தபோது, சீடர்களுடன் சேர்ந்துகொள்ள முயற்சித்தான். ஆனால் அவர்களோ, இவனைக்குறித்துப் பயமடைந்திருந்தபடியால், இவன் உண்மையாகவே ஒரு சீடன் என்று நம்பவில்லை. ஆனால் பர்னபா அவனைக் கூட்டிக்கொண்டு அப்போஸ்தலரிடம் வந்தான். அவன் அவர்களுக்குச் சவுல் எவ்விதம் தன் பயணத்தில் கர்த்தரைக் கண்டான் என்பதையும், எவ்விதம் கர்த்தர் அவனுடன் பேசினார் என்பதையும், அவன் எவ்விதம் தமஸ்குவில் இயேசுவின் பெயரில் பயமின்றி பிரசங்கித்தான் என்பதையும் எடுத்துச்சொன்னான். எனவே சவுல் அவர்களுடன் தங்கி, எருசலேமில் சுதந்திரமாய்ச் சுற்றித்திரிந்து, கர்த்தரின் பெயரில் துணிவுடன் பேசினான். அவன் கிரேக்க யூதருடன் பேசி விவாதித்தான். அவர்களோ அவனைக் கொலைசெய்ய முயற்சித்தார்கள். சகோதரர் இதை அறிந்தபோது, அவர்கள் சவுலை செசரியாவுக்குக் கூட்டிக்கொண்டுபோய், அவனுடைய சொந்த ஊராகிய தர்சுவுக்கு அனுப்பிவைத்தார்கள். அந்நாட்களில் யூதேயா, கலிலேயா, சமாரியா ஆகிய இடங்களில் இருந்த திருச்சபையோ சமாதானம் பெற்று, பெலனடைந்து, கர்த்தருடைய பயபக்தியில் வாழ்ந்து, பரிசுத்த ஆவியானவரால் உற்சாகமூட்டப்பட்டு, எண்ணிக்கையிலும் பெருகிற்று.

அப்போஸ்தலர் 9:26-31 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

சவுல் எருசலேமுக்கு வந்து, சீடர்களோடு சேர்ந்துகொள்ளப்பார்த்தான்; அவர்கள் அவனைச் சீடனென்று நம்பாமல் எல்லோரும் அவனுக்குப் பயந்திருந்தார்கள். அப்பொழுது பர்னபா என்பவன் அவனைச் சேர்த்துக்கொண்டு, அப்போஸ்தலர்களிடத்தில் அழைத்துக்கொண்டுபோய், வழியிலே அவன் கர்த்த்தரைக் கண்ட விதத்தையும், அவர் அவனுடனே பேசினதையும், தமஸ்குவில் அவன் இயேசுவின் நாமத்தினாலே தைரியமாகப் பிரசங்கித்ததையும் அவர்களுக்கு விவரித்துச்சொன்னான். அதன்பின்பு அவன் எருசலேமிலே அவர்களிடத்தில் போக்கும் வரத்துமாக இருந்து; கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே தைரியமாகப் பிரசங்கித்து, கிரேக்கர்களுடனே பேசி விவாதித்தான்; அவர்களோ அவனைக் கொலைசெய்ய வகைதேடினார்கள். சகோதரர்கள் அதை அறிந்து, அவனைச் செசரியாவிற்கு அழைத்துக்கொண்டுபோய், தர்சுவிற்கு அனுப்பிவிட்டார்கள். அப்பொழுது யூதேயா கலிலேயா சமாரியா நாடுகளிலெங்கும் சபைகள் சமாதானம் பெற்று, பக்திவளர்ச்சியடைந்து, கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடும், பரிசுத்த ஆவியானவரின் ஆறுதலோடும் வளர்ந்து பெருகின.

அப்போஸ்தலர் 9:26-31 பரிசுத்த பைபிள் (TAERV)

பிறகு சவுல் எருசலேமுக்குச் சென்றான். சீஷர் குழுவில் சேர்ந்துகொள்ள அவன் முயற்சித்தான். ஆனால் அவர்கள் எல்லோரும் அவனைக் கண்டு பயந்தனர். சவுல் உண்மையாகவே இயேசுவைப் பின்பற்றுகிறவன் என்பதை அவர்கள் நம்பவில்லை. ஆனால் பர்னபா சவுலை ஏற்றுக் கொண்டு அவனை அப்போஸ்தலரிடம் அழைத்து வந்தான். பர்னபா அப்போஸ்தலருக்கு, தமஸ்குவுக்குச் செல்லும் பாதையில் சவுல் கர்த்தரை தரிசித்ததைச் சொன்னான். கர்த்தர் சவுலிடம் பேசிய வகையை பர்னபா அப்போஸ்தலருக்கு விளக்கினான். பின் அவன் அப்போஸ்தலர்களுக்கு இயேசுவுக்காக பயமின்றி தமஸ்குவில் மக்களுக்கு சவுல் போதித்ததையும் சொன்னான். சவுலும் சீஷரோடு தங்கினான். பயமின்றி கர்த்தரைப் பற்றி எருசலேமின் எல்லா பகுதிகளுக்கும் சென்று போதித்தான். கிரேக்கமொழி பேசிய யூதரிடம் சவுல் அவ்வப்போது பேசினான். அவர்களோடு விவாதங்கள் நடத்தினான். ஆனால் அவனைக் கொல்வதற்கு அவர்கள் முயற்சி செய்துகொண்டிருந்தார்கள். சகோதரர்கள் இதைப்பற்றி அறிந்தபோது அவர்கள் சவுலை செசரியா நகரத்திற்கு அழைத்துச் சென்றனர். செசரியாவிலிருந்து தர்சு நகரத்திற்கு அவர்கள் சவுலை அனுப்பினர். யூதேயா, கலிலேயா, சமாரியா, ஆகிய இடங்களிலுள்ள சபையினர் அமைதியுடன் வாழ்ந்தார்கள். பரிசுத்த ஆவியானவரின் உதவியால் வலிமையூட்டப்பட்டுக் கொண்டிருந்தார்கள். தாங்கள் வாழ்ந்த வகையால் கர்த்தரை அவர்கள் மதித்தனர் என்பதை விசுவாசிகள் காட்டினர். ஏனெனில் பரிசுத்த ஆவியானவரின் உதவியினால் விசுவாசிகள் குழு பெருகி வளர்ந்தது.