அப்போஸ்தலர் 9:26-31

அப்போஸ்தலர் 9:26-31 TCV

சவுல் எருசலேமுக்கு வந்தபோது, சீடர்களுடன் சேர்ந்துகொள்ள முயற்சித்தான். ஆனால் அவர்களோ, இவனைக்குறித்துப் பயமடைந்திருந்தபடியால், இவன் உண்மையாகவே ஒரு சீடன் என்று நம்பவில்லை. ஆனால் பர்னபா அவனைக் கூட்டிக்கொண்டு அப்போஸ்தலரிடம் வந்தான். அவன் அவர்களுக்குச் சவுல் எவ்விதம் தன் பயணத்தில் கர்த்தரைக் கண்டான் என்பதையும், எவ்விதம் கர்த்தர் அவனுடன் பேசினார் என்பதையும், அவன் எவ்விதம் தமஸ்குவில் இயேசுவின் பெயரில் பயமின்றி பிரசங்கித்தான் என்பதையும் எடுத்துச்சொன்னான். எனவே சவுல் அவர்களுடன் தங்கி, எருசலேமில் சுதந்திரமாய்ச் சுற்றித்திரிந்து, கர்த்தரின் பெயரில் துணிவுடன் பேசினான். அவன் கிரேக்க யூதருடன் பேசி விவாதித்தான். அவர்களோ அவனைக் கொலைசெய்ய முயற்சித்தார்கள். சகோதரர் இதை அறிந்தபோது, அவர்கள் சவுலை செசரியாவுக்குக் கூட்டிக்கொண்டுபோய், அவனுடைய சொந்த ஊராகிய தர்சுவுக்கு அனுப்பிவைத்தார்கள். அந்நாட்களில் யூதேயா, கலிலேயா, சமாரியா ஆகிய இடங்களில் இருந்த திருச்சபையோ சமாதானம் பெற்று, பெலனடைந்து, கர்த்தருடைய பயபக்தியில் வாழ்ந்து, பரிசுத்த ஆவியானவரால் உற்சாகமூட்டப்பட்டு, எண்ணிக்கையிலும் பெருகிற்று.