அப்போஸ்தலர் 7:1-60

அப்போஸ்தலர் 7:1-60 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அப்பொழுது பிரதான ஆசாரியன் ஸ்தேவானிடம், “இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையா?” என்று கேட்டான். அதற்கு ஸ்தேவான் பதிலாக சொன்னதாவது: “சகோதரரே, தந்தையரே, எனக்குச் செவிகொடுங்கள்! நம்முடைய தந்தை ஆபிரகாம் ஆரானிலே வாழ்வதற்குமுன் மெசொப்பொத்தாமியாவிலே இருந்தார். அப்பொழுது மகிமையின் இறைவன் அவருக்கு அங்கே காட்சியளித்தார். இறைவன் ஆபிரகாமிடம், ‘நீ உன் நாட்டையும் உன் உறவினரையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குப் போ’ என்றார். “அப்படியே ஆபிரகாம் கல்தேயருடைய நாட்டைவிட்டுப் புறப்பட்டு, ஆரானில் குடியிருந்தான். ஆபிரகாமுடைய தகப்பன் இறந்தபின், நீங்கள் இப்பொழுது வாழுகிற இந்த நாட்டிற்கு இறைவன் அவனை அனுப்பினார். இறைவன் இங்கே ஆபிரகாமுக்கு ஒரு அடி நிலத்தைக்கூட உரிமைச்சொத்தாகக் கொடுக்கவில்லை. ஆனால் அந்தக் காலத்தில் அவனுக்குப் பிள்ளை இல்லாதிருந்தும்கூட, அவனுக்குப்பின் அவனுடைய தலைமுறையினரும் இந்நாட்டை உரிமையாக்கிக்கொள்வார்கள் என்று இறைவன் வாக்குப்பண்ணினார். இறைவன் ஆபிரகாமுடன் இவ்விதமாக பேசினார்: ‘உனது தலைமுறையினர் தங்களுக்குச் சொந்தமில்லாத ஒரு நாட்டிலே அந்நியர்களாக இருப்பார்கள். அவர்கள் நானூறு வருடங்களுக்கு அடிமைப்படுத்தப்பட்டு, துன்புறுத்தப்படுவார்கள். ஆனால் அவர்கள் அடிமைகளாய் இருந்து பணிசெய்கிற அந்த நாட்டையோ நான் நியாயந்தீர்ப்பேன்.’ இறைவன் தொடர்ந்து, ‘அதற்குப் பின்பு அவர்கள் அந்த நாட்டைவிட்டுப் புறப்பட்டுவந்து, இந்த இடத்திலே என்னை வழிபடுவார்கள்’ என்றார். பின்பு இறைவன், ஆபிரகாமுக்கு விருத்தசேதனத்தின் உடன்படிக்கையைக் கொடுத்தார். ஆபிரகாம் ஈசாக்கிற்குத் தகப்பனாகி, அவன் பிறந்து எட்டாம் நாளில் குழந்தைக்கு விருத்தசேதனம் செய்தான். பின்பு ஈசாக்கு, யாக்கோபிற்குத் தகப்பனானான், யாக்கோபு பன்னிரண்டு கோத்திரத் தந்தையருக்குத் தகப்பனானான். “கோத்திரத் தந்தையர் யோசேப்பின்மேல் பொறாமை கொண்டதால், அவர்கள் அவனை எகிப்தியருக்கு அடிமையாக விற்றார்கள். ஆனால் இறைவனோ, அவனோடுகூட இருந்தார். அவனுடைய எல்லாத் துன்பங்களிலுமிருந்து, அவனைத் தப்புவித்தார். இறைவன் யோசேப்பிற்கு ஞானத்தைக் கொடுத்து, எகிப்தின் அரசனாகிய பார்வோனின் நல்மதிப்பைப் பெறும்படி செய்தார். ஆகவே அவன் யோசேப்பை எகிப்திலும் தனது அரண்மனை முழுவதிலும் அதிகாரியாக ஏற்படுத்தினான். “பின்பு முழு எகிப்தையும் கானான் நாட்டையும் பஞ்சம் தாக்கியது. இதனால் பெருந்துன்பம் ஏற்பட்டது; நமது தந்தையருக்கும் உணவு கிடைக்கவில்லை. எகிப்திலே தானியம் இருக்கிறது என யாக்கோபு கேள்விப்பட்டபோது, அவன் நமது தந்தையரை முதலாவது பயணமாக, அங்கே போகும்படி அனுப்பினான். அவர்களது இரண்டாவது பயணத்தின்போது, யோசேப்பு தன்னை யார் என்று தன் சகோதரருக்கு அறிவித்தான். பார்வோனும் யோசேப்பின் குடும்பத்தைப்பற்றி அறிந்துகொண்டான். இதற்குப் பின்பு, யோசேப்பு தனது தகப்பன் யாக்கோபையும், அவனுடைய குடும்பத்தார் எல்லோரையும் அழைத்தான். அவர்கள் எல்லோருமாக எழுபத்தைந்து பேர் இருந்தார்கள். அப்பொழுது யாக்கோபு எகிப்திற்குச் சென்றான். அங்கே அவனும், நமது தந்தையரும் காலமானார்கள். அவர்களது உடல்கள் சீகேமுக்கு கொண்டுவரப்பட்டு, அங்கிருந்த கல்லறையில் வைக்கப்பட்டன. அந்தக் கல்லறையைச் சீகேமில் ஒரு குறிப்பிட்ட தொகைப் பணத்திற்கு ஆமோரின் மகன்களிடமிருந்து ஆபிரகாம் வாங்கியிருந்தான். “இறைவன் ஆபிரகாமுக்குத் தாம் கொடுத்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுகிற காலம் நெருங்கியபோது, எகிப்திலிருந்த நமது மக்களின் எண்ணிக்கை வெகுவாய்ப் பெருகியது. பின்பு, யோசேப்பைப்பற்றி எதுவுமே அறியாத புதிய அரசன், எகிப்திற்கு அதிகாரியாக வந்தான். அந்த அரசன் நமது மக்களைக் கொடுமையாக நடத்தினான். நமது முற்பிதாக்களைத் தங்கள் குழந்தைகளைச் சாகும்படி எறிந்துவிட வேண்டுமென்று பலவந்தப்படுத்தி, அவர்களை ஒடுக்கினான். “இந்தக் காலத்திலேதான் மோசே பிறந்தான். அவன் ஒரு சாதாரண குழந்தை அல்ல. மூன்று மாதங்களாக, அவன் தனது தகப்பன் வீட்டில் வைத்துப் பராமரிக்கப்பட்டான். பின்பு, அவன் வீட்டிலிருந்து வெளியே எறியப்பட்டபோது, பார்வோனின் மகள் அவனை எடுத்துத் தனது சொந்த மகனாக அவனை வளர்த்தாள். எனவே மோசே எகிப்தியரின் ஞானத்திலெல்லாம் கற்றுத்தேறி, பேச்சிலும் செயலிலும் வல்லமையுடையவனாய் இருந்தான். “மோசே நாற்பது வயதுடையவனான போது, தனது சகோதரர்களாகிய இஸ்ரயேலரைச் சந்திக்க உள்ளத்தில் தீர்மானித்தான். அவர்களில் ஒருவன், ஒரு எகிப்தியனால் துன்புறுத்தப்படுவதைக் கண்டான். அப்பொழுது மோசே அவனைப் பாதுகாக்கும்படி போய், எகிப்தியனைக் கொலைசெய்தான். தன்னுடைய சொந்த மக்களை இறைவன் தப்புவிப்பதற்காகத் தன்னைப் பயன்படுத்துகிறார் என்று அவர்கள் உணர்ந்து கொள்வார்கள் என்று மோசே நினைத்தான். ஆனால் அவர்களோ அப்படிப் புரிந்துகொள்ளவில்லை. மறுநாள் இரண்டு இஸ்ரயேலர்கள் சண்டையிடுவதை மோசே கண்டு, ‘நண்பர்களே, நீங்கள் சகோதரர் அல்லவா; ஏன் ஒருவரையொருவர் காயப்படுத்துகிறீர்கள்?’ என்று சொல்லி, அவர்களைச் சமாதானப்படுத்த முயன்றான். “ஆனால் மற்றவனைத் துன்புறுத்தியவன், மோசேயை ஒருபக்கமாய்த் தள்ளிவிட்டு, ‘எங்கள்மேல் உன்னை அதிபதியாகவும் நீதிபதியாகவும் ஏற்படுத்தியது யார்? நேற்று அந்த எகிப்தியனைக் கொன்றதுபோல என்னையும் கொல்லப்பார்க்கிறாயோ?’ என்று கேட்டான். இதை மோசே கேட்டபோது, அவன் மீதியானுக்கு ஓடிப்போய், அங்கே ஒரு வெளிநாட்டானாக குடியிருந்தபோது அவனுக்கு இரண்டு பிள்ளைகள் பிறந்தனர். “நாற்பது ஆண்டுகள் சென்றபின்பு, முட்செடி எரிந்துகொண்டிருந்த அக்கினி ஜுவாலையில், இறைத்தூதனானவர் மோசேக்குக் காட்சியளித்தார். இது சீனாய் மலையின் அருகேயுள்ள பாலைவனத்திலே நடந்தது. அவன் இதைக் கண்டபோது, அந்தக் காட்சியைப் பார்த்து வியப்படைந்தான். அவன் அதை இன்னும் நன்றாகப் பார்க்கும்படி, அதன் அருகே போனான். அங்கே அவன் கர்த்தரின் குரலைக் கேட்டான். அந்தக் குரல்: ‘நான் உனது தந்தையரின் இறைவன்; ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரின் இறைவன்’ என்றது. இதைக் கேட்டபோது, மோசே பயந்து நடுங்கினான். அதைப்பார்க்க அவன் துணியவில்லை. “அப்பொழுது கர்த்தர் அவனிடம், ‘நீ உனது பாதரட்சைகளை கழற்றிப்போடு; நீ நிற்கின்ற இந்த இடம் பரிசுத்த நிலமாய் இருக்கிறது. எகிப்தில் இருக்கும் என் மக்கள் ஒடுக்கப்படுவதை நான் கண்டேன். நான் அவர்களுடைய வேதனைக் குரலைக் கேட்டு, அவர்களை விடுதலைசெய்ய இறங்கி வந்திருக்கின்றேன். இப்பொழுது நீ வா; நான் உன்னைத் திரும்பவும் எகிப்திற்கு அனுப்புவேன்’ என்றார். “இந்த மோசேயைத்தான் இஸ்ரயேலர் பார்த்து, ‘எங்கள்மேல் உன்னை அதிகாரியாகவும் நீதிபதியாகவும் ஏற்படுத்தியது யார்?’ எனக் கேட்டுப் புறக்கணித்திருந்தார்கள். ஆனால், அவனே அவர்களின் அதிகாரியாகவும் மீட்பனாகவும் இருக்கும்படி இறைவனால் அனுப்பப்பட்டான். முட்செடியில் அவனுக்குக் காட்சியளித்த இறைவன் தம் தூதர் மூலமாய் இதைச் செய்தார். மோசே அவர்களை எகிப்திலிருந்து வெளியே வழிநடத்தி, எகிப்திலும் செங்கடல் அருகேயும், நாற்பது வருடங்களாக பாலைவனத்திலும் அதிசயங்களையும் அற்புத அடையாளங்களையும் செய்தான். “இந்த மோசேதான் இஸ்ரயேலரிடம், ‘இறைவன் உங்கள் சொந்த மக்களிலிருந்தே, என்னைப்போன்ற ஒரு இறைவாக்கினரை, உங்கள் சொந்த மக்கள்’ என்று சொன்னவன். பாலைவனத்தில் கூடியிருந்த மக்களுடனும், சீனாய் மலையில் தன்னுடன் பேசிய இறைவனின் தூதனுடனும், நமது தந்தையருடனும் இருந்தவன் இவனே. நமக்குக் கொடுக்கும்படி, ஜீவ வார்த்தைகளைப் பெற்றுக்கொண்டவனும் இந்த மோசேயே. “ஆனால் நமது தந்தையர் மோசேக்குக் கீழ்ப்படிய மறுத்தார்கள். அவர்கள் அவனைப் புறக்கணித்து, தங்கள் இருதயத்தை எகிப்தை நோக்கித் திருப்பினார்கள். அவர்கள் ஆரோனிடம், ‘நமக்கு முன்பாகப் போகும்படி தெய்வங்களைச் செய். எங்களை எகிப்திலிருந்து வழிநடத்திவந்த மோசேயைப்பற்றியோ, அவனுக்கு என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரியாது!’ என்றார்கள். அக்காலத்தில்தான் அவர்கள் ஒரு கன்றுக்குட்டியின் உருவத்தில் ஒரு சிலையைச் செய்தார்கள். அவர்கள் அதற்குப் பலிகளைக் கொண்டுவந்து, தாங்கள் கைகளினால் செய்த அந்தச் சிலையை கொண்டாடினார்கள். அதனால் இறைவன் அவர்களைவிட்டு விலகி, வான மண்டலத்திலுள்ள சூரிய, சந்திர, நட்சத்திரங்களை வணங்கும்படி அவர்களை விட்டுவிட்டார். இது இறைவாக்கினரின் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறதற்கு ஒத்திருக்கின்றது: “இஸ்ரயேல் குடும்பத்தாரே, பாலைவனத்தில் நாற்பது வருடங்களாக நீங்கள் இருந்தபோது, எனக்கு பலிகளையும் காணிக்கைகளையும் கொண்டுவந்தீர்களோ? நீங்கள் மோளேக் தெய்வத்தின் கூடாரத்தையும், உங்கள் ரெம்பான் தெய்வத்தின் நட்சத்திரத்தையும் தூக்கித்திரிந்தீர்களே. இவைகளெல்லாம் நீங்கள் வணங்கும்படி செய்துகொண்ட விக்கிரகங்களே. எனவே நான் உங்களைப் பாபிலோனுக்கு அப்பால் நாடுகடத்தும்படி அனுப்புவேன். “நமது முற்பிதாக்கள் பாலைவனத்தில், தங்களுடன் சாட்சியின் கூடாரத்தை வைத்திருந்தார்கள். இது மோசேக்கு இறைவன் அறிவுறுத்திய விதமாக, அவன் கண்ட மாதிரியின்படி செய்யப்பட்டிருந்தது. நமது தந்தையர் அந்தக் கூடாரத்தைப் பெற்றுக்கொண்டு, யோசுவாவின் தலைமையின்கீழ் யூதரல்லாதவர்களின் நாட்டைக் கைப்பற்றியபோது, அந்தக் கூடாரத்தைத் தங்களுடன் கொண்டுவந்தார்கள். அந்த மக்களை அவர்களுக்கு முன்பாக இறைவனே துரத்தினார். அந்தக் கூடாரம் நமது நாட்டில் தாவீதின் காலம்வரைக்கும் இருந்தது. தாவீது இறைவனின் தயவைப் பெற்றவனாய், தான் யாக்கோபின் இறைவனுக்கு ஒரு உறைவிடத்தை அமைக்கலாமோ என்று கேட்டான். ஆனால், சாலொமோனே இறைவனுக்கென ஒரு வீட்டைக் கட்டினான். “எப்படியும் மகா உன்னதமானவர் மனிதரால் கட்டப்பட்ட ஆலயங்களில் வாழ்பவர் அல்ல. இறைவாக்கினர் சொல்வதுபோல்: “ ‘வானம் எனது அரியணை, பூமி எனது பாதபீடம். நீங்கள் எனக்கு எப்படிப்பட்ட வீட்டைக் கட்டுவீர்கள்? நான் இளைப்பாறும் இடம் எங்கே இருக்கும்? இவற்றையெல்லாம் என் கரம் படைக்கவில்லையா?’ என்று கர்த்தர் கேட்கிறார். “அடங்காதவர்களே! இருதயங்களிலும், காதுகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே! நீங்களும் உங்கள் தந்தையரைப் போலவே இருக்கிறீர்கள்: நீங்கள் எப்போதும் பரிசுத்த ஆவியானவரை எதிர்க்கிறீர்கள்! உங்கள் தந்தையர் துன்பப்படுத்தாத இறைவாக்கினர் எப்போதாவது இருந்ததுண்டோ? நீதியானவரின் வருகையை முன்னறிவித்தவர்களைக்கூட, அவர்கள் கொலைசெய்தார்களே. இப்பொழுது நீங்களே அவரைக் காட்டிக்கொடுத்துக் கொலைசெய்தீர்கள். இறைத்தூதரின் மூலமாய் கொடுக்கப்பட்ட மோசேயின் சட்டத்தை நீங்கள் பெற்றிருந்தும் நீங்கள் அதற்குக் கீழ்ப்படியவில்லை” என்றான். அவர்கள் இதைக் கேட்டபோது, மிகவும் ஆத்திரமடைந்து, ஸ்தேவானைப் பார்த்து பல்லைக் கடித்தார்கள். ஆனால் ஸ்தேவான் பரிசுத்த ஆவியானவரால் நிறைந்தவனாய், மேலே வானத்தை நோக்கிப்பார்த்து, இறைவனின் மகிமையைக் கண்டான், இறைவனுடைய வலதுபக்கத்தில் இயேசு நிற்கிறதையும் அவன் கண்டான். “இதோ பாருங்கள், நான் பரலோகம் திறந்திருப்பதையும், மானிடமகன் இறைவனுடைய வலதுபக்கத்தில் நிற்கிறதையும் காண்கிறேன்” என்றான். இதைக் கேட்டபோது, அவர்கள் தங்கள் காதுகளை அடைத்துக்கொண்டு, உரத்த குரலில் கூச்சலிட்டு, அவனை நோக்கி விரைந்து ஓடிப்போய்த் தாக்கினார்கள். பின்பு அவனைப் பட்டணத்திலிருந்து வெளியே இழுத்துக்கொண்டுபோய், அவன்மேல் கல்லெறியத் தொடங்கினார்கள். அப்பொழுது சாட்சிக்காரர்கள் தங்கள் மேலுடைகளைக் கழற்றி, சவுல் என்னும் பெயருடைய ஒரு வாலிபனின் காலடியில் வைத்தார்கள். அவர்கள் ஸ்தேவானின்மேல் கல்லெறிந்து கொண்டிருக்கையிலே அவன், “கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும்” என்று மன்றாடினான். பின்பு அவன் முழங்காற்படியிட்டு உரத்த குரலில், “கர்த்தாவே இந்தப் பாவத்தை இவர்கள்மேல் சுமத்தவேண்டாம்” என்றான். அவன் இதைச் சொன்னபின்பு, விழுந்து நித்திரையடைந்தான்.

அப்போஸ்தலர் 7:1-60 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பிரதான ஆசாரியன் அவனை நோக்கி: காரியம் இப்படியா இருக்கிறது என்று கேட்டான். அதற்கு அவன்: சகோதரர்களே, தகப்பன்மார்களே, கேளுங்கள். நம்முடைய முற்பிதாவாகிய ஆபிரகாம் காரானூரிலே குடியிருக்கிறதற்கு முன்பே மெசொப்பொத்தாமியா நாட்டிலே இருக்கும்போது மகிமையின் தேவன் அவனுக்குத் தரிசனமாகி: நீ உன் தேசத்தையும் உன் இனத்தையும்விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்திற்குப் போ என்றார். அப்பொழுது அவன் கல்தேயர் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, காரானூரிலே குடியிருந்தான். அவனுடைய தகப்பன் மரித்தபின்பு, அந்த இடத்தைவிட்டு நீங்கள் இப்பொழுது குடியிருக்கிற இந்த தேசத்திற்கு அவனை அழைத்துக்கொண்டுவந்து குடியிருக்கும்படி செய்தார். இதிலே ஒரு அடி நிலத்தையாவது அவனுக்கு சொத்தாகக் கொடுக்காமல், அவனுக்குப் பிள்ளையில்லாதிருக்கும்போது: உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் இதை சொத்தாகத் தருவேன் என்று அவனுக்கு வாக்குத்தத்தம்பண்ணினார். அப்படியே, தேவன் அவனை நோக்கி: உன் சந்ததியார் வேறு தேசத்தில் குடியிருப்பார்கள்; அந்த தேசத்தார் அவர்களை அடிமைகளாக்கி, நானூறு வருடங்கள் துன்பப்படுத்துவார்கள். அவர்களை அடிமைப்படுத்தும் மக்களை நான் தண்டிப்பேன். அதற்குப்பின்பு அவர்கள் புறப்பட்டுவந்து இந்த இடத்திலே எனக்கு ஆராதனை செய்வார்கள் என்றார். மேலும் விருத்தசேதன உடன்படிக்கையையும் அவனுக்கு ஏற்படுத்தினார். அந்தப்படியே அவன் ஈசாக்கைப் பெற்றபோது, எட்டாம் நாளிலே அவனுக்கு விருத்தசேதனம்பண்ணினான். ஈசாக்கு யாக்கோபையும், யாக்கோபு பன்னிரண்டு கோத்திரப்பிதாக்களையும் பெற்றார்கள். அந்தக் கோத்திரப்பிதாக்கள் பொறாமைகொண்டு யோசேப்பை எகிப்துக்குக் கொண்டுபோகும்படியாக விற்றுப்போட்டார்கள். தேவனோ அவனோடிருந்து, எல்லா உபத்திரவங்களில் இருந்தும் அவனை விடுவித்து, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனிடம் அவனுக்கு தயவையும் ஞானத்தையும் அருளினார்; அந்த ராஜா அவனை எகிப்துதேசத்திற்கும் தன் வீடு அனைத்திற்கும் அதிகாரியாக ஏற்படுத்தினான். பின்பு எகிப்து கானான் என்னும் தேசங்களிலெங்கும் பஞ்சமும் அதிக வருத்தமும் உண்டாகி, நம்முடைய முற்பிதாக்களுக்கு ஆகாரம் கிடைக்காமல்போனது. அப்பொழுது எகிப்திலே தானியம் உண்டு என்று யாக்கோபு கேள்விப்பட்டு, யோசேப்புடைய மூத்த சகோதரர்களை முதல்முறை அனுப்பினான். இரண்டாம்முறை யோசேப்பு தன்னுடைய சகோதரர்களுக்குத் தன்னைத் தெரியப்படுத்தினான். யோசேப்புடைய வம்சமும் பார்வோனுக்குத் தெரியவந்தது. பின்பு யோசேப்பு, தன்னுடைய தகப்பன் யாக்கோபையும் தன்னுடைய இனத்தார் எழுபத்தைந்துபேரையும் அழைத்துவரும்படி அனுப்பினான். அந்தப்படி யாக்கோபு எகிப்துக்குப் போனான். அவனும் நம்முடைய முற்பிதாக்களும் மரித்து, அங்கேயிருந்து சீகேமுக்குக் கொண்டுவரப்பட்டு, ஆபிரகாம் சீகேமின் தகப்பனாகிய ஏமோருடைய சந்ததியாரிடத்தில் விலைக்கு வாங்கியிருந்த கல்லறையில் வைக்கப்பட்டார்கள். ஆபிரகாமுக்கு தேவன் ஆணையிட்டு அருளின வாக்குத்தத்தம் நிறைவேறும் நேரம் நெருங்கியபோது, யோசேப்பைத் தெரியாத வேறொரு ராஜா தோன்றின காலம்வரையிலும், மக்கள் எகிப்திலே பலுகிப் பெருகினார்கள். அவன் நம்முடைய மக்களை வஞ்சகமாக நடப்பித்து, நம்முடைய முற்பிதாக்களின் குழந்தைகள் உயிரோடிராதபடிக்கு அவர்கள் அவைகளை வெளியே போட்டுவிடும்படி செய்து, அவர்களை உபத்திரவப்படுத்தினான். அக்காலத்திலே மோசே பிறந்து, மிகுந்த அழகுள்ளவனாக இருந்து, மூன்று மாதங்கள் தன் தகப்பன் வீட்டிலே வளர்க்கப்பட்டான். அவன் வீட்டிற்கு வெளியே போட்டுவிடப்பட்டபோது, பார்வோனுடைய மகள் அவனை எடுத்துத் தனக்குப் பிள்ளையாக வளர்த்தாள். மோசே எகிப்தியருடைய எல்லா சாஸ்திரங்களிலும் கற்பிக்கப்பட்டு, வாக்கிலும் செய்கையிலும் வல்லவனானான். அவனுக்கு நாற்பது வயதானபோது, இஸ்ரவேலின் பிள்ளைகளாகிய தன்னுடைய சகோதரர்களைக் கண்டு சந்திக்கும்படி அவனுடைய இருதயத்தில் தோன்றியது. அப்பொழுது அவர்களில் ஒருவன் அநியாயமாக நடத்தப்படுகிறதை அவன் கண்டு, அவனுக்குத் துணையாக இருந்து, எகிப்தியனை வெட்டி, துன்பப்பட்டவனுக்கு நியாயம் செய்தான். தன்னுடைய கையினாலே தேவன் தங்களுக்கு விடுதலையைத் தருவார் என்பதைத் தன்னுடைய சகோதரர்கள் தெரிந்துகொள்வார்களென்று அவன் நினைத்தான்; அவர்களோ அதை தெரிந்துகொள்ளவில்லை. மறுநாளிலே சண்டைபண்ணிக்கொண்டிருக்கிற இரண்டுபேரை அவன் கண்டு: மனிதர்களே, நீங்கள் சகோதரர்களாக இருக்கிறீர்கள்; ஒருவருக்கொருவர் அநியாயம் செய்கிறது என்ன என்று, அவர்களைச் சமாதானப்படுத்தும்படி பேசினான். ஆனால் மற்றவனுக்கு அநியாயஞ்செய்தவன் அவனைப் பிடித்துத் தள்ளி: எங்கள்மேல் அதிகாரியாகவும், நியாயாதிபதியாகவும் உன்னை நியமித்தவன் யார்? நேற்று நீ அந்த எகிப்தியனைக் கொன்றதுபோல என்னையும் கொன்றுபோட நினைக்கிறாயோ என்றான். இந்த வார்த்தையினிமித்தம் மோசே ஓடிப்போய், மீதியான் தேசத்திலே வசித்து வந்தான்; அங்கே இருக்கும்போது அவனுக்கு இரண்டு குமாரர்கள் பிறந்தார்கள். நாற்பது வருடங்கள் முடிந்தபின்பு, சீனாய்மலையின் வனாந்திரத்திலே கர்த்தருடைய தூதன் முட்செடி எரிகிற அக்கினிஜூவாலையிலே அவனுக்குத் தரிசனமானார். மோசே அந்தத் தரிசனத்தைக் கண்டு, அதிசயப்பட்டு, அதை உற்றுப்பார்க்கும்படி அருகில் வரும்போது: நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் முற்பிதாக்களுடைய தேவனாக இருக்கிறேன் என்று கர்த்தர் உரைத்த சத்தம் அவனுக்குக் கேட்டது. அப்பொழுது மோசே நடுக்கமடைந்து, உற்றுப்பார்க்கத் துணிச்சல் இல்லாமலிருந்தான். பின்னும் கர்த்தர் அவனை நோக்கி: உன் பாதங்களிலிருக்கிற காலணிகளைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமியாக இருக்கிறது. எகிப்திலிருக்கிற என் மக்களின் உபத்திரவத்தை நான் கண்டு, அவர்கள் பெருமூச்சைக்கேட்டு, அவர்களை விடுவிக்கும்படி இறங்கினேன்; ஆகவே, நீ வா, நான் உன்னை எகிப்திற்கு அனுப்புவேன் என்றார். உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் நியமித்தவன் யார் என்று சொல்லி அவர்கள் நிராகரித்த இந்த மோசேயைத்தான் தேவன், முட்செடியில் அவனுக்குத் தரிசனமான தூதனாலே தலைவனாகவும் மீட்பனாகவும் அனுப்பினார். இவனே அவர்களை அங்கேயிருந்து அழைத்துக்கொண்டுவந்து, எகிப்து தேசத்திலேயும் செங்கடலிலேயும், நாற்பது வருடகாலமாக வனாந்திரத்திலேயும், அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான். இஸ்ரவேல் மக்களை நோக்கி: உங்களுடைய தேவனாகிய கர்த்தர் உங்களுடைய சகோதரர்களிலிருந்து என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக ஏற்படுத்துவார், அவர் சொல்வதை கேட்பீர்களாக என்று சொன்னவனும் இந்த மோசேயே. சீனாய்மலையில் தன்னோடு பேசின தூதனோடும் நம்முடைய முற்பிதாக்களோடும் வனாந்திரத்தில் இருந்தவனும், நமக்குக் கொடுக்கும்படி ஜீவவார்த்தைகளைப் பெற்றவனும் இவனே. இவனுக்கு நம்முடைய முற்பிதாக்கள் கீழ்ப்படிய மனமில்லாமல், இவனைத் தள்ளிவிட்டு, தங்களுடைய இருதயங்களில் எகிப்துக்குத் திரும்பி, ஆரோனை நோக்கி: எகிப்துதேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன ஆனதோ தெரியாது; ஆதலால் எங்களுக்கு முன்னேசெல்லும் தெய்வங்களை எங்களுக்கு உண்டுபண்ணும் என்று சொல்லி; அந்த நாட்களில் ஒரு கன்றுக்குட்டியை உண்டுபண்ணி, அந்த விக்கிரகத்திற்குப் பலியிட்டு, தங்களுடைய கைவேலைகளில் மகிழ்ந்திருந்தார்கள். அப்பொழுது தேவன் அவர்களைவிட்டு விலகி, வானத்தின் கோள்களுக்கு ஆராதனைசெய்ய அவர்களை ஒப்புக்கொடுத்தார். அதைக்குறித்து: இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் வனாந்திரத்திலிருந்த நாற்பது வருடங்கள்வரையில் காணிக்கைகளையும் பலிகளையும் எனக்குச் செலுத்தினீர்களோ என்றும், பணிந்துகொள்ளும்படி நீங்கள் உண்டாக்கின சொரூபங்களாகிய மோளோகினுடைய கூடாரத்தையும், உங்களுடைய தேவனாகிய ரெம்பான் என்னும் நட்சத்திர சொரூபத்தையும் சுமந்தீர்களே; ஆகவே, உங்களைப் பாபிலோனுக்கு அப்புறத்திலே குடிபோகப்பண்ணுவேன்’ என்றும் தீர்க்கதரிசிகளின் புத்தகத்தில் எழுதியிருக்கிறதே. மேலும் நீ பார்த்த மாதிரியின்படியே சாட்சியின் கூடாரத்தை உண்டுபண்ணு என்று மோசேயுடனே பேசினவர் கட்டளையிட்டபடி, அந்தக் கூடாரம் வனாந்திரத்திலே நம்முடைய முற்பிதாக்களோடு இருந்தது. மேலும், யோசுவாவோடுகூட நம்முடைய முற்பிதாக்கள் அதைப் பெற்றுக்கொண்டு, தேவன் அவர்களுக்கு முன்பாகத் துரத்திவிட்ட யூதரல்லாதவர்களுடைய தேசத்தை அவர்கள் கைப்பற்றிக்கொள்ளும்போது, அதை அந்த தேசத்திற்கு கொண்டுவந்து தாவீதின் நாள்வரை வைத்திருந்தார்கள். இவன் தேவனிடத்தில் தயவு பெற்றபடியினால், யாக்கோபின் தேவனுக்கு ஒரு ஆலயத்தைத் தான் கட்டவேண்டுமென்று விண்ணப்பம்பண்ணினான். சாலொமோனோ அவருக்கு ஆலயத்தைக் கட்டினான். ஆனாலும் உன்னதமான தேவன் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசம்பண்ணுவதில்லை. வானம் எனக்குச் சிங்காசனமும் பூமி எனக்குப் பாதபடியுமாக இருக்கிறது; எனக்காக நீங்கள் எப்படிப்பட்ட வீட்டைக் கட்டுவீர்கள்; நான் தங்கியிருக்கத்தக்க இடம் எது; இவைகள் எல்லாவற்றையும் என்னுடைய கரம் உண்டாக்கவில்லையா’ என்று கர்த்தர் உரைக்கிறார் என்று தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே. “வணங்காக் கழுத்துள்ளவர்களே, இருதயத்திலும் காதுகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே, உங்களுடைய முற்பிதாக்களைப்போல நீங்களும் பரிசுத்த ஆவியானவருக்கு எப்பொழுதும் எதிர்த்துநிற்கிறீர்கள். தீர்க்கதரிசிகளில் யாரை உங்களுடைய முற்பிதாக்கள் துன்பப்படுத்தாமல் இருந்தார்கள்? நீதிபரராகிய இயேசுவின் வருகையை முன்னறிவித்தவர்களையும் அவர்கள் கொலைசெய்தார்கள். இப்பொழுது நீங்கள் அவருக்குத் துரோகிகளும் அவரைக் கொலைசெய்த பாதகருமாக இருக்கிறீர்கள். தேவதூதர்களைக்கொண்டு நீங்கள் நியாயப்பிரமாணத்தைப் பெற்றிருந்தும், அதைக் கடைபிடிக்காமல்போனீர்கள்” என்றான். இவைகளை அவர்கள் கேட்டபொழுது மிகுந்த கோபமடைந்து, அவனைப் பார்த்துப் பல்லைக் கடித்தார்கள். அவன் பரிசுத்த ஆவியானவராலே நிறைந்தவனாக, வானத்தை அண்ணாந்துபார்த்து, தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலதுபக்கத்தில் இயேசுவானவர் நிற்கிறதையும் பார்த்து: அதோ வானங்கள் திறந்திருக்கிறதையும், இயேசுவானவர் தேவனுடைய வலதுபக்கத்தில் நிற்கிறதையும் காண்கிறேன் என்றான். அப்பொழுது அவர்கள் உரத்த சத்தமாகக் கூக்குரலிட்டுத் தங்களுடைய காதுகளை அடைத்துக்கொண்டு, ஒன்றுசேர்ந்து அவன்மேல் பாய்ந்து, அவனை நகரத்திற்கு வெளியே தள்ளி, அவன் மீது கல்லெறிந்தார்கள். சாட்சிக்காரர்கள் தங்களுடைய ஆடைகளைக் கழற்றி, சவுல் என்னப்பட்ட ஒரு வாலிபனுடைய பாதத்தின் அருகே வைத்தார்கள். அப்பொழுது: கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும் என்று ஸ்தேவான் தொழுதுகொள்ளும்போது, அவனைக் கல்லெறிந்தார்கள். அவனோ, முழங்காற்படியிட்டு: ஆண்டவரே, இவர்கள்மேல் இந்தப்பாவத்தைச் சுமத்தாமல் இரும் என்று அதிக சத்தமிட்டுச் சொன்னான். இப்படிச் சொல்லி உயிரைவிட்டான்.

அப்போஸ்தலர் 7:1-60 பரிசுத்த பைபிள் (TAERV)

தலைமை ஆசாரியன் ஸ்தேவானை நோக்கி, “இந்தக் காரியங்கள் எல்லாம் உண்மைதானா?” என்று கேட்டான். ஸ்தேவான் பதிலாக, “எனது யூத தந்தையரே, சகோதரரே, நான் கூறுவதைக் கேளுங்கள். மகிமைபொருந்திய நமது தேவன் நமது தந்தையாகிய ஆபிரகாமுக்குக் காட்சி கொடுத்தார். ஆபிரகாம் மெசொபொதாமியாவில் இருந்தார். அவர் ஆரானில் வாழ்வதற்கு முன்பு நடந்த நிகழ்ச்சி இது. தேவன் ஆபிரகாமை நோக்கி, ‘உன் நாட்டையும் உன் உறவினர்களையும் விட்டுவிட்டு, நான் காண்பிக்கும் நாட்டிற்குப் போ’ என்றார். “எனவே ஆபிரகாம் கல்தேயா நாட்டை விட்டுச் சென்றார். ஆரானில் வசிப்பதற்காகச் சென்றார். ஆபிரகாமின் தந்தை இறந்த பிறகு, நீங்கள் இப்போது வசிக்கிற இந்த இடத்திற்கு தேவன் அவரை அனுப்பினார். ஆனால் தேவன் ஆபிரகாமுக்கு இந்த நாட்டில் எதையும் கொடுக்கவில்லை. ஒரு அடி நிலம் கூடக் கொடுக்கவில்லை. ஆனால் ஆபிரகாமுக்கும் அவர் குழந்தைகளுக்கும் எதிர்காலத்தில் இந்நாட்டைக் கொடுப்பதாக தேவன் வாக்களித்தார். (ஆபிரகாமுக்குக் குழந்தை இல்லாதிருந்தபோது இது நடந்தது) “தேவன் அவருக்குக் கூறியது இதுவாகும். ‘உன் சந்ததியர் மற்றொரு நாட்டில் வாழ்வர். அவர்கள் அந்நியர்களாயிருப்பர். அந்நாட்டின் மக்கள் அவர்களை அடிமைப்படுத்துவர். 400 வருடங்களுக்கு அவர்களை மோசமாக நடத்துவர். ஆனால் அவர்களை அடிமையாக்கிய நாட்டினரை நான் தண்டிப்பேன்.’ தேவன் மேலும், ‘இந்தக் காரியங்கள் நடந்தபின் உன் மக்கள் அந்நாட்டிலிருந்து வெளியேறுவர். பின் உன் மக்கள் இங்கு இந்த இடத்தில் என்னை வழிபடுவர்’ என்றார். “தேவன் ஆபிரகாமோடு ஓர் உடன்படிக்கை பண்ணினார். இந்த உடன்படிக்கையின் அடையாளமே விருத்த சேதனமாகும். எனவே ஆபிரகாமுக்கு ஒரு குமாரன் பிறந்ததும், அவன் பிறந்து எட்டு நாட்களான பின் ஆபிரகாம் தன் குமாரனுக்கு விருத்தசேதனம் செய்வித்தார். அவரது குமாரனின் பெயர் ஈசாக்கு. ஈசாக்கும் தனது குமாரன் யாக்கோபுக்கு விருத்தசேதனம் செய்வித்தார். யாக்கோபும் தனது மக்களுக்கு அதைச் செய்தார். அந்த குமாரன்களே பின்னர் பன்னிரண்டு தந்தையராக மாறினர். “இந்தத் தந்தையர் யோசேப்பைக் (அவர்களது இளைய சகோதரன்) கண்டு பொறாமை கொண்டனர். எகிப்தில் ஒரு அடிமையாக யோசேப்பை அவர்கள் விற்றனர். ஆனால் தேவன் யோசேப்போடு இருந்தார். யோசேப்புக்கு அங்கு பல தொல்லைகள் நேர்ந்தாலும், தேவன் அத்தொல்லைகள் எல்லாவற்றிலிருந்தும் அவரைக் காப்பாற்றினார். பார்வோன் எகிப்தின் ராஜாவாக இருந்தான். அவன் யோசேப்புக்கு தேவன் கொடுத்த ஞானத்தைக் கண்டு அவரை விரும்பவும் நேசிக்கவும் செய்தான். எகிப்தின் ஆளுநர் வேலையைப் பார்வோன் யோசேப்புக்குக் கொடுத்தான். பார்வோனின் வீட்டிலுள்ள எல்லா மக்களையும் ஆளுவதற்கும் யோசேப்பை பார்வோன் அனுமதித்தான். ஆனால் எகிப்திலும், கானானிலுமிருந்த எல்லா நிலங்களும் வறண்டு போயின. அங்கு உணவு தானியங்கள் வளர முடியாதபடிக்கு நாடு வறட்சியுற்றது. இது மக்களுக்குப் பெரும் துன்பத்தை விளைவித்தது. நமது தந்தையருக்கு உண்பதற்கு எதுவும் அகப்படவில்லை. “ஆனால் எகிப்தில் உணவு சேமித்து வைக்கப்பட்டிருப்பதை யாக்கோபு கேள்விப்பட்டார். எனவே அவர் நமது தந்தையரை அங்கு அனுப்பினார். (இது எகிப்துக்கு அவர்களின் முதற்பயணமாயிருந்தது.) பின்னர், அவர்கள் இரண்டாம் முறையாகவும் அங்கு சென்றார்கள். இந்தத் தடவை யோசேப்பு தன் சகோதரர்களிடம் தான் யாரென்பதைக் கூறினான். பார்வோனுக்கும் யோசேப்பின் குடும்பத்தைக் குறித்துத் தெரிய வந்தது. பின் யோசேப்பு தன் தந்தையாகிய யாக்கோபை எகிப்துக்கு அழைத்து வருவதற்கென்று சில மனிதர்களை அனுப்பினார். தன் எல்லா உறவினர்களையும் கூட (அங்கு மொத்தம் 75 பேர்) அழைத்தார். எனவே யாக்கோபு எகிப்திற்குப் போனார். யாக்கோபும் நமது தந்தையரும் அவர்களின் மரணம் மட்டும் அங்கு வாழ்ந்தனர். பின்னர் அவர்கள் சரீரங்கள் சீகேமுக்கு அனுப்பப்பட்டன. அவர்கள் அங்கு ஒரு கல்லறையில் வைக்கப்பட்டனர். (வெள்ளியைக் கொடுத்து ஏமோரின் குமாரர்களிடமிருந்து சீகேமில் ஆபிரகாம் வாங்கிய கல்லறை அது.) “எகிப்தில் யூத மக்களின் தொகை பெருகியது. நமது மக்கள் அங்கு மென்மேலும் பெருகினர். (தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குறுதியைச் செயல்படுத்த வேண்டிய காலம் நெருங்கிக்கொண்டிருந்தது) பின் இன்னொரு மன்னன் எகிப்தை ஆளத் தொடங்கினான். அவனுக்கு யோசேப்பைப்பற்றி எதுவும் தெரியாது. இந்த மன்னன் நமது மக்களை ஏமாற்றினான். நம் முன்னோருக்கு அவன் தீமை செய்தான். அம்மன்னன் அவர்களது குழந்தைகளை இறக்கும்படியாக வெளியே போடும்படிச் செய்தான். “இக்காலத்தில் தான் மோசே பிறந்தார். அவர் அழகான குழந்தையாகவும் தேவனுக்கு இனிமையானவராகவும் இருந்தார். தன் தந்தையின் வீட்டில் மூன்று மாத காலத்துக்கு மோசேயை வைத்துப் பராமரித்தார்கள். மோசேயை வெளியில் விட்டபொழுது பார்வோனின் குமாரத்தி அவனை எடுத்துத் தன் சொந்தக் குழந்தையைப் போன்றே வளர்த்தாள். தங்களிடமிருந்த எல்லா ஞானத்தையும் எகிப்தியர்கள் மோசேக்குக் கற்பித்தனர். அவர் கூறியவற்றிலும் செய்தவற்றிலும் வல்லமைமிக்கவராக இருந்தார். “மோசே நாற்பது வயதாக இருந்தபோது தன் சகோதரர்களான யூத மக்களைச் சந்திப்பது நல்லது என்று நினைத்தார். எகிப்தியன் ஒருவன் யூதன் ஒருவனுக்கு எதிராகத் தவறு செய்வதை அவர் கண்டார். எனவே அவர் யூதனுக்கு சார்பாகச் சென்றார். யூதனைப் புண்படுத்தியதற்காக மோசே எகிப்தியனைத் தண்டித்தார். மோசே அவனைப் பலமாகத் தாக்கியதால் அவன் இறந்தான். தேவன் அவர்களை மீட்பதற்காக அவரைப் பயன்படுத்துவதை யூத சகோதர்கள் புரிந்துகொள்வார்கள் என்று மோசே எண்ணினார். ஆனால் அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. “மறுநாள் இரண்டு யூதர்கள் சண்டையிடுவதை மோசே பார்த்தார். அவர்களுக்குள் அமைதியை நிலை நாட்ட அவர் முயன்றார். அவர், ‘மனிதரே, நீங்கள் இருவரும் சகோதரர்கள். நீங்கள் ஏன் ஒருவரையொருவர் மோசமாக நடத்துகிறீர்கள்?’ என்றார். ஒருவனுக்கு எதிராகத் தவறிழைத்த மற்றொருவன் மோசேயைத் தள்ளிவிட்டான். அவன் மோசேயை நோக்கி, ‘நீ எங்கள் அதிகாரியாகவும் நீதிபதியாகவும் இருக்கும்படி யாராவது கூறினார்களா? இல்லை. நேற்று எகிப்தியனைக் கொன்றது போல் என்னைக் கொல்லுவாயோ?’ என்றான். அவன் இவ்வாறு கூறுவதைக் கேட்ட மோசே எகிப்தை விட்டுச் சென்றார். மீதியானில் வாழும்படியாகச் சென்றார். அவர் அங்கு அந்நியனாக இருந்தார். மீதியானில் இருந்தபோது, மோசேக்கு இரண்டு குமாரர்கள் பிறந்தனர். “மோசே நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு சீனாய் மலையின் அருகேயுள்ள வனாந்தரத்தில் இருந்தார். எரிகின்ற புதரின் ஜூவாலையிலிருந்து ஒரு தேவதூதன் அவருக்குத் தோன்றினான். அதைக் கண்டு மோசே வியந்தார். நன்கு பார்க்கும்படியாக அவர் அருகே சென்றார். மோசே ஒரு சத்தத்தைக் கேட்டார். அது தேவனுடைய குரலாக இருந்தது. தேவன் கூறினார், ‘ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உங்கள் முன்னோரின் தேவன் நானே’ என்றார். மோசே பயத்தால் நடுங்க ஆரம்பித்தார். அவர் புதரைப் பார்க்கவும் அஞ்சினார். “கர்த்தர் அவரிடம், ‘உன் மிதியடிகளைக் கழற்று. நீ நின்றுகொண்டிருக்கும் இந்த இடம் பரிசுத்த பூமி. எகிப்தில் எனது மக்கள் மிகவும் துன்புறுவதைக் கண்டிருக்கிறேன். என் மக்கள் அழுவதைக் கேட்டிருக்கிறேன். அவர்களைக் காப்பாற்றுவதற்காக இறங்கி வந்துள்ளேன். மோசே! இப்பொழுது வா, நான் எகிப்திற்கு உன்னைத் திரும்பவும் அனுப்புகிறேன்’ என்றார். “யூதர்கள் அவர்களுக்கு வேண்டாமெனக் கூறிய அதே மோசே அவர்தான். அவர்கள் அவரிடம், ‘நீ எங்களுக்கு அதிபதியாகவும், நீதிபதியாகவும் இருக்கமுடியுமென்று யாராவது கூறினார்களா? இல்லை!’ என்றனர். தேவன் அதிபதியாகவும் மீட்பராகவும் மோசேயாகிய அதே மனிதனை அனுப்பினார். தேவன் ஒரு தேவதூதனின் உதவியோடு மோசேயை அனுப்பினார். எரியும் புதரில் மோசே கண்ட தேவ தூதன் இவனே. அதனால் மோசே மக்களை வெளியே நடத்திச் சென்றார். அவர் வல்லமை வாய்ந்த செயல்களையும் அற்புதங்களையும் செய்தார். எகிப்திலும், செங்கடலிலும், வானந்தரத்திலும் 40 ஆண்டுகள் இவற்றை மோசே செய்தார். “‘தேவன் உங்களுக்கு ஒரு தீர்க்கதரிசியைக் கொடுப்பார். உங்கள் மக்களிடமிருந்தே அந்தத் தீர்க்கதரிசி வருவார். அவர் என்னைப் போலவே இருப்பார்’ என்று கூறிய அதே மோசேதான் அவர். வனாந்தரத்தில் யூதர்களின் கூட்டத்தோடு இருந்தவர் இவரேதான். சீனாய் மலையில் தன்னோடு பேசிய தேவதூதனுடன் இருந்தார். நமது முன்னோரோடும் அவர் இருந்தார். மோசே தேவனிடமிருந்து ஜீவன் தரும் கட்டளைகளைப் பெற்றார். மோசே நமக்கு அந்தக் கட்டளைகளைக் கொடுத்தார். “ஆனால் நமது தந்தையர் மோசேக்குக் கீழ்ப்படிய மறுத்தனர். அவர்கள் அவரைத் தள்ளி ஒதுக்கினர். மீண்டும் எகிப்துக்குப் போகவேண்டுமென அவர்கள் விரும்பினர். நம் தந்தையர் ஆரோனை நோக்கி, ‘மோசே நம்மை எகிப்து நாட்டிற்கு வெளியே வழி நடத்தினார். ஆனால் அவருக்கு என்ன நேர்ந்தது என்பதை நாங்கள் அறியோம். எனவே எங்களுக்கு முன்னே போகவும் எங்களுக்கு வழிகாட்டவும் சில தெய்வங்களை உண்டாக்கும்’ என்றனர். எனவே மக்கள் கன்றுக் குட்டியைப் போன்ற ஒரு சிலை உண்டாக்கினர். பின் அவர்கள் அதற்குப் படைப்பதற்காகப் பொருட்களைக் கொண்டு வந்தனர். தங்கள் கைகளால் உண்டாக்கிய அதனைக் கண்டு மக்கள் மகிழ்ந்தனர்! ஆனால் தேவன் அவர்களுக்கு எதிராகத் திரும்பினார். வானத்திலுள்ள பொய்யான தெய்வங்களின் கூட்டத்தை வழிபடுவதிலிருந்து அவர்களைத் தடுப்பதை தேவன் நிறுத்திக்கொண்டார். தீர்க்கதரிசிகளின் நூலிலும் இவைதான் எழுதப்பட்டுள்ளன. தேவன் சொல்கிறார், “‘யூத மக்களாகிய நீங்கள் எனக்கு இரத்தபடைப்புக்களையோ பலிகளையோ 40 ஆண்டுகளாக வனாந்தரத்தில் கொண்டு வரவில்லை. உங்களோடு மோளேகிற்காக ஒரு கூடாரத்தையும் ரெம்பான் என்னும் நட்சத்திர உருவத்தையும் சுமந்து சென்றீர்கள். இந்த விக்கிரகங்களை நீங்கள் வழிபடுவதற்காக உருவாக்கினீர்கள். எனவே நான் உங்களை பாபிலோனுக்கு அப்பால் அனுப்புவேன்.’ “வனாந்தரத்தில் பரிசுத்தக் கூடாரம் நமது முன்னோரிடம் இருந்தது. இந்தக் கூடாரத்தை எப்படி உண்டாக்குவது என்று தேவன் மோசேயிடம் கூறினார். தேவன் காட்டிய திட்டத்தின்படியே மோசே அதை உண்டாக்கினார். பின்னால் பிற தேசங்களின் நிலங்களைக் கைப்பற்றும்படியாக யோசுவா நமது தந்தையரை வழி நடத்தினார். நமது மக்கள் அங்குச் சென்றபோது அங்கிருந்த மக்களை தேவன் வெளியேறும்படிச் செய்தார். நமது மக்கள் இப்புதிய நிலத்திற்குச் சென்றபொழுது, இதே கூடாரத்தைத் தம்முடன் எடுத்துச் சென்றனர். தாவீதின் காலம்வரைக்கும் நம் மக்கள் அதை வைத்திருந்தனர். தேவன் தாவீதைக் குறித்து மகிழ்ந்தார். தாவீது தேவனிடம் யாக்கோபின் தேவனாகிய அவருக்கு ஒரு வீட்டைக் கட்ட அனுமதி வேண்டினான். ஆனால் சாலமோன் தான் அந்த ஆலயத்தைக் கட்டினான். “ஆனால் உன்னதமானவர் மனிதர் தங்கள் கைகளால் கட்டும் வீடுகளில் வசிப்பதில்லை. தீர்க்கதரிசி இதனையே எழுதினார். “கர்த்தர் கூறுகிறார், ‘வானம் எனது சிம்மாசனம். பூமி எனது பாதங்கள் வைக்கும் இடம். எனக்காக எவ்விதமான வீட்டைக் கட்டப்போகிறீர்கள்? ஓய்வெடுக்க எனக்கு ஓர் இடம் தேவையில்லை. நான் இவை எல்லாவற்றையும் உண்டாக்கினேன் என்பதை நினைவுகூருங்கள்!’” என்றான். பின் ஸ்தேவான், “பிடிவாதமான யூதத் தலைவர்களே! நீங்கள் உங்கள் இருதயங்களை தேவனுக்குக் கொடுக்கவில்லை! நீங்கள் அவர் வார்த்தைகளுக்குச் செவிசாய்க்கமாட்டீர்கள்! பரிசுத்த ஆவியானவர் உங்களிடம் கூற முயல்வதை எப்போதும் எதிர்த்துக்கொண்டிருக்கிறீர்கள். உங்கள் தந்தையர் இதைச் செய்தார்கள். நீங்களும் அவர்களைப் போலவே இருக்கிறீர்கள்! உங்கள் தந்தையர் தங்கள் காலத்தில் வாழ்ந்த ஒவ்வொரு தீர்க்கதரிசியையும் புண்படுத்தினார்கள். அந்தத் தீர்க்கதரிசிகள் வெகு காலத்திற்கு முன்பே நீதியுள்ள ஒருவர் வருவார் எனக் கூறினார்கள். ஆனால் உங்கள் தந்தையர் அத்தீர்க்கதரிசிகளைக் கொன்றார்கள். இப்பொழுது நீங்கள் நீதியுள்ள அவருக்கு எதிராகத் திரும்பியுள்ளீர்கள். மோசேயின் சட்டத்தைப் பெற்றவர்கள் நீங்கள். தமது தேவதூதர்களின் மூலமாகக் தேவன் இந்தச் சட்டத்தை உங்களுக்குக் கொடுத்தார். ஆனால் நீங்களோ இந்தச் சட்டத்திற்குக் கீழ்ப்படிவதில்லை” என்றான். இவற்றை ஸ்தேவான் கூறுவதை யூதத் தலைவர்கள் கேட்டனர். அவர்கள் மிகுந்த சினம் அடைந்தனர். யூதத் தலைவர்கள் பித்துப் பிடித்தவர்களைப்போல், ஸ்தேவானை நோக்கிப் பற்களைக் கடித்தனர். ஆனால் ஸ்தேவானோ பரிசுத்த ஆவியால் நிரம்பியவனாக இருந்தான். ஸ்தேவான் வானத்தை அண்ணாந்து பார்த்தான். அவன் தேவனுடைய மகிமையைக் கண்டான். தேவனுடைய வலது பக்கத்தில் இயேசு நிற்பதைக் கண்டான். ஸ்தேவான், “பாருங்கள்! பரலோகம் திறந்திருப்பதை நான் பார்க்கிறேன். தேவனுடைய வலபக்கத்தில் மனித குமாரன் நிற்பதை நான் காண்கிறேன்!” என்றான். பின் யூத அதிகாரிகள் எல்லோரும் உரத்த குரலில் சத்தமிட்டார்கள். அவர்கள் கைகளால் தமது காதுகளைப் பொத்திக்கொண்டார்கள். அவர்கள் எல்லோரும் ஸ்தேவானை நோக்கி ஓடினர். அவர்கள் அவனை நகரத்திற்கு வெளியில் கொண்டு சென்று அவன் சாகும்வரை அவன் மீது கற்களை எறிந்தார்கள். ஸ்தேவானுக்கு எதிராகப் பொய் கூறியவர்கள் தங்களது மேலாடைகளை சவுல் என்னும் இளைஞனிடம் கொடுத்தார்கள். பின் அவர்கள் ஸ்தேவானின் மேல் கற்களை வீசினார்கள். ஆனால் ஸ்தேவான் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தான். அவன், “கர்த்தராகிய இயேசுவே, எனது ஆவியை ஏற்றுக்கொள்ளும்!” என்றான். அவன் முழங்காலில் நின்று, “கர்த்தரே! இந்தப் பாவத்திற்காக அவர்களைக் குற்றம் சாட்டாதிரும்!” என்று பிரார்த்தித்தான். இதைக் கூறிய பிறகு ஸ்தேவான் இறந்து போனான்.

அப்போஸ்தலர் 7:1-60 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பிரதான ஆசாரியன் அவனை நோக்கி: காரியம் இப்படியாயிருக்கிறது என்று கேட்டான். அதற்கு அவன்: சகோதரரே, பிதாக்களே, கேளுங்கள். நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் காரானூரிலே குடியிருக்கிறதற்கு முன்னமே மெசொப்பொத்தாமியா நாட்டிலே இருக்கும்போது மகிமையின் தேவன் அவனுக்குத் தரிசனமாகி: நீ உன் தேசத்தையும் உன் இனத்தையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்கு வா என்றார். அப்பொழுது அவன் கல்தேயர் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, காரானூரிலே வாசம்பண்ணினான். அவனுடைய தகப்பன் மரித்தபின்பு, அவ்விடத்தை விட்டு நீங்கள் இப்பொழுது குடியிருக்கிற இத்தேசத்திற்கு அவனை அழைத்துக்கொண்டுவந்து குடியிருக்கும்படி செய்தார். இதிலே ஒரு அடி நிலத்தையாகிலும் அவனுடைய கையாட்சிக்குக் கொடாமலிருக்கையில், அவனுக்குப் பிள்ளையில்லாதிருக்கும்போது: உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் இதைச் சுதந்தரமாகத் தருவேன் என்று அவனுக்கு வாக்குத்தத்தம்பண்ணினார். அந்தப்படி தேவன் அவனை நோக்கி: உன் சந்ததியார் அந்நிய தேசத்தில் சஞ்சரிப்பார்கள்; அத்தேசத்தார் அவர்களை அடிமைகளாக்கி, நானூறு வருஷம் துன்பப்படுத்துவார்கள். அவர்களை அடிமைப்படுத்தும் ஜனத்தையோ நான் ஆக்கினைக்குட்படுத்துவேன். அதற்குப்பின்பு அவர்கள் புறப்பட்டுவந்து இவ்விடத்திலே எனக்கு ஆராதனை செய்வார்கள் என்றார். மேலும் விருத்தசேதன உடன்படிக்கையையும் அவனுக்கு ஏற்படுத்தினார். அந்தப்படியே அவன் ஈசாக்கைப் பெற்றபோது, எட்டாம் நாளிலே அவனை விருத்தசேதனம் பண்ணினான். ஈசாக்கு யாக்கோபையும், யாக்கோபு பன்னிரண்டு கோத்திரப்பிதாக்களையும் பெற்றார்கள். அந்தக் கோத்திரப்பிதாக்கள் பொறாமைகொண்டு யோசேப்பை எகிப்துக்குக் கொண்டுபோகும்படியாக விற்றுப்போட்டார்கள். தேவனோ அவனுடனேகூட இருந்து, எல்லா உபத்திரவங்களினின்றும் அவனை விடுவித்து, எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் சமுகத்திலே அவனுக்குக் கிருபையையும் ஞானத்தையும் அருளினார்; அந்த ராஜா அவனை எகிப்துதேசத்திற்கும் தன் வீடனைத்திற்கும் அதிகாரியாக ஏற்படுத்தினான். பின்பு எகிப்து கானான் என்னும் தேசங்களிலெங்கும் பஞ்சமும் மிகுந்த வருத்தமும் உண்டாகி, நம்முடைய பிதாக்களுக்கு ஆகாரம் கிடையாமற்போயிற்று. அப்பொழுது எகிப்திலே தானியம் உண்டென்று யாக்கோபு கேள்விப்பட்டு, நம்முடைய பிதாக்களை முதலாந்தரம் அனுப்பினான். இரண்டாந்தரம் யோசேப்பு தன்னுடைய சகோதரருக்குத் தன்னைத் தெரியப்படுத்தினான். யோசேப்புடைய வம்சமும் பார்வோனுக்குத் தெரியவந்தது. பின்பு யோசேப்பு, தன்னுடைய தகப்பன் யாக்கோபும் தன்னுடைய இனத்தார் யாவருமாகிய, எழுபத்தைந்துபேரை அழைக்க அனுப்பினான். அந்தப்படி யாக்கோபு எகிப்துக்குப் போனான். அவனும் நம்முடைய பிதாக்களும் மரித்து, அங்கேயிருந்து சீகேமுக்குக் கொண்டுவரப்பட்டு, ஆபிரகாம் சீகேமின் தகப்பனாகிய ஏமோருடைய சந்ததியாரிடத்தில் ரொக்கக்கிரயத்துக்கு வாங்கியிருந்த கல்லறையில் வைக்கப்பட்டார்கள். ஆபிரகாமுக்கு தேவன் ஆணையிட்டு அருளின வாக்குத்தத்தம் நிறைவேறுங்காலம் சமீபித்தபோது, யோசேப்பை அறியாத வேறொரு ராஜா தோன்றின காலமளவும், ஜனங்கள் எகிப்திலே பலுகிப் பெருகினார்கள். அவன் நம்முடைய ஜனங்களை வஞ்சனையாய் நடப்பித்து, நம்முடைய பிதாக்களின் குழந்தைகள் உயிரோடிராதபடிக்கு அவர்கள் அவைகளை வெளியே போட்டுவிடும்படி செய்து, அவர்களை உபத்திரவப்படுத்தினான். அக்காலத்திலே மோசே பிறந்து, திவ்விய சவுந்தரியமுள்ளவனாயிருந்து, மூன்று மாதமளவும் தன் தகப்பன் வீட்டிலே வளர்க்கப்பட்டான். அவன் வெளியே போட்டுவிடப்பட்டபோது, பார்வோனுடைய குமாரத்தி அவனை எடுத்துத் தனக்குப் பிள்ளையாக வளர்த்தாள். மோசே எகிப்தியருடைய சகல சாஸ்திரங்களிலும் கற்பிக்கப்பட்டு, வாக்கிலும் செய்கையிலும் வல்லவனானான். அவனுக்கு நாற்பது வயதானபோது, இஸ்ரவேல் புத்திரராகிய தன்னுடைய சகோதரரைக் கண்டு சந்திக்கும்படி அவனுடைய இருதயத்தில் எண்ணமுண்டாயிற்று. அப்பொழுது அவர்களில் ஒருவன் அநியாயமாய் நடத்தப்படுகிறதை அவன் கண்டு, அவனுக்குத் துணைநின்று, எகிப்தியனை வெட்டி, துன்பப்பட்டவனுக்கு நியாயஞ்செய்தான். தன்னுடைய கையினாலே தேவன் தங்களுக்கு இரட்சிப்பைத் தருவாரென்பதைத் தன்னுடைய சகோதரர் அறிந்து கொள்வார்களென்று அவன் நினைத்தான்; அவர்களோ அதை அறியவில்லை. மறுநாளிலே சண்டைபண்ணிக்கொண்டிருக்கிற இரண்டுபேருக்கு அவன் எதிர்ப்பட்டு: மனுஷரே, நீங்கள் சகோதரராயிருக்கிறீர்கள்; ஒருவருக்கொருவர் அநியாயஞ்செய்கிறதென்ன என்று, அவர்களைச் சமாதானப்படுத்தும்படி பேசினான். பிறனுக்கு அநியாயஞ்செய்தவன் அவனைப் பிடித்துத் தள்ளி: எங்கள்மேல் அதிகாரியாகவும், நியாயாதிபதியாகவும் உன்னை ஏற்படுத்தினவன் யார்? நேற்று நீ அந்த எகிப்தியனைக் கொன்றதுபோல என்னையும் கொன்றுபோட மனதாயிருக்கிறாயோ என்றான். இந்த வார்த்தையினிமித்தம் மோசே ஓடிப்போய், மீதியான் தேசத்திலே சஞ்சரித்துக்கொண்டிருந்தான்; அங்கே இருக்கும்போது அவனுக்கு இரண்டு குமாரர்கள் பிறந்தார்கள். நாற்பது வருஷம் சென்றபின்பு, சீனாய்மலையின் வனாந்தரத்திலே கர்த்தருடைய தூதனானவர் முட்செடி எரிகிற அக்கினிஜூவாலையிலே அவனுக்குத் தரிசனமானார். மோசே அந்தத் தரிசனத்தைக் கண்டு, அதிசயப்பட்டு, அதை உற்றுப்பார்க்கும்படி சமீபித்துவருகையில்: நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாயிருக்கிறேன் என்று கர்த்தர் திருவுளம்பற்றின சத்தம் அவனுக்கு உண்டாயிற்று, அப்பொழுது மோசே நடுக்கமடைந்து, உற்றுப்பார்க்கத் துணியாமலிருந்தான். பின்னும் கர்த்தர் அவனை நோக்கி: உன் பாதங்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமியாயிருக்கிறது. எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, அவர்கள் பெருமூச்சைக்கேட்டு, அவர்களை விடுவிக்கும்படி இறங்கினேன்; ஆகையால், நீ வா, நான் உன்னை எகிப்திற்கு அனுப்புவேன் என்றார். உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யார் என்று சொல்லி அவர்கள் மறுதலித்திருந்த இந்த மோசேயைத்தானே தேவன், முட்செடியில் அவனுக்குத் தரிசனமான தூதனாலே தலைவனாகவும் மீட்பனாகவும் அனுப்பினார். இவனே அவர்களை அங்கேயிருந்து அழைத்துக்கொண்டுவந்து, எகிப்து தேசத்திலேயும் சிவந்த சமுத்திரத்திலேயும், நாற்பது வருஷகாலமாய் வனாந்தரத்திலேயும், அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான். இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்கள் சகோதரரிலிருந்து என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக எழும்பப்பண்ணுவார், அவருக்குச் செவிகொடுப்பீர்களாக என்று சொன்னவன் இந்த மோசேயே. சீனாய்மலையில் தன்னுடனே பேசின தூதனோடும் நம்முடைய பிதாக்களோடுங்கூட வனாந்தரத்திலே சபைக்குள்ளிருந்தவனும், நமக்குக் கொடுக்கும்படி ஜீவவாக்கியங்களைப் பெற்றவனும் இவனே. இவனுக்கு நம்முடைய பிதாக்கள் கீழ்ப்படிய மனதாயிராமல், இவனைத் தள்ளிவிட்டு, தங்கள் இருதயங்களில் எகிப்துக்குத் திரும்பி, ஆரோனை நோக்கி: எகிப்து தேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம்; ஆதலால் எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்கு உண்டுபண்ணும் என்று சொல்லி; அந்நாட்களில் ஒரு கன்றுக்குட்டியை உண்டுபண்ணி, அந்த விக்கிரகத்திற்குப் பலியிட்டு, தங்கள் கையின் கிரியைகளில் களிகூர்ந்தார்கள். அப்பொழுது தேவன் அவர்களை விட்டு விலகி, வானசேனைக்கு ஆராதனை செய்ய அவர்களை ஒப்புக்கொடுத்தார். அதைக்குறித்து: இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் வனாந்தரத்திலிருந்த நாற்பது வருஷம்வரையில் காணிக்கைகளையும் பலிகளையும் எனக்குச் செலுத்தினீர்களோ என்றும், பணிந்துகொள்ளும்படி நீங்கள் உண்டாக்கின சொரூபங்களாகிய மோளோகினுடைய கூடாரத்தையும், உங்கள் தேவனாகிய ரெம்பான் என்னும் நட்சத்திர சொரூபத்தையும் சுமந்தீர்களே; ஆகையால் உங்களைப் பாபிலோனுக்கு அப்புறத்திலே குடிபோகப்பண்ணுவேன் என்றும், தீர்க்கதரிசிகளின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறதே. மேலும் நீ பார்த்த மாதிரியின்படியே சாட்சியின் கூடாரத்தை உண்டுபண்ணுவாயாக என்று மோசேயுடனே பேசினவர் கட்டளையிட்டபிரகாரமாக, அந்தக் கூடாரம் வனாந்தரத்திலே நம்முடைய பிதாக்களோடு இருந்தது. மேலும், யோசுவாவுடனேகூட நம்முடைய பிதாக்கள் அதைப் பெற்றுக்கொண்டு, தேவன் அவர்களுக்கு முன்பாகத் துரத்திவிட்ட புறஜாதிகளுடைய தேசத்தை அவர்கள் கட்டிக்கொள்ளுகையில், அதை அந்த தேசத்தில் கொண்டு வந்து தாவீதின் நாள்வரைக்கும் வைத்திருந்தார்கள். இவன் தேவனிடத்தில் தயவு பெற்றபடியினால், யாக்கோபின் தேவனுக்கு ஒரு வாசஸ்தலத்தைத் தான் கட்டவேண்டுமென்று விண்ணப்பம்பண்ணினான். சாலொமோனோ அவருக்கு ஆலயத்தைக் கட்டினான். ஆகிலும் உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார். வானம் எனக்குச் சிங்காசனமும் பூமி எனக்குப் பாதபடியுமாயிருக்கிறது; எனக்காக நீங்கள் எப்படிப்பட்ட வீட்டைக் கட்டுவீர்கள்; நான் தங்கியிருக்கத்தக்க ஸ்தலம் எது; இவைகள் எல்லாவற்றையும் என்னுடைய கரம் உண்டாக்கவில்லையா என்று கர்த்தர் உரைக்கிறார் என்று தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே. வணங்காக் கழுத்துள்ளவர்களே, இருதயத்திலும் செவிகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே, உங்கள் பிதாக்களைப்போல நீங்களும் பரிசுத்த ஆவிக்கு எப்பொழுதும் எதிர்த்துநிற்கிறீர்கள் தீர்க்கதரிசிகளில் யாரை உங்கள் பிதாக்கள் துன்பப்படுத்தாமலிருந்தார்கள்? நீதிபரருடைய வருகையை முன்னறிவித்தவர்களையும் அவர்கள் கொலைசெய்தார்கள். இப்பொழுது நீங்கள் அவருக்குத் துரோகிகளும் அவரைக் கொலைசெய்த பாதகருமாயிருக்கிறீர்கள். தேவதூதரைக்கொண்டு நீங்கள் நியாயப்பிரமாணத்தைப் பெற்றிருந்தும், அதைக் கைக்கொள்ளாமற்போனீர்கள் என்றான். இவைகளை அவர்கள் கேட்டபொழுது. மூர்க்கமடைந்து, அவனைப் பார்த்துப் பல்லைக் கடித்தார்கள். அவன் பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவனாய், வானத்தை அண்ணாந்துபார்த்து, தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலதுபாரிசத்தில் இயேசுவானவர் நிற்கிறதையும் கண்டு: அதோ வானங்கள் திறந்திருக்கிறதையும், மனுஷகுமாரன் தேவனுடைய வலதுபாரிசத்தில் நிற்கிறதையும் காண்கிறேன் என்றான். அப்பொழுது அவர்கள் உரத்த சத்தமாய்க் கூக்குரலிட்டுத் தங்கள் காதுகளை அடைத்துக்கொண்டு, ஒருமனப்பட்டு அவன்மேல் பாய்ந்து, அவனை நகரத்துக்குப் புறம்பே தள்ளி, அவனைக் கல்லெறிந்தார்கள். சாட்சிக்காரர் தங்கள் வஸ்திரங்களைக் கழற்றி, சவுல் என்னப்பட்ட ஒரு வாலிபனுடைய பாதத்தினருகே வைத்தார்கள். அப்பொழுது: கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும் என்று ஸ்தேவான் தொழுதுகொள்ளுகையில், அவனைக் கல்லெறிந்தார்கள். அவனோ, முழங்காற்படியிட்டு: ஆண்டவரே, இவர்கள்மேல் இந்தப்பாவத்தைச் சுமத்தாதிரும் என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான். இப்படிச் சொல்லி, நித்திரையடைந்தான்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்