அப்போஸ்தலர் 23:1-15

அப்போஸ்தலர் 23:1-15 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பவுல் ஆலோசனைச் சங்கத்திலுள்ளவர்களை நேருக்கு நேராகப் பார்த்து, “சகோதரரே, இன்றுவரை ஒரு நல்ல மனசாட்சியுடனே நான் இறைவனுக்குரிய எனது கடமையை நிறைவேற்றியிருக்கிறேன்” என்றான். பவுல் இதைச் சொன்னபோது, பிரதான ஆசாரியனான அனனியா, பவுலின் அருகில் நின்றவர்களைப் பார்த்து, அவனுடைய வாயிலே அடிக்கும்படி உத்தரவிட்டான். அப்பொழுது பவுல் அவனிடம், “வெள்ளையடிக்கப்பட்ட சுவரே, இறைவன் உம்மை அடிப்பார்! மோசேயின் சட்டத்தின்படி என்னை நியாயம் விசாரிப்பதற்கு, நீர் அங்கே உட்கார்ந்திருக்கிறீர். ஆனால் என்னை அடிக்கும்படி கட்டளையிட்டு, நீரே மோசேயின் சட்டத்தை மீறுகிறீரே!” என்றான். அப்பொழுது பவுலின் அருகே நின்றவர்கள், “இறைவனுடைய பிரதான ஆசாரியனை அவமதிக்கத் துணிகிறாயா?” என்றார்கள். அதற்குப் பவுல், “சகோதரரே, அவர் பிரதான ஆசாரியன் என்று எனக்குத் தெரியாது; ஏனெனில், ‘உனது மக்களின் ஆளுநனைக் குறித்துத் தீமையாய்ப் பேசவேண்டாம்’ என்று எழுதியிருக்கிறதே” என்றான். பின்பு பவுல், அவர்களில் சிலர் சதுசேயர் என்றும், மற்றவர்கள் பரிசேயர் என்றும் அறிந்து, நீதிமன்றத்தில் உள்ளவர்களைப் பார்த்துச் சொன்னதாவது: “என் சகோதரரே, நான் ஒரு பரிசேயன், பரிசேயனின் மகன். இறந்தவர்கள் உயிர்த்தெழுவார்கள் என்ற எனது எதிர்பார்ப்பின் நிமித்தமே, நான் இங்கு விசாரிக்கப்படும்படி நிற்கிறேன்” என்றான். பவுல் இதைச் சொன்னபோது, பரிசேயருக்கும் சதுசேயருக்கும் இடையில் விவாதம் மூண்டது. அங்கு கூடியிருந்தவர்கள் இரண்டாகப் பிரிந்தனர். சதுசேயர் இறந்தவர் உயிர்த்தெழுவதில்லை என்றும், இறைத்தூதரோ ஆவிகளோ இல்லையென்று சொல்லுகிறார்கள். ஆனால் பரிசேயரோ, இவைகளெல்லாம் உண்டென்று ஏற்றுக்கொள்கிறார்கள். அங்கு ஒரு பெரிய குழப்பம் ஏற்பட்டது. பரிசேயராய் இருந்த சில மோசேயின் சட்ட ஆசிரியர்கள் எழுந்து நின்று, மிகக் கடுமையாக விவாதித்தார்கள். அவர்கள், “இவனிடத்தில் நாங்கள் குற்றம் ஒன்றையும் காணவில்லை, ஒருவேளை ஒரு ஆவியோ, ஒரு இறைத்தூதனோ அவனுடனே பேசியிருக்கலாம்” என்றார்கள். விவாதம் வன்முறையானபோது, பவுலைச் சின்னாபின்னமாக்கி விடுவார்களோ என்று படைத்தளபதி பயந்தான். அவன் அவர்களிடமிருந்து பவுலை விடுவித்து முகாமுக்குக் கொண்டுவரும்படி படைவீரருக்கு உத்தரவிட்டான். மறுநாள் இரவிலே, கர்த்தர் பவுலின் அருகே நின்று, “நீ தைரியமாய் இரு! நீ எருசலேமில் என்னைக்குறித்து சாட்சி கொடுத்ததுபோல, ரோம் நகரத்திலும் என்னைக்குறித்து சாட்சி கொடுக்கவேண்டும்” என்றார். மறுநாள் காலையிலேயே சில யூதர்கள் ஒன்றுகூடி, ஒரு சூழ்ச்சி செய்தார்கள். தாங்கள் பவுலைக் கொலைசெய்யும் வரைக்கும் சாப்பிடுவதோ, குடிப்பதோ இல்லையென்று சபதமும் எடுத்துக்கொண்டார்கள். நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் இந்த சூழ்ச்சியில் ஈடுபட்டார்கள். அவர்கள் தலைமை ஆசாரியர்களிடமும், யூதரின் தலைவர்களிடமும் சென்று, “நாங்கள் பவுலைக் கொலைசெய்யும்வரை, எதையும் சாப்பிடுவதில்லை என்று சபதம் செய்திருக்கிறோம். இப்பொழுது நீங்களும், ஆலோசனைச் சங்கத்தைச் சேர்ந்தவர்களும், பவுலை உங்களுக்கு முன்பாகக் கொண்டுவரும்படி படைத்தளபதியிடம் முறையிடுங்கள். அவனுடைய வழக்கை இன்னும் தெளிவாய் விசாரிக்கப் போவதாக முயற்சிசெய்ய வேண்டும். அவன் இங்கே வருவதற்கு முன்பதாகவே, அவனைக் கொன்றுவிட நாங்கள் ஆயத்தமாக இருப்போம்” என்றார்கள்.

அப்போஸ்தலர் 23:1-15 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பவுல் ஆலோசனைச் சங்கத்தினரை உற்றுப்பார்த்து: சகோதரர்களே, இந்தநாள்வரை எல்லா விஷயங்களிலும் நான் நல்மனச்சாட்சியோடு தேவனுக்குமுன்பாக நடந்துவந்தேன் என்று சொன்னான். அப்பொழுது பிரதான ஆசாரியனாகிய அனனியா அவனுக்கு அருகில் நின்றவர்களைப் பார்த்து: இவன் வாயில் அடியுங்கள் என்று கட்டளையிட்டான். அப்பொழுது பவுல் அவனைப் பார்த்து: வெள்ளையடிக்கப்பட்ட சுவரே, தேவன் உம்மை அடிப்பார்; நியாயப்பிரமாணத்தின்படி என்னை நியாயம் விசாரிக்க உட்கார்ந்திருக்கிற நீர் நியாயபிரமாணத்திற்கு விரோதமாக என்னை அடிக்கச்சொல்லலாமா என்றான். அருகில் நின்றவர்கள்: தேவனுடைய பிரதான ஆசாரியரை அவமதித்துப் பேசலாமா என்றார்கள். அதற்குப் பவுல்: சகோதரர்களே, இவர் பிரதான ஆசாரியரென்று எனக்குத் தெரியாது; உன் மக்களின் தலைவரை குற்றம் சொல்லாதே” என்று எழுதியிருக்கிறதே என்றான். பின்பு அவர்களில், சதுசேயர்கள் ஒரு பகுதியும் பரிசேயர்கள் ஒரு பகுதியுமாக இருக்கிறார்களென்று பவுல் அறிந்து: சகோதரர்களே, நான் பரிசேயனும் பரிசேயனுடைய மகனுமாக இருக்கிறேன். மரித்தவர்களுடைய உயிர்த்தெழுதலைப்பற்றிய நம்பிக்கையைக்குறித்து நான் நியாயம் விசாரிக்கப்படுகிறேன் என்று ஆலோசனைச் சங்கத்திலே சத்தமிட்டுச் சொன்னான். அவன் இப்படிச் சொன்னபோது, பரிசேயர்களுக்கும் சதுசேயர்களுக்கும் வாக்குவாதமுண்டாகி; கூட்டம் இரண்டாகப் பிரிந்தது. ஏனென்றால், சதுசேயர்கள் உயிர்த்தெழுதல் இல்லையென்றும், தேவதூதனும் ஆவியும் இல்லையென்றும் சொல்லுகிறார்கள். பரிசேயர்களோ அவ்விரண்டும் உண்டென்று ஒப்புக்கொள்ளுகிறார்கள். இதனாலே மிகுந்த இரைச்சல் உண்டானது. பரிசேய சமயத்தாரான வேதபண்டிதர்களில் சிலர் எழுந்து: இந்த மனிதனிடத்தில் ஒரு தவறையும் காணவில்லை; ஒரு ஆவி அல்லது ஒரு தேவதூதன் இவனுடனே பேசினதுண்டானால், நாம் தேவனுடனே சண்டையிடுவது தகாது என்று வாதாடினார்கள். அதிகமாக கலவரம் உண்டானபோது, பவுல் அவர்களால் பீறுண்டுபோவானென்று ரோம அதிபதி பயந்து, போர்வீரர்கள்போய், அவனை அவர்கள் நடுவிலிருந்து அகற்றி கோட்டைக்குக் கொண்டுபோகும்படி கட்டளையிட்டான். அன்று இரவிலே கர்த்தர் பவுலின் அருகே நின்று: பவுலே, தைரியமாக இரு; நீ என்னைக்குறித்து எருசலேமிலே சாட்சிகொடுத்ததுபோல ரோமாவிலும் சாட்சி கொடுக்கவேண்டும் என்றார். விடியற்காலமானபோது, யூதர்களில் சிலர் கூடி, தாங்கள் பவுலைக் கொலைசெய்யும்வரைக்கும் புசிப்பதும் குடிப்பதுமில்லையென்று சபதம்பண்ணிக்கொண்டார்கள். இப்படிச் சபதம்பண்ணிக்கொண்டவர்கள் நாற்பதுபேருக்கு அதிகமாக இருந்தார்கள். அவர்கள் பிரதான ஆசாரியர்களிடத்திலும் மூப்பர்களிடத்திலும்போய்: நாங்கள் பவுலைக் கொலைசெய்யும்வரைக்கும் ஒன்றும் புசிப்பதில்லையென்று உறுதியான சபதம் செய்துகொண்டோம். ஆகவே, நீங்கள் ஆலோசனைச் சங்கத்தினரோடு கூடப்போய், அவனுடைய காரியத்தை மிக சரியாக விசாரிக்க விருப்பமுள்ளவர்கள்போல ரோம அதிபதிக்குக் காண்பித்து, அவர் நாளைக்கு அவனை உங்களிடம் அழைத்துக்கொண்டுவரும்படி அவரிடத்தில் கேட்பீர்களாக. அவன் அருகில் வருகிறதற்குள்ளே நாங்கள் அவனைக் கொலைசெய்ய ஆயத்தமாக இருப்போம் என்றார்கள்.

அப்போஸ்தலர் 23:1-15 பரிசுத்த பைபிள் (TAERV)

யூத சங்கக் கூட்டத்தினரைப் பார்த்துப் பவுல், “சகோதரர்களே! தேவனுக்கு முன்பாக நல்ல வகையில் என் வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறேன். சரியென்று நான் நினைத்ததையே எப்போதும் செய்துகொண்டிருக்கிறேன்” என்றான். தலைமை ஆசாரியனான அனனியா அங்கிருந்தான். பவுல் கூறுவதைக் கேட்ட அனனியா, பவுலின் அருகே நின்ற மனிதரை நோக்கிப் பவுலின் வாயில் அடிக்குமாறு கூறினான். பவுல் அனனியாவைப் பார்த்து, “தேவன் உன்னையும் அடிப்பார்! அழுக்கான சுவர் வெள்ளையடிக்கப்பட்டது போன்று நீ காணப்படுகிறாய்! நீ அங்கு அமர்ந்து மோசேயின் சட்டப்படி என்னை நியாயந்தீர்க்கிறாய். ஆனால் என்னை அடிக்குமாறு அவர்களிடம் கூறிக்கொண்டிருக்கிறாய். அது மோசேயின் சட்டத்திற்கு எதிரானது” என்றான். பவுலின் அருகில் நின்றிருந்த மனிதர்கள் அவனை நோக்கி, “தேவனுடைய தலைமைஆசாரியனிடம் நீ இவ்வாறு பேசக்கூடாது. நீ அவரை அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறாய்!” என்றனர். பவுல், “சகோதரர்களே, இம்மனிதன் தலைமை ஆசாரியன் என்பது எனக்குத் தெரியாது. வேதவாக்கியங்களில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது, ‘உன் மக்களின் தலைவர்களைக் குறித்துத் தீயவற்றைக் கூறலாகாது’ என்று எழுதப்பட்டள்ளது” என்றான். அக்கூட்டத்தில் சிலர் சதுசேயராகவும், சிலர் பரிசேயராகவும் இருந்தார்கள். எனவே பவுலுக்கு ஒரு யோசனை ஏற்பட்டது. அவன் அவர்களிடம் உரக்க, “எனது சகோதரரே, நான் ஒரு பரிசேயன். எனது தந்தையும் ஒரு பரிசேயர். மரணத்திலிருந்து மக்கள் எழுவர் என்று நான் நம்புவதால் என்னை இங்கு நியாயந்தீர்க்கின்றனர்!” என்றான். பவுல் இதைக் கூறியதும், சதுசேயருக்கும் பரிசேயருக்கும் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. குழுவில் ஒரு பிரிவினை ஏற்பட்டது. (மக்கள் இறந்தபிறகு, மீண்டும் வாழ இயலாது என்று சதுசேயர் நம்புகிறார்கள். தேவதூதர்களோ, ஆவிகளோ இருப்பதில்லை என்று சதுசேயர்கள் போதிக்கிறார்கள். ஆனால் பரிசேயர்கள் இவற்றையெல்லாம் நம்புகிறார்கள்.) எல்லா யூதர்களும் உரக்கச் சத்தமிட ஆரம்பித்தனர். பரிசேயரான சில வேதபாரகர்கள் எழுந்து நின்று, இவ்வாறு விவாதித்தனர், “நாங்கள் இந்த மனிதனிடம் எந்தக் குற்றத்தையும் காணவில்லை. தமஸ்குவுக்கு வரும் வழியில் தேவதூதனோ ஆவியோ அவனோடு பேசியிருக்க வேண்டும்!” என்றனர். விவாதம் சண்டையாக மாறிற்று. யூதர்கள் பவுலை நார் நாராகக் கிழித்து விடுவார்கள் என்று அதிகாரி அஞ்சினான். எனவே அவன் கீழே சென்று யூதர்களிடமிருந்து பவுலை விலக்கி அழைத்து வந்து படைக் கூடத்தில் வைத்திருக்குமாறு வீரர்களுக்குக் கட்டளையிட்டான். மறுநாள் இரவு கர்த்தர் பவுலின் அருகே வந்து நின்றார். அவர், “தைரியமாக இரு. என்னைக் குறித்து எருசலேமின் மக்களுக்கு நீ கூறியிருக்கிறாய். நீ ரோமுக்கும் சென்று அங்குள்ள மக்களுக்கு என்னைக் குறித்துச் சொல்லவேண்டும்” என்றார். மறுநாள் காலையில் சில யூதர்கள் ஒரு திட்டம் வகுத்தனர். அவர்கள் பவுலைக் கொல்ல விரும்பினர். அவர்கள் தங்களுக்குள் பவுலைக் கொல்லும் மட்டும் உண்பதோ, பருகுவதோ இல்லை என்று ஒரு சபதம் செய்துகொண்டனர். நாற்பது யூதர்களுக்கு மேலாக இச்சதித்திட்டத்தை வகுத்தனர். இந்த யூதர்கள் தலைமை ஆசாரியரிடமும் முதிய யூதத் தலைவர்களிடமும் சென்று பேசினர். யூதர்கள், “நாங்கள் எங்களுக்குள் ஒரு சபதம் செய்துள்ளோம். பவுலைக் கொல்லும் மட்டும் உண்பதோ, உறங்குவதோ இல்லை என்று தீர்மானமாகச் சபதம் பூண்டுள்ளோம்! எனவே நாங்கள் செய்ய விரும்புவது இதுவே, நீங்களும் யூதக் குழுவைச் சேர்ந்த எல்லாத் தலைவர்களும் போர் அதிகாரிக்கு ஒரு செய்தியை அனுப்புங்கள். பவுலை உங்களிடம் அனுப்புமாறு அவ்வதிகாரிக்குக் கூறுங்கள். பவுலிடம் இன்னும் அதிகமான கேள்விகள் கேட்க விரும்புவதாக அவ்வதிகாரிக்குச் சொல்லுங்கள். அவன் இங்கு வரும் வழியில் பவுலைக் கொல்வதற்காக நாங்கள் காத்துக்கொண்டிருப்போம்” என்றனர்.

அப்போஸ்தலர் 23:1-15 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பவுல் ஆலோசனைச் சங்கத்தாரை உற்றுப்பார்த்து: சகோதரரே, இந்நாள்வரைக்கும் எல்லா விஷயங்களிலும் நான் நல்மனச்சாட்சியோடே தேவனுக்குமுன்பாக நடந்துவந்தேன் என்று சொன்னான். அப்பொழுது பிரதானஆசாரியனாகிய அனனியா அவனுக்குச் சமீபமாய் நின்றவர்களை நோக்கி: இவன் வாயில் அடியுங்கள் என்று கட்டளையிட்டான். அப்பொழுது பவுல் அவனைப்பார்த்து: வெள்ளையடிக்கப்பட்ட சுவரே, தேவன் உம்மை அடிப்பார்; நியாயப்பிரமாணத்தின்படி என்னை நியாயம் விசாரிக்கிறவராய் உட்கார்ந்திருக்கிற நீர் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாய் என்னை அடிக்கச் சொல்லலாமா என்றான். சமீபத்திலே நின்றவர்கள்: தேவனுடைய பிரதானஆசாரியரை வைகிறாயா என்றார்கள். அதற்குப் பவுல்: சகோதரரே, இவர் பிரதானஆசாரியரென்று எனக்குத் தெரியாது; உன் ஜனத்தின் அதிபதியைத் தீது சொல்லாயாக என்று எழுதியிருக்கிறதே என்றான். பின்பு அவர்களில், சதுசேயர் ஒரு பங்கும் பரிசேயர் ஒரு பங்குமாயிருக்கிறார்களென்று பவுல் அறிந்து: சகோதரரே, நான் பரிசேயனும் பரிசேயனுடைய மகனுமாயிருக்கிறேன். மரித்தோருடைய உயிர்த்தெழுதலைப்பற்றிய நம்பிக்கையைக் குறித்து நான் நியாயம் விசாரிக்கப்படுகிறேன் என்று ஆலோசனைச் சங்கத்திலே சத்தமிட்டுச் சொன்னான். அவன் இப்படிச் சொன்னபோது, பரிசேயருக்கும் சதுசேயருக்கும் வாக்குவாதமுண்டாயிற்று; கூட்டம் இரண்டாகப் பிரிந்தது. என்னத்தினாலென்றால், சதுசேயர் உயிர்த்தெழுதல் இல்லையென்றும், தேவதூதனும் ஆவியும் இல்லையென்றும் சொல்லுகிறார்கள். பரிசேயரோ அவ்விரண்டும் உண்டென்று ஒப்புக்கொள்ளுகிறார்கள். ஆகையால் மிகுந்த கூக்குரல் உண்டாயிற்று. பரிசேய சமயத்தாரான வேதபாரகரில் சிலர் எழுந்து: இந்த மனுஷனிடத்தில் ஒரு பொல்லாங்கையும் காணோம்; ஒரு ஆவி அல்லது ஒரு தேவதூதன் இவனுடனே பேசினதுண்டானால், நாம் தேவனுடனே போர்செய்வது தகாது என்று வாதாடினார்கள், மிகுந்த கலகம் உண்டானபோது, பவுல் அவர்களால் பீறுண்டுபோவானென்று சேனாதிபதி பயந்து, போர்ச்சேவகர் போய், அவனை அவர்கள் நடுவிலிருந்து இழுத்துக் கோட்டைக்குக் கொண்டுபோகும்படி கட்டளையிட்டான். அன்று இராத்திரியிலே கர்த்தர் பவுலின் அருகே நின்று: பவுலே, திடன்கொள்; நீ என்னைக்குறித்து எருசலேமிலே சாட்சிகொடுத்ததுபோல ரோமாவிலும் சாட்சிகொடுக்கவேண்டும் என்றார். விடியற்காலமானபோது, யூதரில் சிலர் ஒருமித்து, தாங்கள் பவுலைக் கொலைசெய்யுமளவும் புசிப்பதுமில்லை குடிப்பதுமில்லையென்று சபதம்பண்ணிக்கொண்டார்கள். இப்படிக் கட்டுப்பாடுபண்ணிக்கொண்டவர்கள் நாற்பதுபேருக்கு அதிகமாயிருந்தார்கள். அவர்கள் பிரதானஆசாரியர்களிடத்திலும் மூப்பர்களிடத்திலும் போய்: நாங்கள் பவுலைக் கொலைசெய்யுமளவும் ஒன்றும் புசிப்பதில்லையென்று உறுதியான சபதம்பண்ணிக்கொண்டோம். ஆனபடியினால் நீங்கள் ஆலோசனைச் சங்கத்தாரோடே கூடப்போய், அவனுடைய காரியத்தை அதிகத் திட்டமாய் விசாரிக்க மனதுள்ளவர்கள்போலச் சேனாதிபதிக்குக் காண்பித்து, அவர் நாளைக்கு அவனை உங்களிடத்தில் கூட்டிக்கொண்டுவரும்படி அவரிடத்தில் கேட்பீர்களாக. அவன் கிட்டவருகிறதற்குள்ளே நாங்கள் அவனைக் கொலைசெய்ய ஆயத்தமாயிருப்போம் என்றார்கள்.