யூத சங்கக் கூட்டத்தினரைப் பார்த்துப் பவுல், “சகோதரர்களே! தேவனுக்கு முன்பாக நல்ல வகையில் என் வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறேன். சரியென்று நான் நினைத்ததையே எப்போதும் செய்துகொண்டிருக்கிறேன்” என்றான். தலைமை ஆசாரியனான அனனியா அங்கிருந்தான். பவுல் கூறுவதைக் கேட்ட அனனியா, பவுலின் அருகே நின்ற மனிதரை நோக்கிப் பவுலின் வாயில் அடிக்குமாறு கூறினான். பவுல் அனனியாவைப் பார்த்து, “தேவன் உன்னையும் அடிப்பார்! அழுக்கான சுவர் வெள்ளையடிக்கப்பட்டது போன்று நீ காணப்படுகிறாய்! நீ அங்கு அமர்ந்து மோசேயின் சட்டப்படி என்னை நியாயந்தீர்க்கிறாய். ஆனால் என்னை அடிக்குமாறு அவர்களிடம் கூறிக்கொண்டிருக்கிறாய். அது மோசேயின் சட்டத்திற்கு எதிரானது” என்றான். பவுலின் அருகில் நின்றிருந்த மனிதர்கள் அவனை நோக்கி, “தேவனுடைய தலைமைஆசாரியனிடம் நீ இவ்வாறு பேசக்கூடாது. நீ அவரை அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறாய்!” என்றனர். பவுல், “சகோதரர்களே, இம்மனிதன் தலைமை ஆசாரியன் என்பது எனக்குத் தெரியாது. வேதவாக்கியங்களில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது, ‘உன் மக்களின் தலைவர்களைக் குறித்துத் தீயவற்றைக் கூறலாகாது’ என்று எழுதப்பட்டள்ளது” என்றான். அக்கூட்டத்தில் சிலர் சதுசேயராகவும், சிலர் பரிசேயராகவும் இருந்தார்கள். எனவே பவுலுக்கு ஒரு யோசனை ஏற்பட்டது. அவன் அவர்களிடம் உரக்க, “எனது சகோதரரே, நான் ஒரு பரிசேயன். எனது தந்தையும் ஒரு பரிசேயர். மரணத்திலிருந்து மக்கள் எழுவர் என்று நான் நம்புவதால் என்னை இங்கு நியாயந்தீர்க்கின்றனர்!” என்றான். பவுல் இதைக் கூறியதும், சதுசேயருக்கும் பரிசேயருக்கும் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. குழுவில் ஒரு பிரிவினை ஏற்பட்டது. (மக்கள் இறந்தபிறகு, மீண்டும் வாழ இயலாது என்று சதுசேயர் நம்புகிறார்கள். தேவதூதர்களோ, ஆவிகளோ இருப்பதில்லை என்று சதுசேயர்கள் போதிக்கிறார்கள். ஆனால் பரிசேயர்கள் இவற்றையெல்லாம் நம்புகிறார்கள்.) எல்லா யூதர்களும் உரக்கச் சத்தமிட ஆரம்பித்தனர். பரிசேயரான சில வேதபாரகர்கள் எழுந்து நின்று, இவ்வாறு விவாதித்தனர், “நாங்கள் இந்த மனிதனிடம் எந்தக் குற்றத்தையும் காணவில்லை. தமஸ்குவுக்கு வரும் வழியில் தேவதூதனோ ஆவியோ அவனோடு பேசியிருக்க வேண்டும்!” என்றனர். விவாதம் சண்டையாக மாறிற்று. யூதர்கள் பவுலை நார் நாராகக் கிழித்து விடுவார்கள் என்று அதிகாரி அஞ்சினான். எனவே அவன் கீழே சென்று யூதர்களிடமிருந்து பவுலை விலக்கி அழைத்து வந்து படைக் கூடத்தில் வைத்திருக்குமாறு வீரர்களுக்குக் கட்டளையிட்டான். மறுநாள் இரவு கர்த்தர் பவுலின் அருகே வந்து நின்றார். அவர், “தைரியமாக இரு. என்னைக் குறித்து எருசலேமின் மக்களுக்கு நீ கூறியிருக்கிறாய். நீ ரோமுக்கும் சென்று அங்குள்ள மக்களுக்கு என்னைக் குறித்துச் சொல்லவேண்டும்” என்றார். மறுநாள் காலையில் சில யூதர்கள் ஒரு திட்டம் வகுத்தனர். அவர்கள் பவுலைக் கொல்ல விரும்பினர். அவர்கள் தங்களுக்குள் பவுலைக் கொல்லும் மட்டும் உண்பதோ, பருகுவதோ இல்லை என்று ஒரு சபதம் செய்துகொண்டனர். நாற்பது யூதர்களுக்கு மேலாக இச்சதித்திட்டத்தை வகுத்தனர். இந்த யூதர்கள் தலைமை ஆசாரியரிடமும் முதிய யூதத் தலைவர்களிடமும் சென்று பேசினர். யூதர்கள், “நாங்கள் எங்களுக்குள் ஒரு சபதம் செய்துள்ளோம். பவுலைக் கொல்லும் மட்டும் உண்பதோ, உறங்குவதோ இல்லை என்று தீர்மானமாகச் சபதம் பூண்டுள்ளோம்! எனவே நாங்கள் செய்ய விரும்புவது இதுவே, நீங்களும் யூதக் குழுவைச் சேர்ந்த எல்லாத் தலைவர்களும் போர் அதிகாரிக்கு ஒரு செய்தியை அனுப்புங்கள். பவுலை உங்களிடம் அனுப்புமாறு அவ்வதிகாரிக்குக் கூறுங்கள். பவுலிடம் இன்னும் அதிகமான கேள்விகள் கேட்க விரும்புவதாக அவ்வதிகாரிக்குச் சொல்லுங்கள். அவன் இங்கு வரும் வழியில் பவுலைக் கொல்வதற்காக நாங்கள் காத்துக்கொண்டிருப்போம்” என்றனர்.
வாசிக்கவும் அப்போஸ்தலருடைய நடபடிகள் 23
கேளுங்கள் அப்போஸ்தலருடைய நடபடிகள் 23
பகிர்
அனைத்து மொழியாக்கங்களையும் ஒப்பிடவும்: அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:1-15
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்