அப்போஸ்தலர் 16:1-21

அப்போஸ்தலர் 16:1-21 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பவுல் தெர்பைக்கு வந்து, பின்பு லீஸ்திராவுக்குப் போனான். அங்கே தீமோத்தேயு என்னும் பெயருடைய ஒரு சீடன் இருந்தான். அவனுடைய தாய் விசுவாசியான ஒரு யூதப் பெண், ஆனால் அவனுடைய தகப்பனோ ஒரு கிரேக்கன். தீமோத்தேயு லீஸ்திராவிலும் இக்கோனியாவிலும் இருந்த விசுவாசிகளாலே நற்சாட்சி பெற்றவனாயிருந்தான். பவுல் அந்தப் பயணத்திலே தீமோத்தேயுவையும் தன்னுடன் கூட்டிக்கொண்டுபோக விரும்பினான். ஆனால் அந்தப் பகுதியில் வாழ்ந்த யூதர்களின் நிமித்தம், அவனுக்கு விருத்தசேதனம் செய்வித்தான். ஏனெனில் அவர்கள் அனைவரும் அவனுடைய தகப்பன் கிரேக்கன் என்பதை அறிந்திருந்தார்கள். அவர்கள் பட்டணங்கள்தோறும் பிரயாணம் செய்து, எருசலேமிலிருந்த அப்போஸ்தலரும் சபைத்தலைவர்களும் எடுத்த தீர்மானங்களை, அங்குள்ளவர்கள் கைக்கொள்ளுவதற்காக அவர்களிடம் ஒப்படைத்தார்கள். இதனால் திருச்சபைகள் விசுவாசத்தில் பெலமடைந்து, நாள்தோறும் எண்ணிக்கையில் பெருகின. பவுலும் அவனுடைய கூட்டாளிகளும் பிரிகியா, கலாத்தியா நாடுகள் கடந்து பயணம் செய்தார்கள்; ஏனெனில் ஆசியா பகுதியிலே வார்த்தையை அறிவிக்காதவாறு பரிசுத்த ஆவியானவர் அவர்களைத் தடை பண்ணியிருந்தார். அவர்கள் மீசியாவின் எல்லைப் புறமாய் வந்தபோது, அவர்கள் பித்தினியாவுக்குப் போக முயற்சிசெய்தார்கள். ஆனால் இயேசுவின் ஆவியானவரோ அவர்களை அங்கேயும் செல்ல அனுமதிக்கவில்லை. எனவே அவர்கள் மீசியாவைக் கடந்து, துரோவா பட்டணத்திற்குச் சென்றார்கள். அந்த இரவிலே, பவுல் ஒரு தரிசனம் கண்டான். அதிலே மக்கெதோனியாவைச் சேர்ந்த ஒரு மனிதன் அவனைப் பார்த்து, “மக்கெதோனியாவுக்கு வந்து, எங்களுக்கு உதவிசெய்யும்” என்று கெஞ்சிக்கேட்டான். பவுல் இந்த தரிசனத்தைக் கண்டபின்பு, நாங்கள் உடனே மக்கெதோனியாவுக்குப் போக ஆயத்தமானோம். ஏனெனில், இறைவன் அவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்க, எங்களை அழைத்தார் என்று நாங்கள் தீர்மானித்தோம். துரோவாவிலிருந்து நாங்கள் கப்பலில் புறப்பட்டு, நேரே சாமோத்திராக்கே தீவுக்கும், மறுநாள் நெயாப்போலிக்குப் போனோம். அங்கிருந்து ரோமருடைய குடியேற்ற இடமான பிலிப்பி பட்டணத்திற்குப் பயணமானோம். அது மக்கெதோனியா பகுதியின் தலைமைப் பட்டணமாக இருந்தது. நாங்கள் அங்கே பல நாட்கள் தங்கியிருந்தோம். ஓய்வுநாளிலே, நாங்கள் பட்டணத்துக்கு வெளியே ஆற்றங்கரைக்குப் போனோம். அங்கே மன்றாடுவதற்கான ஒரு இடம் இருக்குமென்று எதிர்ப்பார்த்து நாங்கள் உட்கார்ந்து, அங்கே கூடியிருந்த பெண்களுடன் பேசத் தொடங்கினோம். நாங்கள் சொன்னதை லீதியாள் என்னும் பெயருடைய ஒரு பெண் கேட்டுக்கொண்டிருந்தாள். தியத்தீரா ஊரைச்சேர்ந்த அவள், செம்பட்டுத் துணி விற்கிறவள். அவள் இறைவனை வழிபட்டு வந்தாள். பவுலின் செய்தியை ஏற்றுக்கொள்வதற்கு கர்த்தர் அவளின் இருதயத்தைத் திறந்தார். லிதியாளும் அவளுடைய குடும்பத்தார் அனைவரும் திருமுழுக்கு பெற்றபின், அவள் எங்களைத் தனது வீட்டுக்கு அழைத்தாள். “நான் கர்த்தரின் விசுவாசி என்று நீங்கள் எண்ணினால், நீங்கள் என்னுடைய வீட்டிற்கு வந்து தங்குங்கள்” என்று சொல்லி, எங்களை வற்புறுத்தினாள். ஒருமுறை, நாங்கள் மன்றாடும் இடத்திற்கு சென்றுகொண்டிருந்தபோது, நாங்கள் ஒரு அடிமைப் பெண்ணைச் சந்தித்தோம். அவளிலே ஒரு தீய ஆவி இருந்தது. அவள் அந்த ஆவியைக் கொண்டு, எதிர்காலத்தில் நடக்கப்போவதை முன்னறிவித்தாள். அவள் இவ்வாறு குறிசொல்வதன் மூலம் தனது எஜமானர்களுக்குப் பெருந்தொகைப் பணத்தைச் சம்பாதித்துக் கொடுத்துக்கொண்டிருந்தாள். இந்தப் பெண் பவுலையும் எங்களையும் பின்தொடர்ந்து வந்து, “இந்த மனிதர் மகா உன்னதமான இறைவனின் ஊழியர்கள்; இவர்கள் உங்களுக்கு இரட்சிக்கப்படுவதற்கான வழியை அறிவிக்கிறார்கள்” என்று சத்தமிடுவாள். அவள் இப்படி பல நாட்களாய்ச் செய்துகொண்டிருந்தாள். கடைசியாக பவுல் மிகவும் சலிப்படைந்து, அந்த தீய ஆவியிடம், “இயேசுகிறிஸ்துவின் பெயரிலே நான் உனக்குக் கட்டளையிடுகிறேன், நீ இவளை விட்டு வெளியே வா!” என்றான். அந்த வினாடியே அந்தத் தீய ஆவி அவளைவிட்டு வெளியே வந்தது. அந்த அடிமைப் பெண்ணுடைய எஜமானர், பணம் சம்பாதிக்கும் தங்கள் எதிர்பார்ப்பு போய்விட்டது என்று அறிந்தபோது, அவர்கள் பவுலையும் சீலாவையும் பிடித்து, சந்தைகூடும் இடத்தில் அதிகாரிகளிடம் இழுத்துக்கொண்டு வந்தார்கள். அவர்கள் இவர்களை தலைமை நீதிபதிகளுக்கு முன்பாகக் கொண்டுவந்து, “இவர்கள் யூதர்கள், இந்த மனிதர் நமது பட்டணத்தில் குழப்பம் உண்டாக்குகிறார்கள், ரோமராகிய நாம் ஏற்றுக்கொள்ளவோ, நடைமுறைப்படுத்தவோ முடியாத, சட்டத்திற்கு முரணான முறைமைகளை இவர்கள் போதிக்கிறார்கள்” என்றார்கள்.

அப்போஸ்தலர் 16:1-21 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அதன்பின்பு அவன் தெர்பைக்கும் லீஸ்திராவிற்கும் போனான். அங்கே தீமோத்தேயு என்னப்பட்ட ஒரு சீடன் இருந்தான்; அவன் தாய் விசுவாசமுள்ள யூதப்பெண், அவன் தகப்பன் கிரேக்கன். அவன் லீஸ்திராவிலும் இக்கோனியாவிலுமுள்ள சகோதரர்களாலே நற்சாட்சிப் பெற்றவனாக இருந்தான். அவனைப் பவுல் தன்னோடுகூட கூட்டிக்கொண்டு போகவேண்டுமென்று விரும்பி, அவனுடைய தகப்பன் கிரேக்கன் என்று அங்கிருந்த யூதர்களெல்லோருக்கும் தெரிந்திருந்தபடியால், அவர்களின் பொருட்டு அவனுக்கு விருத்தசேதனம்பண்ணினான். அவர்கள் பட்டணங்களுக்குப் போகும்போது, எருசலேமிலிருக்கும் அப்போஸ்தலர்களாலும் மூப்பர்களாலும் விதிக்கப்பட்ட சட்டங்களைக் கைக்கொண்டு நடக்கும்படி அவர்களுக்குச் சொன்னார்கள். அதினாலே சபைகள் விசுவாசத்தில் உறுதிப்பட்டு, நாளுக்குநாள் பெருகின. அவர்கள் பிரிகியா கலாத்தியா நாடுகளைக் கடந்துச்சென்றபோது, ஆசியாவிலே வசனத்தைச் சொல்லவேண்டாமென்று பரிசுத்த ஆவியானவராலே தடைசெய்யப்பட்டு, மீசியா தேசம்வரை வந்து, பித்தினியா நாட்டிற்குப் போக விரும்பினார்கள்; ஆவியானவரோ அவர்களைப் போகவிடவில்லை. அப்பொழுது அவர்கள் மீசியா பக்கமாகப்போய், துரோவாவிற்கு வந்தார்கள். அங்கே இராத்திரியிலே பவுலுக்கு ஒரு தரிசனம் உண்டானது; அது என்னவென்றால், மக்கெதோனியா தேசத்தைச் சேர்ந்த ஒருவன் வந்துநின்று: நீர் மக்கெதோனியாவிற்கு வந்து எங்களுக்கு உதவிசெய்யவேண்டும் என்று பவுலை வேண்டிக்கொண்டதாக இருந்தது. அந்த தரிசனத்தை அவன் கண்டபோது, அவர்களுக்கு நற்செய்தியைத் தெரிவிக்கும்படி கர்த்தர் எங்களை அழைத்தார் என்று நாங்கள் உறுதிப்படுத்திக்கொண்டு, உடனே மக்கெதோனியாவிற்குப் புறப்பட்டோம். நாங்கள் துரோவாவில் கப்பல் ஏறி, சாமோத்திராக்கே தீவிற்கும், மறுநாளிலே நெயாப்போலி பட்டணத்திற்கும் சென்று, அங்கிருந்து மக்கெதோனியா தேசத்து நாடுகளில் ரோமர்கள் குடியேறின பிலிப்பி பட்டணத்திற்கு வந்து, அந்தப் பட்டணத்திலே சிலநாட்கள் தங்கியிருந்தோம். ஓய்வுநாளில் நாங்கள் பட்டணத்திற்கு வெளியேபோய் ஆற்றின் அருகே வழக்கமாக ஜெபம்பண்ணுகிற இடத்தில் உட்கார்ந்து, அங்கே கூடிவந்த பெண்களுக்குப் போதித்தோம். அப்பொழுது தியத்தீரா ஊரைச்சேர்ந்த விலையுயர்ந்த சிவப்பு கம்பளம் விற்கிறவளும் தேவனை வணங்குகிறவளுமாகிய லீதியாள் என்னும் பெயருள்ள ஒரு பெண் கேட்டுக்கொண்டிருந்தாள்; பவுல் சொன்னவைகளைக் கவனிப்பதற்காக கர்த்தர் அவள் இருதயத்தைத் திறந்தார். அவளும் அவள் குடும்பத்தில் உள்ளவர்களும் ஞானஸ்நானம் பெற்றப்பின்பு, அவள் எங்களைப் பார்த்து: நான் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவளென்று நீங்கள் நினைத்தால், என் வீட்டிலே வந்து தங்கியிருங்கள் என்று எங்களை மிகவும் வேண்டிக் கேட்டுக்கொண்டாள். நாங்கள் ஜெபம்பண்ணுகிற இடத்திற்குப் போகும்போது குறிசொல்லுகிற ஆவியினால், குறிசொல்லி தன் எஜமான்களுக்கு அதிக வருமானத்தை பெற்றுக்கொடுக்கும் ஒரு பெண் எங்களுக்கு எதிரே வந்தாள். அவள் பவுலையும் எங்களையும் பின்தொடர்ந்து வந்து: இந்த மனிதர்கள் உன்னதமான தேவனுடைய ஊழியக்காரர்கள், இரட்சிப்பின் வழியை நமக்குத் தெரிவிக்கிறவர்கள் என்று சத்தமாக சொன்னாள். அவள் பல நாட்கள் இப்படியே செய்துவந்தாள். பவுல் கோபமடைந்து, திரும்பிப்பார்த்து: நீ இவளைவிட்டு வெளியே போ என்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உனக்குக் கட்டளைக் கொடுக்கிறேன் என்று அந்த ஆவியுடனே சொன்னான்; அப்பொழுதே அந்த ஆவி அவளைவிட்டு வெளியேபோனது. அவளுடைய எஜமான்கள் தங்களுடைய வருமானத்திற்கான நம்பிக்கை போய்விட்டதால், பவுலையும் சீலாவையும் பிடித்து, சந்தைவெளியிலுள்ள அதிகாரிகளிடத்தில் இழுத்துக்கொண்டுபோனார்கள். அவர்களை அதிகாரிகளிடத்தில் ஒப்படைத்து: யூதர்களாகிய இந்த மனிதர்கள் நம்முடைய பட்டணத்தில் குழப்பம் உண்டாக்கி, ரோமராகிய நாம் ஏற்றுக்கொள்ளவும் கடைபிடிக்கவும் முடியாத தவறான பழக்கவழக்கங்களைப் போதிக்கிறார்கள் என்றனர்.

அப்போஸ்தலர் 16:1-21 பரிசுத்த பைபிள் (TAERV)

தெர்பை, லிஸ்திரா ஆகிய நகரங்களுக்குப் பவுல் சென்றான். தீமோத்தேயு எனப்படும் கிறிஸ்துவின் சீடன் அங்கிருந்தான். தீமோத்தேயுவின் தாய் ஒரு விசுவாசியான யூதப் பெண்மணி, அவன் தந்தை ஒரு கிரேக்கன். லிஸ்திரா, இக்கோனியம் நகரங்களிலுள்ள விசுவாசிகள் தீமோத்தேயுவை மதித்தனர். அவனைப் பற்றிய நல்ல கருத்துக்களையே கூறினர். தீமோத்தேயு தன்னுடன் பயணம் செய்ய பவுல் விரும்பினான். அப்பகுதியில் வசித்த எல்லா யூதர்களும் தீமோத்தேயுவின் தந்தை கிரேக்கன் என்பதை அறிந்திருந்தார்கள். ஆகவே பவுல் தீமோத்தேயுவிற்கு விருத்தசேதனம் செய்வித்தான். பின் பவுலும் அவனோடிருந்த மனிதர்களும் பிற பட்டணங்கள் வழியாகப் பிரயாணம் செய்தனர். எருசலேமில் அப்போஸ்தலரும் மூப்பர்களும் எடுத்த முடிவுகளையும் விதிகளையும் அவர்கள் விசுவாசிகளுக்கு அளித்தார்கள். இந்த விதிகளைப் பின்பற்றும்படிக்கு அவர்கள் விசுவாசிகளுக்குக் கூறினர். எனவே சபைகள் விசுவாசத்தில் வலிமையுற்று நாள்தோறும் வளர்ச்சி அடைந்துகொண்டிருந்தன. பிரிகியா, கலாத்தியா நாடுகளின் வழியாகப் பவுலும் அவனோடிருந்த மனிதர்களும் சென்றனர். ஆசியா நாட்டில் அவர்கள் நற்செய்தியைப் போதிப்பதை பரிசுத்த ஆவியானவர் அனுமதிக்கவில்லை. மீசியா நாட்டிற்கருகே பவுலும் தீமோத்தேயுவும் சென்றனர். பித்தினியா நாட்டிற்குள் போக அவர்கள் விரும்பினர். ஆனால் பரிசுத்த ஆவியானவர் அவர்களை உள்ளே செல்ல விடவில்லை. எனவே அவர்கள் மீசியா வழியாகச் சென்று துரோவா நகருக்குச் சென்றனர். அன்றிரவு பவுல் ஒரு காட்சியைக் கண்டான். அந்தக் காட்சியில் மக்கதோனியா நாட்டைச் சேர்ந்த ஒரு மனிதன் பவுலிடம் வந்தான். அம்மனிதன் அங்கு நின்று, “மக்கதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவுங்கள்” என்றான். பவுல் அக்காட்சியைக் கண்ட பின்பு கர்த்தருடைய நற்செய்தியை அம்மக்களுக்குக் கூறுவதற்கு தேவன் எங்களை அழைத்துள்ளார் என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம். நாங்கள் ஒரு கப்பலில் துரோவாவை விட்டுப் புறப்பட்டு சாமோத்திராக்கே தீவிற்குப் பயணமானோம். மறுநாள் நாங்கள் நியாப்போலி நகருக்கு கடல் வழியாகப் பயணமானோம். அங்கிருந்து நாங்கள் பிலிப்பிக்குச் சென்றோம். மக்கதோனியாவில் பிலிப்பி ஒரு முக்கியமான நகரம். அது ரோமர்களுக்கான நகரம். சில நாட்கள் நாங்கள் அந்நகரில் தங்கினோம். ஓய்வுநாளில் நகர வாசல் வழியாக ஆற்றை நோக்கிச் சென்றோம். நதியருகே ஒரு சிறப்பான பிரார்த்தனை செய்வதற்கு இடம் கிடைக்கக்கூடும் என்று எண்ணினோம். சில பெண்கள் அங்குக் கூடியிருந்தனர். நாங்கள் அங்கு அமர்ந்து அவர்களோடு பேசினோம். தியத்தீரா என்னும் நகரிலுள்ள லீதியாள் என்னும் பெண்மணி அங்கிருந்தாள். ஊதாநிற பட்டு ஆடைகளை விற்பதே அவளது தொழில். அவள் உண்மையான தேவனை வழிபட்டாள். அவள் பவுலைக் கவனித்துக்கொண்டிருந்தாள். கர்த்தர் அவளது இருதயத்தைத் திறந்து பவுல் சொன்னவற்றை ஒப்புக்கொள்ளச் செய்தார். அவள் பவுல் கூறியவற்றை நம்பினாள். அவளும் அவளது வீட்டினரும் ஞானஸ்நானம் பெற்றனர். பின் லீதியாள் எங்களை அவளது வீட்டிற்கு அழைத்தாள். அவள், “கர்த்தராகிய இயேசுவில் நான் உண்மையாகவே விசுவாசம் உள்ளவள் என்று நீங்கள் எண்ணினால் என் வீட்டிற்கு வந்து தங்குங்கள்” என்றாள். அவள் எங்களை அவளோடு தங்குமாறு வற்புறுத்தினாள். ஒரு நாள் பிரார்த்தனை செய்யுமிடத்துக்கு நாங்கள் போய்க்கொண்டிருக்கும்போது ஒரு நிகழ்ச்சி நடந்தது. ஒரு வேலைக்காரச் சிறுமி எங்களைச் சந்தித்தாள். அவளுக்குள் ஒரு விசேஷ ஆவி இருந்தது. எதிர்காலத்தில் நடக்கவிருப்பதைப்பற்றிக் கூறும் வல்லமையை இந்த ஆவி அவளுக்குக் கொடுத்தது. அவளது உரிமையாளர்களுக்கு இதைச் செய்து மிகுந்த பணத்தை அவள் சம்பாதித்துக்கொடுத்தாள். இந்தப் பெண் பவுலையும் எங்களையும் தொடர்ந்து வந்தாள். அவள் உரத்த குரலில் “இம்மனிதர்கள் மிக உன்னதமான தேவனின் ஊழியர்கள்! உங்களுக்கு இரட்சிப்பின் வழியை அவர்கள் கூறிக்கொண்டிருக்கிறார்கள்!” என்றாள். அவள் இதையே பல நாட்கள் தொடர்ந்து செய்து வந்தாள். மேலும் அதைப் பொறுக்கமுடியாத பவுல் அந்த ஆவியைப் பார்த்து, “இயேசு கிறிஸ்துவின் வல்லமையால் அவளிடமிருந்து வெளியே வருமாறு உனக்குக் கட்டளையிடுகிறேன்!” என்றான். உடனே ஆவி வெளியேறிற்று. அந்த வேலைக்காரப் பெண்ணின் உரிமையாளர்கள் இதைக் கண்டனர். அப்பெண்ணைப் பணம் சம்பாதிப்பதற்கு இனிமேல் பயன்படுத்த முடியாது என்பதை அம்மனிதர்கள் அறிந்தனர். எனவே அவர்கள் பவுலையும் சீலாவையும் பிடித்து வந்து நகரத்தின் சந்தியில் நிறுத்தினர். நகர அதிகாரிகள் அங்கிருந்தனர். தலைவர்களின் முன்பு அம்மனிதர்கள் பவுலையும் சீலாவையும் கொண்டு வந்தனர். அவர்கள், “இம்மனிதர்கள் யூதர்கள். நகரத்தில் துன்பத்தை விளைவிக்கிறார்கள். நமக்குத் தகாத காரியஙகளைச் செய்யும்படியாக அவர்கள் மக்களுக்குக் கூறிக்கொண்டிருக்கிறார்கள். நாம் ரோம மக்கள். இக்காரியங்களைச் செய்ய முடியாது” என்றார்கள்.

அப்போஸ்தலர் 16:1-21 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அதன்பின்பு அவன் தெர்பைக்கும் லீஸ்திராவுக்கும் போனான். அங்கே தீமோத்தேயு என்னப்பட்ட ஒரு சீஷன் இருந்தான்; அவன் தாய் விசுவாசமுள்ள யூதஸ்திரீ, அவன் தகப்பன் கிரேக்கன். அவன் லீஸ்திராவிலும் இக்கோனியாவிலுமுள்ள சகோதரராலே நற்சாட்சி பெற்றவனாயிருந்தான். அவனைப் பவுல் தன்னுடனே கூட்டிக்கொண்டு போகவேண்டுமென்று விரும்பி, அவனுடைய தகப்பன் கிரேக்கன் என்று அவ்விடங்களிலிருக்கும் யூதர்களெல்லாரும் அறிந்திருந்தபடியால், அவர்கள்நிமித்தம் அவனுக்கு விருத்தசேதனம் பண்ணினான். அவர்கள் பட்டணங்கள்தோறும் போகையில், எருசலேமிலிருக்கும் அப்போஸ்தலராலும் மூப்பராலும் விதிக்கப்பட்ட சட்டங்களைக் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு ஒப்புவித்தார்கள். அதினாலே சபைகள் விசுவாசத்தில் ஸ்திரப்பட்டு, நாளுக்குநாள் பெருகின. அவர்கள் பிரிகியா கலாத்தியா நாடுகளைக் கடந்துபோனபோது, ஆசியாவிலே வசனத்தைச் சொல்லாதபடிக்குப் பரிசுத்த ஆவியினாலே தடைபண்ணப்பட்டு, மீசியா தேசமட்டும் வந்து, பித்தினியா நாட்டுக்குப் போகப் பிரயத்தனம்பண்ணினார்கள்; ஆவியானவரோ அவர்களைப் போகவொட்டாதிருந்தார். அப்பொழுது அவர்கள் மீசியா பக்கமாய்ப் போய், துரோவாவுக்கு வந்தார்கள். அங்கே இராத்திரியிலே பவுலுக்கு ஒரு தரிசனம் உண்டாயிற்று; அதென்னவெனில், மக்கெதோனியா தேசத்தான் ஒருவன் வந்துநின்று: நீர் மக்கெதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவிசெய்யவேண்டுமென்று தன்னை வேண்டிக்கொண்டதாக இருந்தது. அந்தத் தரிசனத்தை அவன் கண்டபோது, அவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி கர்த்தர் எங்களை அழைத்தாரென்று நாங்கள் நிச்சயித்துக்கொண்டு, உடனே மக்கெதோனியாவுக்குப் புறப்பட்டுப்போகப் பிரயத்தனம்பண்ணி, துரோவாவில் கப்பல் ஏறி, சாமோத்திராக்கே தீவுக்கும், மறுநாளிலே நெயாப்போலி பட்டணத்துக்கும் நேராய் ஓடி, அங்கேயிருந்து மக்கெதோனியா தேசத்து நாடுகளில் ஒன்றிற்குத் தலைமையானதும் ரோமர் குடியேறினதுமான பிலிப்பி பட்டணத்துக்கு வந்து, அந்தப் பட்டணத்திலே சிலநாள் தங்கியிருந்தோம். ஓய்வுநாளில் நாங்கள் பட்டணத்துக்கு வெளியே போய், ஆற்றினருகே வழக்கமாய் ஜெபம்பண்ணுகிற இடத்தில் உட்கார்ந்து, அங்கே கூடிவந்த ஸ்திரீகளுக்கு உபதேசித்தோம். அப்பொழுது தியத்தீரா ஊராளும் இரத்தாம்பரம் விற்கிறவளும் தேவனை வணங்குகிறவளுமாகிய லீதியாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீ கேட்டுக்கொண்டிருந்தாள்; பவுல் சொல்லியவைகளைக் கவனிக்கும்படி கர்த்தர் அவள் இருதயத்தைத் திறந்தருளினார். அவளும் அவள் வீட்டாரும் ஞானஸ்நானம் பெற்றபின்பு, அவள் எங்களை நோக்கி: நீங்கள் என்னைக் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவளென்று எண்ணினால், என் வீட்டிலே வந்து தங்கியிருங்கள் என்று எங்களை வருந்திக் கேட்டுக்கொண்டாள். நாங்கள் ஜெபம்பண்ணுகிற இடத்துக்குப் போகையில் குறிசொல்ல ஏவுகிற ஆவியைக்கொண்டிருந்து, குறிசொல்லுகிறதினால் தன் எஜமான்களுக்கு மிகுந்த ஆதாயத்தை உண்டாக்கின ஒரு பெண் எங்களுக்கு எதிர்ப்பட்டாள். அவள் பவுலையும் எங்களையும் பின்தொடர்ந்து வந்து: இந்த மனுஷர் உன்னதமான தேவனுடைய ஊழியக்காரர், இரட்சிப்பின் வழியை நமக்கு அறிவிக்கிறவர்கள் என்று சத்தமிட்டாள். இப்படி அநேகநாள் செய்து கொண்டுவந்தாள். பவுல் சினங்கொண்டு, திரும்பிப்பார்த்து: நீ இவளை விட்டுப் புறப்படும்படி இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று அந்த ஆவியுடனே சொன்னான்; அந்நேரமே அது புறப்பட்டுப்போயிற்று. அவளுடைய எஜமான்கள் தங்கள் ஆதாயத்து நம்பிக்கை அற்றுப்போயிற்றென்று கண்டு, பவுலையும் சீலாவையும் பிடித்து, சந்தைவெளியிலுள்ள அதிகாரிகளிடத்தில் இழுத்துக்கொண்டுபோனார்கள். அவர்களை அதிகாரிகளிடத்தில் ஒப்புவித்து: யூதர்களாகிய இந்த மனுஷர் நம்முடைய பட்டணத்தில் கலகம்பண்ணி, ரோமராகிய நாம் ஏற்றுக்கொள்ளவும் அநுசரிக்கவும்தகாத முறைமைகளைப் போதிக்கிறார்கள் என்றார்கள்.