தெர்பை, லிஸ்திரா ஆகிய நகரங்களுக்குப் பவுல் சென்றான். தீமோத்தேயு எனப்படும் கிறிஸ்துவின் சீடன் அங்கிருந்தான். தீமோத்தேயுவின் தாய் ஒரு விசுவாசியான யூதப் பெண்மணி, அவன் தந்தை ஒரு கிரேக்கன். லிஸ்திரா, இக்கோனியம் நகரங்களிலுள்ள விசுவாசிகள் தீமோத்தேயுவை மதித்தனர். அவனைப் பற்றிய நல்ல கருத்துக்களையே கூறினர். தீமோத்தேயு தன்னுடன் பயணம் செய்ய பவுல் விரும்பினான். அப்பகுதியில் வசித்த எல்லா யூதர்களும் தீமோத்தேயுவின் தந்தை கிரேக்கன் என்பதை அறிந்திருந்தார்கள். ஆகவே பவுல் தீமோத்தேயுவிற்கு விருத்தசேதனம் செய்வித்தான். பின் பவுலும் அவனோடிருந்த மனிதர்களும் பிற பட்டணங்கள் வழியாகப் பிரயாணம் செய்தனர். எருசலேமில் அப்போஸ்தலரும் மூப்பர்களும் எடுத்த முடிவுகளையும் விதிகளையும் அவர்கள் விசுவாசிகளுக்கு அளித்தார்கள். இந்த விதிகளைப் பின்பற்றும்படிக்கு அவர்கள் விசுவாசிகளுக்குக் கூறினர். எனவே சபைகள் விசுவாசத்தில் வலிமையுற்று நாள்தோறும் வளர்ச்சி அடைந்துகொண்டிருந்தன. பிரிகியா, கலாத்தியா நாடுகளின் வழியாகப் பவுலும் அவனோடிருந்த மனிதர்களும் சென்றனர். ஆசியா நாட்டில் அவர்கள் நற்செய்தியைப் போதிப்பதை பரிசுத்த ஆவியானவர் அனுமதிக்கவில்லை. மீசியா நாட்டிற்கருகே பவுலும் தீமோத்தேயுவும் சென்றனர். பித்தினியா நாட்டிற்குள் போக அவர்கள் விரும்பினர். ஆனால் பரிசுத்த ஆவியானவர் அவர்களை உள்ளே செல்ல விடவில்லை. எனவே அவர்கள் மீசியா வழியாகச் சென்று துரோவா நகருக்குச் சென்றனர். அன்றிரவு பவுல் ஒரு காட்சியைக் கண்டான். அந்தக் காட்சியில் மக்கதோனியா நாட்டைச் சேர்ந்த ஒரு மனிதன் பவுலிடம் வந்தான். அம்மனிதன் அங்கு நின்று, “மக்கதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவுங்கள்” என்றான். பவுல் அக்காட்சியைக் கண்ட பின்பு கர்த்தருடைய நற்செய்தியை அம்மக்களுக்குக் கூறுவதற்கு தேவன் எங்களை அழைத்துள்ளார் என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம். நாங்கள் ஒரு கப்பலில் துரோவாவை விட்டுப் புறப்பட்டு சாமோத்திராக்கே தீவிற்குப் பயணமானோம். மறுநாள் நாங்கள் நியாப்போலி நகருக்கு கடல் வழியாகப் பயணமானோம். அங்கிருந்து நாங்கள் பிலிப்பிக்குச் சென்றோம். மக்கதோனியாவில் பிலிப்பி ஒரு முக்கியமான நகரம். அது ரோமர்களுக்கான நகரம். சில நாட்கள் நாங்கள் அந்நகரில் தங்கினோம். ஓய்வுநாளில் நகர வாசல் வழியாக ஆற்றை நோக்கிச் சென்றோம். நதியருகே ஒரு சிறப்பான பிரார்த்தனை செய்வதற்கு இடம் கிடைக்கக்கூடும் என்று எண்ணினோம். சில பெண்கள் அங்குக் கூடியிருந்தனர். நாங்கள் அங்கு அமர்ந்து அவர்களோடு பேசினோம். தியத்தீரா என்னும் நகரிலுள்ள லீதியாள் என்னும் பெண்மணி அங்கிருந்தாள். ஊதாநிற பட்டு ஆடைகளை விற்பதே அவளது தொழில். அவள் உண்மையான தேவனை வழிபட்டாள். அவள் பவுலைக் கவனித்துக்கொண்டிருந்தாள். கர்த்தர் அவளது இருதயத்தைத் திறந்து பவுல் சொன்னவற்றை ஒப்புக்கொள்ளச் செய்தார். அவள் பவுல் கூறியவற்றை நம்பினாள். அவளும் அவளது வீட்டினரும் ஞானஸ்நானம் பெற்றனர். பின் லீதியாள் எங்களை அவளது வீட்டிற்கு அழைத்தாள். அவள், “கர்த்தராகிய இயேசுவில் நான் உண்மையாகவே விசுவாசம் உள்ளவள் என்று நீங்கள் எண்ணினால் என் வீட்டிற்கு வந்து தங்குங்கள்” என்றாள். அவள் எங்களை அவளோடு தங்குமாறு வற்புறுத்தினாள். ஒரு நாள் பிரார்த்தனை செய்யுமிடத்துக்கு நாங்கள் போய்க்கொண்டிருக்கும்போது ஒரு நிகழ்ச்சி நடந்தது. ஒரு வேலைக்காரச் சிறுமி எங்களைச் சந்தித்தாள். அவளுக்குள் ஒரு விசேஷ ஆவி இருந்தது. எதிர்காலத்தில் நடக்கவிருப்பதைப்பற்றிக் கூறும் வல்லமையை இந்த ஆவி அவளுக்குக் கொடுத்தது. அவளது உரிமையாளர்களுக்கு இதைச் செய்து மிகுந்த பணத்தை அவள் சம்பாதித்துக்கொடுத்தாள். இந்தப் பெண் பவுலையும் எங்களையும் தொடர்ந்து வந்தாள். அவள் உரத்த குரலில் “இம்மனிதர்கள் மிக உன்னதமான தேவனின் ஊழியர்கள்! உங்களுக்கு இரட்சிப்பின் வழியை அவர்கள் கூறிக்கொண்டிருக்கிறார்கள்!” என்றாள். அவள் இதையே பல நாட்கள் தொடர்ந்து செய்து வந்தாள். மேலும் அதைப் பொறுக்கமுடியாத பவுல் அந்த ஆவியைப் பார்த்து, “இயேசு கிறிஸ்துவின் வல்லமையால் அவளிடமிருந்து வெளியே வருமாறு உனக்குக் கட்டளையிடுகிறேன்!” என்றான். உடனே ஆவி வெளியேறிற்று. அந்த வேலைக்காரப் பெண்ணின் உரிமையாளர்கள் இதைக் கண்டனர். அப்பெண்ணைப் பணம் சம்பாதிப்பதற்கு இனிமேல் பயன்படுத்த முடியாது என்பதை அம்மனிதர்கள் அறிந்தனர். எனவே அவர்கள் பவுலையும் சீலாவையும் பிடித்து வந்து நகரத்தின் சந்தியில் நிறுத்தினர். நகர அதிகாரிகள் அங்கிருந்தனர். தலைவர்களின் முன்பு அம்மனிதர்கள் பவுலையும் சீலாவையும் கொண்டு வந்தனர். அவர்கள், “இம்மனிதர்கள் யூதர்கள். நகரத்தில் துன்பத்தை விளைவிக்கிறார்கள். நமக்குத் தகாத காரியஙகளைச் செய்யும்படியாக அவர்கள் மக்களுக்குக் கூறிக்கொண்டிருக்கிறார்கள். நாம் ரோம மக்கள். இக்காரியங்களைச் செய்ய முடியாது” என்றார்கள்.
வாசிக்கவும் {{புத்தகம் & அதிகாரம்}}
கேளுங்கள் அப்போஸ்தலருடைய நடபடிகள் 16
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:1-21
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்