அப்போஸ்தலர் 15:22-31

அப்போஸ்தலர் 15:22-31 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பின்பு அப்போஸ்தலரும், சபைத்தலைவர்களும், திருச்சபையார் அனைவரும் தங்களில் சிலரைத் தெரிந்து, அவர்களை பவுலுடனும் பர்னபாவுடனும் அந்தியோகியாவுக்கு அனுப்பத் தீர்மானித்தார்கள். அவர்கள் இதற்கு பர்சபா எனப்பட்ட யூதாவையும் சீலாவையும் தெரிந்துகொண்டார்கள். இந்த இருவரும் சகோதரர் மத்தியில் தலைவர்களாய் இருந்தார்கள். அவர்களுடன் இவ்வாறு ஒரு கடிதத்தையும் எழுதி அனுப்பினார்கள்: உங்கள் சகோதரர்களான அப்போஸ்தலரும், சபைத்தலைவர்களும், அந்தியோகியா, சீரியா, சிலிசியா ஆகிய இடங்களில் இருக்கிற யூதரல்லாத விசுவாசிகளான உங்களுக்கு எழுதுகிறதாவது: உங்களுக்கு வாழ்த்துகள். எங்கள் அதிகாரம் பெறாத சிலர், எங்களிடமிருந்து புறப்பட்டு வந்தார்கள் என்றும், அவர்கள் தாங்கள் சொன்ன காரியங்களினாலே, உங்களுக்கு மனக்குழப்பத்தை உண்டாக்கி, உங்களைக் குழப்பமடையச் செய்திருக்கிறார்கள் என்றும், நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். எனவே, நாங்கள் அனைவரும் எங்களில் சிலரைத் தெரிந்தெடுத்து, எங்கள் அன்புக்குரியவர்களான பர்னபாவுடனும் பவுலுடனும் அனுப்புவதற்கு உடன்பட்டிருக்கிறோம். இவர்கள், நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பெயருக்காக உயிரையும் கொடுக்கத் துணிந்தவர்கள். எனவே, நாங்கள் எழுதுவதை வாயின் வார்த்தையினால் உறுதிப்படுத்தும்படி, யூதாவையும் சீலாவையும் அனுப்புகிறோம். கீழ்க்காணும் முக்கியமானவற்றைத் தவிர, வேறு எந்தப் பாரத்தையும் உங்கள்மேல் சுமத்தாமல் இருப்பது நலமென்று, பரிசுத்த ஆவியானவருக்கும் எங்களுக்கும் தோன்றியது: நீங்கள் இறைவன் அல்லாதவைகளுக்குப் பலியிடப்பட்ட உணவைத் தவிர்க்கவேண்டும், இரத்தத்தையும், நெரித்துக் கொல்லப்பட்ட மிருகத்தின் இறைச்சியையும் விலக்கிக்கொள்ள வேண்டும், முறைகேடான பாலுறவுகளில் ஈடுபடக்கூடாது. இவ்வாறான காரியங்களைத் தவிர்த்துக்கொள்ள எல்லா முயற்சிகளையும் செய்வது நல்லது. உங்களுக்கு நலமுண்டாவதாக. எனவே அவர்கள் வழியனுப்பப்பட்டு, அந்தியோகியாவுக்கு வந்தனர். அங்கே அவர்கள் திருச்சபையை ஒன்றுகூட்டி, அந்தக் கடிதத்தைக் கொடுத்தார்கள். மக்கள் அதை வாசித்து, அந்த ஊக்கப்படுத்தும் வார்த்தைகளைக்குறித்து மகிழ்ச்சி அடைந்தார்கள்.

அப்போஸ்தலர் 15:22-31 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது தங்களில் சிலரைத் தெரிந்துகொண்டு பவுலோடும் பர்னபாவோடும் அந்தியோகியாவிற்கு அனுப்புகிறது அப்போஸ்தலர்கள், மூப்பர்கள் மற்றும் மக்கள் எல்லோருக்கும் நலமாகத் தோன்றியது. அவர்கள் யாரென்றால், சகோதரர்களில் விசேஷித்தவர்களாகிய பர்சபா என்னும் மறுபெயர்கொண்ட யூதாவும் சீலாவுமே. இவர்களுடைய கையில் அவர்கள் கொடுத்தனுப்பின கடிதமாவது: அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் சகோதரர்களுமாகிய நாங்கள் அந்தியோகியாவிலும் சீரியாவிலும் சிலிசியாவிலும் இருக்கும் யூதரல்லாத சகோதரர்களுக்கு வாழ்த்துதல் சொல்லி எழுதிய கடிதம் என்னவென்றால்: எங்களிடம் கட்டளைபெறாத சிலர் எங்களிடத்திலிருந்து புறப்பட்டு, நீங்கள் விருத்தசேதனம்பண்ணப்படவேண்டுமென்றும், நியாயப்பிரமாணத்தைக் கடைபிடிக்கவேண்டுமென்றும் சொல்லி, இப்படிப்பட்ட வார்த்தைகளால் உங்களைக் குழப்பி, உங்களுடைய மனதைக் கெடுத்தார்கள் என்று நாங்கள் கேள்விப்பட்டபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்திற்காகத் தங்களுடைய உயிரையும் ஒப்புக்கொடுக்கத் துணிந்த எங்களுக்குப் பிரியமான பர்னபா மற்றும் பவுல் என்பவர்களோடு, எங்களால் தெரிந்துகொள்ளப்பட்ட சில மனிதர்களை உங்களிடத்திற்கு அனுப்புவது எங்களுக்கு நலமாகத் தோன்றியது. அப்படியே யூதாவையும் சீலாவையும் அனுப்பியிருக்கிறோம். அவர்களும் இவைகளை வாய்வார்த்தையாக உங்களுக்கு அறிவிப்பார்கள். என்னவென்றால், விக்கிரகங்களுக்குப் படைத்த அசுத்தமானவைகளை சாப்பிடாமலும், தகாத உறவு கொள்ளாமலும், கழுத்தை நசுக்கிக் கொல்லப்பட்ட மிருகம் மற்றும் இரத்தம் ஆகியவற்றை சாப்பிடாமலும் இருக்கவேண்டுமென்பதே. அவசியமான இவைகளைத்தவிர வேறு பாரமான எந்தவொரு காரியத்தையும் உங்கள்மேல் சுமத்தாமல் இருப்பது பரிசுத்த ஆவியானவருக்கும் எங்களுக்கும் நலமாகத் தோன்றியது; இவைகளைச் செய்யாமல் நீங்கள் உங்களைக் காத்துக்கொள்ளுவது நலமாக இருக்கும். சுகமாக இருப்பீர்களாக என்று எழுதினார்கள். அவர்கள் அனுப்பிவிடப்பட்டு அந்தியோகியாவிற்கு வந்து, சபை மக்களைக் கூட்டிச்சேர்த்து, கடிதத்தை ஒப்படைத்தார்கள். அதை அவர்கள் வாசித்து, அதினால் கிடைத்த ஆறுதலுக்காக சந்தோஷப்பட்டார்கள்.

அப்போஸ்தலர் 15:22-31 பரிசுத்த பைபிள் (TAERV)

பவுல், பர்னபா ஆகியோருடன் அந்தியோகியாவுக்குச் சில மனிதர்களை அனுப்பவேண்டுமென அப்போஸ்தலரும், மூப்பரும், சபையினர் எல்லோரும் முடிவு செய்தார்கள். அக்கூட்டத்தினர் தங்களில் சிலரைத் தேர்ந்தெடுத்தனர். அவர்கள் பர்சபா என்ற யூதாவையும், சீலாவையும் தேர்ந்தெடுத்தனர். எருசலேமின் சகோதரர்கள் அவர்களை மதித்தனர். அக்கூட்டத்தினர் அவர்கள் மூலமாக அக்கடிதத்தை அனுப்பினார்கள். அக்கடிதம் கூறியது: அப்போஸ்தலர்கள், மூப்பர்கள், சகோதரர்களிடமிருந்து, அந்தியோகியாவிலும், சிரியாவிலும், சிலிசியாவிலுமுள்ள அன்பான யூதரல்லாத சகோதரருக்கு: எங்கள் கூட்டத்திலிருந்து சில மனிதர்கள் உங்களிடம் வந்தார்கள் எனக் கேள்விப்பட்டோம். அவர்கள் கூறிய காரியங்கள் உங்களைத் தொந்தரவு செய்து உங்கள் மனங்களை நிலைகுலையச் செய்துள்ளன. ஆனால் அவற்றைச் செய்யும்படியாக நாங்கள் அவர்களுக்குக் கூறவில்லை. சில மனிதர்களைத் தேர்ந்தெடுத்து உங்களிடம் அனுப்புவதென நாங்கள் எல்லோரும் முழு மனதாக முடிவு செய்துள்ளோம். நமது அன்பான நண்பர்களாகிய பர்னபா, பவுல் ஆகியோரோடு அவர்களும் இருப்பார்கள். நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சேவைக்காக பர்னபாவும் பவுலும் தங்கள் பிராணனையே கொடுத்துள்ளார்கள். எனவே அவர்களோடு யூதாவையும் சீலாவையும் அனுப்புகிறோம். அவர்கள் வாய் வார்த்தைகளினால் அவற்றை உங்களுக்கு உறுதிசெய்வார்கள். உங்கள் மீது இன்னும் அதிகமான பாரங்கள் விதிக்கப்படலாகாதென பரிசுத்த ஆவியானவர் முடிவு செய்தார். நாங்களும் அதை ஆமோதிக்கிறோம். நீங்கள் செய்யத் தேவையான இந்தக் காரியங்களை மட்டுமே செய்ய வேண்டும். விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்ட உணவைச் சாப்பிடாதீர்கள். இரத்தத்தை ருசிக்காதீர்கள். நெரித்துக்கொல்லப்பட்ட மிருகங்களைச் சாப்பிடாதீர்கள். பாலியல் பாவங்களில் ஈடுபடாதீர்கள். இத்தகைய காரிங்களில் நீங்கள் உங்களை ஈடுபடுத்தாதிருந்தால் நல்லது. எனவே பவுல், பர்னபா, யூதா, சீலா ஆகியோர் எருசலேமை விட்டுச் சென்றனர். அவர்கள் அந்தியோகியாவுக்குச் சென்றனர். அந்தியோகியாவில் விசுவாசிகளைக் கூட்டி அக்கடிதத்தைக் கொடுத்தனர். விசுவாசிகள் அதை வாசித்தபோது மகிழ்ச்சியடைந்தனர். அக்கடிதம் அவர்களுக்கு ஆறுதல் அளித்தது.

அப்போஸ்தலர் 15:22-31 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது தங்களில் சிலரைத் தெரிந்துகொண்டு பவுலோடும் பர்னபாவோடும் அந்தியோகியாவுக்கு அனுப்புகிறது அப்போஸ்தலருக்கும் மூப்பருக்கும் சபையாரெல்லாருக்கும் நலமாகக் கண்டது. அவர்கள் யாரென்றால், சகோதரரில் விசேஷித்தவர்களாகிய பர்சபா என்று மறுபேர்கொண்ட யூதாவும் சீலாவுமே. இவர்கள் கையில் அவர்கள் எழுதிக்கொடுத்தனுப்பின நிருபமாவது: அப்போஸ்தலரும் மூப்பரும் சகோதரருமாகிய நாங்கள் அந்தியோகியாவிலும் சீரியாவிலும் சிலிசியாவிலும் இருக்கும் புறஜாதியாராகிய சகோதரருக்கு வாழ்த்துதல் சொல்லி எழுதிய நிருபம் என்னவென்றால்: எங்களால் கட்டளைபெறாத சிலர் எங்களிடத்திலிருந்து புறப்பட்டு, நீங்கள் விருத்தசேதனமடையவேண்டுமென்றும், நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளவேண்டுமென்றும் சொல்லி, இப்படிப்பட்ட வார்த்தைகளால் உங்களைக் கலக்கி, உங்கள் ஆத்துமாக்களைப் புரட்டினார்கள் என்று நாங்கள் கேள்விப்பட்டபடியினாலே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்திற்காகத் தங்கள் பிராணனையும் ஒப்புக்கொடுக்கத் துணிந்தவர்களும் எங்களுக்குப் பிரியமானவர்களுமாயிருக்கிற பர்னபா பவுல் என்பவர்களோடுங்கூட, எங்களால் தெரிந்துகொள்ளப்பட்ட சில மனுஷரை உங்களிடத்திற்கு அனுப்புகிறது ஒருமனப்பட்டுக் கூடின எங்களுக்கு நலமாகக்கண்டது. அந்தப்படியே யூதாவையும் சீலாவையும் அனுப்பியிருக்கிறோம். அவர்களும் இவைகளை வாய்மொழியாக உங்களுக்கு அறிவிப்பார்கள். எவையெனில், விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளுக்கும், இரத்தத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், வேசித்தனத்திற்கும், நீங்கள் விலகியிருக்கவேண்டுமென்பதே. அவசியமான இவைகளையல்லாமல் பாரமான வேறொன்றையும் உங்கள்மேல் சுமத்தாமலிருப்பது பரிசுத்த ஆவிக்கும் எங்களுக்கும் நலமாகக் கண்டது; இவைகளுக்கு விலகி நீங்கள் உங்களைக் காத்துக் கொள்ளுவது நலமாயிருக்கும். சுகமாயிருப்பீர்களாக என்று எழுதினார்கள். அவர்கள் அனுப்பிவிடப்பட்டு, அந்தியோகியாவுக்கு வந்து, சபையைக் கூடிவரச்செய்து, நிருபத்தை ஒப்புவித்தார்கள். அதை அவர்கள் வாசித்து, அதனாலுண்டாகிய ஆறுதலுக்காகச் சந்தோஷப்பட்டார்கள்.