பின்பு அப்போஸ்தலரும், சபைத்தலைவர்களும், திருச்சபையார் அனைவரும் தங்களில் சிலரைத் தெரிந்து, அவர்களை பவுலுடனும் பர்னபாவுடனும் அந்தியோகியாவுக்கு அனுப்பத் தீர்மானித்தார்கள். அவர்கள் இதற்கு பர்சபா எனப்பட்ட யூதாவையும் சீலாவையும் தெரிந்துகொண்டார்கள். இந்த இருவரும் சகோதரர் மத்தியில் தலைவர்களாய் இருந்தார்கள். அவர்களுடன் இவ்வாறு ஒரு கடிதத்தையும் எழுதி அனுப்பினார்கள்:
உங்கள் சகோதரர்களான அப்போஸ்தலரும், சபைத்தலைவர்களும்,
அந்தியோகியா, சீரியா, சிலிசியா ஆகிய இடங்களில் இருக்கிற யூதரல்லாத விசுவாசிகளான உங்களுக்கு எழுதுகிறதாவது:
உங்களுக்கு வாழ்த்துகள்.
எங்கள் அதிகாரம் பெறாத சிலர், எங்களிடமிருந்து புறப்பட்டு வந்தார்கள் என்றும், அவர்கள் தாங்கள் சொன்ன காரியங்களினாலே, உங்களுக்கு மனக்குழப்பத்தை உண்டாக்கி, உங்களைக் குழப்பமடையச் செய்திருக்கிறார்கள் என்றும், நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். எனவே, நாங்கள் அனைவரும் எங்களில் சிலரைத் தெரிந்தெடுத்து, எங்கள் அன்புக்குரியவர்களான பர்னபாவுடனும் பவுலுடனும் அனுப்புவதற்கு உடன்பட்டிருக்கிறோம். இவர்கள், நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பெயருக்காக உயிரையும் கொடுக்கத் துணிந்தவர்கள். எனவே, நாங்கள் எழுதுவதை வாயின் வார்த்தையினால் உறுதிப்படுத்தும்படி, யூதாவையும் சீலாவையும் அனுப்புகிறோம். கீழ்க்காணும் முக்கியமானவற்றைத் தவிர, வேறு எந்தப் பாரத்தையும் உங்கள்மேல் சுமத்தாமல் இருப்பது நலமென்று, பரிசுத்த ஆவியானவருக்கும் எங்களுக்கும் தோன்றியது: நீங்கள் இறைவன் அல்லாதவைகளுக்குப் பலியிடப்பட்ட உணவைத் தவிர்க்கவேண்டும், இரத்தத்தையும், நெரித்துக் கொல்லப்பட்ட மிருகத்தின் இறைச்சியையும் விலக்கிக்கொள்ள வேண்டும், முறைகேடான பாலுறவுகளில் ஈடுபடக்கூடாது. இவ்வாறான காரியங்களைத் தவிர்த்துக்கொள்ள எல்லா முயற்சிகளையும் செய்வது நல்லது.
உங்களுக்கு நலமுண்டாவதாக.
எனவே அவர்கள் வழியனுப்பப்பட்டு, அந்தியோகியாவுக்கு வந்தனர். அங்கே அவர்கள் திருச்சபையை ஒன்றுகூட்டி, அந்தக் கடிதத்தைக் கொடுத்தார்கள். மக்கள் அதை வாசித்து, அந்த ஊக்கப்படுத்தும் வார்த்தைகளைக்குறித்து மகிழ்ச்சி அடைந்தார்கள்.