2 தீமோத்தேயு 4:9-22

2 தீமோத்தேயு 4:9-22 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

நீ விரைவில் என்னிடம் வருவதற்கு முயற்சிசெய். ஏனெனில் தேமா, இந்த உலகத்தில் ஆசைவைத்து என்னைக் கைவிட்டு தெசலோனிக்கேயாவுக்கு போய்விட்டான். கிரேஸ்கு, கலாத்தியாவுக்கும் தீத்து தல்மாத்தியாவுக்கும் போய்விட்டார்கள். லூக்கா மட்டுமே என்னுடன் இருக்கிறான். மாற்குவையும் உன்னுடன் கூட்டிக்கொண்டு வா. ஏனெனில் அவன் எனது ஊழியத்தில் எனக்கு உதவியாயிருப்பான். நான் தீகிக்குவை எபேசுவிற்கு அனுப்பியுள்ளேன். துரோவாவிலிருக்கிற கார்ப்பு என்பவனிடத்தில் நான் விட்டுவந்த எனது மேலுடையை நீ வரும்போது கொண்டுவா. என் புத்தகச்சுருள்களையும், விசேஷமாக தோல்சுருள்களையும் கொண்டுவா. செப்புத்தொழிலாளியாகிய அலெக்சாந்தர் எனக்கு மிகவும் தீமைசெய்தான். அவனுடைய செயல்களுக்கான பிரதிபலனை கர்த்தர் அவனுக்குக் கொடுப்பார். நீயும் அவனைக்குறித்து எச்சரிக்கையாயிரு. ஏனெனில் அவன், நமது செய்தியைக் கடுமையாக எதிர்த்தான். எனது முதலாவது வழக்கு விசாரணையில் எனக்கு ஆதரவாக யாரும் வரவில்லை. எல்லோரும் என்னைக் கைவிட்டார்கள். அவர்களுக்கு எதிராக அது குற்றமாய் எண்ணப்படாதிருப்பதாக. ஆனால் கர்த்தர் என் பக்கத்தில் நின்று, எனக்குப் பெலன் கொடுத்தார். இதனால் என் மூலமாய் நற்செய்தி முழுமையாக அறிவிக்கப்பட்டதுடன், யூதரல்லாத மக்களும் அதைக் கேட்கக் கூடியதாயிருந்தது. என்னை சிங்கத்தின் வாயிலிருந்தும் விடுவித்தார். ஆம், கர்த்தர் தீயவனின் எல்லாத் தாக்குதலிலிருந்தும் என்னை விடுவித்துத் தனது பரலோக அரசுக்குள் என்னைப் பாதுகாப்பாகச் சேர்த்துக்கொள்வார். அவருக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். பிரிஸ்காளுக்கும், ஆக்கில்லாவுக்கும், ஒநேசிப்போருவின் குடும்பத்தாருக்கும் வாழ்த்துதல் சொல். எரஸ்து கொரிந்துவில் தங்கிவிட்டான். துரோப்பீமு வியாதியாய் இருந்ததால், நான் அவனை மிலேத்துவில் விட்டுவந்தேன். குளிர் காலத்திற்கு முன்பு, இங்கு வந்து சேருவதற்கு முயற்சிசெய். ஐபூலுவும், புதேஞ்சும், லீனுவும், கலவுதியாளும், மற்ற எல்லா பிரியமானவர்களும் உன்னை வாழ்த்துகிறார்கள். ஆண்டவர் உனது ஆவியோடு இருப்பாராக. கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக.

2 தீமோத்தேயு 4:9-22 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

நீ சீக்கிரமாக என்னிடத்தில் வரும்படி ஆயத்தப்படு. ஏனென்றால், தேமா இந்த உலகத்தின்மேல் ஆசைவைத்து, என்னைவிட்டுப் பிரிந்து, தெசலோனிக்கே பட்டணத்திற்குப் போய்விட்டான்; கிரெஸ்கே கலாத்தியா நாட்டிற்கும், தீத்து தல்மாத்தியா நாட்டிற்கும் போய்விட்டார்கள். லூக்காமட்டும் என்னோடு இருக்கிறான். மாற்குவை உன்னோடு அழைத்துக்கொண்டுவா; ஊழியத்தில் அவன் எனக்குப் பிரயோஜனமுள்ளவன். தீகிக்குவை நான் எபேசுவிற்கு அனுப்பினேன். துரோவா பட்டணத்திலிருக்கிற கார்ப்பு என்பவனிடத்தில் நான் வைத்துவிட்டுவந்த மேலங்கியையும், புத்தகங்களையும், விசேஷமாகத் தோல் சுருள்களையும், நீ வருகிறபோது எடுத்துக்கொண்டுவா. கன்னானாகிய அலெக்சந்தர் எனக்கு வெகு தீமைசெய்தான்; அவனுடைய செய்கைக்குத்தக்கதாகக் கர்த்தர் அவனுக்குப் பதிலளிப்பாராக. நீயும் அவனைக்குறித்து எச்சரிக்கையாக இரு; அவன் நம்முடைய வார்த்தைகளுக்கு மிகவும் எதிர்த்து நின்றவன். நான் முதல்முறை உத்தரவுசொல்ல நிற்கும்போது ஒருவனும் என்னோடுகூட இருக்கவில்லை, எல்லோரும் என்னைக் கைவிட்டார்கள்; அந்தக் குற்றம் அவர்கள்மேல் சாராதிருப்பதாக. கர்த்தரோ எனக்குத் துணையாக நின்று, என்னாலே பிரசங்கம் நிறைவேறுகிறதற்காகவும், யூதரல்லாத எல்லோரும் கேட்கிறதற்காகவும், என்னைப் பலப்படுத்தினார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் நான் காப்பாற்றப்பட்டேன். கர்த்தர் எல்லாத் தீமையிலிருந்தும் என்னை இரட்சித்து, தம்முடைய பரலோக ராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்; அவருக்கு எல்லாக் காலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். பிரிஸ்காளுக்கும் ஆக்கில்லாவிற்கும், ஒநேசிப்போருவின் குடும்பத்தினருக்கும் என் வாழ்த்துதலைச் சொல்லு. எரஸ்து கொரிந்து பட்டணத்தில் தங்கிவிட்டான்; துரோப்பீமுவை மிலேத்துவில் வியாதிப்பட்டவனாக விட்டுவந்தேன். மழைக்காலத்திற்குமுன் நீ வந்துசேரும்படி ஆயத்தப்படு. ஐபூலுவும், புதேஞ்சும், லீனுவும், கலவுதியாளும், மற்றெல்லா சகோதரர்களும் உனக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். கர்த்தராகிய இயேசுகிறிஸ்து உன் ஆவியுடனேகூட இருப்பாராக. கிருபை உங்களோடிருப்பதாக. ஆமென்.

2 தீமோத்தேயு 4:9-22 பரிசுத்த பைபிள் (TAERV)

உன்னால் எவ்வளவு விரைவில் என்னிடம் வர இயலுமோ அவ்வளவு விரைவில் வர முயற்சி செய். தேமா இந்த உலகை மிகுதியாக நேசித்தான். அதனாலேயே அவன் என்னை விட்டுப் போனான். அவன் தெசலோனிக்கே நகரத்துக்குப் போனான். கிரெஸ்கெ கலாத்தியாவுக்குப் போனான். தீத்து தல்மாத்தியாவுக்குப் போனான். லூக்கா மட்டுமே என்னோடு இருக்கிறான். நீ வரும்போது உன்னோடு மாற்குவையும் அழைத்து வா. இங்கே அவன் எனது பணிக்கு உதவியாக இருப்பான். நான் தீகிக்குவை எபேசுவுக்கு அனுப்பினேன். நான் துரோவாவில் இருந்தபோது எனது மேலங்கியை கார்ப்புவிடம் விட்டு, விட்டு வந்தேன். நீ வரும்போது அதை எடுத்து வா. எனது புத்தகங்களையும் எடுத்து வா. குறிப்பாக தோலால் ஆன என் புத்தகச்சுருளை எடுத்து வா. அவையே எனக்கு மிகவும் தேவைப்படும் ஒன்றாகும். கொல்லனாகிய அலெக்சாண்டர் எனக்கு எதிராகப் பல தீய செயல்களைச் செய்தான். அவன் செய்த செயல்களுக்கு கர்த்தர் அவனைத் தண்டிப்பார். அவன் உன்னையும் துன்புறுத்தாதபடி பார்த்துக்கொள். அவன் நம் போதனைகளை மோசமாக எதிர்த்தான். முதல் முறையாக நானே என்னைத் தற்காத்துக்கொண்டேன். எவரும் எனக்கு உதவவில்லை. எல்லோரும் விலகிவிட்டனர். அவர்களை மன்னிக்குமாறு தேவனிடம் வேண்டுகிறேன். ஆனால் கர்த்தர் என்னோடு இருந்தார். அவர் எனக்கு பலம் தந்தார். இவ்வகையில் நற்செய்தியைப் போதிக்கும் என் வேலை முழுமையாக நடைபெறும். யூதர் அல்லாதவர்கள் அனைவரும் நற்செய்தியைக் கேட்கவேண்டும் என்று கர்த்தரும் விரும்பினார். நான் சிங்கத்தின் வாயில் விழாமல் காப்பாற்றப்பட்டேன். எவராவது என்னை அழிக்க முயன்றால் கர்த்தர் என்னைக் காப்பாற்றுவார். அவர் பரலோகஇராஜ்யத்திற்கு பாதுகாப்பாகக் கொண்டுபோய் சேர்ப்பார். கர்த்தருக்கு எல்லாக் காலங்களிலும் மகிமை உண்டாவதாக. பிரிஸ்கில்லாளுக்கும், ஆக்கில்லாவுக்கும், ஓநேசிப்போரின் வீட்டாருக்கும் என் வாழ்த்துக்களைக் கூறு. கொரிந்து நகரில் எரஸ்து இருந்துவிட்டான். மிலேத்துவில் தூரோப்பீமுவை நோயாளியாக விட்டு, விட்டு வந்தேன். குளிர் காலத்துக்கு முன்னால் நீ வந்து சேருமாறு கடும் முயற்சி எடுத்துக்கொள். ஐபூலுவும், புதேஞ்சும், லீனுவும், கலவுதியாளும் கிறிஸ்துவில் உள்ள எல்லா சகோதரர்களும் உன்னை வாழ்த்துகின்றனர். உன் ஆவியோடுகூட கர்த்தர் இருப்பாராக. அவரது கிருபை உங்களோடு இருப்பதாக.

2 தீமோத்தேயு 4:9-22 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

நீ சீக்கிரமாய் என்னிடத்தில் வரும்படி ஜாக்கிரதைப்படு. ஏனென்றால், தேமா இப்பிரபஞ்சத்தின்மேல் ஆசைவைத்து, என்னைவிட்டுப் பிரிந்து, தெசலோனிக்கே பட்டணத்துக்குப் போய்விட்டான்; கிரெஸ்கே கலாத்தியா நாட்டிற்கும், தீத்து தல்மாத்தியா நாட்டிற்கும் போய்விட்டார்கள். லூக்காமாத்திரம் என்னோடே இருக்கிறான். மாற்குவை உன்னோடே கூட்டிக்கொண்டுவா; ஊழியத்தில் அவன் எனக்குப் பிரயோஜனமுள்ளவன். தீகிக்குவை நான் எபேசுவுக்கு அனுப்பினேன். துரோவா பட்டணத்திலிருக்கிற கார்ப்பு என்பவன் வசத்தில் நான் வைத்துவந்த மேலங்கியையும், புஸ்தகங்களையும், விசேஷமாய்த் தோற்சுருள்களையும், நீ வருகிறபோது எடுத்துக்கொண்டுவா. கன்னானாகிய அலெக்சந்தர் எனக்கு வெகு தீமைசெய்தான்; அவனுடைய செய்கைக்குத்தக்கதாகக் கர்த்தர் அவனுக்குப் பதிலளிப்பாராக. நீயும் அவனைக்குறித்து எச்சரிக்கையாயிரு; அவன் நம்முடைய வார்த்தைகளுக்கு மிகவும் எதிர்த்து நின்றவன். நான் முதல்விசை உத்தரவு சொல்ல நிற்கையில் ஒருவனும் என்னோடேகூட இருக்கவில்லை, எல்லாரும் என்னைக் கைவிட்டார்கள்; அந்தக் குற்றம் அவர்கள்மேல் சுமராதிருப்பதாக. கர்த்தரோ எனக்குத் துணையாக நின்று, என்னாலே பிரசங்கம் நிறைவேறுகிறதற்காகவும், புறஜாதியாரெல்லாரும் கேட்கிறதற்காகவும், என்னைப் பலப்படுத்தினார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் நான் இரட்சிக்கப்பட்டேன். கர்த்தர் எல்லாத் தீமையினின்றும் என்னை இரட்சித்து, தம்முடைய பரமராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்; அவருக்குச் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். பிரிஸ்காளுக்கும் ஆக்கில்லாவுக்கும், ஒநேசிப்போருவின் வீட்டாருக்கும் என் வாழ்த்துதலைச் சொல்லு. எரஸ்து கொரிந்துபட்டணத்தில் இருந்துவிட்டான்; துரோப்பீமுவை மிலேத்துவில் வியாதிப்பட்டவனாக விட்டுவந்தேன். மாரிகாலத்துக்குமுன் நீ வந்து சேரும்படி ஜாக்கிரதைப்படு. ஐபூலுவும், புதேஞ்சும், லீனுவும், கலவுதியாளும், மற்றெல்லாச் சகோதரரும் உனக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். கர்த்தராகிய இயேசுகிறிஸ்து உன் ஆவியுடனேகூட இருப்பாராக. கிருபை உங்களோடிருப்பதாக. ஆமென்.