தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 4

4
1தேவனுக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் முன்னால் உனக்கு ஒரு கட்டளையை இடுகிறேன். வாழ்கிறவர்கள் மத்தியிலும், இறந்தவர்கள் மத்தியிலும் நியாயம் தீர்ப்பவர் இயேசு ஒருவரே. இயேசுவுக்கென்று ஒரு இராஜ்யம் உண்டு. அவர் மீண்டும் வருவார். எனவே நான் இந்தக் கட்டளையை வழங்குகிறேன். 2மக்களிடம் நற்செய்தியைக் கூற எப்பொழுதும் தயாராக இரு. மக்களிடம் அவர்கள் செய்யவேண்டியவற்றைச் சொல். அவர்கள் தவறானவற்றைச் செய்யும்போது எடுத்துச் சொல்லி தடுத்து நிறுத்து. நல்லதைச் செய்யும்போது உற்சாகப்படுத்து. இவற்றைப் பொறுமையுடனும் கவனத்துடனும் போதி.
3மக்கள் உண்மையான போதனைகளைக் கவனிக்காத காலம் வரும். தம் ஒவ்வொரு விசித்திர விருப்பத்தையும் சந்தோஷப்படுத்தும் ஏராளமான போதகர்களை சேர்த்துக்கொள்வார்கள். அவர்களுக்கு இது விருப்பமாக இருக்கும். மக்கள் கேட்க விரும்புவதையே அவர்கள் கூறுவர். 4மக்கள் உண்மையைக் கேட்பதை நிறுத்திவிடுவர். அவர்கள் பொய்க்கதைகளைப் போதிப்பவர்களைப் பின்பற்ற ஆரம்பித்துவிடுவர். 5ஆனால் நீ எப்பொழுதும் உன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ளவேண்டும். துன்பம் வந்தாலும் அவற்றை ஏற்றுக்கொள்க. நற்செய்தியைச் சொல்லும் வேலையைச் செய்க. தேவனின் ஊழியனாக அனைத்து கடமைகளையும் செய்க.
6என் வாழ்க்கையை தேவனுக்கே காணிக்கையாகத் தந்துவிட்டேன். இங்கே என் வாழ்வு முடியும் காலம் நெருங்கி விட்டது. 7நான் போரிலே நன்றாகப் போராடியிருக்கிறேன். நான் பந்தயத்தை முடித்துவிட்டேன். நான் விசுவாசத்தைப் பாதுகாத்திருக்கிறேன். 8இப்பொழுது எனக்காக ஒரு கிரீடம் காத்திருக்கிறது. அந்த நாளில் தேவன் என்னிடம் இதைக் கொடுப்பார். கர்த்தரே நியாயம் தீர்க்கிறவர். அவர் சரியாகச் செய்வார். அந்த நாளில் அவர் எனக்குக் கிரீடத்தைத் தருவார். அவரது வருகையை விரும்பி, அவருக்காகவே காத்திருக்கிற அனைவருக்கும் அவர் கிரீடத்தைத் தருவார்.
தனிப்பட்ட வார்த்தைகள்
9உன்னால் எவ்வளவு விரைவில் என்னிடம் வர இயலுமோ அவ்வளவு விரைவில் வர முயற்சி செய். 10தேமா இந்த உலகை மிகுதியாக நேசித்தான். அதனாலேயே அவன் என்னை விட்டுப் போனான். அவன் தெசலோனிக்கே நகரத்துக்குப் போனான். கிரெஸ்கெ கலாத்தியாவுக்குப் போனான். தீத்து தல்மாத்தியாவுக்குப் போனான். 11லூக்கா மட்டுமே என்னோடு இருக்கிறான். நீ வரும்போது உன்னோடு மாற்குவையும் அழைத்து வா. இங்கே அவன் எனது பணிக்கு உதவியாக இருப்பான். 12நான் தீகிக்குவை எபேசுவுக்கு அனுப்பினேன்.
13நான் துரோவாவில் இருந்தபோது எனது மேலங்கியை கார்ப்புவிடம் விட்டு, விட்டு வந்தேன். நீ வரும்போது அதை எடுத்து வா. எனது புத்தகங்களையும் எடுத்து வா. குறிப்பாக தோலால் ஆன என் புத்தகச்சுருளை எடுத்து வா. அவையே எனக்கு மிகவும் தேவைப்படும் ஒன்றாகும்.
14கொல்லனாகிய அலெக்சாண்டர் எனக்கு எதிராகப் பல தீய செயல்களைச் செய்தான். அவன் செய்த செயல்களுக்கு கர்த்தர் அவனைத் தண்டிப்பார். 15அவன் உன்னையும் துன்புறுத்தாதபடி பார்த்துக்கொள். அவன் நம் போதனைகளை மோசமாக எதிர்த்தான்.
16முதல் முறையாக நானே என்னைத் தற்காத்துக்கொண்டேன். எவரும் எனக்கு உதவவில்லை. எல்லோரும் விலகிவிட்டனர். அவர்களை மன்னிக்குமாறு தேவனிடம் வேண்டுகிறேன். 17ஆனால் கர்த்தர் என்னோடு இருந்தார். அவர் எனக்கு பலம் தந்தார். இவ்வகையில் நற்செய்தியைப் போதிக்கும் என் வேலை முழுமையாக நடைபெறும். யூதர் அல்லாதவர்கள் அனைவரும் நற்செய்தியைக் கேட்கவேண்டும் என்று கர்த்தரும் விரும்பினார். நான் சிங்கத்தின் வாயில் விழாமல் காப்பாற்றப்பட்டேன். 18எவராவது என்னை அழிக்க முயன்றால் கர்த்தர் என்னைக் காப்பாற்றுவார். அவர் பரலோகஇராஜ்யத்திற்கு பாதுகாப்பாகக் கொண்டுபோய் சேர்ப்பார். கர்த்தருக்கு எல்லாக் காலங்களிலும் மகிமை உண்டாவதாக.
இறுதி வாழ்த்துக்கள்
19பிரிஸ்கில்லாளுக்கும், ஆக்கில்லாவுக்கும், ஓநேசிப்போரின் வீட்டாருக்கும் என் வாழ்த்துக்களைக் கூறு. 20கொரிந்து நகரில் எரஸ்து இருந்துவிட்டான். மிலேத்துவில் தூரோப்பீமுவை நோயாளியாக விட்டு, விட்டு வந்தேன். 21குளிர் காலத்துக்கு முன்னால் நீ வந்து சேருமாறு கடும் முயற்சி எடுத்துக்கொள். ஐபூலுவும், புதேஞ்சும், லீனுவும், கலவுதியாளும் கிறிஸ்துவில் உள்ள எல்லா சகோதரர்களும் உன்னை வாழ்த்துகின்றனர்.
22உன் ஆவியோடுகூட கர்த்தர் இருப்பாராக. அவரது கிருபை உங்களோடு இருப்பதாக.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 4: TAERV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்