2 தீமோத்தேயு 3:1-17

2 தீமோத்தேயு 3:1-17 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இதை நன்றாய் அறிந்துகொள்: கடைசி நாட்களில் மிகப் பயங்கரமான காலங்கள் உண்டாகும். மக்கள் தங்களில் மாத்திரம் அன்பு செலுத்துகிறவர்களாகவும், பண ஆசையுள்ளவர்களாகவும், கர்வம் உடையவர்களாகவும், பெருமையுள்ளவர்களாகவும், தூற்றித்திரிகிறவர்களாகவும், தங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியாதவர்களாகவும், நன்றி கெட்டவர்களாகவும், பரிசுத்தம் இல்லாதவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் அன்பில்லாதவர்களாகவும், மன்னிக்கும் தன்மையற்றவர்களாகவும், அவதூறு பேசுகிறவர்களாகவும், சுயக்கட்டுப்பாடு இல்லாதவர்களாகவும், மிருகத்தனமுள்ளவர்களாகவும், நன்மையை விரும்பாதவர்களாகவும் இருப்பார்கள். மேலும், துரோகம் செய்கிறவர்களாகவும், முன்யோசனை அற்றவர்களாகவும், இறுமாப்புடையவர்களாகவும், இறைவனை நேசிக்காமல், சிற்றின்பங்களை விரும்புகிறவர்களாகவும் இருப்பார்கள். வெளித்தோற்றத்தில் இறை பக்தி உள்ளவர்களாகக் காணப்படுவார்கள். ஆனால் இறை பக்தியின் வல்லமை இல்லாதவர்களாயிருப்பார்கள். இப்படிப்பட்டவர்களோடு எவ்விதத் தொடர்பும் வைக்காதே. இப்படிப்பட்டவர்கள்தான் வீடுகளுக்குள் நுழைந்து, மனவுறுதியற்ற பெண்களைத் தம்வசப்படுத்துகிறார்கள். இந்தப் பெண்களோ பாவங்கள் நிறைந்தவர்களாகவும், பலவித தகாத ஆசைகளினால் இழுபடுகிறவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்கள் எப்போதும் கற்றுக்கொள்கிறார்கள், ஆனால் ஒருபோதும் சத்தியத்தை ஏற்றுக்கொள்ள இயலாதவர்களாய் இருக்கிறார்கள். யந்நேயும் யம்பிரேயும் மோசேயை எதிர்த்து நின்றதுபோல, இந்த மனிதரும் சத்தியத்திற்கு எதிர்த்து நிற்கிறார்கள். இவர்கள் சீர்கெட்ட மனமுடையவர்கள். விசுவாசத்தைப் பொறுத்தமட்டிலோ, இவர்கள் புறக்கணிக்கப்பட்டவர்களே! ஆனாலும் இவர்கள் இப்படியே அதிக தூரம் போகமாட்டார்கள். ஏனெனில் யந்நேயுவிற்கும் யம்பிரேயுவிற்கும் நடந்ததுபோல, இவர்களுடைய மூடத்தனமும் எல்லோருக்கும் வெளிப்படும். ஆனால் நீயோ, எனது போதனைகள் எல்லாவற்றையும், எனது வாழ்க்கை முறையையும், எனது நோக்கத்தையும், விசுவாசத்தையும், பொறுமையையும், அன்பையும், சகிப்புத்தன்மையையும் அறிந்திருக்கிறாய். அந்தியோகியாவிலும், இக்கோனியாவிலும், லீஸ்திராவிலும், எனக்கு ஏற்பட்ட பலவித துன்புறுத்தல்களையும், பாடுகளையும், நான் எப்படி சகித்தேன் என்றும் நீ அறிந்திருக்கிறாய். ஆனால் அவை எல்லாவற்றிலிருந்தும், கர்த்தர் என்னை விடுவித்தார். உண்மையாகவே, கிறிஸ்து இயேசுவில் இறை பக்தியுள்ள வாழ்க்கை வாழ விரும்புகிற ஒவ்வொருவனும் துன்புறுத்தப்படுவான். ஆனால் அதேவேளையில், தீயமனிதரும், வஞ்சகர்களும் செழிப்படைவார்கள். அவர்கள் மேன்மேலும் ஏமாற்றுகிறவர்களாகவும், ஏமாற்றப்படுகிறவர்களாகவும் இருப்பார்கள். நீ கற்று நிச்சயமென்றறிந்த காரியங்களை, தொடர்ந்து கைக்கொள். ஏனெனில் அவற்றை கற்றுக்கொடுத்தவர்களையும் நீ அறிவாய். உனது குழந்தைப் பருவத்திலிருந்தே, பரிசுத்த வேதவசனங்களையும் நீ அறிந்திருக்கிறாய். அவைகள் ஒருவனை எப்படி கிறிஸ்து இயேசுவுக்குள்ளான விசுவாசத்தினாலே, இரட்சிப்பை பெற்றுக்கொள்வதற்கு ஞானமுள்ளவனாக்கும் என்று உனக்குத் தெரியும். எல்லா வேதவசனமும் இறைவனின் உயிர்மூச்சினால் கொடுக்கப்பட்டன. இவை மனிதருக்கு போதிப்பதற்கும், அவர்களைக் கண்டிப்பதற்கும், அவர்களைத் திருத்துவதற்கும், நீதியாய் வாழ பயிற்றுவிப்பதற்கும், பயனுள்ளவையாய் இருக்கின்றன. இதனால், இறைவனுடைய ஊழியக்காரன் எல்லா நல்ல செயல்களையும் செய்ய, முழுமையாக தேறினவனாகிறான்.

2 தீமோத்தேயு 3:1-17 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மேலும், கடைசிநாட்களில் கொடியகாலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியென்றால், மனிதர்கள் தற்பிரியர்களாகவும், பணப்பிரியர்களாகவும், வீம்புக்காரர்களாகவும், அகந்தை உள்ளவர்களாகவும், நிந்திக்கிறவர்களாகவும், தாய் தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாகவும், நன்றி இல்லாதவர்களாகவும், பரிசுத்தமில்லாதவர்களாகவும், மெய்யான அன்பு இல்லாதவர்களாகவும், மன்னிக்காதவர்களாகவும், அவதூறு செய்கிறவர்களாகவும், இச்சையடக்கம் இல்லாதவர்களாகவும், கொடுமை செய்கிறவர்களாகவும், நல்லவைகளை வெறுக்கிறவர்களாகவும், துரோகிகளாகவும், துணிகரம் உள்ளவர்களாகவும், இறுமாப்பு உள்ளவர்களாகவும், தேவனுக்குப் பிரியமானவர்களாக இல்லாமல் சுகபோகப்பிரியர்களாகவும், தேவ பக்தியின் வேஷத்தைத்தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாகவும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டுவிலகு. பாவங்களால் நிறைந்து, பற்பல இச்சைகளால் இழுக்கப்பட்டு, எப்போதும் கற்றாலும் ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாக இருக்கிற பெண்களுடைய வீடுகளில் இப்படிப்பட்டவர்கள் நுழைந்து, அவர்களை வசப்படுத்திக்கொள்ளுகிறார்கள். யந்நேயும் யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்துநின்றதுபோல இவர்களும் சத்தியத்திற்கு எதிர்த்துநிற்கிறார்கள்; இவர்கள் தீய சிந்தையுள்ள மனிதர்கள், விசுவாச காரியத்தில் பரீட்சைக்கு நிற்காதவர்கள். ஆனாலும், இவர்கள் அதிகமாகப் பலப்படுவதில்லை; அந்த இருவருடைய அறிவீனம் எல்லோருக்கும் வெளிப்பட்டதுபோல, இவர்களுடைய அறிவீனமும் வெளிப்படும். நீயோ என் போதகத்தையும் நடக்கையையும் நோக்கத்தையும் விசுவாசத்தையும் நீடிய சாந்தத்தையும் அன்பையும் பொறுமையையும், அந்தியோகியா, இக்கோனியா, லீஸ்திரா என்னும் பட்டணங்களில் எனக்கு உண்டான துன்பங்களையும் பாடுகளையும் நன்றாக அறிந்திருக்கிறாய்; எவ்வளவோ துன்பங்களைச் சகித்தேன்; இவைகள் எல்லாவற்றிலிருந்தும் கர்த்தர் என்னைக் காப்பாற்றினார். அன்றியும் கிறிஸ்து இயேசுவிற்குள் தேவபக்தியாக நடக்க விருப்பமாக இருக்கிற அனைவரும் துன்பப்படுவார்கள். பொல்லாதவர்களும் ஏமாற்றுகிறவர்களாகவும் மோசம்போக்குகிறவர்களாகவும், மோசம்போகிறவர்களாகவும் இருந்து மேன்மேலும் கேடுள்ளவர்களாவார்கள். நீ கற்று உறுதிசெய்துகொண்டவைகளில் நிலைத்திரு; அவைகளை யாரிடத்திலிருந்து கற்றுக்கொண்டாய் என்று நீ அறிந்திருக்கிறதுமல்லாமல், கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்பிற்கு ஏற்ற ஞானம் உள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும். வேத வாக்கியங்களெல்லாம் தேவனால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனிதன் தேறினவனாகவும், எந்த நல்லசெயல்களையும் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்திற்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாக இருக்கிறது.

2 தீமோத்தேயு 3:1-17 பரிசுத்த பைபிள் (TAERV)

இதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள், இறுதி நாட்களில் ஏராளமான தொந்தரவுகள் நேரும். அந்தக் காலங்களில் மக்கள் தம்மையும் செல்வத்தையும் மட்டுமே விரும்புவர். அவர்கள் பெருமிதத்தோடும், செருக்கோடும் இருப்பார்கள். அவர்கள் மக்களைப்பற்றி தீயவற்றையே கூறுவர். பிள்ளைகள் பெற்றோருக்கு அடிபணியமாட்டார்கள். அவர்கள் நன்றியில்லாதவர்களாவர். இரக்கமற்றவர்களாயிருப்பர். அடுத்தவர்களிடம் அன்பற்றவர்களாய் மாறிவிடுவார்கள். அவர்கள் மற்றவர்களை மன்னிக்க மறுப்பார்கள். அவர்கள் தீயவற்றையே பேசுவார்கள். அவர்கள் சுயக் கட்டுப்பாடு இல்லாமல் இருப்பர். கொடிய வன்முறையாளர்களாய் மாறி நல்லவற்றை வெறுக்கத் தொடங்குவர். இறுதி நாட்களில் மக்கள் தம் நண்பர்களுக்கே எதிராகிப்போவர். அவர்கள் சிந்தனையின்றி முட்டாள்தனமாகச் செயல்படுவர். அவர்கள் வீண்பெருமை கொண்டவர்களாகவும் துரோகிகளாகவும் இருப்பர். அவர்கள் இன்பத்தை விரும்பி, தேவனை நேசிக்காதவர்களாக இருப்பர். அவர்கள் தேவனுக்கு சேவை செய்வதுபோலத் தொடர்ந்து நடிப்பார்கள். ஆனால் அவர்கள் வாழும் வழியோ, தேவனுக்கு அவர்கள் உண்மையிலேயே சேவை செய்யவில்லை என்பதைக் காட்டிக்கொடுத்துவிடும். தீமோத்தேயுவே இவர்களிடமிருந்து விலகி இரு. சிலர் சில வீடுகளுக்குப் போய் அங்குள்ள பலவீனமும் பாவமும் உள்ள பெண்களை அடைவர். அப்பெண்கள் பாவம் நிறைந்தவர்கள். அவர்கள் செய்ய விரும்பிய பலதீய காரியங்களே அப்பெண்களைப் பாவத்தில் ஈடுபடத் தூண்டும். அப்பெண்கள் எப்போதும் புதிய போதனைகளை விரும்புவர். ஆனால் உண்மை பற்றிய அறிவைப் பெற முடியாதவர்களாக இருப்பர். யந்நேயையும், யம்பிரேயையும் நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். அவர்கள் மோசேக்கு எதிரானவர்கள். இவர்களும் அவர்களைப் போன்றே உண்மைக்கு எதிரானவர்கள். அவர்கள் குழம்பிய எண்ணமுடையவர்கள். அவர்கள் உண்மையைப் பற்றிய அறிவை அடைய தவறிவிட்டார்கள். ஆனால் அவர்கள் தம் செயலில் மேற்கொண்டு எந்த வளர்ச்சியையும் அடையமாட்டார்கள். அவர்களின் முட்டாள்தனத்தை அனைவரும் பார்ப்பர். இதுவே யந்நேயுக்கும், யம்பிரேயுக்கும் ஏற்பட்டது. ஆனால் உனக்கு என்னைப்பற்றி எல்லாம் தெரியும். நான் போதனை செய்வது பற்றியும் என் வாழ்க்கைமுறை பற்றியும் நீ அறிவாய். என் வாழ்வின் குறிக்கோள்பற்றியும் நீ அறிவாய். எனது விசுவாசம், பொறுமை, அன்பு ஆகியவற்றையும் நீ அறிவாய். நான் முயற்சியைக் கைவிடமாட்டேன் என்பதையும் அறிவாய். எனது உபத்திரவங்களையும் நான் பட்ட துன்பங்களையும் பற்றி நீ அறிந்திருக்கிறாய். அந்தியோகியா, இக்கோனியா, லீஸ்திரா ஆகிய நகரங்களில் எனக்கு ஏற்பட்டவற்றைப் பற்றியும் நீ அறிவாய். ஆனால் நான் அனுபவித்த எல்லா உபத்திரவங்களிலிருந்தும் கர்த்தர் என்னைக் காப்பாற்றி விட்டார். தேவன் விரும்புகிறபடி இயேசு கிறிஸ்துவின் வழியில் செல்கிற எவருமே இத்தகைய துன்பங்களைக் கண்டிப்பாக அனுபவிக்கவேண்டி இருக்கும். தீயவர்களும், பிறரை ஏமாற்றுகிறவர்களும் மேலும், மேலும் கெட்டுப்போவார்கள். அவர்கள் மற்றவர்களை முட்டாளாக்குவார்கள். ஆனால் அதே சமயத்தில் தம்மைத் தாமே முட்டாளாக்கிக்கொள்வார்கள். நீ அறிந்த போதனைகளின்படி தொடர்ந்து செல். அவை உண்மையான போதனைகள் என்பதை அறிந்திருக்கிறாய். ஏனெனில் அவ்விஷயங்களை உனக்குப் போதித்தவர்கள் மீது நம்பிக்கை வைக்கமுடியும் என்பதை நீ அறிவாய். நீ குழந்தைப் பருவம் முதலாகப் பரிசுத்த வேதவாக்கியங்களை அறிந்திருக்கிறாய். அவை உன்னை ஞானவானாக மாற்றும் வல்லமைகொண்டது. அந்த ஞானம் உனக்கு இயேசு கிறிஸ்துவில் கொண்ட விசுவாசம் மூலம் இரட்சிப்பைப்பெற வழிகாட்டும். அனைத்து வேதவாக்கியங்களும் தேவனால் கொடுக்கப்பட்டவை. இவை போதிக்கப் பயன்படும், வாழ்வில் தவறு செய்கின்றவர்களுக்கு வழிகாட்டும். இது தவறுகளைத் திருத்தி நல் வழியில் வாழத் துணை செய்யும். வேதவாக்கியங்களைப் பயன்படுத்தி, தேவனுக்கு சேவை செய்கிறவன், ஆயத்தமுள்ளவனாகவும், ஒவ்வொரு நல்ல வேலைக்கும் தேவையான அனைத்தையும் உடையவனாகவும் இருப்பான்.

2 தீமோத்தேயு 3:1-17 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

மேலும், கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தைத்தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு. பாவங்களால் நிறைந்து, பற்பல இச்சைகளால் இழுப்புண்டு, எப்போதும் கற்றாலும் ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாயிருக்கிற பெண்பிள்ளைகளுடைய வீடுகளில் இப்படிப்பட்டவர்கள் நுழைந்து, அவர்களை வசப்படுத்திக்கொள்ளுகிறார்கள். யந்நேயும் யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நின்றதுபோல இவர்களும் சத்தியத்துக்கு எதிர்த்து நிற்கிறார்கள்; இவர்கள் துர்ப்புத்தியுள்ள மனுஷர்கள், விசுவாசவிஷயத்தில் பரீட்சைக்கு நில்லாதவர்கள். ஆனாலும், இவர்கள் அதிகமாய்ப் பலப்படுவதில்லை; அவ்விருவருடைய மதிகேடு எல்லாருக்கும் வெளிப்பட்டதுபோல, இவர்களுடைய மதிகேடும் வெளிப்படும். நீயோ என் போதகத்தையும் நடக்கையையும் நோக்கத்தையும் விசுவாசத்தையும் நீடிய சாந்தத்தையும் அன்பையும் பொறுமையையும், அந்தியோகியா, இக்கோனியா, லீஸ்திரா என்னும் பட்டணங்களில் எனக்கு உண்டான துன்பங்களையும் பாடுகளையும் நன்றாய் அறிந்திருக்கிறாய்; எவ்வளவோ துன்பங்களைச் சகித்தேன்; இவையெல்லாவற்றினின்றும் கர்த்தர் என்னை நீங்கலாக்கிவிட்டார். அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள். பொல்லாதவர்களும் எத்தர்களுமானவர்கள் மோசம்போக்குகிறவர்களாகவும், மோசம் போகிறவர்களாகவுமிருந்து மேன்மேலும் கேடுள்ளவர்களாவார்கள். நீ கற்று நிச்சயித்துக்கொண்டவைகளில் நிலைத்திரு; அவைகளை இன்னாரிடத்தில் கற்றாய் என்று நீ அறிந்திருக்கிறதுமல்லாமல், கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும். வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ்செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.