இதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள், இறுதி நாட்களில் ஏராளமான தொந்தரவுகள் நேரும். அந்தக் காலங்களில் மக்கள் தம்மையும் செல்வத்தையும் மட்டுமே விரும்புவர். அவர்கள் பெருமிதத்தோடும், செருக்கோடும் இருப்பார்கள். அவர்கள் மக்களைப்பற்றி தீயவற்றையே கூறுவர். பிள்ளைகள் பெற்றோருக்கு அடிபணியமாட்டார்கள். அவர்கள் நன்றியில்லாதவர்களாவர். இரக்கமற்றவர்களாயிருப்பர். அடுத்தவர்களிடம் அன்பற்றவர்களாய் மாறிவிடுவார்கள். அவர்கள் மற்றவர்களை மன்னிக்க மறுப்பார்கள். அவர்கள் தீயவற்றையே பேசுவார்கள். அவர்கள் சுயக் கட்டுப்பாடு இல்லாமல் இருப்பர். கொடிய வன்முறையாளர்களாய் மாறி நல்லவற்றை வெறுக்கத் தொடங்குவர். இறுதி நாட்களில் மக்கள் தம் நண்பர்களுக்கே எதிராகிப்போவர். அவர்கள் சிந்தனையின்றி முட்டாள்தனமாகச் செயல்படுவர். அவர்கள் வீண்பெருமை கொண்டவர்களாகவும் துரோகிகளாகவும் இருப்பர். அவர்கள் இன்பத்தை விரும்பி, தேவனை நேசிக்காதவர்களாக இருப்பர். அவர்கள் தேவனுக்கு சேவை செய்வதுபோலத் தொடர்ந்து நடிப்பார்கள். ஆனால் அவர்கள் வாழும் வழியோ, தேவனுக்கு அவர்கள் உண்மையிலேயே சேவை செய்யவில்லை என்பதைக் காட்டிக்கொடுத்துவிடும். தீமோத்தேயுவே இவர்களிடமிருந்து விலகி இரு. சிலர் சில வீடுகளுக்குப் போய் அங்குள்ள பலவீனமும் பாவமும் உள்ள பெண்களை அடைவர். அப்பெண்கள் பாவம் நிறைந்தவர்கள். அவர்கள் செய்ய விரும்பிய பலதீய காரியங்களே அப்பெண்களைப் பாவத்தில் ஈடுபடத் தூண்டும். அப்பெண்கள் எப்போதும் புதிய போதனைகளை விரும்புவர். ஆனால் உண்மை பற்றிய அறிவைப் பெற முடியாதவர்களாக இருப்பர். யந்நேயையும், யம்பிரேயையும் நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். அவர்கள் மோசேக்கு எதிரானவர்கள். இவர்களும் அவர்களைப் போன்றே உண்மைக்கு எதிரானவர்கள். அவர்கள் குழம்பிய எண்ணமுடையவர்கள். அவர்கள் உண்மையைப் பற்றிய அறிவை அடைய தவறிவிட்டார்கள். ஆனால் அவர்கள் தம் செயலில் மேற்கொண்டு எந்த வளர்ச்சியையும் அடையமாட்டார்கள். அவர்களின் முட்டாள்தனத்தை அனைவரும் பார்ப்பர். இதுவே யந்நேயுக்கும், யம்பிரேயுக்கும் ஏற்பட்டது. ஆனால் உனக்கு என்னைப்பற்றி எல்லாம் தெரியும். நான் போதனை செய்வது பற்றியும் என் வாழ்க்கைமுறை பற்றியும் நீ அறிவாய். என் வாழ்வின் குறிக்கோள்பற்றியும் நீ அறிவாய். எனது விசுவாசம், பொறுமை, அன்பு ஆகியவற்றையும் நீ அறிவாய். நான் முயற்சியைக் கைவிடமாட்டேன் என்பதையும் அறிவாய். எனது உபத்திரவங்களையும் நான் பட்ட துன்பங்களையும் பற்றி நீ அறிந்திருக்கிறாய். அந்தியோகியா, இக்கோனியா, லீஸ்திரா ஆகிய நகரங்களில் எனக்கு ஏற்பட்டவற்றைப் பற்றியும் நீ அறிவாய். ஆனால் நான் அனுபவித்த எல்லா உபத்திரவங்களிலிருந்தும் கர்த்தர் என்னைக் காப்பாற்றி விட்டார். தேவன் விரும்புகிறபடி இயேசு கிறிஸ்துவின் வழியில் செல்கிற எவருமே இத்தகைய துன்பங்களைக் கண்டிப்பாக அனுபவிக்கவேண்டி இருக்கும். தீயவர்களும், பிறரை ஏமாற்றுகிறவர்களும் மேலும், மேலும் கெட்டுப்போவார்கள். அவர்கள் மற்றவர்களை முட்டாளாக்குவார்கள். ஆனால் அதே சமயத்தில் தம்மைத் தாமே முட்டாளாக்கிக்கொள்வார்கள். நீ அறிந்த போதனைகளின்படி தொடர்ந்து செல். அவை உண்மையான போதனைகள் என்பதை அறிந்திருக்கிறாய். ஏனெனில் அவ்விஷயங்களை உனக்குப் போதித்தவர்கள் மீது நம்பிக்கை வைக்கமுடியும் என்பதை நீ அறிவாய். நீ குழந்தைப் பருவம் முதலாகப் பரிசுத்த வேதவாக்கியங்களை அறிந்திருக்கிறாய். அவை உன்னை ஞானவானாக மாற்றும் வல்லமைகொண்டது. அந்த ஞானம் உனக்கு இயேசு கிறிஸ்துவில் கொண்ட விசுவாசம் மூலம் இரட்சிப்பைப்பெற வழிகாட்டும். அனைத்து வேதவாக்கியங்களும் தேவனால் கொடுக்கப்பட்டவை. இவை போதிக்கப் பயன்படும், வாழ்வில் தவறு செய்கின்றவர்களுக்கு வழிகாட்டும். இது தவறுகளைத் திருத்தி நல் வழியில் வாழத் துணை செய்யும். வேதவாக்கியங்களைப் பயன்படுத்தி, தேவனுக்கு சேவை செய்கிறவன், ஆயத்தமுள்ளவனாகவும், ஒவ்வொரு நல்ல வேலைக்கும் தேவையான அனைத்தையும் உடையவனாகவும் இருப்பான்.
வாசிக்கவும் {{புத்தகம் & அதிகாரம்}}
கேளுங்கள் தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 3
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 3:1-17
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்