2 சாமுவேல் 23:8-12

2 சாமுவேல் 23:8-12 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

தாவீதின் வலிமைவாய்ந்த வீரர்களின் பெயர்கள்: தக்கெமோனியனான யோசேப்பாசெபெத் அந்த மூவரில் முக்கியமானவன். இவன் ஒரு போர்முனையில் எண்ணூறு பேரைக் குத்திக் கொன்றான். அவனுக்கு அடுத்தாக அகோகியனான தோதோவின் மகன் எலெயாசார் என்பவன். இவன் பெலிஸ்தியர் பாஸ்தம்மீம் என்னும் இடத்தில் போருக்குக் கூடியிருந்தபோது, தாவீதுடன் இருந்து பெலிஸ்தியரை நிந்தித்த வலிமைமிக்க மூவரில் ஒருவன். அவ்வேளையில் இஸ்ரயேலர் பின்வாங்கி ஓடினார்கள். ஆனாலும் இவனே நிலைநின்று தன் கை சோர்ந்து, வாளோடு விறைத்துப் போகும்வரை பெலிஸ்தியரை வெட்டி வீழ்த்தியவன். அன்றையதினம் யெகோவா பெரும் வெற்றியைக் கொடுத்தார். போர்வீரர் எலெயாசாரிடம் திரும்பினார்கள். இறந்தவர்களிடம் கொள்ளையிட மட்டுமே அவனிடம் திரும்பி வந்தார்கள். அடுத்தவன் ஆகேயின் மகன் சம்மா என்னும் ஆராரியன். ஒருமுறை பெலிஸ்தியர் சிறுபயறு நிறைந்து விளைந்திருந்த இடத்திலே ஒன்றாகத் திரண்டிருந்தபோது இஸ்ரயேலர் அவர்களிடமிருந்து தப்பி ஓடினார்கள். ஆனால் சம்மாவோ வயல் நடுவில் நின்று தனியாக பெலிஸ்தியரை எதிர்த்து, அவர்களைக் கொன்று அதைக் காத்துக்கொண்டான். யெகோவா பெரும் வெற்றியைக் கொண்டுவந்தார்.

2 சாமுவேல் 23:8-12 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

தாவீதுக்கு இருந்த பலசாலிகளின் பெயர்கள்: தக்கெமோனியின் மகனான யோசேப்பாசெபெத் என்பவன் இராணுவ அதிகாரிகளின் தலைவன்; இவன் 800 பேரை ஒன்றாக வெட்டிப்போட்ட அதீனோஏஸ்னி ஊரைச்சேர்த்தவன். இவனுக்கு இரண்டாவது, அகோயின் மகனான தோதோவின் மகன் எலெயாசார் என்பவன்; இவன் பெலிஸ்தர்கள் யுத்தத்திற்குக் கூடின இடத்திலே இஸ்ரவேல் மனிதர்கள் போகும்போது, தாவீதோடு இருந்து பெலிஸ்தர்களை சபித்த மூன்று பலசாலிகளில் ஒருவனாக இருந்தான். இவன் எழுந்து தன்னுடைய கை சோர்ந்து, தன்னுடைய கை பட்டயத்தோடு ஒட்டிக்கொள்ளும்வரை பெலிஸ்தர்களை வெட்டினான்; அன்றையதினம் யெகோவா பெரிய இரட்சிப்பை நடத்தினார்; மக்கள் கொள்ளையிடுவதற்குமட்டும் அவனுக்குப் பின்சென்றார்கள். இவனுக்கு மூன்றாவது, ஆகேயின் மகனான சம்மா என்னும் ஆராரியன்; சிறுபயிறு நிறைந்த வயலிருந்த இடத்திலே பெலிஸ்தர்கள் ஏராளமாகக் கூடி, மக்கள் பெலிஸ்தர்களைக் கண்டு ஓடுகிறபோது, இவன் அந்த நிலத்தின் நடுவிலே நின்று அதைக் காப்பாற்றி, பெலிஸ்தர்களைக் கொன்றுபோட்டான்; அதனால் யெகோவா பெரிய இரட்சிப்பை நடத்தினார்.

2 சாமுவேல் 23:8-12 பரிசுத்த பைபிள் (TAERV)

இவை தாவீதின் பலம்பொருந்திய வீரர்களின் பெயர்கள்: தேர்ப்படை அதிகாரிகளின் தலைவன் தக்கெமோனியின் குமாரனாகிய யோசேப்பாசெபெத். அவன் அதீனோஏஸ்னி எனவும் அழைக்கப்பட்டான். யோசேப்பாசெபெத் 800 பேரை ஒரே நேரத்தில் கொன்றவன். இவனுக்குப் பின் அகோயின் குமாரனாகிய தோதோவின் குமாரன் எலெயாசார் குறிப்பிடத்தக்கவன். பெலிஸ்தரை எதிர்த்தபோது தாவீதோடிருந்த மூன்று பெரும் வீரர்களில் எலெயாசாரும் ஒருவன். அவர்கள் போருக்கு ஓரிடத்தில் குழுமியிருந்தனர். ஆனால் இஸ்ரவேல் வீரர்கள் ஓடிப்போய்விட்டனர். மிகவும் சோர்ந்துபோகும்வரைக்கும் எலெயாசார் பெலிஸ்தரோடு போரிட்டான். ஆனால் அவன் வாளை இறுகப் பிடித்துக்கொண்டு போர் செய்வதைத் தொடர்ந்தான். கர்த்தர் அன்று இஸ்ரவேலருக்குப் பெரும் வெற்றியைக் கொடுத்தார். எலெயாசார் போரில் வென்ற பிறகு பிற வீரர்கள் திரும்பி வந்தனர். மரித்த பகைவரிடமிருந்து பொருட்களைக் கொள்ளையிட அவர்கள் வந்தனர். இவனுக்குப் பிறகு சொல்லத்தக்கவன் ஆராரிலுள்ள ஆகேயின் குமாரன் சம்மா. பெலிஸ்தர் போரிட ஒன்றாகத் திரண்டு வந்தனர். சிறு பயிறு நிரம்பிய களத்தில் அவர்கள் போர் செய்தனர். பெலிஸ்தரிடமிருந்து வீரர்கள் ஓடிப்போய்விட்டனர். ஆனால் சம்மா போர்களத்தின் நடுவில் நின்று தாங்கிக்கொண்டான். அவன் பெலிஸ்தரை வென்றான். அன்று கர்த்தர் இஸ்ரவேலுக்குப் பெரும் வெற்றியைக் கொடுத்தார்.

2 சாமுவேல் 23:8-12 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

தாவீதுக்கு இருந்த பராக்கிரமசாலிகளின் நாமங்களாவன: தக்கெமோனியின் குமாரனாகிய யோசேப்பாசெபெத் என்பவன் சேர்வைக்காரரின் தலைவன்; இவன் எண்ணூறுபேர்களின்மேல் விழுந்து, அவர்களை ஒருமிக்க வெட்டிப்போட்ட அதீனோஏஸ்னி ஊரானானவன். இவனுக்கு இரண்டாவது, அகோயின் குமாரனாகிய தோதோவின் மகன் எலெயாசார் என்பவன்; இவன் பெலிஸ்தர் யுத்தத்திற்குக் கூடின ஸ்தலத்திலே இஸ்ரவேல் மனுஷர் போகையில், தாவீதோடே இருந்து பெலிஸ்தரை நிந்தித்த மூன்று பராக்கிரமசாலிகளில் ஒருவனாயிருந்தான். இவன் எழும்பித் தன் கைசலித்து, தன் கை பட்டயத்தோடு ஒட்டிக்கொள்ளுமட்டும் பெலிஸ்தரை வெட்டினான்; அன்றையதினம் கர்த்தர் பெரிய இரட்சிப்பை நடப்பித்தார்; ஜனங்கள் கொள்ளையிட மாத்திரம் அவனைப் பின்சென்றார்கள். இவனுக்கு மூன்றாவது, ஆகேயின் குமாரனாகிய சம்மா என்னும் ஆராரியன்; சிறுபயறு நிறைந்த வயலிருந்த இடத்திலே பெலிஸ்தர் ஏராளமாய்க் கூடி, ஜனங்கள் பெலிஸ்தரைக் கண்டு ஓடுகிறபோது, இவன் அந்த நிலத்தின் நடுவிலே நின்று அதைக் காப்பாற்றி, பெலிஸ்தரை மடங்கடித்துப்போட்டான்; அதனால் கர்த்தர் பெரிய இரட்சிப்பை நடப்பித்தார்.