சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 23:8-12

சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 23:8-12 TAERV

இவை தாவீதின் பலம்பொருந்திய வீரர்களின் பெயர்கள்: தேர்ப்படை அதிகாரிகளின் தலைவன் தக்கெமோனியின் குமாரனாகிய யோசேப்பாசெபெத். அவன் அதீனோஏஸ்னி எனவும் அழைக்கப்பட்டான். யோசேப்பாசெபெத் 800 பேரை ஒரே நேரத்தில் கொன்றவன். இவனுக்குப் பின் அகோயின் குமாரனாகிய தோதோவின் குமாரன் எலெயாசார் குறிப்பிடத்தக்கவன். பெலிஸ்தரை எதிர்த்தபோது தாவீதோடிருந்த மூன்று பெரும் வீரர்களில் எலெயாசாரும் ஒருவன். அவர்கள் போருக்கு ஓரிடத்தில் குழுமியிருந்தனர். ஆனால் இஸ்ரவேல் வீரர்கள் ஓடிப்போய்விட்டனர். மிகவும் சோர்ந்துபோகும்வரைக்கும் எலெயாசார் பெலிஸ்தரோடு போரிட்டான். ஆனால் அவன் வாளை இறுகப் பிடித்துக்கொண்டு போர் செய்வதைத் தொடர்ந்தான். கர்த்தர் அன்று இஸ்ரவேலருக்குப் பெரும் வெற்றியைக் கொடுத்தார். எலெயாசார் போரில் வென்ற பிறகு பிற வீரர்கள் திரும்பி வந்தனர். மரித்த பகைவரிடமிருந்து பொருட்களைக் கொள்ளையிட அவர்கள் வந்தனர். இவனுக்குப் பிறகு சொல்லத்தக்கவன் ஆராரிலுள்ள ஆகேயின் குமாரன் சம்மா. பெலிஸ்தர் போரிட ஒன்றாகத் திரண்டு வந்தனர். சிறு பயிறு நிரம்பிய களத்தில் அவர்கள் போர் செய்தனர். பெலிஸ்தரிடமிருந்து வீரர்கள் ஓடிப்போய்விட்டனர். ஆனால் சம்மா போர்களத்தின் நடுவில் நின்று தாங்கிக்கொண்டான். அவன் பெலிஸ்தரை வென்றான். அன்று கர்த்தர் இஸ்ரவேலுக்குப் பெரும் வெற்றியைக் கொடுத்தார்.