2 சாமுவேல் 16:12-23
2 சாமுவேல் 16:12-23 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
ஒருவேளை நான் படும் துன்பங்களை யெகோவா பார்த்து இன்று எனக்குக் கிடைத்த சாபத்திற்குப் பதிலாக நன்மை செய்யக்கூடும்” என்றான். ஆகவே தாவீதும் அவனோடிருந்த மனிதரும் தொடர்ந்து தம் வழியே போனார்கள். சீமேயி மலைப் பக்கமாக தாவீதிற்கு எதிர்த்திசையில் போனான். அவன் தாவீதைச் சபித்துக்கொண்டும், கல்லெறிந்து கொண்டும், தாவீதின்மேல் மண்ணை வீசிக்கொண்டும் போனான். அரசனும் அவனோடிருந்த மக்களும் களைப்புடன் தாங்கள் போகவேண்டிய இடத்தை வந்தடைந்தார்கள். அங்கே அவன் இளைப்பாறி பெலனடைந்தான். இதற்கிடையில் அப்சலோமும், இஸ்ரயேல் மனிதர்களும் எருசலேமுக்கு வந்தார்கள். அவர்களுடன் அகிதோப்பேலும் இருந்தான். அதன்பின்பு அர்கியனான ஊசாய் என்னும் தாவீதின் சிநேகிதன் அப்சலோமிடம் போய், “அரசே நீடூழி வாழ்க! அரசே நீடூழி வாழ்க!” என்று வாழ்த்தினான். அதற்கு அப்சலோம் ஊசாயிடம், “உன் நண்பனுக்கு நீ காட்டும் அன்பு இவ்வளவுதானா? உன் நண்பனோடு நீ ஏன் போகவில்லை” எனக் கேட்டான். அதற்கு, ஊசாய் அப்சலோமிடம், “அப்படியல்ல; யெகோவாவினாலும் இந்த மக்களாலும் இஸ்ரயேல் மனிதர்கள் அனைவராலும் தெரிந்துகொள்ளப்பட்டவருடனேயே நான் இருப்பேன். அவருடனேயே நான் எப்போதும் இருப்பேன். அன்றியும் நான் யாருக்குப் பணிபுரிய வேண்டும்; அவருடைய மகனுக்குப் பணிசெய்ய வேண்டாமோ? உமது தகப்பனுக்குப் பணி செய்ததுபோலவே உமக்கும் செய்வேன்” என்றான். அப்பொழுது அப்சலோம் அகிதோப்பேலிடம், “நாங்கள் என்ன செய்யவேண்டும் என நீ ஆலோசனை சொல்” என்று கேட்டான். அதற்கு அகிதோப்பேல், “அரண்மனையைப் பராமரிக்க உமது தகப்பன் வைப்பாட்டிகளை விட்டுப் போயிருக்கிறார்; அவர்களுடன் நீர் உறவு வைத்துக்கொள்ளும். இவ்வாறு நீர் செய்து உம்மை உமது தகப்பனுக்கு வெறுப்புக்குரியவனாக்கின செய்தியை இஸ்ரயேலர் எல்லோரும் கேள்விப்படுவார்கள். அப்போது உம்மோடிருப்பவர்கள் இன்னும் பெலப்படுவார்கள்” என ஆலோசனை சொன்னான். எனவே அரண்மனையின் கூரையின்மேல் அப்சலோமுக்காக ஒரு கூடாரம் அமைத்தார்கள். அப்சலோம் இஸ்ரயேல் மக்களனைவரின் முன்னிலையிலும் தன் தகப்பனின் வைப்பாட்டிகளுடன் உறவுகொண்டான். அந்நாட்களில் அகிதோப்பேலின் ஆலோசனை இறைவன் சொல்லும் ஆலோசனையைப்போல் இருந்தது. அதுபோலவே தாவீதும், அப்சலோமும் அகிதோப்பேலின் ஆலோசனைகளைக் கருதினார்கள்.
2 சாமுவேல் 16:12-23 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
ஒருவேளை யெகோவா என்னுடைய சிறுமையைப் பார்த்து, இந்த நாளில் அவன் சபித்த சாபத்திற்குப் பதிலாக எனக்கு நன்மை செய்வார் என்றான். அப்படியே தாவீதும் அவனுடைய மனிதர்களும் வழியிலே நடந்துபோனார்கள்; சீமேயியும் மலையின் பக்கத்திலே அவனுக்கு எதிராக நடந்து சபித்து, அவனுக்கு எதிராகக் கற்களை எறிந்து, மண்ணைத் தூற்றிக்கொண்டே வந்தான். ராஜாவும் அவனோடு இருந்த எல்லா மக்களும் களைத்தவர்களாக, தங்குமிடத்திலே சேர்ந்து, இளைப்பாறினார்கள். அப்சலோமும் இஸ்ரவேல் மனிதர்களான எல்லா மக்களும் அவனோடு அகித்தோப்பேலும் எருசலேமிற்கு வந்தார்கள். அற்கியனான ஊசாய் என்னும் தாவீதின் நண்பன் அப்சலோமிடத்தில் வந்தபோது, ஊசாய் அப்சலோமை நோக்கி: ராஜாவே வாழ்க, ராஜாவே வாழ்க என்றான். அப்பொழுது அப்சலோம் ஊசாயைப் பார்த்து: உன்னுடைய நண்பன்மேல் உனக்கு இருக்கிற தயவு இதுதானோ? உன்னுடைய நண்பனோடு நீ போகாமல்போனது என்ன என்று கேட்டான். அதற்கு ஊசாய் அப்சலோமை நோக்கி: அப்படி அல்ல, யெகோவாவும் இந்த மக்களும் இஸ்ரவேல் மனிதர்கள் அனைவரும் தெரிந்துகொள்ளுகிறவரோடு நான் சேர்ந்து அவரோடு இருப்பேன். இதுவும் அல்லாமல், நான் யாருக்கு பணிவிடை செய்வேன்? அவருடைய மகனிடம் தானே? உம்முடைய தகப்பனிடம் எப்படி பணிவிடை செய்தோனோ, அப்படியே உம்மிடமும் பணிவிடை செய்வேன் என்றான். அப்சலோம் அகித்தோப்பேலைப் பார்த்து, நாங்கள் செய்யவேண்டியது என்னவென்று ஆலோசனை சொல்லும் என்றான். அப்பொழுது அகித்தோப்பேல் அப்சலோமை நோக்கி: வீட்டைக்காக்க உம்முடைய தகப்பன் வைத்துப்போன அவருடைய மறுமனையாட்டிகளிடம் உறவுகொள்ளும், அப்பொழுது உம்முடைய தகப்பனால் வெறுக்கப்பட்டீர் என்பதை இஸ்ரவேலர்கள் எல்லோரும் கேள்விப்பட்டு, உம்மோடிருக்கிற எல்லோருடைய கைகளும் பெலனடையும் என்றான். அப்படியே அப்சலோமுக்கு மாடியின்மேல் ஒரு கூடாரத்தைப் போட்டார்கள்; அங்கே அப்சலோம் எல்லா இஸ்ரவேலர்களின் கண்களுக்கும் முன்பாக, தன் தகப்பனுடைய மறுமனையாட்டிகளிடத்தில் உறவுகொண்டான். அந்த நாட்களில் அகித்தோப்பேல் சொல்லும் ஆலோசனை தேவனுடைய வாக்கைப்போல இருந்தது; அப்படி அகித்தோப்பேலின் ஆலோசனையெல்லாம் தாவீதுக்கும் இருந்தது, அப்சலோமுக்கும் அப்படியே இருந்தது.
2 சாமுவேல் 16:12-23 பரிசுத்த பைபிள் (TAERV)
ஒரு வேளை கர்த்தர் தீய காரியங்கள் எனக்கு நேரிடுவதைப் பார்ப்பார். பின்பு கர்த்தர் சீமேயி சொல்லும் தீய காரியங்கள் ஒவ்வொன்றிற்கும் பதிலாக நல்லதைச் செய்யலாம்” என்றான். இவ்வாறு தாவீதும் அவனுடைய ஆட்களும் பாதையில் தொடர்ந்து நடந்துச் சென்றனர். ஆனால் சீமேயி தாவீதைப் பின் தொடர்ந்தான். மலையோரமுள்ள மறுபுறத்துப் பாதையில் சிமேயி நடந்தான். சீமேயி தீயவற்றைச் சொல்லிக்கொண்டே நடந்தான். சீமேயி கற்களையும் அழுக்கையுங்கூட தாவீதின் மீது எறிந்தான். தாவீது ராஜாவும் அவனது ஆட்களும் பகூரிம்முக்கு வந்தனர். ராஜாவும் அவனது ஆட்களும் சோர்வுற்றிருந்தனர். ஆகையால் பகூரிமில் ஓய்வெடுத்தனர். அப்சலோம், அகித்தோப்பேல் மற்றும் இஸ்ரவேலர் அனைவரும் எருசலேமுக்கு வந்தனர். தாவீதின் நண்பனாகிய அற்கியனாகிய ஊசாய் அப்சலோமிடம் வந்தான். ஊசாய் அப்சலோமிடம், “ராஜாவே! நீண்டகாலம் வாழ்க” என்றான். அப்சலோம் பதிலாக, “நீ உன் நண்பனான தாவீதுக்கு உண்மையாக இருக்கவில்லையா? எருசலேமைவிட்டு உன் நண்பனோடு ஏன் போகவில்லை?” என்று கூறினான். அதற்கு ஊசாய், “கர்த்தர் தேர்ந்தெடுக்கும் ஆளைச் சார்ந்தவன் நான். இந்த ஜனங்களும் இஸ்ரவேலரும் உம்மைத் தேர்ந்தெடுத்தனர். நான் உம்மோடு தங்குவேன். முன்பு நான் உமது தந்தைக்குப் பணியாற்றியிருக்கிறேன். ஆகவே இப்போது நான் தாவீதின் குமாரனுக்குப் பணிசெய்யவேண்டும். எனவே உமக்குப் பணி செய்வேன்” என்றான். அப்சலோம் அகித்தோப்பேலிடம், “நாம் இப்போது என்ன செய்யவேண்டுமென்று சொல்லுங்கள்” என்றான். அகித்தோப்பேல் அப்சலோமிடம், “உங்கள் தந்தையார் அவரது மனைவியரில் சிலரை இங்கிருக்கும் வீட்டைக் கவனிக்க விட்டிருந்தார். போய், அவர்களோடு பாலின உறவுக்கொள்ளுங்கள். பின்பு எல்லா இஸ்ரவேலரும் உங்கள் தந்தை உங்களை வெறுப்பதை அறிவார்கள். உங்கள் ஜனங்கள் உங்களுக்கு அதிகமான ஆதரவு காட்ட ஊக்கமடைவார்கள்” என்றான். பின்பு அவர்கள் அப்சலோமிற்காக வீட்டின் மாடியின் மீது ஒரு கூடாரத்தை அமைத்தனர். அப்சலோம் தன் தந்தையின் மனைவியரோடு பாலின உறவுக்கொண்டான். இஸ்ரவேலர் அதனைப் பார்த்தனர். அந்நேரத்தில் அகித்தோப்பேலின் உபதேசம் தாவீதுக்கும், அப்சலோமுக்கும் மிக முக்கியமானதாக இருந்தது. தேவன் மனிதனுக்குச் சொன்ன வாக்கைப்போன்று முக்கியமானதாக இருந்தது.
2 சாமுவேல் 16:12-23 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
ஒருவேளை கர்த்தர் என் சிறுமையைப் பார்த்து, இந்த நாளில் அவன் நிந்தித்த நிந்தனைக்குப் பதிலாக எனக்கு நன்மையைச் சரிக்கட்டுவார் என்றான். அப்படியே தாவீதும் அவன் மனுஷரும் வழியே நடந்துபோனார்கள்; சீமேயியும் மலையின் பக்கத்திலே அவனுக்கு எதிராக நடந்து தூஷித்து, அவனுக்கு எதிராகக் கற்களை எறிந்து, மண்ணைத் தூற்றிக்கொண்டே வந்தான். ராஜாவும் அவனோடிருந்த சகல ஜனங்களும் விடாய்த்தவர்களாய், தங்குமிடத்திலே சேர்ந்து, இளைப்பாறினார்கள். அப்சலோமும் இஸ்ரவேல் மனுஷராகிய சகல ஜனங்களும் அவனோடேகூட அகித்தோப்பேலும் எருசலேமுக்கு வந்தார்கள். அற்கியனாகிய ஊசாய் என்னும் தாவீதின் சிநேகிதன் அப்சலோமிடத்தில் வந்தபோது, ஊசாய் அப்சலோமை நோக்கி: ராஜாவே வாழ்க, ராஜாவே வாழ்க என்றான். அப்பொழுது அப்சலோம் ஊசாயைப் பார்த்து: உன் சிநேகிதன்மேல் உனக்கு இருக்கிற தயை இதுதானோ? உன் சிநேகிதனோடே நீ போகாதே போனது என்ன என்று கேட்டான். அதற்கு ஊசாய் அப்சலோமை நோக்கி: அப்படி அல்ல, கர்த்தரும் இந்த ஜனங்களும் இஸ்ரவேல் மனுஷர் அனைவரும் தெரிந்துகொள்ளுகிறவரையே நான் சேர்ந்து அவரோடே இருப்பேன். இதுவும் அல்லாமல், நான் யாரிடத்தில் சேவிப்பேன்? அவருடைய குமாரனிடத்தில் அல்லவா? உம்முடைய தகப்பனிடத்தில் எப்படி சேவித்தேனோ, அப்படியே உம்மிடத்திலும் சேவிப்பேன் என்றான். அப்சலோம் அகித்தோப்பேலைப் பார்த்து, நாங்கள் செய்யவேண்டியது இன்னதென்று ஆலோசனை சொல்லும் என்றான். அப்பொழுது அகித்தோப்பேல் அப்சலோமை நோக்கி: வீட்டைக்காக்க உம்முடைய தகப்பன் பின்வைத்த அவருடைய மறுமனையாட்டிகளிடத்தில் பிரவேசியும், அப்பொழுது உம்முடைய தகப்பனுக்கு நாற்றமாய்போனீர் என்பதை இஸ்ரவேலர் எல்லாரும் கேள்விப்பட்டு, உம்மோடிருக்கிற எல்லாருடைய கைகளும் பலக்கும் என்றான். அப்படியே அப்சலோமுக்கு உப்பரிகையின்மேல் ஒரு கூடாரத்தைப் போட்டார்கள்; அங்கே அப்சலோம் சகல இஸ்ரவேலரின் கண்களுக்கு முன்பாக, தன் தகப்பனுடைய மறுமனையாட்டிகளிடத்தில் பிரவேசித்தான். அந்நாட்களில் அகித்தோப்பேல் சொல்லும் ஆலோசனை தேவனுடைய வாக்கைப்போல இருந்தது; அப்படி அகித்தோப்பேலின் ஆலோசனையெல்லாம் தாவீதுக்கும் இருந்தது, அப்சலோமுக்கும் அப்படியே இருந்தது.