சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 16:12-23

சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 16:12-23 TAERV

ஒரு வேளை கர்த்தர் தீய காரியங்கள் எனக்கு நேரிடுவதைப் பார்ப்பார். பின்பு கர்த்தர் சீமேயி சொல்லும் தீய காரியங்கள் ஒவ்வொன்றிற்கும் பதிலாக நல்லதைச் செய்யலாம்” என்றான். இவ்வாறு தாவீதும் அவனுடைய ஆட்களும் பாதையில் தொடர்ந்து நடந்துச் சென்றனர். ஆனால் சீமேயி தாவீதைப் பின் தொடர்ந்தான். மலையோரமுள்ள மறுபுறத்துப் பாதையில் சிமேயி நடந்தான். சீமேயி தீயவற்றைச் சொல்லிக்கொண்டே நடந்தான். சீமேயி கற்களையும் அழுக்கையுங்கூட தாவீதின் மீது எறிந்தான். தாவீது ராஜாவும் அவனது ஆட்களும் பகூரிம்முக்கு வந்தனர். ராஜாவும் அவனது ஆட்களும் சோர்வுற்றிருந்தனர். ஆகையால் பகூரிமில் ஓய்வெடுத்தனர். அப்சலோம், அகித்தோப்பேல் மற்றும் இஸ்ரவேலர் அனைவரும் எருசலேமுக்கு வந்தனர். தாவீதின் நண்பனாகிய அற்கியனாகிய ஊசாய் அப்சலோமிடம் வந்தான். ஊசாய் அப்சலோமிடம், “ராஜாவே! நீண்டகாலம் வாழ்க” என்றான். அப்சலோம் பதிலாக, “நீ உன் நண்பனான தாவீதுக்கு உண்மையாக இருக்கவில்லையா? எருசலேமைவிட்டு உன் நண்பனோடு ஏன் போகவில்லை?” என்று கூறினான். அதற்கு ஊசாய், “கர்த்தர் தேர்ந்தெடுக்கும் ஆளைச் சார்ந்தவன் நான். இந்த ஜனங்களும் இஸ்ரவேலரும் உம்மைத் தேர்ந்தெடுத்தனர். நான் உம்மோடு தங்குவேன். முன்பு நான் உமது தந்தைக்குப் பணியாற்றியிருக்கிறேன். ஆகவே இப்போது நான் தாவீதின் குமாரனுக்குப் பணிசெய்யவேண்டும். எனவே உமக்குப் பணி செய்வேன்” என்றான். அப்சலோம் அகித்தோப்பேலிடம், “நாம் இப்போது என்ன செய்யவேண்டுமென்று சொல்லுங்கள்” என்றான். அகித்தோப்பேல் அப்சலோமிடம், “உங்கள் தந்தையார் அவரது மனைவியரில் சிலரை இங்கிருக்கும் வீட்டைக் கவனிக்க விட்டிருந்தார். போய், அவர்களோடு பாலின உறவுக்கொள்ளுங்கள். பின்பு எல்லா இஸ்ரவேலரும் உங்கள் தந்தை உங்களை வெறுப்பதை அறிவார்கள். உங்கள் ஜனங்கள் உங்களுக்கு அதிகமான ஆதரவு காட்ட ஊக்கமடைவார்கள்” என்றான். பின்பு அவர்கள் அப்சலோமிற்காக வீட்டின் மாடியின் மீது ஒரு கூடாரத்தை அமைத்தனர். அப்சலோம் தன் தந்தையின் மனைவியரோடு பாலின உறவுக்கொண்டான். இஸ்ரவேலர் அதனைப் பார்த்தனர். அந்நேரத்தில் அகித்தோப்பேலின் உபதேசம் தாவீதுக்கும், அப்சலோமுக்கும் மிக முக்கியமானதாக இருந்தது. தேவன் மனிதனுக்குச் சொன்ன வாக்கைப்போன்று முக்கியமானதாக இருந்தது.