2 சாமுவேல் 11:2-17

2 சாமுவேல் 11:2-17 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஒருநாள் சாயங்காலத்தில் தாவீது தன் படுக்கையிலிருந்து எழுந்து, அரமனை உப்பரிகையின்மேல் உலாத்திக்கொண்டிருக்கும்போது, ஸ்நானம்பண்ணுகிற ஒரு ஸ்திரீயை உப்பரிகையின் மேலிருந்து கண்டான்; அந்த ஸ்திரீ வெகு சௌந்தரவதியாயிருந்தாள். அப்பொழுது தாவீது, அந்த ஸ்திரீ யார் என்று விசாரிக்க ஆள் அனுப்பினான்; அவள் எலியாமின் குமாரத்தியும், ஏத்தியனான உரியாவின் மனைவியுமாகிய பத்சேபாள் என்றார்கள். அப்பொழுது தாவீது ஆள் அனுப்பி அவளை அழைத்துவரச் சொன்னான்; அவள் அவனிடத்தில் வந்தபோது, அவளோடே சயனித்தான்; பிற்பாடு அவள் தன் தீட்டு நீங்கும்படி சுத்திகரித்துக்கொண்டு தன் வீட்டுக்குப் போனாள். அந்த ஸ்திரீ கர்ப்பம் தரித்து, தான் கர்ப்பவதியென்று தாவீதுக்கு அறிவிக்கும்படி ஆள் அனுப்பினாள். அப்பொழுது தாவீது: ஏத்தியனாகிய உரியாவை என்னிடத்தில் அனுப்பு என்று யோவாபினண்டைக்கு ஆள் அனுப்பினான்; அப்படியே யோவாப் உரியாவைத் தாவீதினிடத்திற்கு அனுப்பினான். உரியா அவனிடத்தில் வந்தபோது, தாவீது அவனைப் பார்த்து: யோவாப் சுகமாயிருக்கிறானா, ஜனங்கள் சுகமாயிருக்கிறார்களா, யுத்தத்தின் செய்தி நற்செய்தியா என்று விசாரித்தான். பின்பு தாவீது உரியாவை நோக்கி: நீ உன் வீட்டிற்குப் போய், பாதசுத்தி செய் என்றான்; உரியா ராஜ அரமனையிலிருந்து புறப்பட்டபோது, ராஜாவினிடத்திலிருந்து உச்சிதமான பதார்த்தங்கள் அவன் பின்னாலே அனுப்பப்பட்டது. ஆனாலும் உரியா தன் வீட்டிற்குப் போகாமல், ராஜ அரமனையின் வாசலிலே தன் ஆண்டவனுடைய எல்லாச் சேவகரோடுங்கூட படுத்துக்கொண்டிருந்தான். உரியா தன் வீட்டிற்குப் போகவில்லையென்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, தாவீது உரியாவை நோக்கி: நீ பயணத்திலிருந்து வந்தவன் அல்லவா, நீ உன் வீட்டிற்குப் போகாதிருக்கிறது என்ன என்று கேட்டான். உரியா தாவீதை நோக்கி: பெட்டியும் இஸ்ரவேலும் யூதாவும் கூடாரங்களிலே தங்கி, என் ஆண்டவனாகிய யோவாபும் என் ஆண்டவனின் சேவகரும் வெளியிலே பாளயமிறங்கியிருக்கையில், நான் புசிக்கிறதற்கும், குடிக்கிறதற்கும், என் மனைவியோடே சயனிக்கிறதற்கும், என் வீட்டுக்குள் பிரவேசிப்பேனா? நான் அப்படிச் செய்கிறதில்லை என்று உம்முடையபேரிலும் உம்முடைய ஆத்துமாவின்பேரிலும் ஆணையிட்டுச் சொல்லுகிறேன் என்றான். அப்பொழுது தாவீது உரியாவை நோக்கி: இன்றைக்கும் நீ இங்கேயிரு; நாளைக்கு உன்னை அனுப்பிவிடுவேன் என்றான்; அப்படியே உரியா அன்றும் மறுநாளும் எருசலேமில் இருந்தான். தாவீது அவனைத் தனக்கு முன்பாகப் புசித்துக் குடிக்கிறதற்கு அழைத்து, அவனை வெறிக்கப்பண்ணினான்; ஆனாலும் அவன் தன் வீட்டுக்குப் போகாமல், சாயங்காலத்திலே தன் ஆண்டவனின் சேவகரோடே தன் படுக்கையிலே படுத்துக்கொண்டான். காலமே தாவீது யோவாபுக்கு ஒரு நிருபத்தை எழுதி, உரியாவின் கையில் கொடுத்து அனுப்பினான். அந்த நிருபத்திலே மும்முரமாய் நடக்கிற போர்முகத்திலே நீங்கள் உரியாவை நிறுத்தி, அவன் வெட்டுண்டு சாகும்படிக்கு, அவனை விட்டுப் பின்வாங்குங்கள் என்று எழுதியிருந்தான். அப்படியே யோவாப் அந்தப் பட்டணத்தைச் சூழக் காவல்போட்டிருக்கையில் பராக்கிரமசாலிகள் இருக்கிறார்கள் என்று தான் அறிந்த இடத்தில் உரியாவை நிறுத்தினான். பட்டணத்து மனுஷர் புறப்பட்டு வந்து யோவாபோடே யுத்தம்பண்ணுகையில், தாவீதின் சேவகராகிய ஜனத்தில் சிலர் பட்டார்கள்; ஏத்தியனாகிய உரியாவும் செத்தான்.

2 சாமுவேல் 11:2-17 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஒரு மாலைவேளையில் தாவீது தன் படுக்கையிலிருந்து எழுந்து அரண்மனை மாடத்தில் உலாவிக்கொண்டிருந்தான். மாடத்திலிருந்து ஒரு பெண் குளித்துக் கொண்டிருப்பதைக் கண்டான். அந்தப் பெண் மிக அழகானவளாக இருந்தாள். எனவே தாவீது அவளைப்பற்றி அறிந்துவரும்படி ஒருவனை அனுப்பினான். அந்த மனிதன் தாவீதிடம், “அவள் எலியாமின் மகளும், ஏத்தியனான உரியாவின் மனைவியுமான பத்சேபாள் அல்லவா” என்றான். அப்பொழுது தாவீது அவளை அழைத்துவரும்படி தூதுவர்களை அனுப்பினான். அவள் வந்ததும் தாவீது அவளுடன் உடலுறவு கொண்டான். அவள் தன்னுடைய மாத விலக்கிலிருந்து தன்னைச் சுத்திகரித்துக்கொண்டு வந்திருந்தாள். அவள் தன் வீட்டுக்குப் போனாள். அதன்பின் அந்தப் பெண் கருவுற்று, “நான் கர்ப்பவதியாயிருக்கிறேன்” என தாவீதுக்குச் சொல்லியனுப்பினாள். தாவீது யோவாபுக்கு ஆளனுப்பி, “ஏத்தியனான உரியாவை என்னிடம் அனுப்பு” எனச் சொல்லும்படி சொன்னான். அதன்படியே யோவாப் அவனைத் தாவீதிடம் அனுப்பினான். உரியா தாவீதிடம் வந்தபோது தாவீது அவனிடம், யோவாப் எப்படியிருக்கிறான் என்றும், யுத்த வீரர் எப்படியிருக்கிறார்கள் என்றும், யுத்தம் எப்படி நடக்கிறது என்றும் விசாரித்தான். பின் தாவீது உரியாவிடம், “உன் வீட்டிற்குப்போய் ஓய்வெடுத்து உன் மனைவியுடன் மகிழ்ந்திரு” என்று சொன்னான். எனவே உரியா அரண்மனையை விட்டு புறப்பட்டான். அவனுக்குப்பின்னே அரசனால் அவன் வீட்டுக்கு ஒரு அன்பளிப்பு அனுப்பப்பட்டது. ஆனால் உரியாவோ தன் வீட்டிற்குப் போகாமல் அரண்மனை வாசலில் தன் எஜமானின் பணியாட்களுடன் படுத்திருந்தான். “உரியா வீட்டிற்குப் போகவில்லை” என்று தாவீதிற்கு அறிவித்தார்கள்; அப்பொழுது தாவீது உரியாவிடம், “நீ வெகுதூரத்திலிருந்து வந்தவனல்லவா? ஏன் உன் வீட்டிற்குப் போகவில்லை?” எனக் கேட்டான். அப்பொழுது உரியா தாவீதிடம், “இஸ்ரயேல் மக்களும், யூதா மக்களும் உடன்படிக்கைப் பெட்டியுடன் கூடாரங்களில் தங்கியிருக்கிறார்கள். என் தலைவனாகிய யோவாபும் என் அரசரின் வீரரும் வயல்வெளிகளிலே முகாமிட்டிருக்கிறார்கள். அப்படியிருக்க நான் சாப்பிடவும், குடிக்கவும், என் மனைவியுடனிருக்கவும் எப்படி என் வீட்டிற்குப் போவேன். நீர் வாழ்வது நிச்சயம்போலவே அப்படியான செயலை ஒருபோதும் நான் செய்யமாட்டேன் என்பதும் நிச்சயம்” என்றான். அதற்குத் தாவீது அவனிடம், “இன்னும் ஒரு நாள் இங்கே தங்கியிரு; நாளைக்கு நான் உன்னை திருப்பி அனுப்புவேன்” என்றான். எனவே உரியா அன்றும், மறுநாளும் எருசலேமில் தங்கியிருந்தான். தாவீதின் அழைப்பிற்கிணங்கி உரியா அவனுடன் சாப்பிட்டு, குடித்தான். தாவீது அவனை வெறியடையச் செய்தான். ஆனாலும் அன்று மாலையும் அவன் தன் வீட்டிற்குப் போகாமல் தன் தலைவனுடைய பணியாட்களுடனே தனது படுக்கையில் படுத்துக்கொண்டான். அதிகாலையில் தாவீது ஒரு கடிதத்தை யோவாபுக்கு எழுதி உரியாவிடம் கொடுத்து அனுப்பினான். அக்கடிதத்தில், “போர் கடுமையாக நடக்கும்போது முன்னணியில் உரியாவை நிறுத்து; அவன் வெட்டுண்டு சாகும்படி அங்கே அவனைவிட்டு நீங்கள் பின்வாங்குங்கள்” என்று எழுதினான். அப்படியே பட்டணத்தை யோவாப் முற்றுகையிட்டுக் கொண்டிருந்தபோது, தனக்குத் தெரிந்தபடி அப்பட்டணத்தின் வலிமைமிக்க பாதுகாப்பு வீரர் நிற்கும் இடத்தில் உரியாவை நிறுத்தினான். பட்டணத்திற்குள் இருந்த வீரர் வெளியே வந்து யோவாபுக்கு எதிராகப் போரிட்டபோது, தாவீதின் வீரர்களில் சிலர் இறந்தார்கள்; அவர்களுடன் ஏத்தியனான உரியாவும் செத்தான்.

2 சாமுவேல் 11:2-17 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஒருநாள் மாலையில் தாவீது தன்னுடைய படுக்கையிலிருந்து எழுந்து, அரண்மனை மாடியின்மேல் உலாவிக்கொண்டிருக்கும்போது, குளிக்கிற ஒரு பெண்ணை மாடியின் மேலிருந்து பார்த்தான்; அந்த பெண் மிக அழகுள்ளவளாக இருந்தாள். அப்பொழுது தாவீது, அந்த பெண் யார் என்று விசாரிக்க ஆள் அனுப்பினான்; அவள் எலியாமின் மகளும், ஏத்தியனான உரியாவின் மனைவியுமான பத்சேபாள் என்றார்கள். அப்பொழுது தாவீது ஆள் அனுப்பி அவளை அழைத்துவரச் சொன்னான்; அவள் அவனிடம் வந்தபோது, அவளோடு உறவுகொண்டான்; பின்பு அவள் தன்னுடைய தீட்டு நீங்கும்படி சுத்திகரித்துக்கொண்டு தன்னுடைய வீட்டிற்குப் போனாள். அந்தப் பெண் கர்ப்பமடைந்து, தான் கர்ப்பவதியென்று தாவீதுக்கு அறிவிக்கும்படி ஆள் அனுப்பினாள். அப்பொழுது தாவீது: ஏத்தியனான உரியாவை என்னிடத்தில் அனுப்பு என்று யோவாபினிடம் ஆள் அனுப்பினான்; அப்படியே யோவாப் உரியாவைத் தாவீதிடம் அனுப்பினான். உரியா அவனிடம் வந்தபோது, தாவீது அவனைப் பார்த்து: யோவாப் சுகமாயிருக்கிறானா, மக்கள் சுகமாக இருக்கிறார்களா, யுத்தத்தின் செய்தி நற்செய்தியா என்று விசாரித்தான். பின்பு தாவீது உரியாவை நோக்கி: நீ உன்னுடைய வீட்டிற்குப் போய், கால்களை கழுவு என்றான்; உரியா ராஜாவின் அரண்மனையிலிருந்து புறப்பட்டபோது, ராஜாவிடமிருந்து ராஜ உணவு அவன் பின்னாலே அனுப்பப்பட்டது. ஆனாலும் உரியா தன்னுடைய வீட்டிற்குப் போகாமல், ராஜ அரண்மனையின் வாசலிலே தன் ஆண்டவனுடைய எல்லா வீரர்களோடும் படுத்துக்கொண்டிருந்தான். உரியா தன்னுடைய வீட்டிற்குப் போகவில்லையென்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, தாவீது உரியாவை நோக்கி: நீ பயணத்திலிருந்து வந்தவன் அல்லவா, நீ உன்னுடைய வீட்டிற்குப் போகாமல் இருக்கிறது என்ன என்று கேட்டான். உரியா தாவீதை நோக்கி: பெட்டியும் இஸ்ரவேலும் யூதாவும் கூடாரங்களிலே தங்கி, என்னுடைய ஆண்டவனான யோவாபும் என்னுடைய ஆண்டவனின் வீரர்களும் வெளியிலே முகாமிட்டிருக்கும்போது, நான் சாப்பிடுவதற்கும், குடிக்கிறதற்கும், என்னுடைய மனைவியோடு உறங்கவும், என்னுடைய வீட்டிற்குள் நுழைவேனா? நான் அப்படிச் செய்கிறதில்லை என்று உம்முடையபேரிலும் உம்முடைய ஆத்துமாவின்பேரிலும் ஆணையிட்டுச் சொல்லுகிறேன் என்றான். அப்பொழுது தாவீது உரியாவை நோக்கி: இன்றைக்கும் நீ இங்கேயே இரு; நாளைக்கு உன்னை அனுப்பிவிடுவேன் என்றான்; அப்படியே உரியா அன்றும் மறுநாளும் எருசலேமில் இருந்தான். தாவீது அவனைத் தனக்கு முன்பாக சாப்பிட்டுக் குடிக்கிறதற்கு அழைத்து, அவனுக்கு போதை உண்டாக்கினான்; ஆனாலும் அவன் தன்னுடைய வீட்டிற்குப் போகாமல், மாலையில் தன்னுடைய ஆண்டவனின் வீரர்களோடு தன்னுடைய படுக்கையிலே படுத்துக்கொண்டான். காலையில் தாவீது யோவாபுக்கு ஒரு கடிதத்தை எழுதி, உரியாவின் கையில் கொடுத்து அனுப்பினான். அந்தக் கடிதத்திலே கடுமையாக யுத்தம் நடக்கிற இடத்திலே நீங்கள் உரியாவை நிறுத்தி, அவன் வெட்டப்பட்டு சாகும்படி, அவனைவிட்டுப் பின்வாங்குங்கள் என்று எழுதியிருந்தான். அப்படியே யோவாப் அந்தப் பட்டணத்தைச் சுற்றி காவல்போட்டிருக்கும்போது பெலசாலிகள் இருக்கிறார்கள் என்று தான் அறிந்த இடத்தில் உரியாவை நிறுத்தினான். பட்டணத்தின் மனிதர்கள் புறப்பட்டுவந்து யோவாபோடு யுத்தம் செய்யும்போது, தாவீதின் வீரர்களான மக்களில் சிலர் விழுந்து இறந்தார்கள்; ஏத்தியனான உரியாவும் இறந்தான்.

2 சாமுவேல் 11:2-17 பரிசுத்த பைபிள் (TAERV)

சாயங்காலத்தில் அவன் படுக்கையிலிருந்து எழுந்து அரண்மனையின் மேல் மாடியில் உலாவிக்கொண்டிருந்தான். அவன் மாடியிலிருந்தபோது குளித்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணைப் பார்த்தான். அவள் மிகுந்த அழகியாயிருந்தாள். உடனே தாவீது தனது அதிகாரிகளை அழைத்து அப்பெண் யாரென விசாரித்தான். ஒரு அதிகாரி, “அப்பெண், எலியாமின் குமாரத்தியாகிய பத்சேபாள், அவள் ஏத்தியனாகிய உரியாவின் மனைவி” என்றான். தாவீது பத்சேபாளைத் தன்னிடம் அழைத்து வருவதற்காக ஆட்களை அனுப்பினான். அவள் தாவீதிடம் வந்தபோது தாவீது அவளோடு பாலின உறவுகொண்டான். அவள் தன் தீட்டுக்கழிய குளித்தப் பின்பு தன்னுடைய வீட்டிற்குச் சென்றாள். ஆனால் பத்சேபாள் கருவுற்றாள். அதனை தாவீதுக்குச் சொல்லியனுப்பி, “நான் கருவுற்றிருக்கிறேன்” எனத் தெரிவித்தாள். தாவீது யோவாபுக்கு, “ஏத்தியனாகிய உரியாவை என்னிடம் அனுப்பு” என்று சொல்லியனுப்பினான். எனவே யோவாப் உரியாவை தாவீதிடம் அனுப்பினான். உரியா தாவீதிடம் வந்தான். தாவீது உரியாவிடம், “யோவாப் நலமா, வீரர்கள் நலமா, யுத்தம் எப்படி நடக்கிறது?” என்று விசாரித்தான். பின்பு தாவீது உரியாவை நோக்கி, “நீ வீட்டிற்குப் போய் ஓய்வெடுத்துக்கொள்” என்றான். ராஜாவின் அரண்மனையிலிருந்து உரியா புறப்பட்டான். ராஜாவும் அவனுக்கு பரிசுக் கொடுத்து அனுப்பினான். ஆனால் உரியா தன் வீட்டிற்குப் போகவில்லை. வாசலுக்கு வெளியே ராஜாவின் பிற பணியாட்கள் செய்ததைப் போலவே அவனும் அங்குத் தூங்கினான். காவலர்கள் தாவீதை நோக்கி, “உரியா வீட்டிற்குப் போகவில்லை” என்றனர். தாவீது உரியாவிடம், “நீ நீண்ட பயணம் செய்து வந்திருக்கிறாய் அல்லவா? ஏன் வீட்டிற்குப் போகவில்லை?” என்று கேட்டான். உரியா தாவீதை நோக்கி, “பரிசுத்தப் பெட்டியும், இஸ்ரவேல் யூதாவின் வீரர்களும் கூடாரங்களில் தங்கியுள்ளனர். எனது ஆண்டவனாகிய யோவாபும், என் ஆண்டவருடைய (தாவீதின்) அதிகாரிகளும் வெளியே முகாமிட்டுத் தங்கி இருக்கின்றனர். எனவே வீட்டிற்குச் சென்று உண்டு குடித்து மனைவியோடு உறவு கொள்வது எனக்கு முறையன்று” என்றான். தாவீது உரியாவிடம், “நீ இன்று இங்கே தங்கியிரு. நாளை உன்னைப் போருக்கு அனுப்புகிறேன்” என்றான். உரியா மறுநாள் காலைவரை எருசலேமில் தங்கியிருந்தான். அப்போது தாவீது தன்னை வந்து பார்க்கும்படி உரியாவுக்குச் சொல்லியனுப்பினான். உரியா தாவீதுடன் உண்டு குடித்தான். தாவீது உரியாவைக் குடிபோதையில் மூழ்கும்படிச் செய்தான். அப்போதும் உரியா வீட்டிற்குப் போகவில்லை. பதிலாக ராஜாவின் பணியாட்களோடு வீட்டிற்கு வெளியே உரியா தூங்கச் சென்றான். மறுநாள், காலையில் தாவீது யோவாபுக்கு ஒரு கடிதம் எழுதினான். அதை உரியாவிடம் கொடுத்து அனுப்பினான். கடிதத்தில் தாவீது, “உரியாவைக் கடும் போர் நடக்கும் யுத்தமுனையில் தனித்து நிறுத்து. போரில் அவன் கொல்லப்படட்டும்” என்றான். யோவாப் பலசாலிகளான அம்மோனியர் இருக்கும் இடத்தைக் கவனித்தான். உரியாவை அங்கு அனுப்பினான். ரப்பா நகரத்தின் ஆட்கள் யோவாபை எதிர்த்து போரிட வந்தனர். அப்போது தாவீதின் ஆட்களில் சிலர் கொல்லப்பட்டனர். ஏத்தியனாகிய உரியாவும் அவர்களில் ஒருவன்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்