சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 11:2-17

சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 11:2-17 TAERV

சாயங்காலத்தில் அவன் படுக்கையிலிருந்து எழுந்து அரண்மனையின் மேல் மாடியில் உலாவிக்கொண்டிருந்தான். அவன் மாடியிலிருந்தபோது குளித்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணைப் பார்த்தான். அவள் மிகுந்த அழகியாயிருந்தாள். உடனே தாவீது தனது அதிகாரிகளை அழைத்து அப்பெண் யாரென விசாரித்தான். ஒரு அதிகாரி, “அப்பெண், எலியாமின் குமாரத்தியாகிய பத்சேபாள், அவள் ஏத்தியனாகிய உரியாவின் மனைவி” என்றான். தாவீது பத்சேபாளைத் தன்னிடம் அழைத்து வருவதற்காக ஆட்களை அனுப்பினான். அவள் தாவீதிடம் வந்தபோது தாவீது அவளோடு பாலின உறவுகொண்டான். அவள் தன் தீட்டுக்கழிய குளித்தப் பின்பு தன்னுடைய வீட்டிற்குச் சென்றாள். ஆனால் பத்சேபாள் கருவுற்றாள். அதனை தாவீதுக்குச் சொல்லியனுப்பி, “நான் கருவுற்றிருக்கிறேன்” எனத் தெரிவித்தாள். தாவீது யோவாபுக்கு, “ஏத்தியனாகிய உரியாவை என்னிடம் அனுப்பு” என்று சொல்லியனுப்பினான். எனவே யோவாப் உரியாவை தாவீதிடம் அனுப்பினான். உரியா தாவீதிடம் வந்தான். தாவீது உரியாவிடம், “யோவாப் நலமா, வீரர்கள் நலமா, யுத்தம் எப்படி நடக்கிறது?” என்று விசாரித்தான். பின்பு தாவீது உரியாவை நோக்கி, “நீ வீட்டிற்குப் போய் ஓய்வெடுத்துக்கொள்” என்றான். ராஜாவின் அரண்மனையிலிருந்து உரியா புறப்பட்டான். ராஜாவும் அவனுக்கு பரிசுக் கொடுத்து அனுப்பினான். ஆனால் உரியா தன் வீட்டிற்குப் போகவில்லை. வாசலுக்கு வெளியே ராஜாவின் பிற பணியாட்கள் செய்ததைப் போலவே அவனும் அங்குத் தூங்கினான். காவலர்கள் தாவீதை நோக்கி, “உரியா வீட்டிற்குப் போகவில்லை” என்றனர். தாவீது உரியாவிடம், “நீ நீண்ட பயணம் செய்து வந்திருக்கிறாய் அல்லவா? ஏன் வீட்டிற்குப் போகவில்லை?” என்று கேட்டான். உரியா தாவீதை நோக்கி, “பரிசுத்தப் பெட்டியும், இஸ்ரவேல் யூதாவின் வீரர்களும் கூடாரங்களில் தங்கியுள்ளனர். எனது ஆண்டவனாகிய யோவாபும், என் ஆண்டவருடைய (தாவீதின்) அதிகாரிகளும் வெளியே முகாமிட்டுத் தங்கி இருக்கின்றனர். எனவே வீட்டிற்குச் சென்று உண்டு குடித்து மனைவியோடு உறவு கொள்வது எனக்கு முறையன்று” என்றான். தாவீது உரியாவிடம், “நீ இன்று இங்கே தங்கியிரு. நாளை உன்னைப் போருக்கு அனுப்புகிறேன்” என்றான். உரியா மறுநாள் காலைவரை எருசலேமில் தங்கியிருந்தான். அப்போது தாவீது தன்னை வந்து பார்க்கும்படி உரியாவுக்குச் சொல்லியனுப்பினான். உரியா தாவீதுடன் உண்டு குடித்தான். தாவீது உரியாவைக் குடிபோதையில் மூழ்கும்படிச் செய்தான். அப்போதும் உரியா வீட்டிற்குப் போகவில்லை. பதிலாக ராஜாவின் பணியாட்களோடு வீட்டிற்கு வெளியே உரியா தூங்கச் சென்றான். மறுநாள், காலையில் தாவீது யோவாபுக்கு ஒரு கடிதம் எழுதினான். அதை உரியாவிடம் கொடுத்து அனுப்பினான். கடிதத்தில் தாவீது, “உரியாவைக் கடும் போர் நடக்கும் யுத்தமுனையில் தனித்து நிறுத்து. போரில் அவன் கொல்லப்படட்டும்” என்றான். யோவாப் பலசாலிகளான அம்மோனியர் இருக்கும் இடத்தைக் கவனித்தான். உரியாவை அங்கு அனுப்பினான். ரப்பா நகரத்தின் ஆட்கள் யோவாபை எதிர்த்து போரிட வந்தனர். அப்போது தாவீதின் ஆட்களில் சிலர் கொல்லப்பட்டனர். ஏத்தியனாகிய உரியாவும் அவர்களில் ஒருவன்.