2 இராஜாக்கள் 4:8-36

2 இராஜாக்கள் 4:8-36 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஒரு நாள் எலிசா சூனேம் என்ற ஊருக்குப் போனான். அங்கு ஒரு செல்வம் மிகுந்த பெண் இருந்தாள். அவள் அவனை சாப்பிடவரும்படி வருந்தி அழைத்தாள். அதன்பின்பு அவ்வழியில் அவன் போகும்போதெல்லாம் அங்கே சாப்பிடுவதற்காகத் தங்குவான். அவள் தன் கணவனிடம், “இந்த வழியாக வந்து இங்கு தங்கிப்போகும் மனிதன், இறைவனுடைய பரிசுத்த மனிதன் என்பது எனக்குத் தெரிகிறது. நாங்கள் எங்கள் வீட்டுக்குமேல் ஒரு அறையைக் கட்டி, ஒரு கட்டில், மேஜை, நாற்காலி, விளக்கு ஆகியவற்றை அவருக்கு வைப்போம். அதனால் எங்களிடம் வரும்போதெல்லாம் அங்கேயே அவர் தங்கியிருக்கலாம்” என்றாள். ஒரு நாள் எலிசா அங்கு வந்தபோது மேலே தன் அறைக்குப் போய் அங்கே படுத்திருந்தான். தன் வேலைக்காரனான கேயாசிடம், “அந்த சூனேமியாளை அழைத்து வா” என்றான். அவன் போய் அவளை அழைத்துவர, அவள் வந்து எலிசாவுக்கு முன் நின்றாள். அப்பொழுது எலிசா கேயாசியைப் பார்த்து, “நீ அவளிடம் சொல்லவேண்டியதாவது: ‘எங்களுக்காக நீ எவ்வளவு கஷ்டப்பட்டுவிட்டாய். உனக்கு நாங்கள் என்ன செய்யலாம்? உனது சார்பாக அரசனிடமோ அல்லது இராணுவத் தளபதியிடமோ நாங்கள் ஏதேனும் சொல்ல வேண்டியிருந்தால் அதைச் சொல்’ என்று அவளிடம் கேள்” என்றான். அவள் அதற்குப் பதிலாக, “நான் என் சொந்த மக்கள் மத்தியில் குடியிருக்க எனக்கு வீடு இருக்கிறது” என்றாள். அப்பொழுது எலிசா கேயாசிடம், “அவளுக்கு என்ன செய்யலாம்?” என்று கேட்டான். அதற்கு கேயாசி, “அவளுக்கு ஒரு மகன் இல்லை. அவளுடைய கணவனும் வயதுசென்றவனாக இருக்கிறான்” என்றான். எலிசா அவனிடம், “அவளைக் கூப்பிடு” என்றான். கேயாசி அவளைக் கூப்பிட்டபோது, அவள் வந்து கதவுக்குப் பக்கத்தில் நின்றாள். எலிசா அவளைப் பார்த்து, “அடுத்த வருடம் இந்த நேரத்தில் உன் கைகளில் ஒரு மகனை ஏந்திக்கொண்டிருப்பாய்” என்றான். அப்பொழுது அவள், “என் தலைவனே! இறைவனுடைய மனிதனே, உமது அடியவளைத் தவறாக வழிநடத்த வேண்டாம்” என்றாள். ஆனால் அவளோ எலிசா முன்கூறியபடியே கர்ப்பமாகி அடுத்த வருடம் அதே காலத்தில் ஒரு மகனைப் பெற்றாள். அந்தப் பிள்ளை வளர்ந்து வந்தான். ஒரு நாள் அவன் கதிர் அறுக்கிறவர்களுடன் நின்றுகொண்டிருந்த தன் தகப்பனிடம் போனான். அந்நேரம் அவன் தன் தகப்பனிடம், “என் தலை! என் தலை வலிக்கிறது” என்று அழுதான். அவனுடைய தகப்பன் ஒரு வேலையாளிடம், “இவனை இவனுடைய தாயிடம் தூக்கிக்கொண்டு போ” என்றான். அந்த வேலைக்காரன் அப்பிள்ளையைத் தூக்கி அவனுடைய தாயிடம் கொண்டுபோனான். மத்தியானம்வரை தாய் அவனைத் தன் மடியில் வைத்திருந்தாள். மதிய நேரத்தில் அவன் இறந்துபோனான். அவள் மேலே போய் இறைவனுடைய மனிதனின் கட்டிலில் மகனைக் கிடத்திவிட்டு, கதவைப் பூட்டி வெளியே போனாள். அவள் தன் கணவனைக் கூப்பிட்டு, “தயவுசெய்து உம்முடைய வேலையாட்களில் ஒருவனையும், ஒரு கழுதையையும் அனுப்பும். நான் இறைவனுடைய மனிதனிடம் அவசரமாகப் போய்த் திரும்பி வரவேண்டும்” என்றாள். அப்பொழுது அவன், “ஏன் இன்று அவரிடம் போகிறாய்? இன்று ஓய்வுநாளல்ல; அமாவாசை நாளும் அல்ல” என்று கேட்டான். அதற்கு அவள், “அது பரவாயில்லை. நான் போகவேண்டியிருக்கிறது” என்று கூறினாள். கழுதையில் சேணம் கட்டி, வேலைக்காரனைப் பார்த்து, “விரைவாகப் போ, நான் சொன்னாலொழிய வேகத்தைக் குறைக்காதே” என்று சொன்னாள். அந்தப்படியே அவள் புறப்பட்டு கர்மேல் மலையில் இருந்த இறைவனுடைய மனிதனிடம் போனாள். இறைவனின் மனிதன் தூரத்திலே அவளைக் கண்டு தன் வேலைக்காரனான கேயாசியைப் பார்த்து, “பார்! அதோ சூனேமியாள். நீ அவளைச் சந்திக்கும்படியாக ஓடிப்போய் அவளிடம், ‘நீ சுகமாயிருக்கிறாயா? உன் கணவன் சுகமாயிருக்கிறானா? உன் பிள்ளை சுகமாயிருக்கிறானா?’ ” என்று கேள் என்றான். அவள், “நாங்கள் எல்லோரும் சுகமாயிருக்கிறோம்” என்று கூறினாள். அவள் மலையின்மேல் இருந்த இறைவனுடைய மனிதனிடம் வந்தபோது, அவனுடைய கால்களைப் பிடித்துக்கொண்டாள். கேயாசி அவளை அப்பால் தள்ளிவிடுவதற்காக முன்பாக வந்தபோது இறைவனுடைய மனிதன் அவனைப் பார்த்து, “அவளை விடு, அவளுடைய ஆத்துமா வேதனையால் கசப்படைந்திருக்கிறது. ஆனால் யெகோவா அதை எனக்கு மறைத்ததோடு ஏன் என்றும் எனக்குச் சொல்லவில்லை” என்றான். அப்பொழுது அவள், “என் தலைவனே, எனக்கு ஒரு மகன் வேண்டுமென்று நான் உம்மிடம் கேட்டேனா? எனக்கு அதிக எதிர்பார்ப்பைக் கொடுக்கவேண்டாமென்று நான் உமக்குச் சொல்லவில்லையா?” என்றாள். எலிசா கேயாசியிடம்: “உன் மேலுடையைப் பட்டிக்குள் சொருகிக்கொண்டு என் தடியையும் எடுத்துக்கொண்டு ஓடு. யாரையாகிலும் நீ சந்தித்தால் அவனை வாழ்த்தாதே. யாராவது உன்னை வாழ்த்தினால் நீ மறுமொழி கொடுக்காதே. நீ ஓடிப்போய் பையனின் முகத்தின்மேல் என் தடியை வை” என்றான். ஆனால் அந்தப் பிள்ளையின் தாயோ எலிசாவைப் பார்த்து, “யெகோவா வாழ்கிறதும், நீர் வாழ்கிறதும் நிச்சயம்போலவே நான் உம்மை விட்டுப் போகமாட்டேன் என்பதும் நிச்சயம்” என்றாள். எனவே அவன் எழுந்து அவளைப் பின்தொடர்ந்தான். கேயாசி அவர்களுக்குமுன் போய், எலிசாவின் தடியைப் பையனின் முகத்தின்மேல் வைத்தான். ஆனால் எந்த விதமான சத்தமோ, பதிலோ வரவில்லை. அதனால் கேயாசி திரும்பிப்போய் எலிசாவைச் சந்தித்து, “பையன் கண்விழிக்கவில்லை” எனக் கூறினான். எலிசா வீட்டுக்கு வந்தபோது அவனுடைய கட்டிலின்மேல் அந்தப் பையன் இறந்து கிடந்தான். அவன் உள்ளே போய் இருவரையும் வெளியே விட்டுக் கதவைப் பூட்டி யெகோவாவை நோக்கி மன்றாடினான். அதன்பின் அவன் கட்டிலின்மேல் ஏறி அந்தப் பையனின் வாயோடு வாயும், கண்களோடு கண்களும், கைகளோடு கைகளுமாக வைத்து பையனின்மேல் படுத்தான். உடனே அந்தப் பையனின் உடல் சூடாகியது. எலிசா எழுந்து தன் அறைக்குள் அங்குமிங்குமாக நடந்தான். அதன்பின் கட்டிலில் ஏறி பையனின்மேல் இன்னொருமுறை முன்போல படுத்தான். அப்பொழுது அந்தப் பையன் ஏழுமுறை தும்மி தன் கண்களைத் திறந்தான். அப்பொழுது எலிசா கேயாசியை வரும்படி அழைத்து, “சூனேமியாளைக் கூப்பிடு” என்றான். அவன் அப்படியே செய்தான். அவள் வந்தபோது எலிசா, “உன் மகனைக் கூட்டிக்கொண்டுபோ” என்றான்.

2 இராஜாக்கள் 4:8-36 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்பு ஒரு நாள் எலிசா சூனேமுக்குப் போயிருக்கும்போது, அங்கேயிருந்த கனம்பொருந்திய ஒரு பெண் அவனை சாப்பிட வருந்திக் கேட்டுக்கொண்டாள்; அப்படியே அவன் பிரயாணமாக வருகிறபோதெல்லாம் சாப்பிடுவதற்காக அங்கே வந்து தங்குவான். அவள் தன் கணவனை நோக்கி: இதோ, நம்மிடத்தில் எப்போதும் வந்துபோகிற தேவனுடைய மனிதனாகிய இவர் பரிசுத்தவான் என்று காண்கிறேன். நாம் மேல்மாடியில் ஒரு சிறிய அறையைக் கட்டி, அதில் அவருக்கு ஒரு கட்டிலையும், மேஜையையும், நாற்காலியையும், குத்துவிளக்கையும் வைப்போம்; அவர் நம்மிடத்தில் வரும்போது அங்கே தங்கலாம் என்றாள். ஒரு நாள் அவன் அங்கே வந்து, அந்த அறையிலே தங்கி, அங்கே படுத்துக்கொண்டிருந்தான். அவன் தன்னுடைய வேலைக்காரனாகிய கேயாசியை நோக்கி: இந்தச் சூனேமியாளை அழைத்துக்கொண்டுவா என்றான்; அவளை அழைத்துக்கொண்டு வந்தான்; அவள் அவனுக்கு முன்பாக நின்றாள். அவன் கேயாசியைப் பார்த்து: இதோ, இப்படிப்பட்ட சகல கரிசனையோடும் எங்களை விசாரித்து வருகிறாயே, உனக்கு நான் என்ன செய்யவேண்டும் என்றும் ராஜாவிடமாவது சேனாதிபதியிடமாவது உனக்காக நான் பேசவேண்டிய காரியம் உண்டோ என்றும் அவளைக் கேள் என்றான். அதற்கு அவள்: என் மக்களின் நடுவே நான் சுகமாகக் குடியிருக்கிறேன் என்றாள். அவளுக்குச் செய்யவேண்டியது என்னவென்று கேயாசியை அவன் கேட்டதற்கு; அவன், அவளுக்குக் குழந்தை இல்லை, அவளுடைய கணவனும் அதிக வயதுள்ளவன் என்றான். அப்பொழுது அவன்: அவளைக் கூப்பிடு என்றான்; அவளைக் கூப்பிட்டபோது, அவள் வந்து வாசற்படியிலே நின்றாள். அப்பொழுது அவன்: ஒரு கர்ப்பகாலத்திட்டத்தில் ஒரு மகனை அணைத்துக்கொண்டிருப்பாய் என்றான். அதற்கு அவள்: இல்லை, தேவனுடைய மனிதனாகிய என் ஆண்டவனே, உமது அடியாளுக்கு பொய் சொல்லவேண்டாம் என்றாள். அந்த பெண் கர்ப்பவதியாகி, எலிசா தன்னோடே சொன்னபடி, ஒரு கர்ப்பகாலத்திட்டத்தில் ஒரு மகனைப் பெற்றாள். அந்த மகன் வளர்ந்தான், ஒரு நாள் அவன் அறுப்பறுக்கிறவர்களிடத்திலிருந்த தன் தகப்பனிடம் போயிருக்கும்போது, தன் தகப்பனைப் பார்த்து: என் தலை வலிக்கிறது, என் தலை வலிக்கிறது என்றான்; அப்பொழுது அவன் வேலைக்காரனிடத்தில், இவனை இவன் தாயினிடத்தில் எடுத்துக்கொண்டுபோய் விடு என்றான். அவனை எடுத்து, அவன் தாயினிடத்தில் கொண்டுபோனபோது, அவன் மத்தியானம்வரை அவள் மடியில் இருந்து இறந்துபோனான். அப்பொழுது அவள் மாடிக்கு ஏறிப்போய், அவனை தேவனுடைய மனிதனின் கட்டிலின்மேல் வைத்து, அவன் வைக்கப்பட்ட அறையின் கதவைப் பூட்டிவிட்டு போய், தன் கணவனிடத்தில் ஆள் அனுப்பி: நான் சீக்கிரமாக தேவனுடைய மனிதன் இருக்கும் இடம்வரை போய்வருவதற்கு; வேலைக்காரர்களில் ஒருவனையும் ஒரு கழுதையையும் எனக்கு அனுப்பவேண்டும் என்று சொல்லச்சொன்னாள். அப்பொழுது அவன்: இது அமாவாசையும் அல்ல ஓய்வு நாளும் அல்லவே; நீ இன்றைக்கு அவரிடத்திற்கு ஏன் போகவேண்டும் என்று கேட்கச் சொன்னான். அதற்கு அவள்: எல்லாம் சரிதான், நான் போகவேண்டியிருக்கிறது என்று சொல்லியனுப்பி, கழுதையின்மேல் சேணம் வைத்து ஏறி, தன் வேலைக்காரனை நோக்கி: இதை ஓட்டிக்கொண்டுபோ; நான் உனக்குச் சொன்னால் ஒழிய, போகிற வழியில் எங்கும் ஓட்டத்தை நிறுத்தாதே என்று சொல்லிப் புறப்பட்டு, கர்மேல் மலையிலிருக்கிற தேவனுடைய மனிதனிடத்திற்குப் போனாள்; தேவனுடைய மனிதன் தூரத்திலே அவளை வரக்கண்டு, தன் வேலைக்காரனாகிய கேயாசியைப் பார்த்து: அதோ சூனேமியாள் வருகிறாள். நீ அவளுக்கு எதிர்கொண்டு ஓடி, நீ சுகமாயிருக்கிறாயா, உன் கணவன் சுகமாயிருக்கிறானா, அந்தப் பிள்ளை சுகமாயிருக்கிறதா என்று அவளிடத்தில் கேள் என்றான். அவள்: சுகம்தான் என்று சொல்லி, மலையில் இருக்கிற தேவனுடைய மனிதனிடத்தில் வந்து, அவனுடைய காலைப் பிடித்துக்கொண்டாள்; அப்பொழுது கேயாசி அவளை விலக்கிவிட வந்தான்; தேவனுடைய மனிதன்: அவளைத் தடுக்காதே; அவளுடைய ஆத்துமா துக்கமாயிருக்கிறது; யெகோவா அதை எனக்கு அறிவிக்காமல் மறைத்துவைத்தார் என்றான். அப்பொழுது அவள், என் ஆண்டவனே எனக்கு ஒரு மகன் வேண்டும் என்று நான் உம்மிடத்தில் கேட்டேனா? என்னை ஏமாற்றவேண்டாம் என்று நான் சொல்லவில்லையா என்றாள். அப்பொழுது அவன் கேயாசியைப் பார்த்து: நீ உன் பயணத்திற்கான உடையை அணிந்துகொண்டு, என் தடியை உன் கையில் பிடித்துக்கொண்டு, வழியில் யாரைச் சந்தித்தாலும் அவனைக் கேள்வி கேட்காமலும், உன்னை ஒருவன் கேள்வி கேட்டாலும் அவனுக்கு பதில் சொல்லாமலும் போய், என் தடியை அந்தச் சிறுவனின் முகத்தின்மேல் வை என்றான். சிறுவனின் தாயோ: நான் உம்மை விடுவதில்லை என்று யெகோவாவின் ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றாள்; அப்பொழுது அவன் எழுந்திருந்து அவள் பின்னே போனான். கேயாசி அவர்களுக்கு முன்னே போய், அந்தத் தடியைச் சிறுவனின் முகத்தின்மேல் வைத்தான்; ஆனாலும் சத்தமும் இல்லை, உணர்ச்சியும் இல்லை; ஆகையால் அவன் திரும்பி அவனுக்கு எதிர்கொண்டு வந்து: சிறுவன் கண் விழிக்கவில்லை என்று அவனுக்கு அறிவித்தான். எலிசா வீட்டிற்குள் வந்தபோது, இதோ, இந்தச் சிறுவன் அவனுடைய கட்டிலின்மேல் இறந்துகிடந்தான். உள்ளே போய்த் தங்கள் இருவருக்கும் பின்னாக அவன் கதவைப்பூட்டி, யெகோவாவை நோக்கி வேண்டுதல்செய்து, அருகில்போய், தன் வாய் சிறுவனின் வாயின்மேலும், தன் கண்கள் அவனுடைய கண்களின்மேலும், தன் உள்ளங்கைகள் அவனுடைய உள்ளங்கைகளின்மேலும் படும்படியாக அவன்மேல் குப்புறப் படுத்துக்கொண்டான்; அப்பொழுது சிறுவனின் உடலில் சூடு ஏற்பட்டது. அவன் எழுந்து, அறைவீட்டில் இங்கும் அங்கும் உலாவி, திரும்பவும் அருகில்போய் அவன்மேல் குப்புறப்படுத்தான்; அப்பொழுது அந்தச் சிறுவன் ஏழுமுறை தும்மி தன் கண்களைத் திறந்தான். அப்பொழுது அவன்: கேயாசியைக் கூப்பிட்டு, அந்தச் சூனேமியாளை அழைத்துக்கொண்டுவா என்றான்; அவளை அழைத்துக்கொண்டு வந்தான்; அவள் அவனிடத்தில் வந்தபோது; அவன், உன் மகனை எடுத்துக்கொண்டுபோ என்றான்.

2 இராஜாக்கள் 4:8-36 பரிசுத்த பைபிள் (TAERV)

ஒரு நாள் எலிசா சூனேமுக்குச் சென்றான். அங்கு ஒரு முக்கியமான பெண் இருந்தாள். அவள் எலிசாவை (தடுத்து) தன் வீட்டில் உணவு உண்ண அழைத்தாள். எனவே ஒவ்வொரு நேரமும் அவர் அந்த வழியாகப் போகும்போதெல்லாம் அவன் உணவு உண்பதற்காக நிறுத்தப்பட்டான். அவள் தன் கணவனிடம், “இதோ பாருங்கள், எலிசா தேவனுடைய பரிசுத்தமான மனிதன் என்பதைத் தெரிந்துக்கொண்டேன். எப்பொழுதும் நம் வீட்டைக் கடந்தே போகிறார். அவருக்காக நாம் கூரைமீது ஒரு சிறு அறை ஏற்பாடு செய்வோம். அதில் படுக்கையிட்டு, ஒரு மேஜை, நாற்காலி, விளக்குத் தண்டு ஆகியவற்றையும் வைத்துவிடுங்கள். அவர் இங்கு வரும்போது தன் உபயோகத்திற்காக இந்த அறையை வைத்துக்கொள்ளலாம்” என்றாள். ஒரு நாள் எலிசா அவளது வீட்டிற்கு வந்தான். அவன் அங்குள்ள அறைக்குச் சென்று அங்கே ஓய்வெடுத்தான். எலிசா தனது வேலையாளான கேயாசிடம், “அந்த சூனேமியாளைக் கூப்பிடு” என்றான். அந்த வேலையாள் சூனேமியாளை அழைத்தான். அவளும் கிளம்பிவந்து எலிசாவின் முன்னிலையில் நின்றாள். எலிசா தன் வேலையாளிடம், “இப்போது அவளிடம், ‘எங்களுக்கு வசதியானவற்றை உன்னால் முடிந்தவரை நன்கு செய்துள்ளாய். நான் உனக்காக என்ன செய்யவேண்டும்? நான் உனக்காக ராஜாவிடமோ அல்லது படைத் தலைவனிடமோ ஏதாவது பேசவேண்டுமா?’” எனக் கேட்கும்படி சொன்னான். அதற்கு அவள், “இங்கே வாழுகின்ற என் சொந்த ஜனங்களில் நான் நன்றாகவே இருக்கிறேன்” என்றாள். எலிசா தன் வேலைக்காரனிடம், “நாம் இவளுக்காக என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான். அதற்கு கேயாசி, “எனக்குத் தெரியும். இவளுக்கு குழந்தையில்லை. இவள் கணவனுக்கு வயதாகிவிட்டது” என்றான். பிறகு எலிசா, “அவளைக் கூப்பிடு” என்றான். வேலைக்காரன் அவளை அழைத்தான். அவள் கதவருகில் வந்து நின்றாள். எலிசா அவளிடம், “அடுத்த ஆண்டு இதே பருவத்தில் நீ உனது சொந்த ஆண் குழந்தையை அணைத்துக்கொண்டிருப்பாய்” என்றான். அதற்கு அவள், “இல்லை! தேவமனிதரே, நீங்கள் உங்கள் வேலைக்காரியிடம் பொய் சொல்லவேண்டாம்” என்றாள். ஆனால் அப்பெண் கருவுற்றாள். எலிசா சொன்னதுபோல அடுத்த ஆண்டு அதே பருவ காலத்தில், அவள் ஆண் குழந்தையைப் பெற்றாள். அந்தப் பையன் வளர்ந்தான். ஒரு நாள், அவனது தந்தையும் ஆட்களும் வயலில் அறுவடை செய்துகொண்டிருந்த இடத்துக்கு போனான். அவன் தன் தந்தையிடம், “என் தலை வலிக்கிறது!” என்றான். அவனது தந்தை, “இவனைத் தன் தாயிடம் தூக்கிச்செல்லுங்கள்!” என்று வேலைக்காரனிடம் சொன்னான். வேலைக்காரன் அவனைத் தூக்கிக்கொண்டு தாயிடம் சென்றான். அவன் தாய் மடியில் மதியம்வரை இருந்து, பிறகு மரித்துப்போனான். அப்பெண் மேலறையில் போய் தேவ மனிதனின் படுக்கையில் பையனைக் கிடத்தினாள். அந்த அறையின் கதவுகளை அடைத்துவிட்டு வெளியே போனாள். அவள் கணவனை அழைத்து அவனிடம், “தயவுசெய்து என்னோடு ஒரு வேலைக்காரனையும் கழுதையையும் அனுப்புங்கள். நான் தீர்க்கதரிசியான எலிசாவை வேகமாக அழைத்துக் கொண்டு திரும்பி வரவேண்டும்” என்றாள். அதற்கு அவளுடைய கணவன், “இன்றைக்கு அந்தத் தீர்க்கதரியிடம் போகவேண்டும் என்று ஏன் விரும்புகிறாய்? இன்று அமாவாசையோ அல்லது ஓய்வு நாளோ இல்லை” என்றான். அதற்கு அவள், “கவலைப்பட வேண்டாம் எல்லாம் சரியாகும்” என்றாள். பிறகு அவள் கழுதையின் மீது சேணத்தைக் கட்டினாள். “வேகமாகப் போ, நான் சொல்லும் போது மட்டும் மெதுவாகச் செல்” என்றாள். அவள் தேவமனிதனைப் (எலிசாவைப்) பார்க்க கர்மேல் மலைக்குச் சென்றாள். எலிசாவும் சூனேமியப்பெண் வெகு தூரத்திலிருந்து வருவதைக் கவனித்தான். அவன் தன் வேலைக்காரனான கேயாசியிடம், “பார், அந்த சூனேமியப் பெண் வருகிறாள். அவளிடம் ஓடிப்போ. ‘என்ன காரியம்? நன்றாக இருக்கிறாயா? கணவன் நலமா? குழந்தை நலமா?’ என்று கேள்” என்றான். கேயாசி அவளிடம் ஓடிப்போய் இத்தனையும் கேட்டான். அதற்கு அவள், “எல்லோரும் நலம் தான்” என்றாள். ஆனாலும் சூனேமியப்பெண் மலை மீது ஏறி எலிசாவிடம் வந்தாள். அவள் அவரது பாதத்தைப் (பணிந்து) பற்றினாள். கேயாசி நெருங்கி வந்து அவளை இழுத்து விலக்கினான். உடனே தேவ மனிதன் (எலிசா), “அவளைத் தனியாகவிடு! அவள் மிகவும் கலங்கிப்போயிருக்கிறாள். அவள் ஆத்துமா துடிக்கிறது. கர்த்தர் என்னிடம் இதைப்பற்றி எதையும் சொல்லவில்லை. கர்த்தர் என்னிடம் இதனை மறைத்துவிட்டார்” என்றான். அதற்கு அந்தப் பெண், “ஐயா! நான் உம்மிடம் குமாரனைக் கேட்கவில்லை. ‘என்னை ஏமாற்ற வேண்டாம்’ என்றுதானே சொன்னேன்” என்றாள். பிறகு எலிசா கேயாசியிடம், “புறப்படுவதற்குத் தயார்செய்! எனது கைத்தடியை எடுத்துக் கொண்டுபோ. பேசுவதற்காக யாரையும் நிறுத்தாதே. யாரையாவது சந்தித்தாலும் நீ அவர்களை நலம் கூடி விசாரிக்க வேண்டாம். யாராவது விசாரித்தாலும் பதில் சொல்லவேண்டாம்! எனது கைத் தடியை அந்த பிள்ளையின் முகத்தில் வை” என்றான். ஆனால் அவள், “நீங்கள் இல்லாமல் நான் போகமாட்டேன்!” என்றாள். எனவே எலிசா எழுந்து அந்த சூனேமியப் பெண்ணோடு போனான். அவர்களுக்கு முன்னால் கேயாசி அப்பெண்ணின் வீட்டை அடைந்தான். அவன் கைத்தடியை பிள்ளையின் முகத்தில் வைத்தான். ஆனால் அந்தக் குழந்தை பேசவோ பேச்சுக்கு பதிலாக அசையவோ இல்லை. எனவே கேயாசி எலிசாவிடம் ஓடிவந்து, “குழந்தை இன்னும் எழுந்திருக்கவில்லை!” என்று கூறினான். எலிசா வீட்டிற்கு வந்தான். அவனது படுக்கையில், பிள்ளை மரித்துக்கிடந்தது. அவன் அறையுள் நுழைந்ததும் கதவுகளை அடைத்தான். அவ்வறையில் அவனும் பிள்ளையும் மட்டுமே இருந்தனர். எலிசா கர்த்தரை நினைத்து ஜெபம் செய்தான். அவன் படுக்கையருகில் சென்று அப்பிள்ளை மேல் படுத்து, தன் வாயை அப்பிள்ளையின் வாயோடு வைத்து, தன் கண்ணை அதன் கண்களோடு வைத்து, தன் கைகளை அதன் கைகளோடு வைத்து நீட்டிப்படுத்தான். அப்பிள்ளையின் உடல் சூடு அடைந்தது. பிறகு எலிசா அறையைவிட்டு வெளியே வந்து வீட்டைச் சுற்றி முன்னும் பின்னும் நடந்தான். பிறகு (அறைக்குள்) போய் பிள்ளை மேல் குப்புறப்படுத்தான். உடனே பிள்ளை ஏழுமுறை தும்மி தன் கண்களை திறந்தான். பிறகு அவன் கேயாசியிடம், “சூனேமியப் பெண்ணை கூப்பிடு” என்றான். கேயாசி அவளை அழைக்க அவளும் வந்தாள். அவன் அவளிடம், “உன் குமாரனை எடுத்துக்கொள்” என்றான்.

2 இராஜாக்கள் 4:8-36 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்பு ஒரு நாள் எலிசா சூனேமுக்குப் போயிருக்கும்போது, அங்கேயிருந்த கனம்பொருந்திய ஒரு ஸ்திரீ அவனை போஜனம்பண்ண வருந்திக் கேட்டுக்கொண்டாள்; அப்படியே அவன் பயணப்பட்டு வருகிறபோதெல்லாம் போஜனம்பண்ணும்படி அங்கே வந்து தங்குவான். அவள் தன் புருஷனை நோக்கி: இதோ, நம்மிடத்தில் எப்போதும் வந்துபோகிற தேவனுடைய மனுஷனாகிய இவர் பரிசுத்தவான் என்று காண்கிறேன். நாம் மெத்தையின்மேல் ஒருசிறிய அறைவீட்டைக் கட்டி, அதில் அவருக்கு ஒரு கட்டிலையும், மேஜையையும், நாற்காலியையும், குத்துவிளக்கையும் வைப்போம்; அவர் நம்மிடத்தில் வரும்போது அங்கே தங்கலாம் என்றாள். ஒரு நாள் அவன் அங்கே வந்து, அந்த அறை வீட்டிலே தங்கி, அங்கே படுத்துக்கொண்டிருந்தான். அவன் தன் வேலைக்காரனாகிய கேயாசை நோக்கி: இந்தச் சூனேமியாளை அழைத்துக்கொண்டுவா என்றான்; அவளை அழைத்துக்கொண்டு வந்தான்; அவள் அவனுக்கு முன்பாக நின்றாள். அவன் கேயாசியைப் பார்த்து: இதோ, இப்படிப்பட்ட சகல சலக்கரணையோடும் எங்களை விசாரித்து வருகிறாயே, உனக்கு நான் என்ன செய்யவேண்டும் ராஜாவினிடத்திலாவது சேனாபதியினிடத்திலாவது உனக்காக நான் பேசவேண்டிய காரியம் உண்டோ என்று அவளைக் கேள் என்றான். அதற்கு அவள்: என் ஜனத்தின் நடுவே நான் சுகமாய்க் குடியிருக்கிறேன் என்றாள். அவளுக்குச் செய்யவேண்டியது என்னவென்று கேயாசியை அவன் கேட்டதற்கு; அவன், அவளுக்குப் பிள்ளை இல்லை, அவள் புருஷனும் பெரிய வயதுள்ளவன் என்றான். அப்பொழுது அவன்: அவளைக் கூப்பிடு என்றான்; அவளைக் கூப்பிட்டபோது, அவள் வந்து வாசற்படியிலே நின்றாள். அப்பொழுது அவன்: ஒரு பிராண உற்பத்திகாலத்திட்டத்திலே ஒருகுமாரனை அணைத்துக்கொண்டிருப்பாய் என்றான். அதற்கு அவள்: ஏது? தேவனுடைய மனுஷனாகிய என் ஆண்டவனே, உமது அடியாளுக்கு அபத்தம் சொல்லவேண்டாம் என்றாள். அந்த ஸ்திரீ கர்ப்பந்தரித்து, எலிசா தன்னோடே சொன்னபடி, ஒரு உற்பத்திகாலத்திட்டத்தில் ஒரு குமாரனைப் பெற்றாள். அந்தப் பிள்ளை வளர்ந்தான், ஒரு நாள் அவன் அறுப்பறுக்கிறவர்களிடத்திலிருந்த தன் தகப்பனண்டைக்குப் போயிருக்கும்போது, தன் தகப்பனைப் பார்த்து: என் தலை நோகிறது, என் தலை நோகிறது என்றான்; அப்பொழுது அவன் வேலைக்காரனிடத்தில், இவனை இவன் தாயினிடத்தில் எடுத்துக்கொண்டுபோய் விடு என்றான். அவனை எடுத்து, அவன் தாயினிடத்தில் கொண்டுபோனபோது, அவன் மத்தியானமட்டும் அவள் மடியில் இருந்து செத்துப்போனான். அப்பொழுது அவள் ஏறிப்போய், அவனை தேவனுடைய மனுஷன் கட்டிலின்மேல் வைத்து, அவன் வைக்கப்பட்ட அறையின் கதவைப் பூட்டிக்கொண்டுபோய், தன் புருஷனிடத்தில் ஆள் அனுப்பி: நான் சீக்கிரமாய் தேவனுடைய மனுஷன் இருக்கும் இடமட்டும் போய்வரும்படிக்கு; வேலைக்காரரில் ஒருவனையும் ஒருகழுதையையும் எனக்கு அனுப்பவேண்டும் என்று சொல்லச்சொன்னாள். அப்பொழுது அவன்: இது அமாவாசியும் அல்ல ஓய்வு நாளும் அல்லவே; நீ இன்றைக்கு அவரிடத்துக்குப் போகவேண்டியது என்ன என்று கேட்கச் சொன்னான். அதற்கு அவள்: எல்லாம் சரிதான், நான் போகவேண்டியதிருக்கிறது என்று சொல்லியனுப்பி, கழுதையின்மேல் சேணம் வைத்து ஏறி, தன் வேலைக்காரனை நோக்கி: இதை ஓட்டிக்கொண்டுபோ; நான் உனக்குச் சொன்னால் ஒழிய, போகிற வழியில் எங்கும் ஓட்டத்தை நிறுத்தாதே என்று சொல்லிப் புறப்பட்டு, கர்மேல் பர்வதத்திலிருக்கிற தேவனுடைய மனுஷனிடத்திற்குப் போனாள்; தேவனுடைய மனுஷன் தூரத்திலே அவளை வரக்கண்டு, தன் வேலைக்காரனாகிய கேயாசியைப் பார்த்து: அதோ சூனேமியாள் வருகிறாள். நீ அவளுக்கு எதிர்கொண்டு ஓடி, நீ சுகமாயிருக்கிறாயா? உன் புருஷன் சுகமாயிருக்கிறானா? அந்தப் பிள்ளை சுகமாயிருக்கிறதா என்று அவளிடத்தில் கேள் என்றான். அவள்: சுகந்தான் என்று சொல்லி, பர்வதத்திலிருக்கிற தேவனுடைய மனுஷனிடத்தில் வந்து, அவன் காலைப் பிடித்துக்கொண்டாள்; அப்பொழுது கேயாசி அவளை விலக்கிவிட வந்தான்; தேவனுடைய மனுஷன்: அவளைத் தடுக்காதே; அவள் ஆத்துமா துக்கமாயிருக்கிறது; கர்த்தர் அதை எனக்கு அறிவியாமல் மறைத்துவைத்தார் என்றான். அப்பொழுது அவள், நான் என் ஆண்டவனிடத்தில் ஒரு குமாரனை வேண்டும் என்று கேட்டதுண்டா? எனக்கு அபத்தம் சொல்லவேண்டாம் என்று நான் சொல்லவில்லையா என்றாள். அப்பொழுது அவன் கேயாசியைப் பார்த்து: நீ உன் இடையைக் கட்டிக்கொண்டு, என் தடியை உன் கையில் பிடித்துக்கொண்டு, வழியில் ஒருவனைச் சந்தித்தாலும் அவனை வினவாமலும், உன்னை ஒருவன் வினவினாலும் அவனுக்கு மறுமொழி சொல்லாமலும் போய், என் தடியை அந்தப் பிள்ளையின் முகத்தின்மேல் வை என்றான். பிள்ளையின் தாயோ: நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தரின் ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றாள்; அப்பொழுது அவன் எழுந்திருந்து அவள் பின்னே போனான். கேயாசி அவர்களுக்கு முன்னே போய், அந்தத் தடியைப் பிள்ளையின் முகத்தின்மேல் வைத்தான்; ஆனாலும் சத்தமும் இல்லை, உணர்ச்சியும் இல்லை; ஆகையால் அவன் திரும்பி அவனுக்கு எதிர்கொண்டு வந்து: பிள்ளை விழிக்கவில்லை என்று அவனுக்கு அறிவித்தான். எலிசா வீட்டிற்குள் வந்தபோது, இதோ, இந்தப் பிள்ளை அவன் கட்டிலின்மேல் செத்துக்கிடந்தான். உள்ளே போய்த் தங்கள் இருவருக்கும் பின்னாக அவன் கதவைப்பூட்டி, கர்த்தரை நோக்கி வேண்டுதல்செய்து, கிட்டேபோய், தன் வாய் பிள்ளையின் வாயின்மேலும், தன் கண்கள் அவன் கண்களின்மேலும், தன் உள்ளங்கைகள் அவன் உள்ளங்கைகளின்மேலும் படும்படியாக அவன்மேல் குப்புறப் படுத்துக்கொண்டான்; அப்பொழுது பிள்ளையின் உடல் அனல்கொண்டது. அவன் எழுந்து, அறைவீட்டில் இங்கும் அங்கும் உலாவி, திரும்பக்கிட்டப் போய் அவன்மேல் குப்புறப்படுத்தான்; அப்பொழுது அந்தப் பிள்ளை ஏழுதரம் தும்மித் தன் கண்களைத் திறந்தான். அப்பொழுது அவன்: கேயாசியைக் கூப்பிட்டு, அந்தச் சூனேமியாளை அழைத்துக்கொண்டுவா என்றான்; அவளை அழைத்துக்கொண்டு வந்தான்; அவள் அவனிடத்தில் வந்தபோது; அவன், உன் குமாரனை எடுத்துக்கொண்டுபோ என்றான்.