ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 4
4
ஒரு தீர்க்கதரிசியின் விதவை எலிசாவிடம் உதவி கேட்டல்
1தீர்க்கதரிசிகளுள் ஒருவனுக்கு ஒரு மனைவி இருந்தாள். அந்த தீர்க்கதரிசி மரித்துப்போயிருந்தான். அவள் எலிசாவிடம் வந்து, “என் கணவன் உங்கள் ஊழியனாக இருந்தார். இப்போது மரித்துப்போனார். அவர் கர்த்தரை மதித்ததை நீங்கள் அறிவீர்கள். அவர் ஒருவனிடம் பணம் வாங்கியிருந்தார். அதற்காக இப்போது அந்த ஆள் என் இரண்டு பிள்ளைகளை அடிமையாக்கிக்கொள்ள வந்திருக்கிறான்!” என்று அழுதாள்.
2அதற்கு எலிசா, “நான் எவ்வாறு உதவமுடியும்? உன் வீட்டில் என்ன இருக்கிறது என்று சொல்” என்று கேட்டான்.
அப்பெண்ணும், “என் வீட்டில் எதுவுமில்லை. ஒரு ஜாடி (ஒலிவ) எண்ணெய் மட்டும் உள்ளது” என்றாள்.
3உடனே எலிசா அவளிடம், “நீ போய் உனது பக்கத்து வீட்டுக்காரர் அனைவர்களிடமும் கிண்ணங்களைக் கடனாக வாங்கி வா. அவை காலியாக இருக்கட்டும். நிறைய கிண்ணங்களை கடன் வாங்கு. 4உன் வீட்டிற்குள் போய் கதவுகளை மூடிக்கொள். வீட்டிற்குள் நீயும் உன் பிள்ளைகளும் மட்டும் தான் இருக்கவேண்டும். ஒலிவ எண்ணெயை எல்லாக் கிண்ணங்களிலும் ஊற்றி நிரப்ப அது நிறைந்ததும் ஒவ்வொரு பாத்திரத்தையும் அப்புறம் வை” என்றான்.
5எனவே அந்தப் பெண் எலிசாவிடமிருந்து கிளம்பிப்போய் வீட்டுக்கதவுகளை அடைத்துக்கொண்டாள். அவளும் அவள் பிள்ளைகள் மட்டுமே வீட்டில் இருந்தனர். அவளது குமாரர்கள் அவளிடம் கிண்ணங்களைக் கொண்டுவந்தனர். அவற்றில் அவள் எண்ணெயை ஊற்றினாள். 6அனைத்து கிண்ணங்களும் நிரம்பியபோது அவள் தன் மகனிடம், “இன்னொரு கிண்ணம் கொண்டு வா” என்றாள்.
ஆனால் அவன் அவளிடம், “கிண்ணங்கள் வேறு எதுவுமில்லை” என்றான். அப்போது ஜாடியில் இருந்த எண்ணெயும் பெருகுவது நின்று போயிற்று.
7பின் அவள் வந்து தேவனுடைய மனுஷனுக்கு (எலிசா) அதைச் சொன்னாள். அவரோ, “நீ போய் அந்த எண்ணெயை விற்று உன் கடனை அடைத்துவிடு, மீதியுள்ள பணத்தில் நீயும் உன் பிள்ளைகளும் வாழுங்கள்” என்றான்.
சூனேமிலுள்ள ஒரு பெண் எலிசாவிற்கு அறைவீடு கொடுத்தது
8ஒரு நாள் எலிசா சூனேமுக்குச் சென்றான். அங்கு ஒரு முக்கியமான பெண் இருந்தாள். அவள் எலிசாவை (தடுத்து) தன் வீட்டில் உணவு உண்ண அழைத்தாள். எனவே ஒவ்வொரு நேரமும் அவர் அந்த வழியாகப் போகும்போதெல்லாம் அவன் உணவு உண்பதற்காக நிறுத்தப்பட்டான்.
9அவள் தன் கணவனிடம், “இதோ பாருங்கள், எலிசா தேவனுடைய பரிசுத்தமான மனிதன் என்பதைத் தெரிந்துக்கொண்டேன். எப்பொழுதும் நம் வீட்டைக் கடந்தே போகிறார். 10அவருக்காக நாம் கூரைமீது ஒரு சிறு அறை ஏற்பாடு செய்வோம். அதில் படுக்கையிட்டு, ஒரு மேஜை, நாற்காலி, விளக்குத் தண்டு ஆகியவற்றையும் வைத்துவிடுங்கள். அவர் இங்கு வரும்போது தன் உபயோகத்திற்காக இந்த அறையை வைத்துக்கொள்ளலாம்” என்றாள்.
11ஒரு நாள் எலிசா அவளது வீட்டிற்கு வந்தான். அவன் அங்குள்ள அறைக்குச் சென்று அங்கே ஓய்வெடுத்தான். 12எலிசா தனது வேலையாளான கேயாசிடம், “அந்த சூனேமியாளைக் கூப்பிடு” என்றான்.
அந்த வேலையாள் சூனேமியாளை அழைத்தான். அவளும் கிளம்பிவந்து எலிசாவின் முன்னிலையில் நின்றாள். 13எலிசா தன் வேலையாளிடம், “இப்போது அவளிடம், ‘எங்களுக்கு வசதியானவற்றை உன்னால் முடிந்தவரை நன்கு செய்துள்ளாய். நான் உனக்காக என்ன செய்யவேண்டும்? நான் உனக்காக ராஜாவிடமோ அல்லது படைத் தலைவனிடமோ ஏதாவது பேசவேண்டுமா?’” எனக் கேட்கும்படி சொன்னான்.
அதற்கு அவள், “இங்கே வாழுகின்ற என் சொந்த ஜனங்களில் நான் நன்றாகவே இருக்கிறேன்” என்றாள்.
14எலிசா தன் வேலைக்காரனிடம், “நாம் இவளுக்காக என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான்.
அதற்கு கேயாசி, “எனக்குத் தெரியும். இவளுக்கு குழந்தையில்லை. இவள் கணவனுக்கு வயதாகிவிட்டது” என்றான்.
15பிறகு எலிசா, “அவளைக் கூப்பிடு” என்றான்.
வேலைக்காரன் அவளை அழைத்தான். அவள் கதவருகில் வந்து நின்றாள். 16எலிசா அவளிடம், “அடுத்த ஆண்டு இதே பருவத்தில் நீ உனது சொந்த ஆண் குழந்தையை அணைத்துக்கொண்டிருப்பாய்” என்றான்.
அதற்கு அவள், “இல்லை! தேவமனிதரே, நீங்கள் உங்கள் வேலைக்காரியிடம் பொய் சொல்லவேண்டாம்” என்றாள்.
சூனேமிய பெண் ஆண் மகனைப் பெறுதல்
17ஆனால் அப்பெண் கருவுற்றாள். எலிசா சொன்னதுபோல அடுத்த ஆண்டு அதே பருவ காலத்தில், அவள் ஆண் குழந்தையைப் பெற்றாள்.
18அந்தப் பையன் வளர்ந்தான். ஒரு நாள், அவனது தந்தையும் ஆட்களும் வயலில் அறுவடை செய்துகொண்டிருந்த இடத்துக்கு போனான். 19அவன் தன் தந்தையிடம், “என் தலை வலிக்கிறது!” என்றான்.
அவனது தந்தை, “இவனைத் தன் தாயிடம் தூக்கிச்செல்லுங்கள்!” என்று வேலைக்காரனிடம் சொன்னான்.
20வேலைக்காரன் அவனைத் தூக்கிக்கொண்டு தாயிடம் சென்றான். அவன் தாய் மடியில் மதியம்வரை இருந்து, பிறகு மரித்துப்போனான்.
அப்பெண் எலிசாவைப் பார்க்கப் போகிறாள்
21அப்பெண் மேலறையில் போய் தேவ மனிதனின் படுக்கையில் பையனைக் கிடத்தினாள். அந்த அறையின் கதவுகளை அடைத்துவிட்டு வெளியே போனாள். 22அவள் கணவனை அழைத்து அவனிடம், “தயவுசெய்து என்னோடு ஒரு வேலைக்காரனையும் கழுதையையும் அனுப்புங்கள். நான் தீர்க்கதரிசியான எலிசாவை வேகமாக அழைத்துக் கொண்டு திரும்பி வரவேண்டும்” என்றாள்.
23அதற்கு அவளுடைய கணவன், “இன்றைக்கு அந்தத் தீர்க்கதரியிடம் போகவேண்டும் என்று ஏன் விரும்புகிறாய்? இன்று அமாவாசையோ அல்லது ஓய்வு நாளோ இல்லை” என்றான்.
அதற்கு அவள், “கவலைப்பட வேண்டாம் எல்லாம் சரியாகும்” என்றாள்.
24பிறகு அவள் கழுதையின் மீது சேணத்தைக் கட்டினாள். “வேகமாகப் போ, நான் சொல்லும் போது மட்டும் மெதுவாகச் செல்” என்றாள்.
25அவள் தேவமனிதனைப் (எலிசாவைப்) பார்க்க கர்மேல் மலைக்குச் சென்றாள்.
எலிசாவும் சூனேமியப்பெண் வெகு தூரத்திலிருந்து வருவதைக் கவனித்தான். அவன் தன் வேலைக்காரனான கேயாசியிடம், “பார், அந்த சூனேமியப் பெண் வருகிறாள். 26அவளிடம் ஓடிப்போ. ‘என்ன காரியம்? நன்றாக இருக்கிறாயா? கணவன் நலமா? குழந்தை நலமா?’ என்று கேள்” என்றான்.
கேயாசி அவளிடம் ஓடிப்போய் இத்தனையும் கேட்டான். அதற்கு அவள், “எல்லோரும் நலம் தான்” என்றாள்.
27ஆனாலும் சூனேமியப்பெண் மலை மீது ஏறி எலிசாவிடம் வந்தாள். அவள் அவரது பாதத்தைப் (பணிந்து) பற்றினாள். கேயாசி நெருங்கி வந்து அவளை இழுத்து விலக்கினான். உடனே தேவ மனிதன் (எலிசா), “அவளைத் தனியாகவிடு! அவள் மிகவும் கலங்கிப்போயிருக்கிறாள். அவள் ஆத்துமா துடிக்கிறது. கர்த்தர் என்னிடம் இதைப்பற்றி எதையும் சொல்லவில்லை. கர்த்தர் என்னிடம் இதனை மறைத்துவிட்டார்” என்றான்.
28அதற்கு அந்தப் பெண், “ஐயா! நான் உம்மிடம் குமாரனைக் கேட்கவில்லை. ‘என்னை ஏமாற்ற வேண்டாம்’ என்றுதானே சொன்னேன்” என்றாள்.
29பிறகு எலிசா கேயாசியிடம், “புறப்படுவதற்குத் தயார்செய்! எனது கைத்தடியை எடுத்துக் கொண்டுபோ. பேசுவதற்காக யாரையும் நிறுத்தாதே. யாரையாவது சந்தித்தாலும் நீ அவர்களை நலம் கூடி விசாரிக்க வேண்டாம். யாராவது விசாரித்தாலும் பதில் சொல்லவேண்டாம்! எனது கைத் தடியை அந்த பிள்ளையின் முகத்தில் வை” என்றான்.
30ஆனால் அவள், “நீங்கள் இல்லாமல் நான் போகமாட்டேன்!” என்றாள்.
எனவே எலிசா எழுந்து அந்த சூனேமியப் பெண்ணோடு போனான்.
31அவர்களுக்கு முன்னால் கேயாசி அப்பெண்ணின் வீட்டை அடைந்தான். அவன் கைத்தடியை பிள்ளையின் முகத்தில் வைத்தான். ஆனால் அந்தக் குழந்தை பேசவோ பேச்சுக்கு பதிலாக அசையவோ இல்லை. எனவே கேயாசி எலிசாவிடம் ஓடிவந்து, “குழந்தை இன்னும் எழுந்திருக்கவில்லை!” என்று கூறினான்.
சூனேமியப் பெண்ணின் குமாரன் மீண்டும் உயிரடைகிறான்
32எலிசா வீட்டிற்கு வந்தான். அவனது படுக்கையில், பிள்ளை மரித்துக்கிடந்தது. 33அவன் அறையுள் நுழைந்ததும் கதவுகளை அடைத்தான். அவ்வறையில் அவனும் பிள்ளையும் மட்டுமே இருந்தனர். எலிசா கர்த்தரை நினைத்து ஜெபம் செய்தான். 34அவன் படுக்கையருகில் சென்று அப்பிள்ளை மேல் படுத்து, தன் வாயை அப்பிள்ளையின் வாயோடு வைத்து, தன் கண்ணை அதன் கண்களோடு வைத்து, தன் கைகளை அதன் கைகளோடு வைத்து நீட்டிப்படுத்தான். அப்பிள்ளையின் உடல் சூடு அடைந்தது.
35பிறகு எலிசா அறையைவிட்டு வெளியே வந்து வீட்டைச் சுற்றி முன்னும் பின்னும் நடந்தான். பிறகு (அறைக்குள்) போய் பிள்ளை மேல் குப்புறப்படுத்தான். உடனே பிள்ளை ஏழுமுறை தும்மி தன் கண்களை திறந்தான்.
36பிறகு அவன் கேயாசியிடம், “சூனேமியப் பெண்ணை கூப்பிடு” என்றான்.
கேயாசி அவளை அழைக்க அவளும் வந்தாள். அவன் அவளிடம், “உன் குமாரனை எடுத்துக்கொள்” என்றான்.
37பிறகு அந்த சூனேமியப்பெண் அறைக்குள் வந்து எலிசாவின் பாதத்தில் விழுந்து பணிந்தாள். குழந்தையை எடுத்துக்கொண்டு வெளியே போனாள்.
எலிசாவும் விஷமுள்ள கூழும்?
38எலிசா மீண்டும் கில்காலுக்கு வந்தான். அப்போது அந்நாட்டில் பஞ்சமாய் இருந்தது. தீர்க்கதரிசிகள் கூட்டமாக எலிசாவின் முன்னர் கூடினார்கள். எலிசா தனது வேலைக்காரனிடம், “பெரிய பாத்திரத்தை நெருப்பில் வை. இவர்களுக்கு கூழ் தயார் செய்” என்றான்.
39மூலிகைத் தழைகளைச் சேகரிக்கும் பொருட்டு ஒருவன் வயல்வெளிக்குச் சென்றான். அங்கே விஷ திராட்சைக் கொடிகளைக் கண்டான். அக்கொடியில் இருந்து முதிர்ந்த பழங்களைச் சேகரித்துத் தன் மேலாடையின் பையில் நிரப்பிக்கொண்டான். திரும்பிவந்து, பானையில் வைத்து மூடினான். ஆனால் அங்கிருந்த தீர்க்கதரிசிகளுக்கு இவ்விஷயம் பற்றி எதுவும் தெரியாது.
40பிறகு அதை குடிக்க ஊற்றினார்கள். அவர்கள் குடிக்கப்போகும்போது, “தேவ மனிதனே! இந்தப் பாத்திரத்தில் விஷம் இருக்கிறது” என்று சத்தமிட்டனர். அதனால் அவர்கள் அதனைக் குடிக்க முடியவில்லை.
41ஆனால் எலிசாவோ, “சிறிது மாவு கொடுங்கள்” என்று கேட்க அவர்கள் கொடுத்தார்கள். அதனை அந்தப் பாத்திரத்தில் அவன் போட்டு, “இப்போது ஜனங்களுக்குச் கூழை ஊற்றுங்கள். அவர்கள் அதை குடிக்கலாம்” என்றான்.
பிறகு அந்தக் கூழில் எந்த குறையும் இல்லை!
தீர்க்கதரிசிகளுக்கு எலிசா உணவளித்தது
42பாகால்சலீஷாவிலிருந்து ஒருவன் வந்தான். அவன் எலிசாவிற்கு முதல் அறுவடையின் வாற் கோதுமையின் 20 அப்பங்களையும் புதிய கதிர்களையும் தனது கோணிப்பையில் தேவமனிதனுக்கு (எலிசா) கொண்டுவந்தான். எலிசாவோ, “அவற்றை ஜனங்களுக்குக் கொடு. அவர்கள் உண்ணட்டும்” என்றான்.
43அதற்கு எலிசாவின் வேலைக்காரன், “என்ன? இங்கே 100 பேர்கள் இருக்கிறார்கள். இந்த உணவை எல்லோருக்கும் எப்படி பகிர்ந்தளிக்க முடியும்” என்றான்.
ஆனால் எலிசாவோ, “இந்த உணவை ஜனங்களுக்குக் கொடு. கர்த்தர், ‘அவர்கள் உண்டபிறகும் உணவு மீதியாகும்’ என்று கூறியிருக்கிறார்” என்றான்.
44பிறகு எலிசாவின் வேலைக்காரன் உணவை ஜனங்களுக்குக் கொடுத்தான். அத்தீர்க்கதரிசிகள் அவற்றை நன்கு உண்டனர். மேலும் உணவு மீதியானது! இவ்வாறு கர்த்தர் சொன்னபடியே நிறைவேறியது.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 4: TAERV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
Tamil Holy Bible: Easy-to-Read Version
All rights reserved.
© 1998 Bible League International