2 இராஜாக்கள் 4:8-17

2 இராஜாக்கள் 4:8-17 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்பு ஒரு நாள் எலிசா சூனேமுக்குப் போயிருக்கும்போது, அங்கேயிருந்த கனம்பொருந்திய ஒரு ஸ்திரீ அவனை போஜனம்பண்ண வருந்திக் கேட்டுக்கொண்டாள்; அப்படியே அவன் பயணப்பட்டு வருகிறபோதெல்லாம் போஜனம்பண்ணும்படி அங்கே வந்து தங்குவான். அவள் தன் புருஷனை நோக்கி: இதோ, நம்மிடத்தில் எப்போதும் வந்துபோகிற தேவனுடைய மனுஷனாகிய இவர் பரிசுத்தவான் என்று காண்கிறேன். நாம் மெத்தையின்மேல் ஒருசிறிய அறைவீட்டைக் கட்டி, அதில் அவருக்கு ஒரு கட்டிலையும், மேஜையையும், நாற்காலியையும், குத்துவிளக்கையும் வைப்போம்; அவர் நம்மிடத்தில் வரும்போது அங்கே தங்கலாம் என்றாள். ஒரு நாள் அவன் அங்கே வந்து, அந்த அறை வீட்டிலே தங்கி, அங்கே படுத்துக்கொண்டிருந்தான். அவன் தன் வேலைக்காரனாகிய கேயாசை நோக்கி: இந்தச் சூனேமியாளை அழைத்துக்கொண்டுவா என்றான்; அவளை அழைத்துக்கொண்டு வந்தான்; அவள் அவனுக்கு முன்பாக நின்றாள். அவன் கேயாசியைப் பார்த்து: இதோ, இப்படிப்பட்ட சகல சலக்கரணையோடும் எங்களை விசாரித்து வருகிறாயே, உனக்கு நான் என்ன செய்யவேண்டும் ராஜாவினிடத்திலாவது சேனாபதியினிடத்திலாவது உனக்காக நான் பேசவேண்டிய காரியம் உண்டோ என்று அவளைக் கேள் என்றான். அதற்கு அவள்: என் ஜனத்தின் நடுவே நான் சுகமாய்க் குடியிருக்கிறேன் என்றாள். அவளுக்குச் செய்யவேண்டியது என்னவென்று கேயாசியை அவன் கேட்டதற்கு; அவன், அவளுக்குப் பிள்ளை இல்லை, அவள் புருஷனும் பெரிய வயதுள்ளவன் என்றான். அப்பொழுது அவன்: அவளைக் கூப்பிடு என்றான்; அவளைக் கூப்பிட்டபோது, அவள் வந்து வாசற்படியிலே நின்றாள். அப்பொழுது அவன்: ஒரு பிராண உற்பத்திகாலத்திட்டத்திலே ஒருகுமாரனை அணைத்துக்கொண்டிருப்பாய் என்றான். அதற்கு அவள்: ஏது? தேவனுடைய மனுஷனாகிய என் ஆண்டவனே, உமது அடியாளுக்கு அபத்தம் சொல்லவேண்டாம் என்றாள். அந்த ஸ்திரீ கர்ப்பந்தரித்து, எலிசா தன்னோடே சொன்னபடி, ஒரு உற்பத்திகாலத்திட்டத்தில் ஒரு குமாரனைப் பெற்றாள்.

2 இராஜாக்கள் 4:8-17 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஒரு நாள் எலிசா சூனேம் என்ற ஊருக்குப் போனான். அங்கு ஒரு செல்வம் மிகுந்த பெண் இருந்தாள். அவள் அவனை சாப்பிடவரும்படி வருந்தி அழைத்தாள். அதன்பின்பு அவ்வழியில் அவன் போகும்போதெல்லாம் அங்கே சாப்பிடுவதற்காகத் தங்குவான். அவள் தன் கணவனிடம், “இந்த வழியாக வந்து இங்கு தங்கிப்போகும் மனிதன், இறைவனுடைய பரிசுத்த மனிதன் என்பது எனக்குத் தெரிகிறது. நாங்கள் எங்கள் வீட்டுக்குமேல் ஒரு அறையைக் கட்டி, ஒரு கட்டில், மேஜை, நாற்காலி, விளக்கு ஆகியவற்றை அவருக்கு வைப்போம். அதனால் எங்களிடம் வரும்போதெல்லாம் அங்கேயே அவர் தங்கியிருக்கலாம்” என்றாள். ஒரு நாள் எலிசா அங்கு வந்தபோது மேலே தன் அறைக்குப் போய் அங்கே படுத்திருந்தான். தன் வேலைக்காரனான கேயாசிடம், “அந்த சூனேமியாளை அழைத்து வா” என்றான். அவன் போய் அவளை அழைத்துவர, அவள் வந்து எலிசாவுக்கு முன் நின்றாள். அப்பொழுது எலிசா கேயாசியைப் பார்த்து, “நீ அவளிடம் சொல்லவேண்டியதாவது: ‘எங்களுக்காக நீ எவ்வளவு கஷ்டப்பட்டுவிட்டாய். உனக்கு நாங்கள் என்ன செய்யலாம்? உனது சார்பாக அரசனிடமோ அல்லது இராணுவத் தளபதியிடமோ நாங்கள் ஏதேனும் சொல்ல வேண்டியிருந்தால் அதைச் சொல்’ என்று அவளிடம் கேள்” என்றான். அவள் அதற்குப் பதிலாக, “நான் என் சொந்த மக்கள் மத்தியில் குடியிருக்க எனக்கு வீடு இருக்கிறது” என்றாள். அப்பொழுது எலிசா கேயாசிடம், “அவளுக்கு என்ன செய்யலாம்?” என்று கேட்டான். அதற்கு கேயாசி, “அவளுக்கு ஒரு மகன் இல்லை. அவளுடைய கணவனும் வயதுசென்றவனாக இருக்கிறான்” என்றான். எலிசா அவனிடம், “அவளைக் கூப்பிடு” என்றான். கேயாசி அவளைக் கூப்பிட்டபோது, அவள் வந்து கதவுக்குப் பக்கத்தில் நின்றாள். எலிசா அவளைப் பார்த்து, “அடுத்த வருடம் இந்த நேரத்தில் உன் கைகளில் ஒரு மகனை ஏந்திக்கொண்டிருப்பாய்” என்றான். அப்பொழுது அவள், “என் தலைவனே! இறைவனுடைய மனிதனே, உமது அடியவளைத் தவறாக வழிநடத்த வேண்டாம்” என்றாள். ஆனால் அவளோ எலிசா முன்கூறியபடியே கர்ப்பமாகி அடுத்த வருடம் அதே காலத்தில் ஒரு மகனைப் பெற்றாள்.

2 இராஜாக்கள் 4:8-17 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்பு ஒரு நாள் எலிசா சூனேமுக்குப் போயிருக்கும்போது, அங்கேயிருந்த கனம்பொருந்திய ஒரு பெண் அவனை சாப்பிட வருந்திக் கேட்டுக்கொண்டாள்; அப்படியே அவன் பிரயாணமாக வருகிறபோதெல்லாம் சாப்பிடுவதற்காக அங்கே வந்து தங்குவான். அவள் தன் கணவனை நோக்கி: இதோ, நம்மிடத்தில் எப்போதும் வந்துபோகிற தேவனுடைய மனிதனாகிய இவர் பரிசுத்தவான் என்று காண்கிறேன். நாம் மேல்மாடியில் ஒரு சிறிய அறையைக் கட்டி, அதில் அவருக்கு ஒரு கட்டிலையும், மேஜையையும், நாற்காலியையும், குத்துவிளக்கையும் வைப்போம்; அவர் நம்மிடத்தில் வரும்போது அங்கே தங்கலாம் என்றாள். ஒரு நாள் அவன் அங்கே வந்து, அந்த அறையிலே தங்கி, அங்கே படுத்துக்கொண்டிருந்தான். அவன் தன்னுடைய வேலைக்காரனாகிய கேயாசியை நோக்கி: இந்தச் சூனேமியாளை அழைத்துக்கொண்டுவா என்றான்; அவளை அழைத்துக்கொண்டு வந்தான்; அவள் அவனுக்கு முன்பாக நின்றாள். அவன் கேயாசியைப் பார்த்து: இதோ, இப்படிப்பட்ட சகல கரிசனையோடும் எங்களை விசாரித்து வருகிறாயே, உனக்கு நான் என்ன செய்யவேண்டும் என்றும் ராஜாவிடமாவது சேனாதிபதியிடமாவது உனக்காக நான் பேசவேண்டிய காரியம் உண்டோ என்றும் அவளைக் கேள் என்றான். அதற்கு அவள்: என் மக்களின் நடுவே நான் சுகமாகக் குடியிருக்கிறேன் என்றாள். அவளுக்குச் செய்யவேண்டியது என்னவென்று கேயாசியை அவன் கேட்டதற்கு; அவன், அவளுக்குக் குழந்தை இல்லை, அவளுடைய கணவனும் அதிக வயதுள்ளவன் என்றான். அப்பொழுது அவன்: அவளைக் கூப்பிடு என்றான்; அவளைக் கூப்பிட்டபோது, அவள் வந்து வாசற்படியிலே நின்றாள். அப்பொழுது அவன்: ஒரு கர்ப்பகாலத்திட்டத்தில் ஒரு மகனை அணைத்துக்கொண்டிருப்பாய் என்றான். அதற்கு அவள்: இல்லை, தேவனுடைய மனிதனாகிய என் ஆண்டவனே, உமது அடியாளுக்கு பொய் சொல்லவேண்டாம் என்றாள். அந்த பெண் கர்ப்பவதியாகி, எலிசா தன்னோடே சொன்னபடி, ஒரு கர்ப்பகாலத்திட்டத்தில் ஒரு மகனைப் பெற்றாள்.

2 இராஜாக்கள் 4:8-17 பரிசுத்த பைபிள் (TAERV)

ஒரு நாள் எலிசா சூனேமுக்குச் சென்றான். அங்கு ஒரு முக்கியமான பெண் இருந்தாள். அவள் எலிசாவை (தடுத்து) தன் வீட்டில் உணவு உண்ண அழைத்தாள். எனவே ஒவ்வொரு நேரமும் அவர் அந்த வழியாகப் போகும்போதெல்லாம் அவன் உணவு உண்பதற்காக நிறுத்தப்பட்டான். அவள் தன் கணவனிடம், “இதோ பாருங்கள், எலிசா தேவனுடைய பரிசுத்தமான மனிதன் என்பதைத் தெரிந்துக்கொண்டேன். எப்பொழுதும் நம் வீட்டைக் கடந்தே போகிறார். அவருக்காக நாம் கூரைமீது ஒரு சிறு அறை ஏற்பாடு செய்வோம். அதில் படுக்கையிட்டு, ஒரு மேஜை, நாற்காலி, விளக்குத் தண்டு ஆகியவற்றையும் வைத்துவிடுங்கள். அவர் இங்கு வரும்போது தன் உபயோகத்திற்காக இந்த அறையை வைத்துக்கொள்ளலாம்” என்றாள். ஒரு நாள் எலிசா அவளது வீட்டிற்கு வந்தான். அவன் அங்குள்ள அறைக்குச் சென்று அங்கே ஓய்வெடுத்தான். எலிசா தனது வேலையாளான கேயாசிடம், “அந்த சூனேமியாளைக் கூப்பிடு” என்றான். அந்த வேலையாள் சூனேமியாளை அழைத்தான். அவளும் கிளம்பிவந்து எலிசாவின் முன்னிலையில் நின்றாள். எலிசா தன் வேலையாளிடம், “இப்போது அவளிடம், ‘எங்களுக்கு வசதியானவற்றை உன்னால் முடிந்தவரை நன்கு செய்துள்ளாய். நான் உனக்காக என்ன செய்யவேண்டும்? நான் உனக்காக ராஜாவிடமோ அல்லது படைத் தலைவனிடமோ ஏதாவது பேசவேண்டுமா?’” எனக் கேட்கும்படி சொன்னான். அதற்கு அவள், “இங்கே வாழுகின்ற என் சொந்த ஜனங்களில் நான் நன்றாகவே இருக்கிறேன்” என்றாள். எலிசா தன் வேலைக்காரனிடம், “நாம் இவளுக்காக என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான். அதற்கு கேயாசி, “எனக்குத் தெரியும். இவளுக்கு குழந்தையில்லை. இவள் கணவனுக்கு வயதாகிவிட்டது” என்றான். பிறகு எலிசா, “அவளைக் கூப்பிடு” என்றான். வேலைக்காரன் அவளை அழைத்தான். அவள் கதவருகில் வந்து நின்றாள். எலிசா அவளிடம், “அடுத்த ஆண்டு இதே பருவத்தில் நீ உனது சொந்த ஆண் குழந்தையை அணைத்துக்கொண்டிருப்பாய்” என்றான். அதற்கு அவள், “இல்லை! தேவமனிதரே, நீங்கள் உங்கள் வேலைக்காரியிடம் பொய் சொல்லவேண்டாம்” என்றாள். ஆனால் அப்பெண் கருவுற்றாள். எலிசா சொன்னதுபோல அடுத்த ஆண்டு அதே பருவ காலத்தில், அவள் ஆண் குழந்தையைப் பெற்றாள்.