2 இராஜாக்கள் 13:10-21

2 இராஜாக்கள் 13:10-21 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யூதாவின் அரசன் யோவாசின் ஆட்சியின் முப்பத்தேழாம் வருடத்தில் யோவாகாஸின் மகன் யோவாஸ் இஸ்ரயேலில் அரசனானான். இவன் சமாரியாவிலிருந்து பதினாறு வருடங்கள் ஆட்சிசெய்தான். இவன் யெகோவாவின் பார்வையில் தீமையானவற்றைச் செய்தான். இஸ்ரயேலைப் பாவம் செய்யப்பண்ணின நேபாத்தின் மகன் யெரொபெயாமின் பாவங்களில் எதையும் அவன் விடாமல் அவற்றைத் தொடர்ந்து செய்து வந்தான். இஸ்ரயேல் அரசன் யோவாஸ் நிகழ்வுகளும், அவன் செய்தவைகளும், அவனுடைய சாதனைகளும் யூதாவின் அரசன் அமத்சியாவுடன் அவன் செய்த யுத்தம் உட்பட அவனுடைய சதிகள் யாவும், இஸ்ரயேல் அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன. யோவாஸ் தன் முற்பிதாக்களுடன் இளைப்பாறினான். மற்ற இஸ்ரயேல் அரசர்களை அடக்கம்பண்ணும் இடத்தில் சமாரியாவில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப்பின் அவனுடைய அரியணையில் யெரொபெயாம் அரசனானான். இந்த நாட்களில் எலிசா வியாதியினால் துன்பப்பட்டான். இந்த வியாதியே பின் அவனுடைய மரணத்துக்குக் காரணமாயிருந்தது. அப்பொழுது இஸ்ரயேலின் அரசன் யோவாஸ் அவனைப் பார்க்கப்போய், “என் தந்தையே! தந்தையே! இஸ்ரயேலுக்கு தேர்களையும், குதிரைவீரர்களையும்போல் இருந்தவரே!” என்று சொல்லி அவனுக்காக அழுதான். எலிசா அவனை நோக்கி, “ஒரு வில்லும் சில அம்புகளும் கொண்டுவா” என்றான் அவன் அப்படியே கொண்டுவந்தான். எலிசா இஸ்ரயேலின் அரசனிடம், “வில்லை உம்முடைய கைகளில் எடும்” என்றான். அரசன் அவ்வாறே எடுத்தபோது, எலிசா தன் கையை அரசனின் கையில் வைத்தான். “கிழக்குப் பக்கமாக ஜன்னலைத் திறந்திடும்” என்றான். அப்படியே அரசன் ஜன்னலைத் திறந்தான். அப்பொழுது எலிசா, “எய்திடும்” என்றான். அவன் அப்படியே செய்தான். எலிசா அவனைப் பார்த்து, “இது யெகோவாவினுடைய வெற்றியின் அம்பு. சீரியரின்மேல் வெற்றியைக் கொண்டுவரும் அம்பு; நீ சீரியரை ஆப்பெக்கில் முழுவதுமாக அழித்துப்போடுவாய்” என்று கூறினான். அதன்பின்பும் எலிசா அரசனை நோக்கி, “அந்த அம்புகளை எடும்” என்றான். அரசன் அவற்றை எடுத்தான். அப்பொழுது எலிசா இஸ்ரயேலின் அரசனிடம், “அவற்றை நிலத்தில் அடியும்” என்றான். அவன் மூன்றுமுறை அடித்து நிறுத்தினான். இறைவனுடைய மனிதன் அவன்மேல் கோபங்கொண்டு, “நீர் நிலத்தில் ஐந்துமுறை அல்லது ஆறுமுறை அடித்திருக்க வேண்டும். அவ்வாறு அடித்திருந்தால் சீரியாவை முழுவதும் தோற்கடித்திருப்பீர். இப்போதோ மூன்றுமுறை மாத்திரம் தான் சீரியாவை தோற்கடிப்பீர்” என்றான். அதன்பின் எலிசா இறந்து அடக்கம் செய்யப்பட்டான். மோவாபிய கொள்ளையர் ஒவ்வொரு வருடமும் வசந்தகாலத்தில் நாட்டுக்குள் நுழைவது வழக்கமாயிருந்தது. ஒருமுறை இஸ்ரயேலர் ஒரு மனிதனை அடக்கம்பண்ணிக்கொண்டிருக்கையில் திடீரென ஒரு கொள்ளைக் கூட்டத்தைக் கண்டார்கள். உடனே அந்த உடலை எலிசாவின் கல்லறைக்குள் தூக்கி எறிந்தார்கள். அந்த உடல் எலிசாவின் எலும்புகளில் பட்டவுடனே அவன் உயிர்பெற்று தன் கால்களை ஊன்றி எழுந்து நின்றான்.

2 இராஜாக்கள் 13:10-21 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யூதாவின் ராஜாவாகிய யோவாசுடைய முப்பத்தேழாம் வருட ஆட்சியில் யோவாகாசின் மகனாகிய யோவாஸ், இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி சமாரியாவிலே பதினாறுவருடங்கள் அரசாட்சிசெய்து, யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; இஸ்ரவேலைப் பாவம்செய்யவைத்த நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் பாவங்களை விட்டு விலகாமல் அவைகளையெல்லாம் செய்தான். யோவாசின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த யாவும், அவன் யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவோடு அவன் போர்செய்த வல்லமையும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. யோவாஸ் இறந்தபின், யெரொபெயாம் அவன் சிங்காசனத்தில் வீற்றிருந்தான்; யோவாஸ் சமாரியாவில் இஸ்ரவேலின் ராஜாக்களின் அருகில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுடைய நாட்களில் எலிசா மரணத்திற்கு ஏதுவான வியாதியாகக் கிடந்தான்; அப்பொழுது இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் அவனிடத்திற்குப் போய், அவன்மேல் விழுந்து, அழுது: என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரைவீரருமாயிருந்தவரே என்றான். எலிசா அவனைப் பார்த்து: வில்லையும் அம்புகளையும் பிடியும் என்றான்; அப்படியே வில்லையும் அம்புகளையும் பிடித்துக்கொண்டான். அப்பொழுது அவன் இஸ்ரவேலின் ராஜாவை நோக்கி: உம்முடைய கையை வில்லின்மேல் வையும் என்றான்; அவன் தன் கையை வைத்தபோது, எலிசா தன் கைகளை ராஜாவுடைய கைகள்மேல் வைத்து: கிழக்கே இருக்கிற ஜன்னலைத் திறவும் என்றான்; அவன் அதைத் திறந்தபோது, எலிசா: எய்யும் என்றான்; இவன் எய்தபோது, அவன்: அது யெகோவாவுடைய ரட்சிப்பின் அம்பும், சீரியர்களிடமிருந்து விடுதலையாக்கும் ரட்சிப்பின் அம்புமாக இருக்கிறது; நீர் ஆப்பெக்கிலே சீரியர்களை முற்றிலும் முறியடிப்பீர் என்றான். பின்பு அம்புகளைப் பிடியும் என்றான்; அவைகளைப் பிடித்தான். அப்பொழுது அவன் இஸ்ரவேலின் ராஜாவை நோக்கி: தரையிலே அடியும் என்றான்; அவன் மூன்றுமுறை அடித்து நின்றான். அப்பொழுது தேவனுடைய மனிதன் அவன்மேல் கோபமாகி: நீர் ஐந்து ஆறுமுறை அடித்தீரானால், அப்பொழுது சீரியர்களை முற்றிலும் முறியடிப்பீர்; இப்பொழுதோ சீரியர்களை மூன்றுமுறை மாத்திரம் முறியடிப்பீர் என்றான். எலிசா மரணமடைந்தான்; அவனை அடக்கம்செய்தார்கள்; மறுவருடத்திலே மோவாபியரின் கூட்டம் தேசத்திலே வந்தது. அப்பொழுது அவர்கள், ஒரு மனிதனை அடக்கம் செய்யப்போகும்போது, அந்தக் கூட்டத்தைக் கண்டு, அந்த மனிதனை எலிசாவின் கல்லறையில் போட்டார்கள்; அந்த மனிதனின் பிரேதம் அதிலே விழுந்து எலிசாவின் எலும்புகளின்மேல் பட்டபோது, அந்த மனிதன் உயிரடைந்து தன் கால்களை ஊன்றி எழுந்திருந்தான்.

2 இராஜாக்கள் 13:10-21 பரிசுத்த பைபிள் (TAERV)

யோவாகாசின் குமாரன் யோவாஸ் சமாரியாவில் இஸ்ரவேலரின் ராஜா ஆனான். இது யூதாவின் ராஜாவாகிய யோவாசின் 37வது ஆட்சியாண்டில் நிகழ்ந்தது. யோவாஸ் 16 ஆண்டுகள் இஸ்ரவேலை ஆண்டான். யோவாசும் கர்த்தருக்குப் பிடிக்காதவற்றைச் செய்தான். இஸ்ரவேலர்களுக்குப் பாவத்தைத் தேடித்தந்த, பாவத்தை உண்டு பண்ணிய நேபாத்தின் குமாரனான யெரொபெயாமின் பாவச்செயல்களைச் செய்வதை இவனும் நிறுத்தவில்லை. அவன் அவற்றைத் தொடர்ந்து செய்தான். யோவாஸ் செய்த மற்ற அருஞ்செயல்களும் அவனது வலிமையும் அவன் யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவோடு செய்த போர்களும் பற்றி இஸ்ரவேல் ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. யோவாஸ் மரித்ததும் இஸ்ரவேல் ராஜாக்களான அவனது முற்பிதாக்களோடு சமாரியாவில் அடக்கம் செய்யப்பட்டான். யோவாசின் சிம்மாசனத்தில் யெரொபெயாம் ராஜாவாக அமர்ந்தான். எலிசா நோயுற்றான். பின், இந்த நோயாலேயே அவன் மரித்துப்போனான். இஸ்ரவேல் ராஜாவாகிய யோவாஸ், எலிசாவைப் பார்க்கப் போனான். யோவாஸ் எலிசாவுக்காக அழுதான். அவன் “என் தந்தையே! என் தந்தையே! இது இஸ்ரவேலின் இரதமும் அதன் குதிரைகளுக்கும் ஏற்ற நேரமா?” என்றான். எலிசா அவனிடம், “ஒரு வில்லையும் சில அம்புகளையும் எடுத்துக்கொள்” என்றான். யோவாஸ் ஒரு வில்லையும், சில அம்புகளையும் எடுத்துக்கொண்டான். பிறகு எலிசா இஸ்ரவேல் ராஜாவிடம், “வில்லில் உனது கையை வை” என்றான். யோவாஸ் அவ்வாறே செய்தான். பிறகு எலிசா தன் கையை ராஜாவின் கையோடு வைத்தான். எலிசா, “கிழக்கு ஜன்னலைத் திறவுங்கள்” என்றான், யோவாஸ் அவ்வாறே திறந்தான். பிறகு எலிசா “எய்துவிடு” என்றான். யோவாஸ் எய்தான். பிறகு எலிசா, “இது கர்த்தருடைய வெற்றி அம்பு! இது ஆராம் மேல் கொள்ளும் வெற்றியாகும்! நீ ஆராமியர்களை ஆப்பெக்கில் வெல்வாய். அவர்களை அழிப்பாய்” என்றான். எலிசா மேலும், “அம்புகளை எடு” என்றான். யோவாஸ் எடுத்தான். “தரையின் மேல் அடி” என்று இஸ்ரவேல் ராஜாவிடம் கூறினான். யோவாஸ் மூன்று முறை தரையின் மீது அடித்தான். பிறகு நிறுத்தினான். அதனால் தேவமனிதனுக்கு (எலிசாவிற்கு) யோவாசின் மேல் கோபம் வந்தது. அவன், “நீ ஐந்து அல்லது ஆறுமுறை அடித்திருக்க வேண்டும்! அதனால் ஆராமை அது அழியும்வரை தோற்கடித்திருப்பாய்! ஆனால் இப்போது நீ மூன்றுமுறை மட்டுமே ஆராமை வெல்வாய்!” என்றான். எலிசா மரித்தான். ஜனங்கள் அவனை அடக்கம் செய்தனர். அடுத்த ஆண்டில் ஒரு வசந்த காலத்தில் மோவாபிய வீரர்களின் குழு ஒன்று படையெடுத்து தாக்கியது. போருக்கான பொருட்களை எடுப்பதற்காக அவர்கள் வந்தனர். சில இஸ்ரவேலர்கள் மரித்த ஒருவனை அடக்கம் செய்துகொண்டிருந்தனர். அவர்கள் வீரர்கள் வருவதைப் பார்த்தார்கள். உடனே (பயந்து) பிணத்தை எலிசாவின் கல்லறைக்குள் வீசிவிட்டு ஓடினார்கள். பிணமானது எலிசாவின் எலும்பின் மீது பட்டது, அதற்கு உயிர் வந்து எழுந்து நின்றான்!

2 இராஜாக்கள் 13:10-21 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

யூதாவின் ராஜாவாகிய யோவாசுடைய முப்பத்தேழாம் வருஷத்தில் யோவாகாசின் குமாரனாகிய யோவாஸ், இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி சமாரியாவிலே பதினாறுவருஷம் ராஜ்யபாரம்பண்ணி, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை விட்டு விலகாமல் அவைகளிலெல்லாம் நடந்தான். யோவாசின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், அவன் யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவோடு அவன் யுத்தம்பண்ணின வல்லமையும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது. யோவாஸ் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், யெரொபெயாம் அவன் சிங்காசனத்தில் வீற்றிருந்தான்; யோவாஸ் சமாரியாவில் இஸ்ரவேலின் ராஜாக்களண்டையிலே அடக்கம்பண்ணப்பட்டான். அவன் நாட்களில் எலிசா மரணத்துக்கு ஏதுவான வியாதியாய்க் கிடந்தான்; அப்பொழுது இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் அவனிடத்துக்குப் போய், அவன்மேல் விழுந்து, அழுது: என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரைவீரருமாயிருந்தவரே என்றான். எலிசா அவனைப் பார்த்து: வில்லையும் அம்புகளையும் பிடியும் என்றான்; அப்படியே வில்லையும் அம்புகளையும் பிடித்துக்கொண்டான். அப்பொழுது அவன் இஸ்ரவேலின் ராஜாவை நோக்கி: உம்முடைய கையை வில்லின்மேல் வையும் என்றான்; அவன் தன் கையை வைத்தபோது, எலிசா தன் கைகளை ராஜாவுடைய கைகள்மேல் வைத்து: கிழக்கே இருக்கிற ஜன்னலைத் திறவும் என்றான்; அவன் அதைத் திறந்தபோது, எலிசா: எய்யும் என்றான்; இவன் எய்தபோது, அவன்: அது கர்த்தருடைய ரட்சிப்பின் அம்பும், சீரியரினின்று விடுதலையாக்கும் ரட்சிப்பின் அம்புமானது; நீர் ஆப்பெக்கிலே சீரியரைத் தீர முறிய அடிப்பீர் என்றான். பின்பு அம்புகளைப் பிடியும் என்றான்; அவைகளைப் பிடித்தான். அப்பொழுது அவன் இஸ்ரவேலின் ராஜாவை நோக்கி: தரையிலே அடியும் என்றான்; அவன் மூன்று தரம் அடித்து நின்றான். அப்பொழுது தேவனுடைய மனுஷன் அவன்மேல் கோபமாகி: நீர் ஐந்து ஆறுவிசை அடித்தீரானால், அப்பொழுது சீரியரைத் தீர முறிய அடிப்பீர்; இப்பொழுதோ சீரியரை மூன்றுவிசை மாத்திரம் முறிய அடிப்பீர் என்றான். எலிசா மரணமடைந்தான்; அவனை அடக்கம்பண்ணினார்கள்; மறுவருஷத்திலே மோவாபியரின் தண்டுகள் தேசத்திலே வந்தது. அப்பொழுது அவர்கள், ஒரு மனுஷனை அடக்கம்பண்ணப்போகையில், அந்தத் தண்டைக் கண்டு, அந்த மனுஷனை எலிசாவின் கல்லறையில் போட்டார்கள்; அந்த மனுஷனின் பிரேதம் அதிலே விழுந்து எலிசாவின் எலும்புகளின்மேல் பட்டபோது, அந்த மனுஷன் உயிரடைந்து தன் கால்களை ஊன்றி எழுந்திருந்தான்.