2 இராஜா 13:10-21

2 இராஜா 13:10-21 IRVTAM

யூதாவின் ராஜாவாகிய யோவாசுடைய முப்பத்தேழாம் வருட ஆட்சியில் யோவாகாசின் மகனாகிய யோவாஸ், இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி சமாரியாவிலே பதினாறுவருடங்கள் அரசாட்சிசெய்து, யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; இஸ்ரவேலைப் பாவம்செய்யவைத்த நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் பாவங்களை விட்டு விலகாமல் அவைகளையெல்லாம் செய்தான். யோவாசின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த யாவும், அவன் யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவோடு அவன் போர்செய்த வல்லமையும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. யோவாஸ் இறந்தபின், யெரொபெயாம் அவன் சிங்காசனத்தில் வீற்றிருந்தான்; யோவாஸ் சமாரியாவில் இஸ்ரவேலின் ராஜாக்களின் அருகில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுடைய நாட்களில் எலிசா மரணத்திற்கு ஏதுவான வியாதியாகக் கிடந்தான்; அப்பொழுது இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் அவனிடத்திற்குப் போய், அவன்மேல் விழுந்து, அழுது: என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரைவீரருமாயிருந்தவரே என்றான். எலிசா அவனைப் பார்த்து: வில்லையும் அம்புகளையும் பிடியும் என்றான்; அப்படியே வில்லையும் அம்புகளையும் பிடித்துக்கொண்டான். அப்பொழுது அவன் இஸ்ரவேலின் ராஜாவை நோக்கி: உம்முடைய கையை வில்லின்மேல் வையும் என்றான்; அவன் தன் கையை வைத்தபோது, எலிசா தன் கைகளை ராஜாவுடைய கைகள்மேல் வைத்து: கிழக்கே இருக்கிற ஜன்னலைத் திறவும் என்றான்; அவன் அதைத் திறந்தபோது, எலிசா: எய்யும் என்றான்; இவன் எய்தபோது, அவன்: அது யெகோவாவுடைய ரட்சிப்பின் அம்பும், சீரியர்களிடமிருந்து விடுதலையாக்கும் ரட்சிப்பின் அம்புமாக இருக்கிறது; நீர் ஆப்பெக்கிலே சீரியர்களை முற்றிலும் முறியடிப்பீர் என்றான். பின்பு அம்புகளைப் பிடியும் என்றான்; அவைகளைப் பிடித்தான். அப்பொழுது அவன் இஸ்ரவேலின் ராஜாவை நோக்கி: தரையிலே அடியும் என்றான்; அவன் மூன்றுமுறை அடித்து நின்றான். அப்பொழுது தேவனுடைய மனிதன் அவன்மேல் கோபமாகி: நீர் ஐந்து ஆறுமுறை அடித்தீரானால், அப்பொழுது சீரியர்களை முற்றிலும் முறியடிப்பீர்; இப்பொழுதோ சீரியர்களை மூன்றுமுறை மாத்திரம் முறியடிப்பீர் என்றான். எலிசா மரணமடைந்தான்; அவனை அடக்கம்செய்தார்கள்; மறுவருடத்திலே மோவாபியரின் கூட்டம் தேசத்திலே வந்தது. அப்பொழுது அவர்கள், ஒரு மனிதனை அடக்கம் செய்யப்போகும்போது, அந்தக் கூட்டத்தைக் கண்டு, அந்த மனிதனை எலிசாவின் கல்லறையில் போட்டார்கள்; அந்த மனிதனின் பிரேதம் அதிலே விழுந்து எலிசாவின் எலும்புகளின்மேல் பட்டபோது, அந்த மனிதன் உயிரடைந்து தன் கால்களை ஊன்றி எழுந்திருந்தான்.