2 கொரிந்தியர் 6:14-18

2 கொரிந்தியர் 6:14-18 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அவிசுவாசிகளுடன் ஒன்றாக பிணைக்கப்படாதிருங்கள். நீதிக்கும் கொடுமைக்கும் இடையில், பொதுவானது என்ன? கிறிஸ்துவுக்கும், சாத்தானுக்கும் இடையே என்ன இணக்கம் இருக்கிறது? விசுவாசிக்கும், அவிசுவாசிக்கும் இடையில் பொதுவானது என்ன இருக்கிறது? இறைவனுடைய ஆலயத்திற்கும், விக்கிரகங்களுக்கும் இடையே என்ன உடன்பாடு உண்டு? ஏனெனில், நாம் ஜீவனுள்ள இறைவனின் ஆலயமாய் இருக்கிறோமே. இறைவன் உங்களைக்குறித்து இப்படியாக சொல்லியிருக்கிறார்: “நான் அவர்களுடன் வாழுவேன். அவர்களிடையே உலாவுவேன். நான் அவர்களுடைய இறைவனாயிருப்பேன். அவர்கள் என் மக்களாயிருப்பார்கள்.” ஆகவே, “அவர்களைவிட்டு வெளியே வந்து, பிரிந்திருங்கள். அசுத்தமான எதையும் தொடாதேயுங்கள். அப்பொழுது நான் உங்களை ஏற்றுக்கொள்வேன், என்று கர்த்தர் சொல்கிறார்.” மற்றும், “நான் உங்களுக்குத் தகப்பனாயிருப்பேன். நீங்கள் எனக்கு மகன்களாயும் மகள்களாயும் இருப்பீர்கள் என்று, எல்லாம் வல்ல கர்த்தர் சொல்கிறார்.”

2 கொரிந்தியர் 6:14-18 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அவிசுவாசிகளுடன் இணைக்கப்படாமல் இருங்கள்; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தம் ஏது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியம் ஏது? கிறிஸ்துவிற்கும் பேலியாளுக்கும் ஒப்பந்தம் ஏது? அவிசுவாசியுடன் விசுவாசிக்குப் பங்கு ஏது? தேவனுடைய ஆலயத்திற்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தம் ஏது? நான் அவர்களுக்குள்ளே வாழ்ந்து, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்களுக்கு தேவனாக இருப்பேன், அவர்கள் என் மக்களாக இருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடியே, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாக இருக்கிறீர்களே. எனவே, நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாமல் இருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். அப்பொழுது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாக இருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரர்களும் குமாரத்திகளுமாக இருப்பீர்கள் என்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்.

2 கொரிந்தியர் 6:14-18 பரிசுத்த பைபிள் (TAERV)

நீங்கள் விசுவாசம் இல்லாத மற்ற மக்களைப் போன்றவர்கள் அல்லர். எனவே நீங்களாகவே சென்று அவர்களோடு சேராதீர்கள். நல்லவையும் கெட்டவையும் சேரக் கூடாது. வெளிச்சமும் இருட்டும் சேர்ந்திருக்க முடியாது. எப்படி கிறிஸ்துவும் சாத்தானும் உடன்பாடுகொள்ள முடியும்? ஒரு விசுவாசிக்கும், விசுவாசம் இல்லாதவனுக்கும் பொதுவாக என்ன இருக்க முடியும்? தேவனுடைய ஆலயமானது வெறும் சிலைகளோடு எவ்வாறு ஒப்பந்தம் செய்ய முடியும்? நாம் ஜீவனுள்ள தேவன் வாழும் ஆலயங்களைப் போன்றுள்ளோம். “நான் அவர்களோடு வாழ்வேன்; நடப்பேன்; நான் அவர்களது தேவனாக இருப்பேன். அவர்களே எனது மக்களாக இருப்பார்கள்.” “எனவே அவர்களை விட்டுவிட்டு வெளியே வாருங்கள். அவர்களிடமிருந்து தனியாக உங்களைப் பிரித்துக்கொள்ளுங்கள். சுத்தமில்லாத எதையும் தொடவேண்டாம். நான் உங்களை ஏற்றுக்கொள்வேன்.” “நான் உங்களின் பிதாவாக இருப்பேன். நீங்கள் எனது குமாரர்களாகவும் குமாரத்திகளாகவும் இருப்பீர்கள் என்று எல்லா வல்லமையும் கொண்ட கர்த்தர் கூறுகிறார்”

2 கொரிந்தியர் 6:14-18 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது? தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே, ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். அப்பொழுது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்.