2 நாளாகமம் 33:10-16
2 நாளாகமம் 33:10-16 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
யெகோவா மனாசேயுடனும், அவன் மக்களுடனும் பேசினார். அவர்கள் அதற்குச் செவிகொடுக்கவில்லை. எனவே யெகோவா அசீரிய அரசனின் இராணுவ தளபதிகளை அவர்களுக்கு எதிராகக் கொண்டுவந்தார். அவர்கள் மனாசேயை கைதியாக்கி, அவனுடைய மூக்கில் கொக்கியை மாட்டி, வெண்கல சங்கிலியால் அவனைக் கட்டி, பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள். அவன் தனது கடும் துன்பத்தில் தனது இறைவனாகிய யெகோவாவிடத்தில் தயவைத் தேடினான். தன் முற்பிதாக்களின் இறைவனுக்கு முன்பாக அவன் தன்னைத் தாழ்த்தினான். அவன் அவரிடத்தில் ஜெபித்துக்கொண்டிருந்தபோது, யெகோவா அவனுடைய வேண்டுதலினால் மனமிரங்கி, அவனுடைய ஜெபத்தைக் கேட்டார். அவர் அவனைத் திரும்பவும் எருசலேமுக்கும் அவனுடைய அரசுக்கும் கொண்டுவந்தார். அதன்பின்பு மனாசே யெகோவாவே இறைவன் என அறிந்தான். இவற்றிற்குப்பின் அவன் தாவீதின் நகரத்தில் வெளி மதிலைத் திரும்பக் கட்டினான். கீகோனுக்கு மேற்கேயுள்ள பள்ளத்தாக்கின் நீரூற்று தொடங்கி, மீன் வாசலின் நுழைவாசல்வரை ஓபேலின் குன்றைச் சுற்றியே அந்த மதிலைக் கட்டினான். அவன் அதை முன்னிருந்ததைவிட உயரமாகக் கட்டினான். அவன் யூதாவின் எல்லா அரணான பட்டணங்களிலும் இராணுவ தளபதிகளை நிறுத்தினான். அவன் அந்நிய தெய்வங்களையெல்லாம் ஒழித்து, யெகோவாவின் ஆலயத்தில் இருந்த உருவச்சிலையை அகற்றிப்போட்டான். அதேபோல் ஆலய மலையிலும், எருசலேமிலும் தான் கட்டியிருந்த பலிபீடங்களையும் அகற்றிப்போட்டான். அவன் அவற்றை பட்டணத்திற்கு வெளியே எறிந்துவிட்டான். அதன்பின் யெகோவாவின் பலிபீடத்தைத் திரும்பவும் கட்டி, அதில் சமாதானக் காணிக்கைகளையும், நன்றி செலுத்தும் காணிக்கைகளையும் பலியிட்டான். அத்துடன் இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்குப் பணிசெய்ய வேண்டும் என யூதா மக்களிடம் சொன்னான்.
2 நாளாகமம் 33:10-16 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
யெகோவா மனாசேயோடும் அவனுடைய மக்களோடும் பேசினபோதிலும், அவர்கள் கவனிக்காதே போனார்கள். ஆகையால் யெகோவா: அசீரியா ராஜாவின் தளபதிகளை அவர்கள்மேல் வரச்செய்தார்; அவர்கள் மனாசேயை முட்செடிகளில் பிடித்து, இரண்டு வெண்கலச்சங்கிலியால் அவனைக் கட்டி பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள். இப்படி அவன் நெருக்கப்படும்போது, தன் தேவனாகிய யெகோவாவை நோக்கிக் கெஞ்சி, தன் முன்னோர்களின் தேவனுக்கு முன்பாக தன்னை மிகவும் தாழ்த்தினான். அவரை நோக்கி, அவன் விண்ணப்பம் செய்துகொண்டிருக்கிறபோது, அவர் அவன் கெஞ்சுதலுக்கு இரங்கி, அவனுடைய ஜெபத்தைக் கேட்டு, அவனைத் திரும்ப எருசலேமிலுள்ள தன்னுடைய தேசத்திற்கு வரச்செய்தார்; யெகோவாவே தேவன் என்று அப்பொழுது மனாசே அறிந்தான். பின்பு அவன் தாவீதுடைய நகரத்தின் வெளி மதிலைக் கீயோனுக்கு மேற்கேயிருக்கிற பள்ளத்தாக்கு துவங்கி மீன்வாசல்வரை கட்டி, ஓபேலைச் சுற்றிலும் அதை வளைத்து, அதை மிகவும் உயர்த்தி, யூதாவிலுள்ள பாதுகாப்பான பட்டணங்களிலெல்லாம் படைத்தலைவரை ஏற்படுத்தி, யெகோவாவுடைய ஆலயத்திலிருந்து அந்நிய தெய்வங்களையும் அந்த சிலையையும் அகற்றிவிட்டு, யெகோவாவுடைய ஆலயமுள்ள மலையிலும் எருசலேமிலும் தான் கட்டியிருந்த எல்லாப் பலிபீடங்களையும் அகற்றி, பட்டணத்திற்கு வெளியே போடச் செய்து, யெகோவாவுடைய பலிபீடத்தைப் பழுதுபார்த்து, அதன்மேல் சமாதானபலிகளையும் ஸ்தோத்திரபலிகளையும் செலுத்தி, இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவை ஆராதிக்கவேண்டும் என்று யூதாவுக்குக் கட்டளையிட்டான்.
2 நாளாகமம் 33:10-16 பரிசுத்த பைபிள் (TAERV)
மனாசே மற்றும் அவனது ஜனங்களிடமும் கர்த்தர் பேசினார். ஆனால் அவர்கள் அதைக் கவனிக்க மறுத்துவிட்டனர். எனவே கர்த்தர் அசீரியா நாட்டு தளபதிகளை அழைத்து வந்து யூதாவைத் தாக்கினார். அந்தத் தளபதிகள் மனாசேயைப் பிடித்து அவனது உடலில் கொக்கிகளை மாட்டினார்கள். அவனது கைகளில் வெண்கலச் சங்கிலிகளைப் போட்டார்கள். அவனைக் கைதியாக பாபிலோனுக்கு கொண்டு போனார்கள். மனாசே கஷ்டப்பட்டான். அப்போது அவன் தேவனாகிய கர்த்தரிடம் ஜெபித்தான். தன் முற்பிதாக்களின் தேவனிடம் மிகப்பணிவாக நடந்துக்கொண்டான். மனாசே கர்த்தரிடம் கெஞ்சி தன்னைக் காப்பாற்றும்படி ஜெபித்தான். கர்த்தர் அவனது வேண்டுகோளை கேட்டார். அவனுக்காக வருத்தப்பட்டார். பிறகு கர்த்தர் அவனை எருசலேமிற்குத் திரும்பி தனது சிங்காசனத்தில் அமரும்படிச்செய்தார். பின்னர் கர்த்தர்தான் உண்மையான தேவன் என்பதை மனாசே தெரிந்துகொண்டான். இது நடந்தப்பிறகு, மனாசே தாவீதின் நகரத்திற்கு ஒரு வெளிச்சுவரைக் கட்டினான். இந்த வெளிச்சுவர் கிதரான் பள்ளத்தாக்கில் கியோன் நீரூற்றுக்கு மேற்கிலிருந்து மீன் வாசல் வரை இருந்தது. ஒபேலைச் சுற்றிலும் அதனை வளைத்துக் கட்டினான். அதனை மிக உயரமாகக் கட்டினான். பிறகு அவன் யூதாவிலுள்ள அனைத்து கோட்டைகளுக்கும் அதிகாரிகளை நியமித்தான். மனாசே அந்நிய தெய்வங்களையும், விக்கிரகங்களையும் கர்த்தருடைய ஆலயத்தில் இருந்து வெளியே எடுத்தான். அவன் எருசலேமிலும், மலை நகரங்களிலும் அமைத்த பலிபீடங்களையும் நீக்கினான். அவன் இவை அனைத்தையும் எருசலேம் நகருக்கு வெளியே தூக்கி எறிந்தான். பிறகு அவன் கர்த்தருக்காக பலிபீடத்தை அமைத்தான். அதில் அவன் சமாதானப் பலியையும், நன்றிக்குரிய பலியையும் செலுத்தினான். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குச் சேவை செய்யுமாறு யூதாவிலுள்ள ஜனங்களுக்கெல்லாம் கட்டளையிட்டான்.
2 நாளாகமம் 33:10-16 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
கர்த்தர் மனாசேயோடும் அவனுடைய ஜனத்தோடும் பேசினபோதிலும், அவர்கள் கவனிக்காதே போனார்கள். ஆகையால் கர்த்தர்: அசீரியா ராஜாவின் சேனாபதிகளை அவர்கள்மேல் வரப்பண்ணினார்; அவர்கள் மனாசேயை முட்செடிகளில் பிடித்து, இரண்டு வெண்கலச்சங்கிலியால் அவனைக் கட்டிப் பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள். இப்படி அவன் நெருக்கப்படுகையில், தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கெஞ்சி, தன் பிதாக்களின் தேவனுக்கு முன்பாக மிகவும் தன்னைத் தாழ்த்தினான். அவரை நோக்கி, அவன் விண்ணப்பம்பண்ணிக்கொண்டிருக்கிறபோது, அவர் அவன் கெஞ்சுதலுக்கு இரங்கி, அவன் ஜெபத்தைக் கேட்டு, அவனைத் திரும்ப எருசலேமிலுள்ள தன்னுடைய ராஜ்யத்திற்கு வரப்பண்ணினார்; கர்த்தரே தேவன் என்று அப்பொழுது மனாசே அறிந்தான். பின்பு அவன் தாவீதுடைய நகரத்தின் வெளி அலங்கத்தைக் கீயோனுக்கு மேற்கேயிருக்கிற பள்ளத்தாக்கு தொடங்கி மீன்வாசல்மட்டும் கட்டி, ஓபேலைச் சுற்றிலும் அதை வளைத்து, அதை மிகவும் உயர்த்தி, யூதாவிலுள்ள அரணான பட்டணங்களிலெல்லாம் இராணுவத்தலைவரை வைத்து, கர்த்தருடைய ஆலயத்திலிருந்து அந்நிய தேவர்களையும் அந்த விக்கிரகத்தையும் எடுத்துப்போட்டு, கர்த்தருடைய ஆலயமுள்ள மலையிலும் எருசலேமிலும் தான் கட்டியிருந்த எல்லாப் பலிபீடங்களையும் அகற்றி, பட்டணத்திற்குப் புறம்பாகப் போடுவித்து, கர்த்தருடைய பலிபீடத்தைச் செப்பனிட்டு, அதின்மேல் சமாதானபலிகளையும் ஸ்தோத்திர பலிகளையும் செலுத்தி, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைச் சேவிக்கவேண்டும் என்று யூதாவுக்குக் கட்டளையிட்டான்.