2 நாளா 33:10-16

2 நாளா 33:10-16 IRVTAM

யெகோவா மனாசேயோடும் அவனுடைய மக்களோடும் பேசினபோதிலும், அவர்கள் கவனிக்காதே போனார்கள். ஆகையால் யெகோவா: அசீரியா ராஜாவின் தளபதிகளை அவர்கள்மேல் வரச்செய்தார்; அவர்கள் மனாசேயை முட்செடிகளில் பிடித்து, இரண்டு வெண்கலச்சங்கிலியால் அவனைக் கட்டி பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள். இப்படி அவன் நெருக்கப்படும்போது, தன் தேவனாகிய யெகோவாவை நோக்கிக் கெஞ்சி, தன் முன்னோர்களின் தேவனுக்கு முன்பாக தன்னை மிகவும் தாழ்த்தினான். அவரை நோக்கி, அவன் விண்ணப்பம் செய்துகொண்டிருக்கிறபோது, அவர் அவன் கெஞ்சுதலுக்கு இரங்கி, அவனுடைய ஜெபத்தைக் கேட்டு, அவனைத் திரும்ப எருசலேமிலுள்ள தன்னுடைய தேசத்திற்கு வரச்செய்தார்; யெகோவாவே தேவன் என்று அப்பொழுது மனாசே அறிந்தான். பின்பு அவன் தாவீதுடைய நகரத்தின் வெளி மதிலைக் கீயோனுக்கு மேற்கேயிருக்கிற பள்ளத்தாக்கு துவங்கி மீன்வாசல்வரை கட்டி, ஓபேலைச் சுற்றிலும் அதை வளைத்து, அதை மிகவும் உயர்த்தி, யூதாவிலுள்ள பாதுகாப்பான பட்டணங்களிலெல்லாம் படைத்தலைவரை ஏற்படுத்தி, யெகோவாவுடைய ஆலயத்திலிருந்து அந்நிய தெய்வங்களையும் அந்த சிலையையும் அகற்றிவிட்டு, யெகோவாவுடைய ஆலயமுள்ள மலையிலும் எருசலேமிலும் தான் கட்டியிருந்த எல்லாப் பலிபீடங்களையும் அகற்றி, பட்டணத்திற்கு வெளியே போடச் செய்து, யெகோவாவுடைய பலிபீடத்தைப் பழுதுபார்த்து, அதன்மேல் சமாதானபலிகளையும் ஸ்தோத்திரபலிகளையும் செலுத்தி, இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவை ஆராதிக்கவேண்டும் என்று யூதாவுக்குக் கட்டளையிட்டான்.