1 சாமுவேல் 8:1-10

1 சாமுவேல் 8:1-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

சாமுயேல் முதியவனானபோது தன் மகன்களை இஸ்ரயேலருக்கு நீதிபதிகளாக நியமித்தான். அவனுடைய மூத்த மகனின் பெயர் யோயேல், இரண்டாவது மகனின் பெயர் அபியா. இவர்கள் பெயெர்செபாவிலே பணிசெய்தார்கள். அவன் மகன்களோ தகப்பன் சாமுயேலின் வழிகளைப் பின்பற்றவில்லை. அவர்கள் நேர்மையற்ற முறையில் ஆதாயம் பெற விரும்பி இலஞ்சம் பெற்று, நீதியைப் புரட்டினார்கள். இதனால் இஸ்ரயேலின் முதியவர்கள் அனைவரும் ஒன்றுகூடி ராமாவில் இருந்த சாமுயேலிடம் வந்தார்கள். அவர்கள் சாமுயேலிடம், “உமக்கோ வயது சென்றுவிட்டது. உமது மகன்களோ உமது வழிகளில் நடக்கிறதில்லை. ஆகையால் மற்ற எல்லா நாடுகளுக்கு இருப்பதுபோல், எங்களை வழிநடத்தும்படி எங்களுக்கும் ஒரு அரசனை இப்பொழுது நியமித்துத் தாரும்” என்றார்கள். அவர்கள், “எங்களை வழிநடத்த அரசனை நியமியும்” என்று கேட்டது சாமுயேலுக்கு விருப்பமில்லாமல் இருந்தது. எனவே அவன் யெகோவாவிடம் மன்றாடினான். அப்பொழுது யெகோவா சாமுயேலிடம், “மக்கள் உனக்குச் சொல்வதை எல்லாம் கேள். தங்கள் அரசனாக அவர்கள் புறக்கணித்தது உன்னையல்ல, என்னையே புறக்கணித்திருக்கிறார்கள்; நான் அவர்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த நாள் தொடங்கி இன்றுவரை அவர்கள் செய்ததுபோல, என்னைக் கைவிட்டு வேறு தெய்வங்களுக்குப் பணிசெய்கிறார்கள். உனக்கும் அப்படியே செய்கிறார்கள். இப்பொழுதும் அவர்கள் சொல்வதைக் கேள். ஆனால் அவர்களை ஆளும் அரசன் என்ன செய்வான் என்பதை அவர்களுக்கு அறிவித்து கடுமையாகவே எச்சரிக்கை செய்” என்றார். அப்படியே தங்களுக்கு அரசன் வேண்டும் என்று கூறிய மக்களுக்கு சாமுயேல் யெகோவாவினுடைய வார்த்தைகளையெல்லாம் கூறினான்.

1 சாமுவேல் 8:1-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

சாமுவேல் முதிர்வயதானபோது, தன் மகன்களை இஸ்ரவேலின்மேல் நியாயாதிபதிகளாக வைத்தான். அவனுடைய மூத்தமகனின் பெயர் யோவேல், இளையமகனின் பெயர் அபியா; அவர்கள் பெயெர்செபாவிலே நியாயாதிபதிகளாக இருந்தார்கள். ஆனாலும் அவனுடைய மகன்கள் அவனுடைய வழிகளில் நடக்காமல், பொருளாசைக்குச் சாய்ந்து, லஞ்சம் வாங்கி, நியாயத்தைப் புரட்டினார்கள். அப்பொழுது இஸ்ரவேலின் மூப்பர்கள் எல்லோரும் கூட்டம்கூடி, ராமாவிலிருந்த சாமுவேலிடத்தில் வந்து: இதோ, நீர் முதிர்வயதானீர்; உம்முடைய மகன்கள் உம்முடைய வழிகளில் நடக்கிறதில்லை; ஆகையால் எல்லா ஜாதிகளுக்குள்ளும் இருக்கிறபடி, எங்களை நியாயம் விசாரிக்க, ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டும் என்றார்கள். எங்களை நியாயம் விசாரிக்க ஒரு ராஜாவை ஏற்படுத்தும் என்று அவர்கள் சொன்ன வார்த்தை சாமுவேலுக்குத் தவறானதாக தோன்றினது; ஆகையால் சாமுவேல் யெகோவாவை நோக்கி விண்ணப்பம் செய்தான். அப்பொழுது யெகோவா சாமுவேலை நோக்கி: மக்கள் உன்னிடத்தில் சொல்வதெல்லாவற்றிலும் அவர்கள் சொல்லைக் கேள்; அவர்கள் உன்னைத் தள்ளவில்லை, நான் அவர்களை ஆளாதபடி, என்னைத்தான் தள்ளினார்கள். நான் அவர்களை எகிப்திலிருந்து புறப்பட்ட நாள்முதல் இந்த நாள்வரை அவர்கள் என்னைவிட்டு, வேறே தேவர்களை ஆராதித்துவந்த தங்கள் எல்லாச் செயல்களின்படி செய்ததுபோல, அவர்கள் உனக்கும் செய்கிறார்கள். இப்பொழுதும் அவர்கள் சொல்லைக்கேள்; ஆனாலும் உன் விருப்பத்தைக் காட்டும்படி அவர்களை ஆளும் ராஜாவின் விதம் என்னவென்று அவர்களுக்கு வலியுறுத்தி தெரியப்படுத்து என்றார். அப்பொழுது சாமுவேல், ஒரு ராஜா வேண்டும் என்று தன்னிடத்தில் கேட்ட மக்களுக்குக் யெகோவாவுடைய வார்த்தைகளையெல்லாம் சொல்லி

1 சாமுவேல் 8:1-10 பரிசுத்த பைபிள் (TAERV)

சாமுவேல் முதுமையடைந்ததும், அவன் தன் ஜனங்களை நியாயம் விசாரிக்க ஏற்பாடு செய்தான். அவனது மூத்த குமாரனின் பெயர் யோவேல், இளையவனுக்குப் பெயர் அபியா, அவர்கள் பெயெர்செபாவில் நீதிபதிகளாக இருந்தனர். ஆனால் சாமுவேல் வாழ்ந்த விதத்தில் அவனது குமாரர்கள் வாழவில்லை. அவர்கள் இரகசியமாகப் பணம் பெற்றுக்கொண்டு நீதிமன்றங்களில் தீர்ப்பை மாற்றினார்கள். அவர்கள் ஜனங்களை நீதிமன்றத்திலே ஏமாற்றினார்கள். எனவே இஸ்ரவேலின் மூப்பர்கள் கூடி, ராமாவிலே சாமுவேலை சந்திக்கும்படி சென்றனர். மூப்பர்கள் சாமுவேலிடம், “உங்களுக்கு வயதாகிவிட்டது. உங்கள் குமாரர்கள் சத்தியத்தின் வழியில் வாழவில்லை அவர்கள் உங்களைப் போல் இல்லை. இப்போது, மற்ற நாடுகளைப் போன்று எங்களை ஆள்வதற்கு ஒரு ராஜாவைத் தாருங்கள்” என்று கேட்டனர். எனவே மூப்பர்கள் தங்களை வழி நடத்த ஒரு ராஜாவை வேண்டினார்கள். சாமுவேல் இதனை ஒரு கெட்ட திட்டம் என எண்ணினான். எனவே சாமுவேல் கர்த்தரிடம் ஜெபித்தான். கர்த்தர் சாமுவேலிடம், “ஜனங்கள் சொன்னதைப்போல் செய்யவும், அவர்கள் உன்னைத் தள்ளவில்லை. என்னைத் தள்ளியுள்ளார்கள்! என்னை அவர்களுடைய ராஜாவாக ஏற்றுக்கொள்ள விருப்பமில்லை! அவர்கள் எப்போதும் செய்தது போலவே தொடர்ந்து செய்கிறார்கள். நான் எகிப்திலிருந்து அவர்களை வெளியே கொண்டுவந்தேன். ஆனால் என்னை விட்டுவிட்டு மற்ற தெய்வங்களுக்குச் சேவை செய்தனர். அவர்கள் அதையே உனக்கும் செய்வார்கள். எனவே அவர்கள் சொன்னதைக் கவனித்து அவர்கள் சொல்வதுபோல் செய்யவும். ஆனால் அவர்களை எச்சரிக்கவும். ஒரு ராஜா அவர்களுக்கு என்ன செய்வான் என்பதையும் கூறு! ஒரு ராஜா எவ்வாறு ஆள்வான் என்பதையும் கூறு” என்றார். அவர்கள் சாமுவேலிடம் ஒரு ராஜா வேண்டுமெனக் கேட்டிருந்தனர். எனவே சாமுவேல் கர்த்தர் சொன்னவற்றை அவர்களிடம் சொன்னான்.

1 சாமுவேல் 8:1-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

சாமுவேல் முதிர்வயதானபோது, தன் குமாரரை இஸ்ரவேலின்மேல் நியாயாதிபதிகளாக வைத்தான். அவனுடைய மூத்தகுமாரனுக்குப் பெயர் யோவேல், இளையவனுக்குப் பேர் அபியா; அவர்கள் பெயெர்செபாவிலே நியாயாதிபதிகளாயிருந்தார்கள். ஆனாலும் அவனுடைய குமாரர் அவன் வழிகளில் நடவாமல், பொருளாசைக்குச் சாய்ந்து, பரிதானம் வாங்கி, நியாயத்தைப் புரட்டினார்கள். அப்பொழுது இஸ்ரவேலின் மூப்பர் எல்லாரும் கூட்டங்கூடி, ராமாவிலிருந்த சாமுவேலினிடத்தில் வந்து: இதோ, நீர் முதிர்வயதுள்ளவரானீர்; உம்முடைய குமாரர் உம்முடைய வழிகளில் நடக்கிறதில்லை; ஆகையால் சகலஜாதிகளுக்குள்ளும் இருக்கிறபடி, எங்களை நியாயம் விசாரிக்கிறதற்கு, ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டும் என்றார்கள். எங்களை நியாயம் விசாரிக்க ஒரு ராஜாவை ஏற்படுத்தும் என்று அவர்கள் சொன்ன வார்த்தை சாமுவேலுக்குத் தகாததாய்க் காணப்பட்டது; ஆகையால் சாமுவேல் கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான். அப்பொழுது கர்த்தர் சாமுவேலை நோக்கி: ஜனங்கள் உன்னிடத்தில் சொல்வதெல்லாவற்றிலும் அவர்கள் சொல்லைக் கேள்; அவர்கள் உன்னைத் தள்ளவில்லை, நான் அவர்களை ஆளாதபடிக்கு, என்னைத்தான் தள்ளினார்கள். நான் அவர்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணின நாள்முதல் இந்நாள்மட்டும் அவர்கள் என்னைவிட்டு, வேறே தேவர்களைச் சேவித்துவந்த தங்கள் எல்லாச் செய்கைகளின்படியும் செய்ததுபோல, அவர்கள் உனக்கும் செய்கிறார்கள். இப்பொழுதும் அவர்கள் சொல்லைக்கேள்; ஆனாலும் உன் அபிப்பிராயத்தைக் காட்டும்படி அவர்களை ஆளும் ராஜாவின் காரியம் இன்னது என்று அவர்களுக்குத் திடசாட்சியாய்த் தெரியப்படுத்து என்றார். அப்பொழுது சாமுவேல், ஒரு ராஜா வேண்டும் என்று தன்னிடத்தில் கேட்ட ஜனங்களுக்குக் கர்த்தருடைய வார்த்தைகளையெல்லாம் சொல்லி