1 சாமுயேல் 8:1-10

1 சாமுயேல் 8:1-10 TCV

சாமுயேல் முதியவனானபோது தன் மகன்களை இஸ்ரயேலருக்கு நீதிபதிகளாக நியமித்தான். அவனுடைய மூத்த மகனின் பெயர் யோயேல், இரண்டாவது மகனின் பெயர் அபியா. இவர்கள் பெயெர்செபாவிலே பணிசெய்தார்கள். அவன் மகன்களோ தகப்பன் சாமுயேலின் வழிகளைப் பின்பற்றவில்லை. அவர்கள் நேர்மையற்ற முறையில் ஆதாயம் பெற விரும்பி இலஞ்சம் பெற்று, நீதியைப் புரட்டினார்கள். இதனால் இஸ்ரயேலின் முதியவர்கள் அனைவரும் ஒன்றுகூடி ராமாவில் இருந்த சாமுயேலிடம் வந்தார்கள். அவர்கள் சாமுயேலிடம், “உமக்கோ வயது சென்றுவிட்டது. உமது மகன்களோ உமது வழிகளில் நடக்கிறதில்லை. ஆகையால் மற்ற எல்லா நாடுகளுக்கு இருப்பதுபோல், எங்களை வழிநடத்தும்படி எங்களுக்கும் ஒரு அரசனை இப்பொழுது நியமித்துத் தாரும்” என்றார்கள். அவர்கள், “எங்களை வழிநடத்த அரசனை நியமியும்” என்று கேட்டது சாமுயேலுக்கு விருப்பமில்லாமல் இருந்தது. எனவே அவன் யெகோவாவிடம் மன்றாடினான். அப்பொழுது யெகோவா சாமுயேலிடம், “மக்கள் உனக்குச் சொல்வதை எல்லாம் கேள். தங்கள் அரசனாக அவர்கள் புறக்கணித்தது உன்னையல்ல, என்னையே புறக்கணித்திருக்கிறார்கள்; நான் அவர்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த நாள் தொடங்கி இன்றுவரை அவர்கள் செய்ததுபோல, என்னைக் கைவிட்டு வேறு தெய்வங்களுக்குப் பணிசெய்கிறார்கள். உனக்கும் அப்படியே செய்கிறார்கள். இப்பொழுதும் அவர்கள் சொல்வதைக் கேள். ஆனால் அவர்களை ஆளும் அரசன் என்ன செய்வான் என்பதை அவர்களுக்கு அறிவித்து கடுமையாகவே எச்சரிக்கை செய்” என்றார். அப்படியே தங்களுக்கு அரசன் வேண்டும் என்று கூறிய மக்களுக்கு சாமுயேல் யெகோவாவினுடைய வார்த்தைகளையெல்லாம் கூறினான்.